அத்வைத பஞ்சரத்னம்
========================
முன்னுரை
இங்கு அத்வைதத்தை மையமாகக் கொண்ட ஐந்து ஸ்லோகங்கள் உள்ளன. இந்த
ஸ்லோகங்களை விளைமதிக்க முடியாத ரத்தினத்துடன் ஒப்பிடுவதற்குக் காரணம், ரத்தினம் எப்படி
ஒளி விட்டு பிரகாசிக்கின்றதோ, அதுப்போல, இந்த ஸ்லோகங்கள் ஒளிப்பொருந்திய பிரகாசத்துடன்
காணப்படுகின்றது.
இந்த “அத்வைத பஞ்சரத்னம்” என்ற ஸ்லோகங்கள் பகவான்
ஸ்ரீ சங்கரர் அவர்களால் எழுதப்பட்டது.
இந்த ஸ்லோகங்களில் அனைத்திலுமே ‘சிவோஹம்’ என்று முடிவடைகின்றது. அதாவது, சிவோஹம்
என்றால், அஹம் சிவம் என்ற அர்த்தத்தில் நான் சிவம் என்று பொரு கொள்ளலாம். அல்லது சிவம்
என்றால் மங்கலம் என்று ஒரு அர்த்தம் இருப்பதால், நான் மங்கல ஸ்வரூபம் கொண்டவன் என்றும்
பொருள் கொள்ளலாம்.
மங்கலம் என்றால் மகிழ்ச்சி என்ற பொருளில், நான் மகிழ்ச்சியை உடையவன்
என்பதினால், நான் மோக்ஷத்தை அடைந்தவன் என்று பொருளாகின்றது.
பொதுவில், நான் பூர்ணமானவன், ஆனந்தமானவன் என்ற நிலையில் இந்த
ஸ்லோகங்கள் முடிவடைகின்றது.
‘சிவோஹம்’ என்பதை
“அஹம் பிரஹ்மாஸ்மி” என்றும் கூறலாம்.
என்னை நான் மங்கலம் உடையவனாக கருதுவதினால், என்னுடைய நிலை மிகவும்
மகிழ்ச்சிகரமான நிலையில் உள்ளது என்பதை அறிய முடிகின்றது.
நான் சிவம் என்று புரிந்து கொண்ட பிறகு என்னுடைய உண்மையான நிலையை
நான் எப்படி அனுபவிக்கின்றேன் என்பதை இந்த ஸ்லோகங்கள் வெளிப்படுத்துகின்றன.
ஒவ்வொருவனும் தன்னுடைய சுய அனுபவங்களின் வாயிலாக சில அறிவை அடைகின்றார்கள்.
அதுப்போல, சிலர் தான் அடைந்த அனுபவங்களை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டி, இதுபோன்ற
அனுபவத்தை நீயும் அடையலாம் என்ற உபதேசத்தின் வாயிலாக மற்றவர்களுக்கு அறிவைப் கொடுக்கின்றார்கள்.
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு. – குறள்.
கற்றனைத்து ஊறும் அறிவு. – குறள்.
மணற்கேணியில் , கொஞ்சம் தோண்டினால் நீர் வரும். அந்த நீரை மொண்டு எடுத்தால் மேலும் நீர் வரும். வற்றி விடாது.
அது போல, படித்ததை பகிர்ந்து கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு தர வேண்டும். அப்படி கொடுக்க கொடுக்க மேலும், மேலும் அறிவு வளரும்.
அது போல, படித்ததை பகிர்ந்து கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு தர வேண்டும். அப்படி கொடுக்க கொடுக்க மேலும், மேலும் அறிவு வளரும்.
கற்றது எனக்கு மட்டும் தான் என்று வைத்துக் கொண்டு இருந்தால், நாளடைவில் மணல் உள்ளே விழுந்து அந்த கேணி மூடிக் கொள்ளும். மூடிக் கொள்ளா விட்டாலும், தேங்கிய நீர் கெட்டுப் போய் விடும்.
அது போல, ஒரு தரம் கல்வி கற்று விட்டால் அப்படியே விட்டு விட முடியாது. மறதி வரும். மற்ற விஷயங்கள் வந்து குழப்பும். மேலும், மேலும் அதைப்பற்றிய அனுபவம் உண்டாகின்ற வரை படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் கல்வியின் பயன் முழுமையாக இருக்கும்.
உதாரணமாக, ஒருவன் இந்த உலக விவகாரங்களில் ஈடுபட்டு, தன் வாழ்க்கையின்
அத்யாவசியத் தேவைகளுக்காக, தன்னிடம் உள்ள பணத்தை சிறிதாக உபயோகப்படுத்தி, அதை முதலீடாகக்
கொண்டு, அதன் வாயிலாக, அதிக பணத்தை சம்பாதித்து சந்தோசப்படுவதைப் போன்று, இந்த அதிகப்படியான
அறிவை அடைய தன்னிடம் உள்ள சிற்றறிவை சிறிதாவது உபயோகப்படுத்தி, கூற வருகின்ற உண்மையை
ஒருவன் அறிந்து கொள்ள முயன்றான் என்றால், அவன் நிச்சயமாக அந்த பேரறிவை அடைந்து சந்தோசத்துடன்
வாழ்வான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இவ்வாறு, ஒருவன் அறிவை அடைய மற்றவர்களிடமிருந்து தகவல்களைச்
சேகரிப்பதை ‘சிரவணம்’ என்றும், சேகரித்த தகவல்களை தன் அறிவினால், ஆராய்வதை ‘மனனம்’
என்றும், ஆராய்ந்து அடைந்த அனுபவத்தை நடை முறைப்படுத்தினால் அதை ‘நிதித்யாஸனம்’ என்றும்
அழைக்கப்படுகின்றது.
அதாவது முதலில் அறிவைப் பெற அதைக் கேட்டும், அதன்பிறகு அதைப்பற்றி
சரியான முடிவுக்கு வர சிந்தித்தும், சிந்தித்த சிந்தனையில் கிடைத்த உண்மையை நடைமுறைப்படுத்துவதும்
ஆகும்.
ஒரு சிலர் மிகவும் கடினமாக உழைத்து பணத்தை சம்பாதிப்பார்கள்.
ஆனால், அவர்கள் அதனை செலவு செய்யத் தயங்குவார்கள். மற்றவர்களுக்கும் கொடுக்கவும் மாட்டார்கள்.
இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால்,
பாடுபட்டுத்
தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள், கூடுவிட்டு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்? – ஔவையர்.
சிலர் பணத்துக்காகப் பாடுபட்டுகின்றனர்.
பணத்தைத் தேடிக்கொள்கின்றனர். தேடிய பணத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்து வைக்கின்றனர்.
அனுபவிக்காமல் மறைத்து வைக்கின்றனர். இவர்கள் கேடு கெட்ட மனிதர்கள். இப்படிக் கேடுகெட்ட
மனிதரே! ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் உடம்புக் கூட்டை விட்டுவிட்டு உங்கள் ஆவி
(உயிர்) போன பின்பு அந்தப் பணத்தை யார்தான் அனுபவிக்கப் போகிறார்கள்? பாவிகளே! சொல்லுங்கள்.
என்று ஔவைப்பாட்டி வருந்துவது போன்று, தன்னிடம் உள்ள ஆறாவது அறிவைப் பயன்
படுத்தி, அதன் வாயிலாக பெற்ற அனுபவ அறிவை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்காமல் சுயநலம்
கருதி வாழ்பவன், தானே தனக்கு கேடினை உண்டாக்கிக் கொள்கின்றான்.
இப்படிப்பட்டவர்கள் தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்ற நிலையை
கவனித்தோமானால், “நான்”, “எனது”, “என்னுடையது” போன்ற வார்த்தைகளின் பொருள் உணராது,
அதனை தன் இஷ்டம் போல பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள்.
இவர்களது அஹங்காரமும் (நான்), மமகாரமும் (எனது) இவர்களை தன்
நிலை அறியாத தற்குறிகளாக மாற்றி, அறிய வேண்டிய அரிய உண்மையை இவர்களுக்கு மறைத்து, சேர
வேண்டிய இடம் சென்று, சேர முடியாமல் தடுக்கப்பட்டு விடும்.
ஆகவே, உயர் ஞானத்தை அடைந்த உத்தம மஹான்கள் இவர்களை மாற்ற விரும்பி,
அவர்களது கருணையை இத்தகைய ஸ்லோகங்களின் வாயிலாக வாரி வழங்கியிருக்கின்றார்கள்.
எனவே, இந்த ஐந்து ஸ்லோகங்களையும் கற்று, அதன் விளக்கத்தை புரிந்துக்
கொண்டு, பிறருக்கும் அதை புகட்டி, பிறவாப் பெரு நிலையை ஒவ்வொருவரும் அடைய வேண்டும்
என்று ஆசைப்படுகின்றேன்.
நன்றி!
என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக