சனி, 29 ஜூன், 2019

மனீஷா பஞ்சகம்




ஸ்ரீ குருப்யோ நம:

மனீஷா பஞ்சகம்
(ஆதி சங்கரர் அருளியது)





ஆதி  சங்கரர்  அருளிய  பல்வேறு  படைப்புகளில்  மனீஷா பஞ்சகம் முக்கியமான ஒன்றாகும். சாதி அபிமானத் தியாகம்  (சாதி துவேஷம் இல்லாமல் இருப்பது)  என்ற பண்பு  அனைவரும்  வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒன்று என்பதை  உணர்த்தும்  படைப்பாகும்.  

பஞ்சகம் என்றால் ஐந்து பொருட்களின் சேர்க்கை என்று அர்த்தம்.  சமஸ்கிருத  மொழியில்  மனீஷாஎன்றால் நிச்சயமான அறிவு (ஞானம்) என்று பொருள். நம்பிக்கையினாலோ, கொள்கையினாலோ  அல்லாமல், ஒரு உயர்ந்த அறிவுக் கருவியின் மூலம் ஐயமின்றி ஏற்படும்  உறுதியான  அறிவே  மனீஷா  எனப்படும்.  இந்த  நிச்சய அறிவை  விளக்கும்  ஐந்து  ஸ்லோகங்களே மனீஷா பஞ்சகம்  எனப்படுகின்றன.

இந்த மனீஷா பஞ்சகம் உருவாவதற்கு வழிவகுத்த சம்பவம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் அந்தச் சம்பவமே சாதி அபிமானத் தியாகத்தின் முக்கியத்துவத்தை  உணர்த்த  வல்லது.

ஒரு நாள் சங்கரர் காசியில் கங்கையில் நீராடிவிட்டு தன் சீடர்களுடன் குறுகிய பாதை ஒன்றில் சென்று கொண்டிருக்க, சற்றுத்தொலைவில் அக்காலத்தில் தீண்டத்தகாதவராக கருதப்பட்ட புலையன் ஒருவர் நாய்களோடு வந்து கொண்டிருந்தார். அவருக்குப் பரிவாரங்களாக நான்கு  வேட்டை நாய்கள் சங்கரருக்கு மிக அருகில் வந்து விட்டதை உணர்ந்த சங்கரரின் சீடர்கள், அப்புலையனைப் பார்த்து விலகிப்போ.. விலகிப் போ..” என்று ஒதுங்கி வழிவிடச் சொன்னார்கள்.

ஜாதி பேதங்களால், தீண்டாமை என்னும் தீய நோய் பரவி இருந்த காலம் அது. சீடர்களின் இந்தச் செயலுக்கு அவர்களது  குருவே காரணம் எனக்  கண்ட  அந்த  புலையன்  துணிந்து  சங்கரரிடம்  கேட்கிறார்.

அன்னமயாதன்னமயம் அதவா சைதன்யமேவ சைதன்யாத் |
யதிவர தூரீகர்த்தும் வாஞ்சஸி கிம் ப்ரூஹி கச்ச கச்சேதி ||

துறவிகளில் மேலானவரே! தாங்கள்  விலகிப்போ என்று கூறியது இந்த உடலையா? அப்படியென்றால், என்னுடைய உடலும் சோற்றால் ஆன ஒரு ஜடம், தங்களுடைய உடலும்  சோற்றால் ஆன ஒரு ஜடம், ஒரு ஜடத்திலிருந்து இன்னொரு ஜடம்  எப்படி  விலகும்? அல்லது தாங்கள் விலகிப் போ என்று கூறியது இந்த உடலுக்குள் இருக்கும் சைதன்யத்தையா? சைதன்யமான ஆத்மா எனக்குள்ளும், உங்களுக்குள்ளும்,  எங்கும் பரவியுள்ளதே, அது எப்படி விலகிப் போக முடியும்? எனவே தாங்கள் விலகிப் போ என்று எதைக் கூறினீர்கள்?

மேலும் அவர் தொடர்ந்தார்.

கிம் கிம்கங்காம்புனி பிம்பிதே அம்பரமணௌ சண்டாலவாடீபய:
புரே சாந்தரமஸ்தி காஞ்சனகடீ ம்ருத்கும்பயோர்வாம்பரே |
ப்ரத்யக்வஸ்துனி நிஸ்தரங்க ஸஹஜாநந்தாவ போதாம்புதௌ |
விப்ரோயம்
வபசோயமித்யபி மஹான் கோயம் விபேதப்ரம: ||

கதிரவனின் பிம்பம் கங்கையிலும் விழுகிறது, சாக்கடையிலும் விழுகிறது, இதனால் கதிரவனுக்கு இழுக்கு ஏற்படுவது இல்லையே? மேலும் பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயம் மண் பானைக்குள் இருந்தாலும் சரி, பொன் பானைக்குள் இருந்தாலும் சரி, ஆகாயம் வேறு படுவதில்லையே? இந்த அறிவை தாங்கள் அறிந்திருக்கக்கூடுமே, அப்படி இருந்தும் ஏன் உங்களையும் என்னையும் பேதப்படுத்தி விலகிப் போ என்று கூறினீர்கள்?

மேற்கூறிய கேள்விகளைக் கேட்டவுடன்சங்கரர் எவ்விதச் செருக்கும் இல்லாமல், அந்நொடியிலேயே அப்புலையனிடம் பணிந்து  அத்வைத அறிவில் நிலைத்து நிற்கும் தாங்களே என் குரு என்று வணங்கி மனீஷா பஞ்சகம் எனும் படைப்பை  அருளினார்.

பாரத பூமியெங்கும் பாகுபாட்டால் சமுதாயம் பிளவு பட்டு இருந்த காலம் அது. மத ரீதியான குழப்பங்கள் உச்சத்தில் இருந்த ஒரு காலகட்டத்தில் பிறப்பால் பேதம் காணும் ஜாதிப் பாகுபாட்டினால் தீண்டாமை என்ற கத்தி சமுதாயத்தை துண்டு போட்டுக் கொண்டிருந்த காலத்தில் சங்கரரின் வருகை நிகழ்ந்தது. தவறான சிந்தாந்தங்களைப் பரப்பி மக்களை திசை திருப்பும் முயற்சிகள் நடைபெற்று வந்த வேளை  அது.

குறிப்பாக பாரத நாட்டில் பிறப்பால் உயர்வு, தாழ்வு கருதும் ஜாதி பேதம் வேதங்களின் உண்மைத் தன்மையை அறியாத சில மூடர்களால் பரப்பப்பட்டு இன்று வரை ஆழமாக  வேறூன்றி இருக்கின்றது.

இத்தகைய பேதங்களை களையவும், வேதங்களின் உண்மைத் தன்மையை உலகிற்கு உரைக்கவும், உபநிடதங்களின் உண்மைகளை  உலகறியச் செய்யவும், வரும் காலம்  ஜாதி, மத  பேதமற்ற சமுதாயம் உருவாகவும் பாடுபட்டவர்களில் ஆதிசங்கரரும்  ஒருவர் ஆவார்.

அவ்வகையிலே இந்த மனிஷா பஞ்சகத்தில் ஜாதித்து வேஷத்தை களைய வேண்டும் என்பதும் முக்கியமான நீதி

ஷூத்ரன்” என்ற சொல்லினால் பிறவியில் கீழ்ப்பட்டவனாகவும், பிராமணன்” என்ற சொல்லினால் பிறப்பால் உயர்ந்தவன் என்றும் மனிதர்களைப் பிரித்துள்ளது இந்த வேதம் என்பதை யாரோ சில தகாதவர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டு உண்மைக்கு புறம்பாக வேதத்தின் கருத்தை அறியாத மூடர்களால் பரப்பப்பட்டு வந்துள்ளது.

ஒவ்வொரு மனிதனையும்  நீயே அதுவாக இருக்கின்றாய்என்று  கூறும்  வேதமா  இது  போன்ற ஜாதிப் பிரிவினையை உருவாக்கி இருக்கும். சற்றே யோசியுங்கள்!

நீயே எதுவாக இருக்கின்றாய்? என்று வேதம் கூறுகின்றது?

எல்லையற்ற அந்த பரமாத்மாவும், இந்த உடல் என்ற எல்லைக்குள் இருக்கும் ஜீவாத்மாவும் ஒன்றுதான் என்று கூறும் வேதமா இப்படி மனிதர்களை ஜாதிவாரியாக பிரித்து இருக்க முடியும்?...

இதுபோன்ற அறியாமையை தகர்த்தெறியவே ஆதிசங்கரர் புலையனுடன் நடத்திய நாடகமே இந்த மனிஷா பஞ்சகம் உருவாக காரணமாக இருந்தது என்றால் அது மிகையாகாது.

வேதங்கள் உண்மைக்கு புறம்பாக எதனையும் கூறவில்லை. வேதத்தை அரைகுறையாகப் படித்துவிட்டு தன்னுடைய மனம் போன போக்கில் அறியாமை ஜனங்களிடம் தவறான விளக்கங்கள் கொடுத்து கற்பித்த கற்பனையே இந்த பாகுபாடு.

உலகில் உள்ள எல்லா மனிதர்களையும் பிறப்பால் சமத்துவமாகவும், பின் அவர்கள் ஏற்று வாழும் வாழ்க்கையை வைத்து மூன்று விதமாக அடையாளம் காட்டுகின்ற வேத மந்திரம் மனிதர்களை நான்கு பிரிவாக அமைக்கின்றது.

ஜன்மநா ஜாயதே ஷூத்ர: கர்மணா ஜாயதே த்விஜ: |
வேதாத்யாயி பவேதிப்ரோ ப்ரஹ்மா ஜானாதி பிராஹ்மண: ||

இதன்  அர்த்தம்  என்ன?

பிறப்பில் எல்லா மனிதர்களும் ஷூத்ரர்களாகவே பிறக்கின்றார்கள். அதாவது ஷூத்ரன் என்பவன் தக்கது எது?, தகாதது எது? என்ற அறியாமையினால் கட்டுப் பாடுகளற்ற, உடலும், மனமும் வேண்டுவன வற்றையெல்லாம்  வேண்டும் போது  தன்  மனம்  போன  போக்கில்  செய்துக்  கொண்டிருப்பவன்.

பிறந்த குழந்தைகள் எல்லாம் இதுபோல இருப்பதால் நாம் எல்லாருமே ஷூத்திரர்களாகவே பிறக்கிறோம்ஆதலால் பிறப்பில் அனைவரும் சமமே! என்பதை நன்கு அறிய வேண்டும்.

இவ்வாறு சமமாக பிறந்தவன் தான் கற்கும் கல்வியின் மூலம் எது தக்கது ?, எது தகாதது ? என்பதை அறியும் அறிவே அவனை ஷூத்திரனிலிருந்து மாற்றத்திற்கு கொண்டு  செல்கின்றது.

இந்த மாற்றம் முக்கியம் என்பதால் இதனை மறுபிறப்பாகவே நம் சான்றோர்கள் கருதினர். அதனாலேயே, கல்வித் தொடக்கம்  ஏற்று  கற்கவேண்டிய உண்மையான  கல்வியை  கற்றுத்   தேர்ந்து,  அந்த  கற்ற கல்வியின் படி நின்று, தருமப்படி வாழ்பவர்களை ஷூத்திரர்களிலிருந்து வேறுபடுத்தி த்விஜர் என்று அழைப்பர்.  அதாவது, த்வி என்றால்  இரண்டு, என்றால் ஜன்மம். ஆக, இரண்டு முறை  பிறந்தவன் என்று அழைப்பர்.

அன்றையக்காலங்களில் குருகுலக்கல்வியின்  வாயிலாக அனைத்து தரப்பினருமே ஒன்றாக கல்வி பயின்றனர். சாதாரணமானவனிலிருந்து,   அரசகுமாரன் வரை  அனைவருக்கும் ஒரே  மாதிரியான 64 கலைகளுடன் கூடிய கல்வி கற்பிக்கப்பட்டன.

நல்லது எது?,  தீயது எது?  என்ற  அறிவை  அறிந்து,  தான்  ஏற்ற தொழிலுக்கும், வாழ்க்கை முறைக்கும்  ஏற்ற தருமப்படி  வாழ்கின்ற  துவிஜர்கள்  சிலர், இதனினும் மேலே  உயரும்  பொருட்டு,  வேதங்களின்  உண்மைகளை ஆய்ந்துணரவும், அதன்படி தான் எடுத்துக் கொண்ட  தருமத்திற்கேற்ப  நடந்து,  வேத விதிகளின் படி, ஆன்ம ஞானமே குறிக்கோளாக  ஏற்று தங்கள்  வாழ்க்கை முறைகளை  மாற்றிக் கொள்பவர்களை விப்ரர்’ என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்த விப்ரர்களே தீர்க்கமான அறிவாலும், யோகத்தாலும் ஆன்ம விசாரனையில் பலனை அடைந்து பிரஹ்மம் என்ற பரமார்த்த ஞானத்தை அடைந்தவர்கள் எவரோ அவர்களே “பிராஹ்மணர்கள்” என்று அழைக்கப்பட்டனர். அதாவது பிரஹ்ம  ஞானத்தை  அடைந்தவன்  பிராமணன் என்று   அழைக்கப்படுகின்றான்.

பிறப்பினாலோ, வேதங்களை படிப்பதினாலோ, முற்றுப்பெறாத கல்வியினாலோ, அல்லது வெளி வேடத்தினாலோ  ஒருவன் விப்ரன்  என்றோ,  பிராஹ்மணன் என்றோ  கருதப்படமாட்டாது.

பிறந்த குழந்தைகள் அனைவரும் பிறப்பால் சமமே, அவர்களே தாங்கள் கற்கும் கல்வியின் அடிப்படையில் அவர்களது வாழ்க்கை முறை எப்படி மாற்றத்தை அடைகின்றதோ அதற்கேற்ப அவர்கள் த்விஜன்”, “விப்ரன்”, “பிராஹ்மணன்’”என்று ஏற்று வாழ்ந்து வந்தனர்.

ஆகவே, வேத சாஸ்திரத்தின்படி ஒருவன் பிறப்பால் த்விஜனாகவோ, விப்ரனாகவோ, அல்லது பிராஹ்மணனாகவோ என்றுமே இல்லை.

நல்ல நடத்தையினாலும், தான் ஏற்ற கர்ம, தர்ம நியாயங்களினாலும், எல்லாக் குழந்தைகளும் த்விஜன், விப்ரன், பிராஹ்மணன்  என்ற மாற்றத்தை  விரும்பியே ஏற்று வளர்ந்து வந்தன.  இங்கே பிறப்பு எதற்கும் பொறுப்பல்ல!. தீண்டாமை என்ற தீங்கு ஏதும் இங்கு இல்லை!. ஜாதி என்னும் பிரிவினை இல்லை!. ஆனால் வாழ்க்கை  என்ற பொறுப்பு  இருக்கின்றது.

தருமம், கருமம் போன்ற காரணங்கள் காரியங்களுக்கு ஆதாரமாக இருக்கின்றது. எல்லா வகை மனிதர்களும் அவரவர்களின் பாதையில் உயர்வடையும் வழி இருக்கின்றது. அவர்கள் பயணிக்கின்ற பாதைகள் பலவாக இருப்பினும், அந்த பாதைக்கேற்ற பண்பே அவனை மேலோனாகக் காட்டுகின்றது.

இதனால் என்ன நன்மை என்றால், மனிதனின் ஒழுக்கமே அவனது வாழ்க்கையில் அவனை உயர்ந்தவனாகவோ, தாழ்ந்தவனாகவோ வாழ்வதற்கு காரணமாக அமைகின்றது. அதாவது ஒருவனை மேலோனாக ஆக்குவது அவனது பண்பும், நடத்தையுமே அன்றி வேறு அல்ல என்பதாகும்.

ஆகவே, யாதும் ஊரே! யாவரும் கேளிர்!! என்ற சம நோக்குப் பார்வை வரவேண்டும். இதுவே அத்வைத ஞானத்தின் ஆதார பலன். + த்வைதம் என்பது இரண்டற்ற ஒன்றே என்பதாகும்.

மேலும் இந்த உயர்ந்த அறிவைக் கற்றால் மட்டும் போதாது, கற்றபின் நிற்க அதற்குத்தக என்ற வள்ளுவனின் குறளின் படி, அவ்வறிவிலேயே நிரந்தரமாக நிற்க வேண்டும். இதற்குப் பெயர்தான் ஞான நிஷ்டை ஆகும்.

நிஷ்டை என்றால் வழுவாமல் நிற்றல் என்பது பொருள்கற்றபடி நிற்க வில்லையென்றால் தருமம் தவறியவராக ஆகின்றோம். அப்படி ஒரு தவறு ஏற்பட்டால் அதனை திருத்திக் கொள்ள முயலவேண்டும். அதற்கு பணிவும், விடாமுயற்சியும் தேவை.

இனி மனிஷா பஞ்சகம் என்ன போதிக்கின்றது என்பதை பார்க்கலாம்….

உபநிஷத்துக்களில் முதன்மையாக விளக்கப்படும் மஹா வாக்கியமான அந்த அத்வைத அறிவை, இந்த ஐந்து சுலோகங்கள் மூலமாகப் பல்வேறு வழிகளில் சாரமாக விளக்கியுள்ளார்.

முதல் இரண்டு சுலோகங்களில், ஜீவ பிரம்ம ஐக்கியம் பற்றி விளக்கியுள்ளார்.

மூன்றாவது சுலோகத்தில் அத்வைத அறிவை அடைவதற்குப் பின்பற்ற வேண்டிய வழிகளையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் விளக்கியுள்ளார்.

நான்காவது சுலோகத்தில் ஆத்மா அறிவு சொரூபமானது என்றும், அதை ஏன் புற அறிவினால் அறிய முடியாது என்றும் விளக்கியுள்ளார்.

ஐந்தாவது சுலோகத்தில் அத்வைத அறிவின் பலன் ஆத்மாவை ஆனந்தம் என அறிவதே என்று விளக்கியுள்ளார்.
ஒவ்வொரு சுலோகத்திலும் தன்னுடைய நிச்சயித்த அறிவை நிலைநாட்டியுள்ளார்.

விழிப்பிலும், கனவிலும், ஆழ்ந்த உறக்கத்திலும் எந்த தூய உணர்வு தெளிவாக வெளிப்படுகிறதோ, பிரபஞ்சத்தின் சாட்சியாக எது பிரம்மா முதல் எறும்பு வரை அனைத்து உடல்களிலும் ஊடுருவியுள்ளதோ அதுதான் நான். நான் காணப்படும் பொருள் அல்ல என்று எவருக்கு உறுதியான ஞானம் இருக்கிறதோ, அவர் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டவராக இருந்தாலும் சரி, அல்லது சமுதாயத்தில் உயர்வாக கருதப்படுபவராக இருந்தாலும் சரி, அவரே என் குரு என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை. -  ஆதி சங்கரர்.

அனைத்து உயிர்களுக்குள் இருக்கும் ஜீவாத்மாவும், உலகத்திற்கே சாட்சியாக இருக்கும் பரமாத்மாவும் ஒன்று என்ற அத்வைத அறிவை எவர் ஒருவர் அடைந்து, அந்த அறிவிலேயே நிலைத்து நிற்கிறாரோ, அவர் புலையனாக இருந்தாலும் சரி, வேதம் ஓதும் அந்தணராக இருந்தாலும் சரி, அவரே எனது ஆசான் என்பதே ஜகத்குரு ஆதி சங்கரரின் நிச்சயமான அறிவு ஆகும்.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் உண்மை அறிவை உணரவேண்டி, சாதி வேற்றுமை இல்லாமல் சமுதாய வளர்ச்சிக்காக சம நோக்கு என்ற பண்பை நாம் அனைவரும் வளர்த்து கொள்ள ஆதி சங்கரரின் மனீஷா பஞ்சகம் உதவும் என்பது திண்ணம்.

ஆஹார நித்ரா பயம் மைதுனானிஞ் சாமான்ய மேதத் பசுபிர் நரணாம் |
ஞானம் நராணாம் அதிகோ விசேஷோ ஞாநேந ஹீந: பசுபிஸ் ஸ்மான: ||

எல்லா உயிர்களுக்கும், உணவு, உறக்கம், பயம், காமம் முதலிய தருமங்கள் பொதுவாக இருப்பினும், மனிதன் மட்டுமே தன்னை அறியும் ஞானத்திற்கு தகுதியானவன். அத்தகைய உயர்ந்த அறிவை பயன்படுத்தாவிடில் மனிதனும் விலங்கினைப் போலவே ஆகின்றான் என்பது மேற்கண்ட சுலோகத்தின் பொருள்.

அவ்வாறு தன்னை அறிதலே உண்மையான ஞானம் என்றும், மற்ற உலக விஷயங்களை அறிதல் விஞ்ஞானம் என்றும் அமரகோஷம் என்ற வடமொழி காவியம் கூறுகின்றது.


ஓம் தத் சத்!


என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்