பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கைத் தத்துவம்
======================================================================
======================================================================
என்னுரை
பக்தியும், ஞானமும் ஒருவனின் இரண்டு கண்கள் போன்றது.
ஒன்று இன்றி மற்றொன்றின் உதவியால் காட்சிகளைக் காண முயற்சிப்பது, எவ்வாறு அவனின் அறியாமையை
சுட்டிக்காட்டுகின்றதோ, அதுபோன்று பக்தி இன்றி, ஞானத்தை அடைய முயற்சிப்பதும், ஞானம்
இன்றி பக்தியை மட்டும் செய்து வருவதும் மிகப்பெரிய அறியாமையே ஆகும்.
ஞான மார்க்கமும், பக்தி மார்க்கமும் ஒன்றுக்கொன்று
பொருத்தமில்லாதது என்று பலரும் கூறக்கேட்டிருக்கின்றோம்.
இது அறிவிலிகளின் அறியாமைதானே தவிர, வேறு ஒன்றும்
கூறுவதற்கு இல்லை.
பக்தி என்பது ஞானத்திற்கான முதல் படி ஆகும். ஒருவனை
ஞானத்தில் கொண்டு சேர்க்காத பக்தி பயனற்ற பக்தி என்றுதான் கூற வேண்டும்.
ஒருவனது பக்தி சகுண பக்தியாக இருக்கும் பொழுது,
அதாவது, உருவங்களை வழிபடுகின்ற பொழுது, அவனிடம் இறைவன் வேறு, நான் வேறு என்ற துவைத
புத்தி இருக்கும். அதே பக்தி நாளடைவில் நிர்குண பக்தியாக மாறும்பொழுது, பக்தனுக்கும்,
பகவானுக்கும் இடையிலான வித்தியாசம் மறைந்து ஏகத்துவம் (ஒன்றே) உண்டாகிவிடுகின்றது.
பக்தி மார்க்கத்தில் பக்தனும் பகவானும் என இருவரும்
இருப்பது உண்மை தான். ஆனால், ஆழமான பக்தியின் வெளிப்பாடு, அந்த பக்தனையும், பகவானையும்
உள்ளத்தால் ஒன்றாக்கி விடுகின்றது. பகவானை சரணடைந்த பக்தன் ஒருபொழுதும் பகவானிடமிருந்து
பிரிந்து, தனியாக இருக்க முடியாது.
உலகறிந்த அத்வைதிகளான சுகர், மதுசூதனசரஸ்வதி, சதாசிவ பிரம்மேந்திரர் போன்ற மிகச் சிறந்த
பக்திமான்களாகத் திகழ்ந்தவர்களும், தற்பொழுது நம்மிடையே வாழ்ந்த இராமகிருஷ்ண பரமஹம்ஸர்,
ரமண மஹரிஷி, சந்திரசேகர சரஸ்வதி போன்றவர்களும் பக்தியில் குறைந்தவர்கள் இல்லை. அதே
சமயம் ஞானத்தில் உயர்ந்தவர்களாகவும் இருந்தார்கள்.
மறுபக்கம் தாயுமானவர், அருணகிரிநாதர், மாணிக்கவாசகர்
போன்ற சிறந்த பக்திமான்கள் கூட அத்வைதத்தை ஏற்றுக்கொண்டு அதைப்
போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்கள்.
அத்வைதம் என்றால் ஒன்றைத்தவிர வேறு இல்லை என்பதுதான்.
அப்படியென்றால் யார் யாருக்கு உபதேசம் செய்வது? ஸர்வம் பிரம்மமே என்றிருக்கையில் உபதேசிப்பவர் யார்? உபதேசம் பெறுவது யார்? ஆகவே ஞான மார்க்கத்தை உபதேசிப்பவர்கள்
பக்தியைக் குறித்து பேசக் கூடாது என்பது அறியாமையினால்
உண்டாவதுதான் என்கின்றார் பரமாச்சாரியார்.
