ஓம் தத் சத்
ஸ்ரீ திரிபுர ரகசியம்
(ஞான காண்டம்)
முன்னுரை
இந்த
அரிய நூலானது, சம்ஸார சமுத்திரத்தில் மூழ்கி இருக்கின்ற மனிதர்களை அவர்களது பிறப்பு,
இறப்பு என்கின்ற துக்கத்திலிருந்து மீட்டெடுக்கும் பொருட்டு, ஹரிதாயனர் என்ற மகரிஷியால்
நாரதருக்கு உபதேசிக்கப்பட்ட திரிபுரையின் மாகாத்மியத்தை வடமொழியில் இருந்து தமிழில்
திருச்செந்தூரை சேர்ந்த திரு. வி. ஆர். சுப்பிரமண்ய அய்யர் அவர்களின் அரிய முயற்சியானால்
அனைவரும் படித்து அறிந்து கொள்ள முடிந்தது. இந்த நூலிலே மனிதனாக பிறந்தவன் அடையத்தக்க
பரம புருஷார்த்தத்திற்கு சாதனமாக விளங்கும் முதற்சாதனமான பரா பக்தியை செய்வது பற்றியும்,
அவ்வாறு, உண்மையான பக்தியை செய்பவனும், அவன் பக்தி செய்யப்படுகின்ற வஸ்துவும் என இரண்டையும்
ஒன்றாக்கும் சங்கமமே சரணாகதி, அனுக்கிரஹம் என்று எடுத்துக்கூற, சாதுக்களின் சங்கமத்தை
உண்டாக்கிக் கொள்ள வேண்டும், அப்படிப்பட்ட சத்துக்களின் சங்கமமே சத்சங்கம் என்பதை அறிந்து,
அவர்களின் திருவாய் வழியாக விசாரம் மேற்கொண்டு, அவர்கள் கூறுவதை (சிரவணம்) கேட்டு,
சிந்தனை (மனனம்) செய்து, பக்குவிகளாக மாறிய ஜிஞ்ஞாஸுகளை அந்த அறிவில் நிலைப்பெற்று
நிற்கின்ற (நிதித்யாசனம்) அனுபவத்திற்கு அழைத்துச் செல்வதே, “ஸ்ரீ திரிபுர ரகசியம்” என்ற மிக உயர்ந்த, உன்னதமான வழி என்று அந்த ஞானத்தைப்
பற்றி இங்கு போதிக்கப்படுகின்றது.
இந்த நூலில் பத்து அத்தியாயங்களில்
சத்சங்க மகாத்மியத்தை விளக்கும் பொருட்டு, ஹேமசூடோ பாக்கியானமும், ஜகத்தின் உண்மையை
விளக்கச் சைலலோகாக்கியான மென்று மூன்று அத்தியாயங்களும், ரிஷிகளுக்கு சாக்ஷாத் வித்யாதேவியே
பிரத்யக்ஷமாகி அருளிய “வித்யாகீதை” என்ற ஓர் அத்தியாயமும்,
ஞானிகளது பெருமைகளை விவரிக்கும் “ராக்ஷஸோ பாக்கியானம்” என்ற ஒரு அத்தியாயமும்,
இது போன்று மற்ற நான்கு அத்தியாயங்களும் சேர்ந்து மொத்தம் இருபத்தி இரண்டு அத்தியாயங்கள்
அடங்கியுள்ளன. இந்த ஸ்ரீ திரிபுர ரகசியம் 12000
சுலோகங்களை கொண்டதாக இருக்கின்றது.
இந்த நூலிற்கு வடமொழியில் தாத்பர்ய தீபிகா என்ற வியாக்கியானமும், ஸ்ரீநிவாஸ
பண்டிதர் வட மொழியில் இயற்றியுள்ள வியாக்கினத்திலிருந்து சில குறிப்புகளும், மூல நூலான
சமஸ்கிருதத்திலிருந்து திரு. வி. ஆர். சுப்பிரமண்ய அய்யர் அவர்களின் தமிழ் மொழிப்பெயர்ப்பாக
வெளிவந்த நூலிலிருந்தும் பல பகுதிகளை இதில் சேர்த்துக்கொண்டும் இந்த நூல் ஜிக்ஞாஸுகளுக்காகவே
தற்போதைய எளிய தமிழில் கொடுக்கப்படுகின்றது. இதற்கு முந்தைய பல நூல்கள் பல மஹான்களின்
கடின முயற்சியினால் தமிழில் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவைகள் பெரும்பாலும் தமிழோடு
வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டுள்ளது. ஆதலால், தற்போதைய தமிழ் மொழியில்
பரிச்சயம் உள்ளவர்கள் அந்த பழமையான மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட தமிழ் நூலை கற்பது
சிரமாக இருக்கும் என்று கருதி எளிய தமிழில் கொடுக்க ஈஸ்வர சங்கல்பம் வெளிப்பட்டுள்ளது.
இந்த ஸ்ரீ திரிபுர ரகசியம்
என்ற நூலின் விசயங்கள் பெரும்பாலும் ஆகமசாஸ்திரத்தை அனுசரித்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அவற்றில் முக்கியமானவை விவர்த்த வாதம் என்பதாகும்.
பிரம்மம்தான்
மாயா சக்தியால் இத்தனை படைப்புக்களை படைத்தது போன்று வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறது.
பரமாத்மா ஜகத்தாகப் பரிணமித்தது, அதாவது, பிரம்மம் இந்த உலகமாக மாறியது என்பதை - பால்
தயிராக மாறியது போன்று, என்று கூறினால் அது தவறு. காரணம், அப்படிக்கூறினால், பால் தயிராக
மாறிய பின்பு, தயிர் மட்டும்தான் இருக்குமே தவிர பால் அங்கு இருக்காது.
இதுபோன்று,
பரமாத்மா உலகமாக பரிணமித்த பின்பு, அவர் அங்கு இல்லாமல் போய் விட்டார் என்றால் அதுவும்
மிகப்பெரிய தவறாகப் போய்விடும். அதனால், பரிணாமம் என்பது ஏற்பதற்கு இல்லை. பரமாத்மா
தான் தானாக சுத்த ஞான ஸ்வரூபமாக ஒரு பக்கம் இருந்துகொண்டே, மற்றொரு பக்கம் மாயையால்
ஜீவ - ஜகத்துக்களாகத் தோன்றுகிறார்.
”இதெல்லாம் ஒரே சத்வஸ்துவின் தோற்றம் மட்டுமே ஆகும். அதாவது, அந்த
வஸ்து போடும் வேஷம்தான்! உதாரணமாக, ஒருவன் ஒரு வேஷத்தை போட்டுக் கொள்கின்றான் என்றால்,
அவன் அவனாக இல்லாமல் போய் விடுகின்றானா என்ன? அதுபோன்றுதான், இந்த பிரபஞ்சத்தோற்றமே
பிரம்மத்தின் வேஷம், கண்கட்டு வித்தை! அது எத்தனை விதமான வேஷங்களைப் போட்டாலும், பாதிக்கப்படாமல்
அது அதுவாகவே (சத்வஸ்து ஏகமாகவே) அப்படியே இருந்துக்கொண்டேயிருக்கிறது” இதற்கு “விவர்த்த
வாதம்” என்று
பெயர்.
ஜீவத்துவம் பூரணத்தன்மை
இல்லாமல் இருப்பதால், மோக்ஷம் என்ற பூரணத்தன்மையை அடையவேண்டும் என்பதுவும், வேறுபாட்டுடன்
கூடிய ஞானமே அஞ்ஞானம் என்றும், அது மாயையின் காரியம் என்றும், மாயை பிரம்மத்தினுடைய
பூரணமான சுதந்திரமென்றும் கூறப்பட்டிருக்கின்றது. மேலும், இதனில், கண்ணாடியில் தெரிகின்ற
உருவமும், அதன் பிரதி பிம்பமும் பார்பதற்கு இருவர் போன்று தோன்றினாலும், உண்மையில்
ஒருவனே அங்கு பிம்பமாக காணப்படுகின்றான் என்ற பிரதிபிம்ப திருஷ்டாந்தத்தை அங்கீகரித்து
ஜீவ, ஈஸ்வர ஒற்றுமை விளக்கப்பட்டுள்ளது.
இந்த நூலை கற்கின்றவன்
ஒரு காலத்திலும் துக்கத்தில் வீழமாட்டான். பிறப்பு, இறப்பு என்ற நோயிலிருந்து விடுபடுவான்.
தக்க குருவானவர் சிஷ்யனுக்கு உபதேசம் செய்ததும், யுக்தி அனுபவங்கள் பொருந்தியதும்,
மிகவும் அரிதான உயர் ஞானத்திற்கு ஈடாக வேறு எதுவும் இல்லை என்பதுவும், இந்த நூலைக்
கற்று எவனுக்கு ஞானம் உண்டாகவில்லையோ, அவனை பாக்கியம் இல்லாதவன் என்றும் கருத வேண்டும்.
மேலும், அப்படிப்பட்டவனுக்கு
சாக்ஷாத் பரமசிவனே பிரத்யக்ஷமாக தோன்றி உபதேசம் செய்தாலும் அவனுக்கு ஞானம் உண்டாகாது.
காரணம் அவ்வளவு மகிமை பொருந்திய ஞான காண்டத்தை ஹரிதாயனர் என்ற மகரிஷி அதி அற்புதமாக
நாரதருக்கு உபதேசம் செய்கின்றார். இந்த திரிபுரா
ரகசியம் என்ற நூலை “ஹரிதாயன
ஸம்ஹிதா” என்றும் கூறப்படுவதுண்டு.
திரிபுர ரகசியம் தோன்றிய வரலாறு:
திரிபுர ரகசியம் ஆதியில் பரமேஸ்வரனால் மகாவிஷ்ணுவிற்கும்,
விஷ்ணுவால் பிரம்மாவிற்கும் உபதேசிக்கப்பட்டது.
பின்னர் மகாவிஷ்ணு ஸ்ரீ தத்தாத்ரேயராக அவதரித்து இந்த
ரகசியத்தை பரசுராமருக்கு அருளினார். குருவாகிய ஸ்ரீ தத்தாத்ரேயர்
தன் சிஷ்யரான பரசுராமருடைய தேகாத்ம புத்தியை நீக்கி சகஜ ஞான நிலையை அடையும் வழியைப்
படிப்படியாகக் கதைகள் மற்றும் உருவகங்கள் மூலம் விளக்குவதே இந்நூலின் சாராம்சமாகும்.
அதன் பிறகு, பரசுராமர்
ஹரிதாயனருக்கு உபதேசித்து, ஹரிதாயனரால் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த ஸ்ரீ
திரிபுர ரகசியம் உருவாகவேண்டும் என்பது ஈஸ்வர சங்கல்பமாக அமைந்தது.
இதை அறிந்த நாரதர் ஹரிதாயனர் முன் தோன்றி தான் “பிரம்ம லோகத்தில் மார்க்கண்டேய ரிஷி பிரம்மாவிடம் பரம
ரகசியத்தை விளக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு, பிரம்மாவும் அந்த ரகசியம் பூ உலகில்
ஹரிதாயனரால் ஒரு இதிகாசமாக உருவாக்கப்படும் என்று கூறினார். இதை அறிந்த நான் அந்த
ரகசியத்தை தங்கள் வாயிலாக அறிய ஆவலுடன் உங்களிடமிருந்து கேட்க வந்தேன்” என்றார்.
பரசுராமரிடம் இருந்து தான் பெற்ற உபதேசத்தை எழுதக்கூடிய திறமை
தனக்கு இல்லையென்று தனது இயலாமையை ஹரிதாயனர் நாரதருக்குத் தெரிவித்தார்.
உடனே நாரதர் பிரம்மாவைத் தியானிக்க, பிரம்மா அவ்விருவர்முன்
தோன்றி தன்னை அழைத்த காரணத்தை வினவினார். நாரதர் விஷயத்தைக் கூற, ஹரிதாயனர் ஸ்ரீ
திரிபுர ரகசியத்தை இயற்றுவதற்கு வேண்டிய சக்தியை பிரம்மா அருள் செய்தார். இவ்வாறு
ஹரிதாயனர் இந்த நூலை இயற்றினார்.
ஒருவன் பலகோடி ஜென்மங்களில்
செய்த புண்ணியத்தினால் மட்டுமே இந்த நூலை வாசிக்கமுடியும் என்பதுவும், அப்படி வாசித்து
ஞானத்தை அடைந்தவன் இக, பர ஐஸ்வர்யங்களை விட மேலான ஐஸ்வர்யத்தை அடைவான் என்பதிலும் சிறிதும்
ஐயமில்லை.
நன்றி!
என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.