ஞாயிறு, 30 ஜூன், 2019

மாண்டூக்ய உபநிஷதம்


மாண்டூக்ய உபநிஷதம்
===============




உபநிஷத்தைப்பற்றி: 
--------------------


எல்லா உபநிஷத்துகளிலும் மிகவும் சிறியதான இந்த உபநிஷதம் அதர்வண வேதத்தில் உள்ளது. மாண்டூகர் என்ற முனிவரால் கேட்கப்பட்டு எழுதப்பட்ட இதில் மொத்தம் பன்னிரண்டு சுலோகங்களே உள்ளன.

இருப்பது ஒன்றே என்ற இந்தக் கருத்தை ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் மூலம் இந்த உபநிஷதம் விளக்க முயற்சிக்கின்றது. 

அடிப்படை உண்மைகள் மூன்று. அவை உலகம், மனிதன், இறைவன்.

இந்த மூன்றும் ஒன்றே அது ஓங்காரமே என்பதின் மூலம் இந்த உபநிஷதம் சுட்டிக்காட்டுகின்றது.

நான்கு பரிமாணங்களை உடையவர்கள் நாம் என்கின்றது இந்த உபநிஷதம்.
விழிப்புநிலை, கனவுநிலை, தூக்கநிலை என்ற மூன்று நிலைகளில் நாம் மாறிமாறி சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம்.

வீட்டிலும், அலுவலகத்திலும், சமுதாயத்திலும் ஒருவன் வெவ்வேறு அனுபவங்களைப் பெறுகிறான். வீட்டில் அவன் கணவன், மகன், சகோதரன் என்றெல்லாம் அறியப்படுகின்றான்.

அலுவலகத்தில் அவன் ஓர் அதிகாரி, எஜமான் என இத்தனை பரிமாணங்கள் அவனுக்கு இருந்தாலும், அவன் யார்? என்றால் இத்தனை பரிமாணங்களையும் உள்ளடக்கிய ஒரு மனிதன்.

நாமும் விழிப்பு, கனவு, தூக்கம் என்ற மூன்று நிலைகளிலும் மூன்று பரிமாணங்களில் உலகத்துடன் தொடர்பு கொள்கிறோம்.

விழிப்பு நிலையில் இந்த உலகத்தினை அனுபவிப்பது நமது முதற்பரிமாணமான வைசுவானரன், கனவு நிலையில் அனுபவிப்பது தைஜஸன், தூக்க நிலையில் பிராஜ்ஞன்.

இந்த மூன்றையும் உள்ளடக்கிய மொத்தப்பரிமாணமே ஆன்மா. இது நான்காம் பரிமாணம் என்று கூறப்படுகின்றது.

இந்த ஆன்மாவே மனிதன், அதாவது நாம்.
இத்னை இந்த ஓங்கார மந்திரத்தின் வாயிலாக இந்த உப நிஷத்தில் விளக்கப்படுகிறது.

பிரம்மம் [பரம்பொருள்], ஆத்மா, ஆத்மாவின் [மனிதனின்] நான்கு நிலைகள் [உள்ளுணர்வுகள்], இவற்றைப்பற்றி ஒரு சூத்திரமாக [formula] ஒரு சொல்லைக்கூட வீணாக்காமல் சொல்கிறது.

இந்த உபநிஷத்தே அத்துவைத தத்துவத்தின் அடிப்படையாக அமைகிறது. இறுதியில் பிரம்மமும் [பரம்பொருளும்] ஆத்மாவும் ஒன்றே என்று நிறுவுகிறது.

ஆதிசங்கரரின் பரமகுருவான கௌடபாதர் இதற்கு விளக்கவுரை [காரிகை] எழுதியிருக்கிறார்.

இந்துசமயத்தின் ஒரு பெரும்பிரிவான அத்துவைத தத்துவத்தை நிலைநிறுத்த ஆதிசங்கரரின் மனத்தில் கருவாகப் பரிணமித்தது இந்த உபநிஷத்தும், கௌடபாதரின் காரிகையும்தான்.

இறைவனே நம்மில் ஆன்மாவாக நிலவுவதை உபநிஷத்தின் இரண்டாம் மந்திரம் கூறுகின்றது. அதாவது ஆன்ம நிலையில் நாமும் இறைவனும் ஒன்று என்றாகின்றது.

(மனிதன் = இறைவன்)
எனவே உலகமும் நாமும் இறைவனும் தனித்தனியானவர்கள் அல்ல, மூன்றும் ஒன்றே என்பது இந்த உபநிஷத்தின் தனிப்பெரும் கருத்தாக உள்ளது.

(உலகம் = மனிதன் = இறைவன்).

அமைதி மந்திரம்
=============

ப4த்3ரம் கர்ணேபி4: ஸ்ருணுயாம தே3வா: 
ப4த்3ரம் பஸ்’யேமாக்ஷபி4ர்யஜத்ரா: 
ஸ்த்தி2ரைரங்கை3ஸ்துஷ்டுவாம்ஸஸ்தநூபி4: 
வ்யசே’ம தேவஹிதம் யதா3யு:  
ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஸ்ரவா:  
ஸ்வஸ்தி ந: பூஷா விஸ்’வவேதா3: 
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: 

ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து |

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||

தேவர்களே [தெய்வங்களே]! காதுகளால் நல்லதையே கேட்போமாக. போற்றுதலுக்கு உரியவர்களே, கண்களால் நல்லதையே பார்ப்போமாக. உறுதியான புலன்களுடன் [திட அறிவுடன்] நுணுக்கமாக [உங்களைப்] புகழ்ந்து, எவ்வளவு ஆயுள் இறைவனால் கொடுக்கப்பட்டதோ [அதை] அனுபவிப்போமாக. நிகரற்ற புகழுள்ள இந்திரனே எங்களுக்கு [கல்வி கற்பதில்] வெற்றி உண்டாகட்டும்! அனைத்தையும் அறிந்த ஆதவனே, எங்களுக்கு வெற்றி! தடையின்றிச் செல்லும் [பறக்கும்] கருடனே, எங்களுக்கு வெற்றி! பிரஹஸ்பதியே, எங்களுக்கு வெற்றி!

ஓம்! அமைதி! அமைதி!! அமைதி!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்