ஞாயிறு, 30 ஜூன், 2019

தைத்திரீய உபநிஷதம்


தைத்திரீய உபநிஷதம்
====================================

(வாழ்க்கையை வாழுங்கள்)


தைத்திரீய உபநிஷத்தின் முகவுரை:
-----------------------------------


‘வாழ்க்கை நடக்கிறது’ என்பது ஒன்று, ‘வாழ்க்கையை வாழ்வது’ என்பது வேறு. தன் போக்கில் வாழ்க்கையை வாழாமல் சிந்தித்து வாழச்சொல்கிறது தைத்திரிய உபநிஷதம்.
உடம்பு, உயிர், வானம், பூமி என்று நம்மிலும் பிரபஞ்சத்திலும் உள்ள பல விஷயங்களைச் சிந்தித்து வாழச்சொல்கின்றது. அதற்காக சுமார் 20 வகையான சிந்தனைப் பயிற்சிகளை தருகின்றது இந்த உபநிஷதம்.

உலகம், மனிதன், கடவுள் ஆகிய அடிப்படை உண்மைகளுக்கு சில தெளிவான விளக்கங்களையும், எது உண்மையான கல்வி என்பது போன்ற அற்புதமான விளக்கங்களும் இதில் உள்ளது.

இது கிருஷ்ண யஜூர் வேதத்தில் தைத்திரிய ஆரண்ய பாகத்தின் இறுதியல் இருக்கின்றது. இது மூன்று அத்தியாயங்களை (வல்லி) கொண்டது.

முதல் பகுதியில் விதவிதமன உபாஸனைகள் கூறப்பட்டிருக்கின்றது. இதற்கு சீக்ஷாவல்லி என்று பெயர். முதல் மந்திரம் சீக்ஷா என்று தொடங்குவதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது. இதில் முதற் பகுதி உலகத்தை பற்றி, அதாவது நாம் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை ஆராய்கின்றது. மனிதன் என்பவன் யார் என்பதற்கான ஓர் அற்புத விளக்கத்தினை தருகின்றது.

இரண்டவது பகுதிக்கு பிரஹ்ம வல்லி என்று பெயர். இது பிரஹ்ம வித்யாவை உபதேசிக்கின்றது. அதாவது கடவுளை பற்றி சிந்திக்கின்றது. இதில் ஆனந்த ஸ்வரூபத்தை பற்றி விரிவாக உபதேசிப்பதால் இதற்கு ஆனந்தவல்லி என்றும் அழைக்கபடுகின்றது. இதில் மிகத்தெளிவாக பஞ்சகோச விவேகம் விசாரம் செய்து பிரஹ்மமானது விளக்கப்படுகின்றது.

மூன்றாவது பகுதி ப்ருகு என்று தொடங்கும் மந்திரத்தை உடையதால் இதற்கு ப்ருகுவல்லி என்று பெயர். இதில் வாழ்க்கையின் அடிப்படை பற்றிய அற்புதமான ஒரு கல்வியாக அமைகின்றது இந்த உபநிஷதம்.

மனிதன் என்பவன் யார்? அவன் சமுதாயத்தில் நல்ல அங்கத்தினனாக விளங்குவதற்கான கடமைகள் எவை, தெய்வச் சிந்தனையுடன் வாழ்வது எப்படி?, அதிக இன்பத்தை அனுபவிப்பது எப்படி? என்பவைகள் போன்ற அன்றாட வாழ்க்கை விஷயங்கள் இங்கே ஆராயப்படுகின்றன.

வாழ்க்கையை வெறுக்கவோ, வாழ்க்கையிலிருந்து விலகி ஓடவோ வேண்டாம் என்பதனை வலியுறுத்துவதுடன், இன்பமான, வளமான வாழ்க்கை வாழ்வது இறைவனின் மகிமையை வெளிப்படுத்துவதாகும் என்ற கருத்தைச் சிறப்பாக சுட்டிக்காட்டுகின்றது.

மேலும் சில தியானங்கள், பண்புகள், ஆனந்தமய வித்தை, பார்கவி - வாருணீ வித்தை என்ற இரண்டு வித்யைகள் இங்கு விளக்கப்படுகின்றன.

ஓம் தத் சத்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்