மேலும், பகவத்கீதையை படிக்கும் பொழுதும் அல்லது
யோகவாசிஷ்டத்தில் வசிஷ்டர் இராமபிரானுக்கு வழங்கும் உபதேசங்களை கேட்கும்
பொழுதும், தத்தாத்ரேயரின் அவதூதகீதையோ, அல்லது தாயுமானவரின் பக்தி பாடல்களோ, ஆதி சங்கரரின் விவேக சூடாமணியோ எதைக் கற்றாலும்,
கேட்டாலும் இந்த படைப்புக்கள் எல்லாம் ஒருவனை ‘மாயையின்’ திரைக்குப் பின்னால் அழைத்துச் சென்று, அவனுக்கு
அத்வைத ஞானத்தை ஊட்டுகின்றது.
இதுபோன்ற படைப்புக்கள் அனைத்தும் ஒருவனை அறியாமையிலிருந்து
விடுபட வைக்க மஹான்களின் கருணையினால் கிடைக்கப்பெற்றவை. மஹான்கள் அனைவரும் அனுபவத்தின்
கொடுமுடியை தொட்டவர்கள்.
அனுபவத்தின் வாயிலாகவே ஞானத்தைப் பெற்றவர்கள். ஆகவே அவர்கள் பக்தி செய்து அடைந்த அனுபவங்கள்
ஞானத்திற்கு பொருந்தாதவை என்று பேதமை புத்தியுடன் புலம்பிக்கொண்டிருப்பவர்களை எண்ணிப்
பரிதாபம் கொள்வதைத்தவிர வேறு ஒன்றும் சாத்தியமில்லை.
நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படி வாழ வேண்டும்
எனத் திடடவட்டமாகப் பார்க்க வேண்டும். அதற்கு வாழ்க்கைத் தத்துவம், அல்லது நியதி என்ன
என்று ஆராய வேண்டும். அதை ஞானிகள் சான்றிதழுடன் தந்தால்தான் அது நமக்கு ஏற்கக்கூடியதாகவும்
அமையும்.
அப்படிப் பார்க்கும்போது சிறு வயதிலேயே ப்ரஹ்மசர்ய
ஆச்ரமத்திலேயே சன்யாஸியாகி, தனது 32 வருட வாழ்வுக்குள் மஹா ஞானியாகி, அத்வைத சித்தாந்தத்தை
நிலை நாட்டி, ஸர்வக்ஞ பீடத்தில் அமர்ந்து, ஸனாதன தர்மத்தை உலகிற்குத் தந்து, நான்கு
காஞ்சி மடங்களை ஸ்தாபித்து, ஸனாதன தர்மத்தைக் காக்கும் பொறுப்பை அவர்களிடம் தந்து
32-வது வயதில் நிர்வாணமாகிய ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அவர்கள் நமக்குத் தொகுத்தளித்த
இந்த “பஜ கோவிந்தம்” என்ற திவ்ய காவ்யத்தைப்போல
மிகவும் சுலபமாகப் பின்பற்றக்கூடிய சான்றிதழ் வெறுண்டோ?
நம் வாழ்வின் தவறான நோக்கம் நம்மை எங்கு கொண்டு
செல்லும், சரியான நோக்கம் எப்படி அமைய வேண்டும், வாழ்க்கை என்பது என்ன?, வாழும் முறை
யாது?, அதனால் நமக்கு நிகழும் பலன் ஏது?, சரியான வாழ்க்கை முறை எங்ஙனம் அமைய வேண்டும்?
எனக்கூடிய தத்துவங்களைத் தெள்ளத் தெளிய ஸ்ரீ
ஆதி சங்கரர் இந்த திவ்ய காவ்யத்தில் தந்துள்ளார்.
அதில் தந்துள்ள தத்துவங்களைச் சரிவர கிரஹித்து,
அவைகளை அயராது சரிவர நாம் பின்பற்றினோமானால் நம் வாழ்க்கை முறை மிகச் சீரும் சிறப்பும்
பெற்று, வளமுடனும், ஆற்றலுடனும், தார்மிகமாகவும், அமைதியுடனும் அமைந்து நம்மை ஜீவன்முக்தன்
நிலைக்கு உயர்த்த ஹேதுவாகும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
நன்றி!
என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக