சனி, 29 ஜூன், 2019

மனிதப்பிறவி


ஸ்ரீ குருப்யோ நம:


மனிதப்பிறவி
(சுவாமி பிரபஞ்சநாதன்)

முகவுரை

ஒரு செல் உயிரி அமிபாவில் தொடங்கி, பல செல் உயிரியான மனிதன் வரை அனேக ஜீவராசிகள் இந்த பிரபஞ்சத்தில் இன்றுவரை காணப்படுகின்றன.

இவைகளில் ஒவ்வொன்றும், உடலாலும், மனத்தாலும், குணத்தாலும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு காணப்படுகின்றன. ஒன்று போல மற்றொன்று இருப்பதில்லை.

அவைகள் கொண்டுள்ள புலன்களான கண், காது, மூக்கு, நாக்கு, தொடுஉணர்வு என்ற ஐந்து கர்மேந்திரியங்களினாலும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு காணப்படுகின்றன.

அதுப்போலவே, ஐந்து ஞானேந்திரியங்களாலும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு, ஒன்றைப் போல மற்றொன்று இருப்பதில்லை.

ஒரு ஜீவராசி மற்ற ஜீவராசியினால் பகலில் காணமுடியாத காட்சியைக்கூட இரவில் தெளிவாக காண்கின்றது. ஒன்றினால் கேட்க முடியாத மிக நுட்பமான சத்தத்தை மற்றொன்றினால் மிக நன்றாக கேட்க முடிகின்றது. மிக அருகே சரியாக நுகர முடியாத வாசனைகளை கூட சில ஜீவராசிகள் எத்தனையோ பல அடிகள் தூரத்திலேயே உணர்கின்றன. ஒன்றி்னால் விருப்பமுடன் சுவைக்க முடியாத சுவையை மற்றொன்று விருப்பமுடன் சுவைத்து உண்டு மகிழ்கின்றது. அதுப்போலவே, தொடுவதினாலேயே ஒன்றுக்கு ஒன்று இன்பம் அடைகின்ற நிலையில் பல வித்தியாசங்களையும் இந்த ஜீவராசிகளின் வாழ்வில் காணமுடிகின்றது.

இந்த உயிரினங்களுக்கு இடையே காணப்படுகின்ற பெரும்பாலான ஒற்றுமை வயிற்றுப் பசிக்கு உணவு தேடுவது மட்டுமே.

அதில் ஒரு சில ஜீவராசிகள் உண்பது, உறங்குவது, புணர்வது, மல, ஜலம் கழிப்பது போன்ற அன்றாட செயல்களில் இவைகள் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன.

இந்த உயிரினங்களின் சிந்தனா சக்தி தனக்கு கொடுக்கப்பட்ட அறிவைப் பொருத்து ஓர் அறிவு கொண்டது முதற்கொண்டு ஆறறிவு படைத்த மனிதன் வரை மாறுபடுகின்றன.

இங்கே சிந்திக்க வேண்டியது என்னவெனில், அரிதான, கிடைத்தற்கரிய மனிதப் பிறவி கொண்டு, மற்ற உயிரினங்களுக்கு கிடைக்காத ஆறறிவு படைத்த மனிதனும் தன்னை விட குறைந்த அறிவு கொண்ட ஜீவராசிகளைப் போன்றே தானும் வாழ விரும்புவது மட்டுமே ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கின்றது. 

இயற்கையின் படைப்பில் எல்லா ஜீவராசிகளுக்கும் அதனதன் அறிவுக்கும், அடைந்த உடலுக்கும் ஏற்ற சுழ் நிலையில் வாழ்ந்து அனுபவிக்க இந்த உலகத்தில் அனேக மகிழ்சி தரக்கூடிய விசய சுகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் ஒவ்வொரு உயிரினமும் மகிழ்ச்சியை மட்டுமே விரும்புகின்றன. தனக்கு வருகின்ற துன்பங்களை அவைகள் ஒருபொழுதும் விரும்புவதில்லை. இதில் மனிதனும் விதி விலக்கல்ல.

ஆனால், இங்கு பிரச்சனை என்னவெனில், கொடுக்கப்பட்ட உயர் அறிவை எப்படிப் பயன் படுத்துவது என்பதை அறிந்து கொள்ளாத மனிதன், தன்னிலும் கீழான அறிவையும், பலத்தையும் கொண்ட உயிரினங்களை ஆதரிக்காமல், அவைகளின் மகிழ்ச்சியைப் பறித்து, தனக்கு சுய நலமாக அவைகளைப் பயன்படுத்திக் கொண்டு, அவைகளின் மகிழ்ச்சிக்கு பங்கம் விளைவித்து, அவைகளின் மகிழ்ச்சியையும் சேர்த்து, தான் மட்டுமே அனுபவிக்க நினைப்பதினால், மற்ற ஜீவராசிகளை ஆதிக்கம் செலுத்தி, அடக்கி ஆண்டுக்கொண்டு, துன்புறுத்தி மகிழ்கின்றான்.

இத்தகைய நிலை ஆதி மனிதனிடத்தில் இல்லை. காரணம் அவன் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்ததால், தன் வயிற்றுப் பசிக்காக மட்டுமே மற்ற ஜீவராசிகளைப் போன்று உணவை வேட்டையாடிப் பெற்றான், உண்டான், மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து வாழ்ந்து, தனக்கு கொடுக்கப்பட்ட ஆறாவது அறிவின் வாயிலாக பல புதிய கண்டு பிடிப்புகளைக் கண்டறிந்து, மற்ற அனைத்து உயிரினங்களும் நன்மை பெரும் பொருட்டு வாழ்ந்து மடிந்தான்.

ஆனால், இன்றைய நாகரீக மனிதனோ, தான் கற்ற கல்வியின் வாயிலாக மிகுந்த சுய நலமுடன் தன் முன்னோர்கள் கண்டு பிடித்த கண்டுபிடிப்புகளை பல தவறான பயன் பாட்டிற்கு பயன் படுத்தி, மற்ற உயிரினங்களின் ஒற்றுமையைக் குழைத்து, தான் மட்டுமே போகத்தினை அனுபவிக்கும் மோகத்தினால், மதியிழந்த செயல்கள் பல செய்து, மகிழ்ச்சியை இழந்து, பல நோய்களை அடைந்து இறுதியில் மருத்துவமனையில் மரணத்தை தழுவுகின்றான்.

இத்தகைய நிலை இந்த மனிதப்பிறவிக்கு எப்படி உண்டானது?

இதற்கு யார் காரணம்? அல்லது எது காரணம்?

மனிதன் தன்னிடம் கொண்டுள்ள பிரத்யேகமான ஆறாவது அறிவான பகுத்தறிவை வளர்க்க, அவன் கண்டறிந்த நவீன கல்வி முறையே காரணம் என்று நினைத்துக் கொள்கின்றான்.

எப்படி?

அன்றைய காலத்தில் மனிதர்கள் கல்வி கற்பதற்காக, குருகுலத்திற்குச் சென்று குருவிற்கு சேவை செய்து கல்வியைக் கற்றுக் கொண்டு, கற்ற கல்வியினால் பெற்ற பலனை, தன்னுடைய சேவை மனப்பான்மையினால், தன்னைப் போன்றே மற்றவர்களும் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தினால், தான் செய்த சேவையைப் போன்றே, மற்றவர்களும் சேவையைச் செய்து, சேவையைப் பெற வேண்டும் என்ற நிலை இருந்தது.

இந்த சேவையினால் கிடைக்கின்ற மகிழ்ச்சிக்கு ஈடு, இணை இல்லை என்பதை அனுபவ உண்மையாக அறிந்தவர்கள் தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று மகிழ்ச்சியுடன் மற்ற அனைவரையும் வாழ வைத்தனர்.

ஆனால், இன்றைய காலத்தில் மனிதர்கள் கல்வி கற்பதற்காக, கல்லூரிகளுக்குச் சென்று, பணம் கொடுத்து கல்வியைக் கற்றுக் கொண்டு, கற்ற கல்வியினால், மற்றவர்களுக்கு பணத்தை சம்பாதிக்கும் ஆசையைக் காட்டி, பகட்டாக வாழ்வதற்கு பணத்தை அடைவதே மகிழ்ச்சி என்று மற்றவர்களையும் நம்பவைத்து, தான் கற்ற கல்வியினால் செலவிட்ட பணத்தைக் கொண்டு, தனக்கு கிடைத்த தொழிலின் வாயிலாக கல்வியில் விட்ட பணத்தை மற்றவர்களிடம் கருணையின்றி வசூலிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

தான் விட்ட பணத்தை பெறுக இவ்வையகத்திடம் என்று பணத்திற்காகவே ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டு, கற்ற கல்வியின் பயனாக, பணத்தை மட்டுமே நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

மேலும், இன்றைய கல்வி முறையில் மாணவர்களைப் பாடங்களை மனப்பாடம் செய்து, அதிக மதிப்பெண்களைப் பெற பயிற்றுவிக்கப்படுவதினால், அவர்கள் ஆதிக மதிப்பெண்களை மட்டுமே பெறும் நோக்கத்தோடு, தன்னுடன் கல்வி கற்கும் சக மாணவர்களிடத்திலேயே, காழ்புணர்ச்சி கொண்டு போட்டி, பொறாமை, தாழ்வு மனப்பான்மை, சுயநலம், கோழைத்தனம், தற்கொலை எண்ணம், அல்லது கொலை செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளர்த்திக் கொண்டு விடுவதினால், அவர்களிடம் பணிவு, பண்பாடு, தைரியம், தேசப்பற்று, தியாகம், கருணை போன்ற எந்த நற்குணங்களையும் எதிர்ப்பார்க்க முடிவதில்லை.

அதனால், இன்றைய மனித சமுதாயம் மகிழ்ச்சி இன்றி, சுயநலத்துடன் மற்ற உயிரினங்களை துன்புறுத்தி, அவைகளுடன் சேர்ந்து இவர்களும் துயரத்துடன் வாழ்ந்து, துயரத்துடன் மடிந்து வருவதை கண்கூடாக இன்று காண முடிகின்றது.

இதிலிருந்து மீள்வது எப்படி?

அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது! என்று நமக்கு அன்றே கூறிய நம்முடைய பாட்டியின் வாக்கினை ஏற்று, அவள் மற்றவர்களுக்கு உபதேசித்து, தானும் வாழ்ந்து காட்டியப் படி, நாமும் வாழ முற்பட்டால் இனி வருகின்ற மனித சமுதாயம் நல்ல மாற்றத்தை அடைந்து மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.

இன்றைய கல்வித் திட்டத்தில் அன்றைய ஆன்றோர்களான நம் முன்னோர்களின் மெய்ஞ்ஞான வாழ்க்கை உபதேசங்களை பாடங்களாக மீண்டும் கொண்டு வர வேண்டும்.

ஔவைப் பாட்டியின் ‘ஆத்திச்சூடி’ போன்ற பாடங்களை கற்று ‘அறம் செய்ய விரும்பு’,   ‘ஆறுவது சினம்’ என்று மனித வாழ்க்கைக்குத் தேவையான புருஷார்த்தங்களை பற்றி, இன்றைய மாணவர்களிடம் கற்பித்தால் மட்டுமே இந்த மனித சமுதாயம் கவலையின்றி, மகிழ்ச்சியை அடைந்து, மனிதப் பிறவியின் மகத்துவத்தை அறிய முடியும்.

தன்னைப் பற்றிய அறிவை அடைந்த மனிதனே மனிதர்களுள் மகத்தானவனாகின்றான். அப்படி மகத்தான மனிதனாக மாற அவனது மனம் நல்ல எண்ணங்களை எண்ணி அதை நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

மனித மனம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதில் சேகரிக்கப்படுகின்ற விசயங்களைப் பொருத்தே அவனது புத்தி, சித்தம், அஹங்காரம் என்ற அந்தக்கரணம் செயல்படும். அதனால், அவன் நல்ல விசயங்களை கற்று, அதன் படி வாழ்ந்தால் மட்டுமே மனிதப் பிறவியின் உயர்ந்த உன்னதத்தை புரிந்து கொள்ள முடியும்.

அந்தக்கரண சுத்தியே மனிதனின் புறக்கரணங்களான கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் உடலினை சுத்தமான, நல்ல விசய சுகங்களை நோக்கி ஈர்க்கும். கெட்ட விசய சுகங்களை விரும்பாமல் தவிர்க்கும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்  
எண்ணியர் திண்ணியர் ஆகப்பெரின் - திருக்குறள்

நாம் எண்ணும் எண்ணங்களே நமது வாழ்வாக அமைகிறது. நாம் இன்று வாழும் வாழ்க்கை நேற்றைய நமது எண்ணங்களின் தொகுப்பு என்பதினால், நல்ல விசயங்களைக் கற்று, அதன்படி நின்று, மற்றவர்களையும் நல்ல வழியில் வாழ வைப்போம்.

நன்றி!


என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்