ஞாயிறு, 30 ஜூன், 2019

ஈசாவாஸ்ய உபநிஷதம்


ஈசாவாஸ்ய உபநிஷதம்

 ஈசாவாஸ்யம் இதஹம் ஸ்ர்வம் என்ற மந்திரத்துடன் ஆரம்பிப்பதால் இது ஈசாவாஸ்ய உப நிஷதம் என்ற பெயர் பெற்றது.

இது 18 மந்திரங்களே உள்ள சிறிய உபநிஷதம்.

யஜீர் வேதத்தில் கிருஷ்ண யஜீர் வேதம், சுக்ல யஜீர் வேதம் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. சுக்ல யஜீர் வேதத்தில் வாஜஸனேய சம்ஹிதையில் அமந்துள்ளது இந்த உபநிஷதம்.

இந்த சம்ஹிதையில் 40 அத்தியாயங்களில் கடைசி அத்தியாயம் இது. தத்யங் அதர்வணர் என்ற முனிவர் தனது மகனுக்கு இதனை உபதேசித்தார்.

அவன் ஆசைகள் அற்றவனாகவும் முக்தியில் தீவிர நாட்டம் கொண்டவனாகவும் இருந்ததால் அந்த முனிவர் அவனுக்கு இந்த உபநிஷதத்தை உபதேசித்தார்.

ஒளிக்கு அப்பாலுள்ள ஒன்றைத் தேடும் முயற்சியையும், ஒளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பதனையும் ஈச வித்யை என்று இந்த உபநிஷதம் கூறுவதே இந்த ஈசாவாஸ்ய உபநிஷத்தின் மைய கருத்து ஆகும்.

உபநிஷதங்கள் ரிஷிகளின் அனுபவ உண்மைகள். வெறும் படிப்பறிவு கொண்டோ, சம்ஸ்கிருதப் புலமை கொண்டோ அவற்றின் உண்மையான பொருளை அறிந்து கொள்வது என்பது சாத்தியம் அல்ல.

உண்மையான சாதனை என்பது மனத்தூய்மையுடன் நாம் இறைவனை நோக்கி முன்னேற முன்னேற இவற்றின் உட்பொருள் நமக்கு புரியும், மேலும் ஆழமாக இந்த மந்திரங்களின் பொருளை சிந்தித்து ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டால்தான் உப நிஷதங்களை உண்மையாகப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த உலகம் ஈஸ்வரானால் வியாபிக்கப்பட்டுள்ளது (ஈசாவாஸ்யம் இதம் ஸ்ர்வம்) என்று இந்த உபநிஷதம் துவங்குவதிலிருந்து ஈஸ்வரனுடைய ஸ்வரூபம் விளக்கப்படுகின்றது.

ஈஸ்வரன் இந்த உலகத்திற்கு நிமித்த காரணமாகவும் உபாதான காரணமாகவும் இருப்பதினால் உண்மையில் இந்த உலகமே ஈஸ்வரனாக இருக்கின்றது.
ஆகவேதான், ஈஸ்வரனால் இந்த உலகமே வியாபிக்கப்பட்டுள்ளது என்ற வாக்கியத்திலிருந்து ஈஸ்வரனுடைய தன்மை அறியப்படவேண்டும், அதாவது இந்த உலகத்தை உலகம் என்ற எண்ணத்தினை நீக்கி, ஈஸ்வரன் என்ற எண்ணத்தினை வைக்கவேண்டும் என்று பொருள் சொல்லப்படுகின்றது.

இவ்விதம் ஈஸ்வரனைப்பற்றிய ஞானத்தை கொடுத்து, தியாகத்தினால் உன்னை காப்பாற்றிக்கொள் என்றும், மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாதே! என்றும் இந்த உபநிஷதம் அறிவுறுத்துகிறது.

உண்மையில் ஈஸ்வரனாகவே எல்லாமாக இருக்கிறது. ஒரு மாடு தன்னைக் கண்ணாடியில் பார்த்துவிட்டு, இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து அதை முட்டப் போகிறது.

ஒரு மனிதன் தன் பிரதி பிம்பத்தைப் பார்க்கிறான். இன்னொரு மனிதன் இருக்கிறான் என்று அவன் நினைக்கிறானா?. இரண்டும் ஒரே பொருள் என்று நினைத்து அவன் சாந்தமாக இருக்கிறான். இப்படியாக நாம் பார்க்கிற அனைத்துமே ஒன்றுதான்.

இரண்டாவது என்று எண்ணினால்தான் ஆசை வரும். ஆசை வருவதினால் கோபம் வருகிறது. கோபம் வருவதினால் பாவங்களைச் செய்கிறோம். அதனால் ஜன்மம் உண்டாகிறது. எல்லாம் ஒன்று என்ற ஞானம் நமக்கு வந்துவிட்டால், வேறு பொருள் இல்லாததனாலே ஆசை இல்லை. பாவம் இல்லை. காரியம் இல்லை. ஜனனம் இல்லை. துன்பமும் இல்லை.

யாரால் இந்த ஞானத்திற்கு வருவதற்கும், தியாகத்திற்கும் தயாராக முடியவில்லையோ, அவர்கள் கர்மயோகப்படி வாழ்க்கையை மேற்கொள்ளப்படும்பொழுது, கர்மமானது அவர்களை பந்தப்படுத்துவதற்கு பதிலாக தகுதிப்படுத்துகிறது.

இவ்வாறு ஞான யோகத்தினையும் கர்ம யோகத்தினையும் கூறியபின் அறியாமையில் இருப்பவர்களுடைய நிலை பேசப்படுகின்றது.

அஞ்ஞானிகள் பிறந்து பிறந்து இறப்பதினால் அவர்கள் தங்களை தாங்களே அழித்துக்கொள்ள விரும்புகிறார்கள்.

பரப்பிரம்ஹ தத்துவமானது பிரம்மத்தில் ஸ்தூல, ஸூஷ்ம, காரண சரீரங்களும் அவற்றின் தன்மைகளும் ஏற்றிவைக்கப்பட்டு, பிறகு உண்மையில் இவைகள் அனைத்தும் அற்றதாக பரப்பிரஹ்ம தத்துவம் விளக்கப்படுகின்றது.

மெய்பொருளைப் பற்றிய ஞானத்தை அடைந்தவன், தன்னையும் மற்ற உயிரினங்களையும் எவ்விதம் பார்க்கிறான் என்ற ஞானியின் பார்வை கூறப்பட்டு, அவ்வித ஞானத்தின் பலனும் பேசப்படுகிறது.

மேலும் உடல்களும் அதன் தன்மையும் அற்றது ஆத்ம தத்துவம் என்று விளக்கப்படுகிறது. ஈசாவாஸ்ய உபநிஷத மந்திரங்கள் எந்த யாக யக்ஞங்களிலும் எந்த கர்மாக்களிலும் பயன்படுத்தும் வழக்கம் இல்லை.

இவ்வுபநிஷத் ஆத்மாவின் (நம் சுயவடிவைப்பற்றிய) உண்மைநிலையை உணர்த்துவதே அதற்க்குக் காரணம்.

ஆதிஷங்கர பகவத்பாதர் ஈசாவாஸ்ய உபநிஷத்தின் விளக்கவுரையில் துவக்கத்திலேயே ஆத்மாவின் தன்மைகள் என்ன என்பதை பற்றி மிக அற்புதமாக நம் சுயநிலையை எடுத்துக்கூறியுள்ளார்.

"ஆத்மா பரிசுத்தமானது, பாவத்தால் தீண்டப்படாதது, ஒன்றாக இருக்கும் தன்மையுடையது, என்றும் உள்ளது, சரீரசம்பந்தம் அற்றது. எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது.

இவ்வாறுள்ள பிரம்மநிலையைப் பற்றியே இந்த உபநிஷதம் கூறப்போகின்றது.

ஓம் தத் சத்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்