செயல் இரகசியம்
முன்னுரை
அவரவர் வினை வழி, அவரவர் அனுபவம் என்பது முன்னோர்களின் கருத்து. இதில்,
இதுவரை நாம் பெற்ற அனுபவம் நம்மை இன்று எப்படி வைத்திருக்கின்றது என்பதிலிருந்தே,
நாம் வாழும் முறை தெரியும்.
வினை என்பது செய்யும் செயல் ஆகும்.
நாம் செய்யும் செயலை வைத்தே நம்மை மதிப்பீடு செய்வார்கள். இன்று செய்கின்ற செயலை வைத்தே நாளைய பலனை பார்க்க முடியும்.
“தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்”
-
என்பது முதுமொழி.
அதாவது, நீ எதை விதைக்கின்றாயோ,
அதையே அறுவடை செய்யமுடியும்.
மேலும் இந்த இயற்கையின்
நியதிப்படி எதை நீ விதைத்தாலும், அதனை அது பல மடங்கு பலனாக நமக்கு திருப்பிக்
கொடுக்கும்.
உதாரணமாக, ஒரே ஒரு மாங்காய் அல்லது தேங்காய் விதையை மண்ணில் விதைத்து, சில காலங்கள் கழிந்து பார்த்தால், அதில் பல நூற்றுக்கணக்கான மாங்காய்களும், தேங்காய்களும் காய்த்திருப்பதை பலனாகக் காண்கின்றோம். ஒன்றுக்கு பல மடங்கு பலன்கள் கிடைக்கின்றது. இதுதான்
இயற்கை நமக்கு கொடுக்கும் கொடை.
அதுபோல, நீ செய்கின்ற ஒரே ஒரு செயல் நல்லதாக இருப்பின் சில காலங்களிலேயே உனக்கு அதன்
பலனாக பல நல்ல செயல்கள் உன் வாழ்க்கையில் நடைபெறுவதையும், ஒரே
ஒரு செயல் தீயதாக இருப்பின் அதன் பலனாக பல தீய செயல்கள் உன் வாழ்க்கையில் நடைபெறுவதையும்
கண் கூடாக காணலாம்.
இதில் ஒரே ஒரு செயலுக்கே
இப்படி என்றால், பல நல்ல செயல்களை அல்லது பல தீய செயல்களை செய்யும் பொழுது அதன்
பலன்களாக நல்லதும், கெட்டதும் பல மடங்கு கிடைக்கும். இதுவே இயற்கையின் நியதி ஆகும். இதில், செய்கின்ற செயல் நல்லதா, அல்லது கெட்டதா என்பதை,
அந்த செயலினால் கிடைத்த பலன்களை வைத்தே அது முடிவு செய்யப்படுகின்றது.
ஆக, ஒருவன் ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு அதன் பின்விளைவுகளையும், பலன்களையும் கருத்தில் கொண்டு செயல்பட்டால், அந்த செயல்
நல்ல வகையில் பயன் கிடைத்து அவன் பெருமிதம் கொள்ளமுடியும்.
அதுவே, அவன் செயல்படும் பொழுது, எதைப்பற்றியும் கவலைப்படாமல்
அந்த செயலைச் செய்தால், அதன் விளைவாக கிடைக்கின்ற சிரமங்களையும்
அவன் அனுபவிக்க தயாராக இருக்க வேண்டும்.
"முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்"
இது எவ்வாறு என்பதை சாதாரண பாமரனும் படித்து அறிந்து கொள்ள ஏதுவாக இந்த புத்தகத்தின் வாயிலாக “செயல் இரகசியம்” வெளிப்படுகின்றது.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக