ஐதரேய உபநிஷதம்
============================
============================
மிஞ்சும் அதிசயம்!
--------------------
--------------------
புறவுலகில் பல அதிசயங்களைக் காண்கிறோம். இவற்றுள் இயற்கை
உருவாக்கிய அதிசயங்கள் சில, மனிதன் உருவாக்கிய அதிசயங்கள் சில. இதிலேயே
நாம்சிந்தித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புரியும்!
மனிதன் உருவாக்கிய அதிசயங்கள் எத்தனைதான்
இருந்தாலுமே கூட இயற்கையின் அதிசயங்களுக்கு முன்னால் அவை ஒன்றுமேயல்ல என்பதுதான்
அது.
இயற்கையில் உள்ள ஜீவராசிகளில் பலப்பல
அதிசயங்கள் உள்ளன. பச்சோந்தியின் உடல் நிறம் அது இருக்குமிடத்துக்கு ஏற்ப மாறுவது
ஒரு அதிசயம்!
சில செடிகளுடைய கொடிகள் அபாயகரமாக அருகில்
செல்லும் விலங்குகளைக் கவர்ந்திழுத்து சுற்றிப் பின் அவற்றை உணவாகக் கொள்வது.
சில மலர்கள் குரங்கு, மனிதன், பூச்சிகள் போன்ற உருவ
அமைப்பில் காணப்படுகின்ற அதிசயம்! ஆந்தைகளின் கண்கள் இருட்டில் தெரிவது.
வௌவால்களுக்கு கண்களே இன்றி அவை புறஊதாக் கதிர்களின் மூலம் வேகமாக எதிரில்
தெரியும் இடர்களை தவிர்த்துப் பறப்பது போன்ற அதிசயங்கள் இப்படிப் பல பல உள்ளன.
இவையனைத்தையும் மிஞ்சுகிற அதிசயம் ஒன்று
உள்ளது.
அது மனித உடலில் நிகழ்கிறது. அதுவே உயிர்
உருவாக்குதல், கருத்தரிப்பது முதல் உயிர் வளர்ந்து வெளியே வருவது வரை நடைபெறுகின்ற
நிகழ்ச்சிகள் விந்தையிலும் விந்தையானவை.
ஐதரேய உபநிஷதம் இந்த அதிசயத்தை ஆராய்கிறது.
4 அத்தியாயங்களைக் கொண்ட இந்த உபநிஷதத்தின்
ஒரு பகுதி இதனை விவரிக்கிறது.
மற்ற பகுதிகள் பிற உபநிஷதங்களைப் போல் உலகம்,
ஆன்மா, இறைவன் போன்ற கருத்துக்களைக் கூறுகிறது.
இந்தப் பதிவுகள் இந்த உபநிஷதம் குறித்த
அற்புதமான விளக்க உரை நூலை எழுதிய ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தை சேர்ந்த சுவாமி
ஆசுதோஷானந்தர் அவர்களின் நூலில் இருந்து தொகுத்து எழுதப்பட்டவை.
இந்த பதிவுகளின் முழுப் புகழும் சுவாமிஜி
அவர்களையே சாரும்.
ஏதோ ஓரிரு இடங்களில் அடியேனின் சிந்தையில்
தோன்றும் கருத்துக்களைக் கூறியுள்ளேன் அவ்வளவே!!
இந்த நூலில் வரும் மனித உயிர் ஜனிப்பது
வளர்வது போல விஷயங்களைப் பற்றிய வர்ணனைகள் நமக்குப் பல விஷயங்களைப் புரிய
வைக்கும்.
இன்னமும் அந்தக் காலத்தில் வரும் புராணக்
கதைகளில் அபிமன்யு தாயின் வயிற்றில் இருந்து கொண்டு சக்ர வியூகத்தை உடைப்பது
குறித்த பாடத்தை கண்ணனிடமிருந்து கேட்டான்.
பிரகலாதன் ஹரிபக்தியை நாரதர் தன்னுடைய
தாயிடம் ஹரிநாம மகிமை குறித்து எடுத்துரைக்கையில் தாயின் வயிற்றில் இருந்து கொண்டே
கேட்டான் என்பது போல விஷயங்களைப் படித்திருப்போம்.
இன்றைய மருத்துவ உலகம் கர்ப்பிணிப் பெண்களின்
உடல் நலத்தைப் பேணும் அதே நேரம் அவர்களின் மன நலத்தையும் சரிவரப் பேண வேண்டும்
என்று வலியுறுத்துவது இது போலக் காரணங்களை முன்னிட்டுதான்.
கர்ப்பிணிப் பெண்களின் ஒவ்வொரு நேர்மறை
உணர்வுக்கும் அதே போல எதிர்மறை உணர்வுக்கும் கருவிலுள்ள சிசுவுக்கும் அதே போலத்
தாக்கங்கள் உண்டாகும் என்பது தெளிவு!!
இந்த உபநிஷதமும் நமக்கு பல விஷயங்களில் நல்ல
ஞானத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை!
ஓம் தத் சத்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக