சனி, 29 ஜூன், 2019

உன்னை நீ அறிவாயா? - சுவாமி பிரபஞ்சநாதன்


உன்னை

நீ
அறிவாயா?
என்னுரை


தன்னை அறிய தனக்கொரு கேடில்லை என்று திருமூலரின் திருமந்திரம் தெள்ளத் தெளிவாக கூறுகின்றது.  அதுப்போலவே, நீங்கள் எதை அறிந்து கொண்டால், வேறு எதையும் அறியத் தேவையில்லையோ, அதை அறிவதுதான் அறிவு என்று சாஸ்திரமும் அறிவுறுத்துகின்றது.

ஆதலால், நீங்கள் உங்களை அறிந்து கொள்வதினால் மட்டுமே, இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? அது எப்படி என்னை அறிந்து கொள்வதினால், அனைத்தையும் அறிய முடியும் என்ற சந்தேகம் உங்களிடையே உண்டாவதை என்னால் அறிய முடிகின்றது.

ஆனால், இந்த பேருண்மையை அறிய வேண்டுமென்றால் இந்த நூலை முழுவதுமாக படித்து புரிந்து கொண்டால் மட்டுமே அந்த உண்மை விளங்கும். அதாவது, உங்களிடத்திலே அறியாமை என்ற துக்க இருள் உங்களை மூடி மறைத்து உள்ளது. அந்த துக்கத்தைக் கொடுக்கின்ற இருளிலிருந்து, உங்களை சந்தோசம் கொடுக்கின்ற வெளிச்சத்திற்கு கொண்டுவர ஒரு விதமான முயற்சிதான் இந்த நூல்.

நீங்கள் எந்த வித முயற்சியும் செய்யாமல், இந்த இருளையே இன்பமாக நினைத்து, இதிலேயே இன்னும் இழுத்துப் போர்த்திக் கொண்டு ஆழ்ந்து தூங்கவே அனைவரும் விரும்புகின்றீர்கள்.

உங்கள் அனைவரையும் துக்கம் என்ற தூக்கத்திலிருந்து எழுப்பி, நீங்கள் தூங்குவதற்காக இங்கு வரவில்லை, தூங்காமல் தூங்கி சுகம் பெறுவதற்காக இங்கு வந்திருக்கின்றீர்கள் என்ற பேருண்மையை சாட்சாத் அந்த சர்வேஸ்வரன் கொடுத்த சாஸ்திரத்தின் வாயிலாக அடியேன் அறிந்ததை நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற திருமூலரின் திருமந்திரம் மீண்டும் தெள்ளத் தெளிவாக கூறுவதை நீங்களும் இந்த உன்னை நீ அறிவாயா என்ற  நூலின் வாயிலாக அறியலாம்.

இந்த நூலின் வாயிலாக நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும் இந்த நூலை வாசிக்கும் போது, உங்களிடம் காணப்படுகின்ற அஹங்காரத்தை தட்டி எழுப்புகின்ற வகையில் நீ என்ற ஒற்றை வார்த்தைப் பதத்தை பல இடங்களில் கையாண்டு இந்த புத்தகத்தை கொடுக்கின்றேன்.

இந்த நீ என்ற ஒற்றை வார்த்தை, உங்களிடையே உள்ள ஆணவம், கன்மம் (செயல்), மாயை என்ற மும்மலங்களையும் அழித்து, அந்த அழியாத ஆனந்த வஸ்துவை உங்களுக்கு தெள்ளத் தெளிவாகக் காட்டிக் கொடுக்கும் என்றால், அது  மிகையாகாது.

நன்றி!



என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்