சனாதன தர்மம்
(உண்மையை
நோக்கிய பயணம்)
முன்னுரை
ஒரு மரத்தின் விதை மிகச்
சிறியதுதான். ஆனால் அதன் வளர்ச்சி மிகப் பிரமாண்டமான அளவு காணப்படுகின்றது. ஒரு
சிறிய கடுகு அளவு விதை மிகப்பெரிய பல விழுதுகளுடன் கூடிய ஆலமரமாக மாற அதற்கு
தேவையான சூரிய ஒளி, மழை நீர், காற்று போன்ற அத்தியாவசியத் தேவைகளை கொடுத்து அதை வளர்த்துக்
காப்பாற்ற ஒருவன் தேவை.
அவனைத்தான் “இறைவன்” என்று நம்முடைய தர்மம் போதிக்கின்றது.
அந்த இறைவன் யார்?, அவன்
எங்கு உள்ளான் என்ற பேருண்மையை தெள்ளத் தெளிவாக நம்முடைய “சனாதன தர்மம்” அறிவிக்கின்றது.
“மரத்தை வைத்தவன் தண்ணீர்
ஊற்றுவான்” என்பது பழமொழி.
அதுப்போல நம்முடைய சனாதன தர்மத்தை அதாவது, இந்து மதத்தை
வளர்த்தவன் அதனை காப்பாற்றவும் செய்வான் என்ற நம்பிக்கை நம்மிடையே அவசியம் வேண்டும்.
இவ்வாறு “வேதம்” என்ற ஒரு வாழ்வியல் முறையான விதையை கொடுத்து, அதை “சனாதன தர்மம்” என்ற ஒரு மிகப்பெரிய மரமாக நமக்கு வளர்த்துக் கொடுத்தவன் சாட்சாத் அந்த சர்வேஸ்வரனே ஆகும்.
அப்படி இறைவனால் கொடுக்கப்பட்ட மனித வாழ்க்கைக்கு தேவையான நம்முடைய “சனாதன தர்மம்” என்ற வாழ்வியல் முறையான மரம் வளர அதற்கு ஆணிவேராக “வேதம்” என்ற வித்து அவசியம் என்று நம் முன்னோர்கள் கருதினார்கள்.
இந்து சமயத்தின் சடங்கு,
சம்பிரதாயம், இறை வழிபாட்டுச் சுதந்திரம், நான்கு ஆசிரமங்களான வாழ்வியல் முறை என்ற
ப்ரம்மச்சரியம், இல்லறம், வானப்பிரஸ்தம் மற்றும் சந்நியாஸம், இத்துடன்
வானசாஸ்திரம், ஜோதிடம், அறிவியல் என எண்ணிக்கையில் அடங்காத அனைத்திற்கும் ஆதாரமான அந்த வேதத்தில் என்ன கூறப்பட்டுள்ளது
என்று அறிந்து கொள்ள ஒரு பாமரன் விரும்பினான்.
அன்றைய காலங்களில்
வேதத்தில் கூறப்பட்ட உண்மைத் தத்துவங்களை அறிய விரும்பிய மாணவர்கள் குருவுக்கு
தொண்டுகள் செய்து அவரது நேரடி உபதேசங்களாக சிரவணம் என்ற முறையில் குருவின் வாயிலாக
கேட்டு, அதன் பிறகு கேட்டதினால் உண்டான சந்தேகங்களை அவ்வப்பொழுது மனனம் என்ற
முறையில் சந்தேக நிவர்த்தி செய்து கொண்டு படித்து வந்தனர்.
இத்தகைய வேத விஷயங்களை
எளிமைப் படுத்திக் கொடுக்க விரும்பிய ரிஷிகள் அதை அந்தந்த கால கட்டங்களுக்கு ஏற்ப
தன்னுடைய ஆச்சாரியரின் வழியாக சொல்லக் கேட்ட வேத மந்திரங்களை தங்களுக்கு பிறகு
வருகின்ற மாணவர்கள் படிப்பதற்கு எளிதாக ஓலைச் சுவடிகளில் எழுதி நான்கு வேதங்களாக
வகுத்தனர்.
அவைகள் ஒவ்வொன்றிலும் ஸம்ஹிதை, பிராமணங்கள், ஆரண்யங்கள்,
உபநிடதங்கள் என நான்கு கிளைகள் காணப்படுகின்றன. இவற்றைப் புரிந்து கொள்வதற்கு
உதவும் அங்கங்களான சிக்ஷா, சந்தஸ், நிருக்தம், வியாகரணம், கல்பம், ஜ்யோதிஷம்,
இத்துடன் மேலும் இதிகாச,
புராணங்களையும், ஸ்மிருதிகளையும் படித்து முடித்தால் தான் ஓரளவுக்கு நம்முடைய
சனாதன தர்மமான இந்து சமயத்தை அறிந்து கொள்ளவே முடியும்.
இத்தனையையும் படித்துத்
தெரிந்து கொள்ள முற்படுவது என்பது, ஒரு பூனை பாற்கடலை நக்கியே குடித்துத் தீர்த்து
விடுவேன் என்று சொல்வதற்கு ஒப்பாகும்.
இவற்றை முழுமையாகக்
கற்பதற்கு ஒரு ஆயுள் போதாது என்பதைப் புரிந்து கொண்ட பாமரன் வேதத்தின் சாரம் போன்ற
சில முக்கியமான விஷயத்தைத் தெரிந்து கொண்டால் முழு வேதத்தையும் பற்றி அறிந்து
கொள்ள முடியும் என்றும், அதன் மூலம் ஒரு தெளிவு கிடைக்கலாம் என்றும் நம்பினான்.
இத்தகைய தேடுதல்களில் ஈடுபட்ட பாமரன் தற்காலத்தில் காணப்படுகின்ற பல வகையான சொற்பொழிவாளர்களின் ஆன்மிகச் சொற் பொழிவுகளை கேட்டும், பல வகையான ஆன்மீகப் புத்தகங்களை படித்தும் பார்த்தான்.
இதனால், அவனுக்குத்
தெளிவு உண்டாவதற்கு பதிலாக குழப்பத்தையே அடைந்தான். குழப்பம் ஏற்படக் காரணம் என்ன? என்றால் அவன்
கேட்ட, படித்த செய்திகளுக்கிடையே காணப்படுகின்ற பல முரண்பாடுகள் அவனை குழப்பமடையச் செய்தன.
அது கடவுளுக்கு உருவம்
உண்டா இல்லையா?
(அல்லது)
கடவுள் என்ற ஒன்று இல்லவே
இல்லையா?
இது போன்ற சந்தேகத்தை அடைந்த அந்த பாமரன் அவன் அறிந்திருந்த விஷயங்களை
வைத்து ஒரு புறம் பார்த்தால்,
வேதாந்தம் படித்தவர்கள் கடவுளுக்கு உருவமில்லை, குணமில்லை என்கின்றனர்.
ஆனால் நடைமுறையில் உருவ
வழிபாடு தான் வேத மந்திரங்களுடன் விஷேசமாக நடைபெற்றுவருகிறது.
இதில் இந்த இரண்டுமே
வேதத்திற்கு உகந்தது தானா அல்லது இரண்டில் ஒன்று தான் வேத சம்மதமானதா? என்ற சந்தேகம் அந்த
பாமரனிடத்தில் உண்டானது.
நட்ட கல்லை தெய்வமென்று
நாலு புஷ்பம் சாற்றியே
சுற்றி வந்து முணு
முணுத்து சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை அறியுமோ?
என்று உருவ வழிபாட்டைக் கடுமையாகச் சாடிய சித்தர்களையும் நாம் வேத விரோதிகள் என்று இகழ்வதில்லை. மாறாக, அவர்களுக்கும் உருவச்சிலை வைத்துக் கோயில் கட்டி வேத மந்திரங்கள் மூலம் பூசை செய்கிறோம்.
இந்த பூசை, புனஸ்காரங்களைக் கண்ட பாமரன் குழப்பத்துடன், காண்பதெல்லாம் கடவுள் அன்றி வேறு
இல்லை, நீயும்கடவுள், நானும்கடவுள், ஆகவே, “இருப்பதெல்லாம் இறைவனே” என்று உணர்ந்துக்கொண்டு, வாழும் இந்த சிறிது காலத்திலேயே அனைத்தையும், அனைவரையும் நேசித்து, எதன் மீதும் பற்றற்று, பரப்ரம்மத்துடன் பரமானந்தமாக இரண்டறக் கலந்து இருப்பதுதான் முக்தி, இத்தகைய முக்திக்கு “ஜீவன் முக்தி” என்கின்றனர் அத்வைதிகள்.
பரப்ரம்மத்துடன் இரண்டறக் கலத்தல் என்பது சாத்தியமில்லை, இறைவன் தலைவன் நாம் அவருக்கு கட்டுப்பட்ட தாஸர்கள் அல்லது “பக்தர்கள்” என்கின்றனர், த்வைதிகள்.
இறைவனின் கருணைக்குப் பாத்திரமான உயிர், உடலை விட்டுநீங்கிய பின் நாராயணனின் அருகாமைக்குச் சென்று அவனுக்குச் சேவை செய்யும் பாக்கியத்தைப் பெறவேண்டும்.
இதுவே உண்மையில் முக்தி, இதுவே மனிதன் அடையக் கூடிய மிகப் பெரும் பேறு என்கின்றனர் விசிஷ்டாத்வைதிகள்.
எல்லோருமே இந்த வேதத்தைத்
தான் இதற்கு பிரமாணமாகக் காட்டுகின்றார்கள்.
இதை அறைகுறையாக அறிந்து கொண்ட பாமரன் மேலும் அதிகப்படியான குழப்பத்தை அடைந்து, இதை யாரிடம் சென்று விபரம் கேட்டு அறிவது என்று
மிகுந்த கவலையில் சந்தேகத்துடன் இருந்தவனுக்கு ஒருவர் கூறினார்,
“விஷ்ணுவே மேலான தெய்வம்.
சிவன் என்பவர் அவருடைய பேரன் மாதிரி, ஆகவே அவருக்கு சுய சக்தி கிடையாது. அவரிடம்
இருக்கின்ற சக்தியெல்லாம் விஷ்ணுவிடமிருந்து வருவது தான்” என்றார்.
அதற்கு ஆதாரமாக “நாராயண பரம் ப்ரம்ம” என்ற வேத மந்திரத்தை மேற்கோள் காட்டினார்.
மற்றொரு உபந்யாசகர், “சிவன் தான் முதன்மையான தெய்வம்” என்று கூறி அதற்கு ஆதாரமாக ருத்ரத்தில் வரும் “ப்ரதமோ தைவ்யோ பிஷக்” என்ற சொல் தொடரைக் காட்டி சிவனை மேலான தெய்வம்
என்று கூறினார்.
சிவனே மேலான தெய்வம் எனக்
கூறிய ஒரு சைவ சித்தாந்தக்காரரோ, “விஷ்ணு என்பவர் காத்தல் தொழிலைக் கவனிப்பதற்காகச்
சிவனால் நியமிக்கப்பட்டவர். அவர் சிவனடியார்களில் முதன்மையானவர்” என்று மேலும் ஒரு புதிய சித்தாந்தத்தை வகுத்தார்.
‘அரியும் சிவனும் ஒண்ணு,
அறியாதவன் வாயில் மண்ணு’ என்ற பாமர வசனம் இந்த வேத விற்பன்னர்களின் உபதேசப் பேச்சுக்களில் அந்த பாமரனிடம் எடுபடாமல் போயிற்று.
இன்னும் சில
உபந்யாசகர்கள் இந்து சமயத்தில் பல
தெய்வங்களை வழிபடுகிறோம். எந்த பெயரிட்டு அழைத்தாலும் எல்லாம் ஒரே கடவுளையே
வணங்குவதற்கு ஒப்பாகும். உதாரணமாக, உன்னையே எடுத்துக்கொள், நீ ஒருவன் தான் உன்
வீட்டில் உன்னுடைய மகனுக்கு அப்பா, உன்னுடைய மனைவிக்கு கணவன், உன் அப்பாவிற்கு
பிள்ளை, உன் பேரனுக்கு தாத்தா. இதுப்போல, உன்னை பல பெயர்களில் பல உறவு முறைகளில்
அழைத்தாலும் இருப்பது நீ ஒருவன் மட்டுமே.
அதுப்போல, இறைவனை
விநாயகர், சிவன், நாராயணன், முருகன் என்று இப்படி எந்த பெயர்கள் இட்டு
வழிபட்டாலும், இருப்பது இறைவன் ஒருவனே என்று கூறுகின்றனர்.
இவர்களது
கருத்துக்களையும், உபதேசங்களையும் கேட்ட பாமரன், இவர்களை நெருங்கி இவர்களது
வாழ்க்கை முறையைக் கவனித்தால், இவர்களது பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தம்
இல்லாத நிலையைக் கண்கூடாக கண்டு,
இதில் யார் கூறுவதை நம்புவது என்ற பதட்டத்துடன் பரதேஷி போல மாறி ஒரு சத்குருவை
தேடி சில ஆசிரமங்களுக்கு செல்ல முற்படுகின்றான் இந்த பாமரன்.
இவ்வாறு ஆசிரமங்களைத்
தேடிச் சென்றவனுக்கு, இவன் சென்ற வழியிலேயே வழிபோக்கனாக மற்றொரு பரதேஷி இவன்
கண்முன் காணப்பட்டான். இந்த பாமரன் அவனை நிறுத்தி, தாங்கள் எங்கு, எதைத் தேடிச்
செல்கின்றீர்கள் என்று வினவினான்.
இவனது விசாரணையின்
வாயிலாக, இவனது சாஸ்திரத்தைப் பற்றிய சந்தேகத்தையும், வேதத்தை அறியும்
ஆர்வத்தையும், அதன் அறியாமையினால் இவனது உண்மையான ஆதங்கத்தையும் அவனிடமே கேட்டு
அறிந்து கொண்ட அந்த வழிப்போக்கனாக வந்த அந்த மனிதர், இந்த பாமரனைப் பார்த்து நீ,
சனாதன தர்மத்தின் ஆணிவேராக உள்ள வேதம் எதைக் கூற வருகின்றது என்பதை அறிந்து
கொள்வதற்கு முன்பாக அதை யாரிடம், எப்படிப்பட்டவர்களிடம் அறிந்து கொள்ள வேண்டும்
என்ற அடிப்படை விஷயத்தை முதலில் அறிந்து கொள் என்று அவனுக்கு கீழ்வரும் ஒரு
உபதேசப் பாடலை விளக்கினார்.
''காணவே
சொல்லறிய உலக ஆசான்
கருதியவன் பணம்பறிக்க எத்துப் பண்ணி
நீணவே நெடிதாகச் சிவம் உண்டு பண்ணி
நிலையாமல் சீடனுக்கு பிறப்பு உண்டாக்கி
ஊணவே உலகமெல்லாம் இப்படியே போச்சு
உக்கி அந்த மாயத்தே உழன்று போனார்
தாணவேதான் தாள்திறந்தால் அவனே ஆசான்
சமர்த்தான குரு தேடி சார்பு கொள்ளே
சார்புறல்தான் சொல்லறியான் உலக ஆசான்
சமரசமாய்ப் பணம்பறிக்க சாங்கம் சொல்வான்
நாவுறவே நாள்போக்கிச் செபத்தைப் பண்ணி
ஞானியென்று பெயரிட்டுக் கொண்டு தானும்
பாரிலேதான் சஞ்சரிப்பார் சையோகிப்பார்
பரிந்தகுடி கெடுப்பார்கள் பொய்யும் சொல்வார்
ஓர்வுறவே வேடங்கள் அதிகம் பூண்பார்
உருட்டுவார் உலகத்து ஞானிதானே.''
கருதியவன் பணம்பறிக்க எத்துப் பண்ணி
நீணவே நெடிதாகச் சிவம் உண்டு பண்ணி
நிலையாமல் சீடனுக்கு பிறப்பு உண்டாக்கி
ஊணவே உலகமெல்லாம் இப்படியே போச்சு
உக்கி அந்த மாயத்தே உழன்று போனார்
தாணவேதான் தாள்திறந்தால் அவனே ஆசான்
சமர்த்தான குரு தேடி சார்பு கொள்ளே
சார்புறல்தான் சொல்லறியான் உலக ஆசான்
சமரசமாய்ப் பணம்பறிக்க சாங்கம் சொல்வான்
நாவுறவே நாள்போக்கிச் செபத்தைப் பண்ணி
ஞானியென்று பெயரிட்டுக் கொண்டு தானும்
பாரிலேதான் சஞ்சரிப்பார் சையோகிப்பார்
பரிந்தகுடி கெடுப்பார்கள் பொய்யும் சொல்வார்
ஓர்வுறவே வேடங்கள் அதிகம் பூண்பார்
உருட்டுவார் உலகத்து ஞானிதானே.''
இந்த
உலகத்தில் ஒரு சிலர் தன்னைப் பெரிய குருநாதன் என்று சொல்லிக் கொண்டு, பெரிய
சிவலிங்கத்தை உண்டு பண்ணி, பல பொய்களைக் கூறி உன்னிடமுள்ள
பணத்தையெல்லாம் பறிப்பார்கள்.
நிலையான
யோகம் எது என்று அறியாமல், இவர்களை நம்பி வந்த சீடர்களையும் பிறவிச்சுழலில் சிக்க
வைத்து மீண்டும், மீண்டும் அவனுக்கு பிறப்பு உண்டாக்கி, பொய்யான மாயப் பேச்சில் அவனை மயக்கி
விடுவார்கள்.
இப்படிப்பட்டவர்களின் இந்த உபதேசத்தால் உலகில் உள்ள பெரும்பாலனவர்கள் மயங்கிப் போனார்கள். முறையான ஞான வழியை எவர் காட்டுகிறாரோ அவரே உண்மையான குருவாவார்.
அவரை நீ
தேடிக் கொள். அதைவிட்டுவிட்டு பலவிதமானப் பொய்களைக் கூறி பணம் பறிப்பவர்களையும்,
நாட்கணக்கில் ஜெபம் செய்தால் போதும் என்று சொல்லிக் கொண்டும், பெண்போகம் செய்து
கொண்டும், தான் ஒரு ஞானி என்று சொல்லிக் கொண்டும், உருட்டு, புரட்டாகப் பேசிக்
குடி கெடுக்கும் இத்தகைய சண்டாளர்களை இனம் கண்டு கொண்டு, அவர்களை நெருங்கிவிடாமல் கவனமாக இரு என்று, அந்த மனிதர் இந்த
பாமரனுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த அறிவுறையைக் கேட்ட
மாத்திரத்தில் சரியான ஒருவரை நான் சந்தித்துவிட்டேன் என்று முதன் முதலாக
ஆனந்தத்தின் உண்மைத் தன்மையை உணர்ந்த பாமரன் சுவாமி!, தாங்களே எனக்கு குருவாக
இருந்து என்னுடைய சந்தேகத்தை தெளிவு படுத்துங்கள் என்று அவரிடம் மன்றாடினான்.
அவனது தளராத தாகத்தை
புரிந்து கொண்ட அந்த மாமனிதரும், அவனிடம் உன்னைப் போலவே தேடுதல்கள் கொண்டு பலர்
அலைகின்றனர். ஆனால், அவர்கள்
“எதை அறிந்து கொண்டால் வேறு எதையும் அறியத் தேவை இல்லையோ” அதை அறிந்து கொள்ள மறுக்கின்றனர்,
“எதை அறிந்து கொண்டால் வேறு எதையும் அறியத் தேவை இல்லையோ” அதை அறிந்து கொள்ள மறுக்கின்றனர்,
எத்தனைதான் கற்றாலும்,
எத்தனைதான் கேட்டாலும், எத்தனை சாதித்தாலும், இன்பமடையாத சித்தமே, இந்த உலக வாழ்வனைத்தும்
பொய்யாகத் தோன்றாமல், மெய்யாகத் தோன்றி விடும் உனக்கு.
என்ற சிவபோகசாரத்தைக் கூறி, அதனால் விளையும் பலனாக,
''மலை
மலையாய்ச் சுற்றிச் சுற்றி மாண்டவர் கோடி
மறை நூல்கள் கற்றறிந்து மாண்டவர் கோடி
கலை பலவும் கற்றறிந்து மாண்டவர் கோடி
கரை சேர வழிதேடி மாண்டவர் கோடி
சிலைகளெல்லாம் சுற்றி வந்து மாண்டவர் கோடி
சிறையைப் போல் குகையிருந்து மாண்டவர் கோடி
அலைபோல மனமாயை தன்னினாலே
அலைந்த லைந்து மாண்டவர்கள் கோடி கோடி
நிலைபெறாத யோகத்தில் மாண்டவர் கோடி
நின்று கொண்டே தவமிருந்து மாண்டவர் கோடி
உலையா சந்நியாசத்தில் மாண்டவர் கோடி
ஒன்றி நின்ற சம்சாரத்தில் மாண்டவர் கோடி
மன்றாடி பூசை செய்தும் மாண்டவர் கோடி
வலை போல பின்னி நிற்கும் வாசியைத் தானே
வழி நடத்த அறியாமல் மாண்டவர்கள் கோடானு கோடி.''
மறை நூல்கள் கற்றறிந்து மாண்டவர் கோடி
கலை பலவும் கற்றறிந்து மாண்டவர் கோடி
கரை சேர வழிதேடி மாண்டவர் கோடி
சிலைகளெல்லாம் சுற்றி வந்து மாண்டவர் கோடி
சிறையைப் போல் குகையிருந்து மாண்டவர் கோடி
அலைபோல மனமாயை தன்னினாலே
அலைந்த லைந்து மாண்டவர்கள் கோடி கோடி
நிலைபெறாத யோகத்தில் மாண்டவர் கோடி
நின்று கொண்டே தவமிருந்து மாண்டவர் கோடி
உலையா சந்நியாசத்தில் மாண்டவர் கோடி
ஒன்றி நின்ற சம்சாரத்தில் மாண்டவர் கோடி
மன்றாடி பூசை செய்தும் மாண்டவர் கோடி
வலை போல பின்னி நிற்கும் வாசியைத் தானே
வழி நடத்த அறியாமல் மாண்டவர்கள் கோடானு கோடி.''
என்று
மேற்கண்ட பாடலைப் பாடி, இதில் நீ எதை அறிந்து கொண்டு மாண்டுபோக விரும்புகின்றாய்
என்று அவனது உள் மனதின் நோக்கத்தை அறிய முயன்றார்.
இத்தகைய பாடலைக் கேட்ட
மாத்திரத்திலேயே சாஸ்டாங்கமாக அவரது காலில் விழுந்த பாமரன், சுவாமி! தங்களை விட என்னுடைய
ஐயத்தை நீக்கும் மற்றொருவரை இனி நான் காண்பது அறிது.
அப்படியே இனி நான் காண
எடுக்கின்ற முயற்சிகளினால், தேவையற்ற கால விரையத்தை அடைந்து, கற்வேண்டியதை கற்க
முடியாமல், அறியாமை இருளிலேயே இந்தப் பிறவியை நான் கடந்தேன் என்றால், இனி இப்பிறவி
தப்பினால், எப்பிறவி வாய்க்குமோ? நான் அறியேன் பராபரமே! என்று அவரது காலை பலமாகப்
பற்றிக் கொண்டு அவரிடம் மேலும் மன்றாடினான்.
அவனது உள்ளார்ந்த மனக்
குமுறலை அறிந்துக் கொண்ட அவர் அவனுக்கு மேலும் சில உபதேசங்களை வழங்குவது என்று
தீர்மானித்தார்.
அவரது சம்மதத்தை அறிந்து
கொண்ட பாமரன், ஐயனே, என்னுடைய ஐயத்தினை கேட்டு தாங்கள் நகைக்காமல், அடியேனுக்கு புரியும் விதம்
விளக்கம் அளிக்க வேண்டுமென்று தன்னுடைய ஐயத்தை அவரிடம் வினவினான்.
சுவாமி!, பல வகையான
வழிபாட்டு முறைகள் நம்மிடையே வழக்கத்தில் உள்ளன. வேத மந்திரங்களைக் கூறி ஹோமம் செய்தால் எல்லா நலன்களை அடையலாம் என்று ஒரு சாரார்
கூறுகிறார்கள். இன்னின்ன கோயிலில் சென்று அபிஷேகம், அர்ச்சனை, பிரதக்ஷிணம்
முதலானவைகளை செய்தால் தீராத வினைகள் தீரும் என்கின்றனர் சிலர்.
யாக யக்ஞங்கள் செய்ய
வேண்டாம், நாம ஜபம் ஒன்றே போதும் என்கின்றனர் ஒரு சிலர். இன்னின்ன விரதங்களை அனுஷ்டித்தால் நமது
கோரிக்கைகள் நிறைவேறும் என்கின்றனர் மற்றொரு சாரர். இவைகள் அனைத்திலும் எது
சிறந்தது? இவைகளை எந்த வகையில் வேத சம்மதமானவை என்று நம்புவது?
மேலும், வேதம் சாட்சாத்
இறைவன் கொடுத்தது என்று ஒரு சாரர் கூறுகின்றனர், இன்னும் சிலர் வேதம் என்பது பண்டைய கால ரிஷிகள்
பிரபஞ்சத்திடமிருந்து கிரகித்து அவர்களது ஞான திருஷ்டியில் அறிந்து
கொண்டு, அதனை மற்றவர்களுக்கு உபதேசித்ததாக கூறுகின்றார்கள்.
இன்னும் சிலர், வேதகாலத்தில்
கோவில்கள்,
உருவ வழிபாடுகள் என்று
எதுவும் கிடையாது என்று கூறுகின்றனர்.
அப்படியானால், இதில் எது
உண்மை?, வேதத்தில் தவறுகள் நேர
வாய்ப்புகள் இருக்காது என்ற
நம்பிக்கையின் அடிப்படையில், அடியேன் வேதத்தை உயர்வாக எண்ணி அதன் படி வாழ
விரும்பி, இந்த ஐயத்தை தங்களிடம் வெளிப்படுத்துகின்றேன் என்றான்.
மேலும், மறு
பிறப்பென்றால் எப்பொழுது? அது பற்றியும் தெளிவு இல்லை. “உடலை விட்டு நீங்கிய உயிர் பத்து நாட்கள் பயணம்
செய்து வைதரணி நதியைக் கடந்து பித்ரு
லோகத்துக்குப் போய்ச் சேருகிறது. இறந்தவரின்
பிள்ளையோ மற்றவரோ செய்யும் அபரக் கிரியைகள் தான் வைதரணி நதியைத் தாண்ட உதவுகின்றன.
அவ்வாறு கர்மா இல்லாமல் செத்துப் போனவர்கள் பிசாசுகளாகவே அலைந்து
கொண்டிருப்பர்” என்று சில
சொற்பொழிவாளர்கள் சொல்கிறார்கள்.
வேறு சிலர், “இறந்த அந்தக் கணத்திலேயே, உயிரானது தான் செய்த பாப
புண்ணியங்களுக்கு ஏற்ப வேறு ஒரு ஜன்மா எடுத்து பாப புண்ணியங்களின் பலனை
அனுபவிக்கும்” என்கின்றனர்.
இன்னும் சிலர், “ஒரு பிறவிக்கும் அடுத்த பிறவிக்கும் இடையில் சொர்க்கம் நரகம் என்ற நிலை உண்டு. பாப புண்ணியங்களின் பலனை
சொர்க்கத்திலோ நரகத்திலோ அனுபவித்து
விட்டு அது முடிந்தவுடன் உயிர் வேறு பிறவி எடுக்கிறது” என்கின்றனர்.
இன்னும் சிலர், அப்படியெல்லாம் கிடையாது, அது கட்டுக்கதை உயிர்
இந்த உடலை விட்டுப் பிரிந்தால், அதற்கு மறு பிறவி என்பதே கிடையாது என்கின்றனர்.
மற்றொரு சாரர்,
இறந்தவர்கள் உடலை விட்டு மறு பிறவிக்கு வேறு உடல் எடுப்பதாக இருந்தால், நீங்கள்
ஏன் ஒவ்வொரு வருடமும் இறந்தவர்களுக்கு சிரார்த்தம் செய்யும் பொழுது, உங்களது பித்ருக்கள் “காகா”
உருவில் வந்து உணவை
எடுக்கின்றார்கள் எனில், அவர்களுக்கு வேறு பிறவியே கிடைக்காமல் காகா - வாகவே சுற்றிக் கொண்டிருக்கின்றாரா? என்று வினா
எழுப்புகின்றனர்.
மேலும் சாஸ்திரத்தை
படித்த மற்றொருவர் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்வது எல்லாம் வேதத்தில்
சொல்லப்படவில்லை என்றும்,
அதற்கு ஆதாரமாக “ஸத்யார்த்த ப்ரகாசம்” என்ற ஒரு புத்தகத்தைக் காட்டி, இதை எழுதியவர் வேற்று
மதத்தை சார்ந்தவரோ, அல்லது நாஸ்திகரோ அல்ல.
வேதத்தை தெய்வ வாக்காக
நம்பிக் கொண்டாடியவரும், அதை நன்கு ஆராய்ந்து, வேதத்தில் இல்லாத பொருள் இல்லை, அது
எக்காலத்துக்கும் எல்லா இடத்துக்கும் பொருந்தக் கூடிய ஒரு நூல் என்று உறுதிப்படுத்தி “மீண்டும் வேத காலத்துக்குப் போவோம்” என்று கூறிய ஆரிய சமாஜ் என்ற ஒரு அமைப்பை நிறுவிய நிறுவனர்
“தயானந்த ஸரஸ்வதி” என்ற மிகப்பெரிய வேதாந்தி ஆவார்.
இவர் 1875 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி இந்த “ஆரிய சமாஜ்” என்ற அமைப்பை நிறுவினார் என்று வரலாற்று உண்மைகளை
கூறுகின்றார்.
இதில் வேடிக்கை
என்னவென்றால், இப்படிப்பட்ட முரண்பட்ட கருத்துகளைக் கூறுபவர் அனைவரும் வேதத்தை மிக
உயர்வாக மதிக்கிறார்கள். அவர்கள் தங்கள் கருத்துக்கு வேதத்தையே ஆதாரமாகவும்
காட்டுகிறார்கள். இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட
கருத்துகளை வேதம் கூறுமானால் அது இவ்வளவு உயர்வாக மதிக்கப்
பெறுமா? என்று பாமரன் தன்னுடைய சந்தேகத்தினை அவரிடம் வினவினான்.
வேதத்தின் பெயரால்
அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்த சொந்தக் கருத்துகளைக் கூறி மக்களை ஏமாற்றி வந்தது
பற்றி பாமரன் ஓரளவு அறிந்திருந்தான்.
உதாரணமாக, ‘கணவனை இழந்த
பெண்கள் உடன்கட்டை ஏறுவது வேதத்தில் விதிக்கப்பட்ட ஒரு கடமை’ என்று ஒரு சாரார்
வாதிட்ட காலத்தில் இராஜாராம் மோகன்ராய் என்ற வங்காளப் பிராமணர், ‘வேதத்தில்
உடன்கட்டை பற்றி எங்கே இருக்கிறது, காட்டுங்கள்’ என்று கேட்டவுடன் அன்றைய அஞ்ஞானக்
கூட்டம் ஆர்ப்பாட்டம் செய்து அடங்கியது.
பண்டித ரமாபாய்
(1858-1922) என்பவர் ஒரு பெண்ணுரிமைப் போராளியாகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய பெண்மணி ஆவார்.
குழந்தைத் திருமணங்களை
எதிர்த்துப் பரப்புரை செய்தவர். விதவை மறுமணம் உள்ளிட்ட பெண்களின் உரிமைகளுக்காகப்
போராடியவர்.
இந்திய வரலாற்றில்
பெண்களின் சம உரிமைக்கும், முழுமையான நல்வாழ்வுக்கும் போராடிய முதல் பெண்மணி
ஆவார்.
ரமாபாய் ஒரு மஹாராஷ்டிர
பால்ய விதவை இவர் ஏற்படுத்திய "சாரதா.
சதன்" என்ற அமைப்பு பெண்
கல்விக்கும், பொருளாதாரச் சுதந்திரத்துக்கும் வழிகாட்டிய அமைப்பு ஆகும்.
பண்டிதை ரமாபாய் பிராமணக்
குடும்பத்தில் பிறந்து பின்னர் கிறித்தவ மதத்துக்கு மதம் மாறிய சமூக
சீர்திருத்தவாதி ஆவார்.
குறிப்பு:
(வேதத்தை கற்றறிந்த
பிராமண குடும்பத்தில் பிறந்து கிறிஸ்துவராக மதம் மாறினார் என்றால், அவரது மன நிலை எந்த அளவிற்கு இவர்கள் வேதத்தின் பெயரால்
விளைவித்த அக்கிரமங்களை சந்தித்திருக்கும் என்பதை யோசிக்க வேண்டும்)
கேரள மாநிலத்தின் பெரும்
பகுதியும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய
மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் மன்னராட்சியின்
கட்டுப்பாட்டில் இருந்தது.
அப்போது, ஆங்கிலேயர்களின்
கீழ், இந்து நாடாக இருந்தது. அந்தக்காலகட்டத்தில் சாதீயக் கொடுமைகளால்
மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர்.
பனையேறும் தொழிலைச்
செய்து வந்த பனையேறி நாடார், நாயர், ஈழவர், புலையர் உட்பட 18 சமுதாயத்தைச் சார்ந்த
பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இவர்கள் மார்பகத்தை
திறந்து போடுவதுதான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த
எண்ணத்தில் திருவாங்கூர் நாடு ஒரு நடைமுறையை வகுத்திருந்தது.
இதன்படி 18 சாதிகளைச்
சேர்ந்த பெண்கள் மேலாடை அணியாமல் அவமதிப்புடன் வாழ்ந்து வந்தனர்.
இந்த அடக்குமுறையை
எதிர்த்து சீர்திருத்த கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட பனையேறி நாடார் சாதியைச் சேர்ந்த
மக்கள் தங்கள் சாதிப் பெண்களுக்கு மார்பை மறைத்து சேலை அணிய உரிமை கோரிப் போராடத்
தொடங்கினர்.
இது "தோள் சீலைப் போராட்டம்" எனப்பட்டது.
37 ஆண்டுகள்
போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு நாடார் கிறிஸ்துவ பெண்களுக்கு
மட்டும் தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது.
குறிப்பு:-
(கிறிஸ்துவர்கள் இன்று
இந்துக்களாகிய நம்மை மதம் மாற்றுகின்றார்கள் என்று ஒரு சாரர் ஓயாமல்,
பிதற்றிகொண்டிருக்கின்றார்கள். ஆனால், அன்று இதே இந்துக்களை சாதியின் பெயரால்
கொடுமைப்படுத்தி, இந்துக்களிலிருந்து கிறிஸ்துவர்களாக மதம் மாற வேண்டிய கட்டாயச்
சூழ் நிலைகளை யார் உருவாக்கினார்கள் என்பதையும் யோசியுங்கள்)
காந்தி தீண்டாமையை
எதிர்த்தபோது சில சனாதனிகள் அவர் வேத விரோதமாகப் பேசுவதாக எதிர்த்தனர்.
காந்தி, ‘வேதத்தில்
தீண்டாமையை அனுமதிக்கும் பகுதியை எடுத்துக் கூறுங்கள்’ எனக் கேட்டபோது அவருக்குப்
பதில் சொல்ல முடியாத இது போன்ற வேதத்தை அரைகுறையாக அறிந்த கும்பல் அவரை எதிர்க்க
முடியாமல் வாயை மூடிக்கொண்டது.
சுவாமி! இதுபோன்று
எண்ணற்ற வரலாற்றுச் சம்பவங்கள் நடைபெற நம்முடைய சனாதன தர்மத்தின் ஆணிவேராக
கருதப்பட்ட வேதம்தான் காரணமாகுமா? என தன்னுடைய சந்தேகங்களை அந்த மாமனிதரிடம்
வெளிப்படுத்தி, தாங்கள் மட்டுமே உள்ளதை உள்ளபடி கூறி, எனக்கு புரிய வைக்க முடியும்
என்று அடியேன் ஆணித்தரமாக நம்புகின்றேன்.
ஆகவே தாங்கள் இதற்கு
சரியான விளக்கம் நல்கினால் நான் சந்தோசமடைவேன் என்று வினவினான் பாமரன்.
இவனது தொடர்ந்த சந்தேகக்
கேள்வி கணைகளினால் ஆச்சரியமடைந்த அந்த மாமனிதர் மிகுந்த ஆனந்தமடைந்து, இவனைப்
போன்றவர்களுக்கே நாம் கூறப்போகின்ற விசயத்தை ஆர்வத்துடன் கேட்டு அறிந்து
கொள்ளக்கூடிய தகுதி இருக்கின்றது என்று கருதி, இவனுக்கு கூறுவதினால், நம்முடைய
ஆழ்ந்த உபதேசத்தின் முழுப்பயனும், கூறப்படுகின்ற காலத்தின் மகத்துவமும் மிக
உயர்ந்ததாக இருக்கும் என்று கருதினார்.
எனவே அந்த பாமரனின்
சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், இந்த “சனாதன தர்மம்”
(உண்மையை நோக்கிய பயணம்) என்ற நூல் இருக்கும் என்றால் அது மிகையாகாது.
நன்றி!
என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.
நன்று மிகவும் பயனுள்ளது நன்றி
பதிலளிநீக்கு