வைராக்கியம்
தான் அறிந்தும், மற்றவர்கள் சொல்லக் கேட்டும் உண்டாகின்ற விஷயங்களின் மேல் பற்றற்று, அவைகளை சம நிலையில் வைத்திருப்பதே வைராக்கியம் எனப்படும்.
“பற்றற்று இரு” என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
பற்றை அறுப்பது எப்படி? என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அது எங்கிருந்து வருகிறது? என்று தெரிந்துக் கொள்ள வேண்டும்.
பற்று இரண்டு வகைகளில் வருகிறது. ஒன்று, நமது சொந்த அனுபவத்தில் இருந்து, இன்னொன்று, மற்றவர்கள் சொல்லக் கேட்டு. இதில், நமது சொந்த அனுபவத்தில் இருந்து வரும் பற்று மிக மிகக் குறைவு. மற்றவர்கள் சொல்லக் கேட்டு அதில் இருந்து வரும் பற்று மிக மிக அதிகம்.
இப்படி எல்லாம் செய்தால், இந்த பிறவிக்குப் பின் சொர்கம் போகலாம். அங்கே அழகான பெண்கள் நடனம் ஆடிக் கொண்டிருப்பார்கள், எப்போதும் பாட்டும், இசையும் இருக்கும் என்று சொன்னவுடன் யாருக்குத்தான் ஆசை வராது. உடனே, நாமும் சொர்கம் போனால் எப்படி இருக்கும் என்று மனம் கணக்குப் போட ஆரம்பித்து விடுகிறது.
நாம் இதுவரை சொர்கம் போனது இல்லை.
போனவர்களும் திரும்பி வந்து அது இப்படித்தான் இருந்தது என்று கூறியதும் இல்லை. ஆனால், மற்றவர்கள் சொல்லக் கேட்டதை வைத்து வருகின்ற ஆசை அது.
சில பேர் சொல்லலாம், "எனக்கு அப்படி எல்லாம் ஒன்றும் ஆசை இல்லை" என்று.
ஆனால், அவர்களின் ஆசை வைகுந்தம் போக, நித்ய சூரிகளாக இருக்க, கைலாயம் போக, சிவ பூத கணங்களாக இருக்க, பரம பிதாவுக்கு அருகில் இருக்க என்று வேறு விதமான ஆசைகள் இருக்கும்.
ஆக, ஆசைகள் என்பது எதுவாக இருந்தாலும், எல்லாம் ஒன்று தான்.
எதன் மேல் ஆசை என்பதில் தான் வேறுபாடே தவிர, எல்லோருக்கும் ஆசை இருக்கிறது.
மது அருந்த வேண்டும் என்று விரும்புபவனுக்கும், நித்ய சூரிகளாக இருக்க வேண்டும் என்று விரும்புபவனுக்கும் ஆசை இருக்கிறது. இதில் ஆசை எது? என்பதில்தான் வேறுபாடு உள்ளது.
இதில், நித்ய சூரிகளாக இருக்க வேண்டும் என்று நினைப்பது நல்ல ஆசை, மது அருந்த வேண்டும் என்று நினைப்பது கெட்ட ஆசை என்று கருதுகிறோம். ஆனால், உண்மையில் நல்ல ஆசை, கெட்ட ஆசை என்பதெல்லாம் கிடையாது. எதுவாக இருந்தாலும் ஆசை, ஆசைதான்.
அதனால்தான், திருமந்திரம் சொல்லுது, “ஆசை அறுமின், ஆசை அறுமின் ஈசனோடாயினும் ஆசை அறுமின்” என்று.
சரி, ஆசையே இல்லாமல் இருக்க முடியுமா?
உண்மையில் பற்றற்று இருப்பது சாத்தியமா?
சரி! சாத்தியம் என்றே வைத்துக் கொண்டாலும், அது தேவையா? இறைவன் மேல் பற்று வைக்கக் கூடாதா? என்றெல்லாம் கேள்வி வரும்.
இங்கு பற்றறுத்தல் என்பதை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
பற்று வைப்பதால் என்ன நிகழ்கிறது?
மனம் அதை பற்றிக் கொள்ளகிறது. அது கிடைக்கும் வரை அதையே நினைத்துக் கொண்டிருக்கிறது. அதை அடைய பல முயற்சிகளை செய்கிறது. கிடைக்குமோ?, கிடைக்காதோ? என்று சந்தேகம் கொள்கிறது.
கிடைக்காவிட்டால் என்ன செய்வது? என்ற பயம் வருகிறது. இதனால், மனதில் சதா சஞ்சலம் நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது.
மனதில் ஒரு ஆசை இருந்தாலே இவ்வளவு நிகழ்கிறது.
நம் மனதில் எத்தனை, எத்தனை ஆசைகள் இருக்கின்றன.
அதில் ஒவ்வொரு ஆசையும் எத்தனை, எத்தனை எண்ண அலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
பொருளில், உறவில், அலுவலகத்தில், வீட்டில்,
அண்டை அயலில், நண்பர்கள் மத்தியில், பிள்ளைகள் மூலம் என்று ஆயிரம் ஆயிரம் ஆசைகள்.
அத்தகைய ஆசைகள் மூலம் உண்டாகின்ற ஒவ்வொரு பற்றில் இருந்தும் கணக்கில் அடங்காத எண்ண அலைகள். இவ்வளவு எண்ண அலைகள் இருந்தால் எங்கிருந்து உண்மையை காண்பது?
சித்த விருத்தி நிரோதம் எப்படி நிகழும்?
நாம் வாழும் காலத்தில் இது இன்னும் சிக்கலாகிறது.
தற்பொழுது இந்த நவீன விஞ்ஞான வளர்ச்சியில் நாட்டம் கொண்ட மக்கள் Watsapp, Facebook போன்ற சமூக வலை தளங்களில் ஒருவர் நான் இது வாங்கினேன், நான் இங்கே போனேன், நான் இன்னது சாப்பிட்டேன், நான் இந்த படம் பார்த்தேன், நான் இந்த மாடல் புதிய செல்போன் வாங்கினேன் என்று சொன்னவுடன், நம் மனம் அவைகள் அனைத்துக்கும் ஏங்க ஆரம்பித்து விடுகிறது.
இந்த தேவை, ஆசை, பற்று மற்றும் தேவை இல்லாமை, பற்றற்று இருப்பது என்ற இரண்டிற்கும் நடுவில் சம நிலையில் இருப்பதே வைராக்கியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக