மனதுக்கு எது
பிடிக்கிறதோ?, அதை தியானம் செய்!.
இது என்ன புதிதாக இருக்கிறது!
மனம் அமைதி பட வேண்டும் என்றால், இறைவனை நோக்கி அல்லவா தியானம் செய்ய வேண்டும்?... அல்லது ஒரு ஒளியை, ஜோதியை நினைத்து தியானம் செய்யலாம். அல்லது ஓம்காரத்தை தியானம் செய்யவேண்டும் என்று அல்லவா? கேட்டு இருக்கிறோம்.
இவர் என்ன புதிதாக சொல்கிறார்.
‘மனதுக்கு பிடித்ததை தியானம் செய்!’ என்று.
ஒன்றும் புரியலையே!...
ஒருத்தருக்கு ஒரு நடிகையை பிடிக்கும், சிலருக்கு மது அருந்த பிடிக்கும், சிலருக்கு சாப்பிட பிடிக்கும், இப்படி ஆளாளுக்கு ஒண்ணு பிடிக்கும் என்றால் இதையெல்லாம் வைத்து எப்படி தியானம் செய்வது?
சரி!, அப்படியே அவற்றை தியானம் செய்தால் என்ன கிடைக்கப் போகிறது?
எவ்வளவு நேரம்தான் ஒரு அழகான பெண்ணைப் பற்றி நினைத்துக் கொண்டே இருக்க முடியும்.
சலிக்காதா? அப்புறம் என்ன செய்வது?...
ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம்.
சிந்திப்போம்!....
முதலில் மனதை அடக்க முயற்சி செய்யக் கூடாது.
எவ்வளவுக்கு எவ்வளவு நாம் மனதை அடக்க முயற்சி செய்கிறோமோ?... அவ்வளவுக்கு அவ்வளவு அது திமிறிக் கொண்டு ஓடும்.
பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் மனதை அடக்க முயன்று தோல்வி அடைந்து இருக்கிறார்கள்.
அருணகிரிநாதர் அரை நிமிடம் மனதை அடக்க முடியாமல் தவித்து இருக்கிறார்.
சரண கமலா லயத்தை அரை நிமிட நேர மட்டில் தியானம் பண்ண முடியாத தன்னை சட கசட மூட மட்டி என்று திட்டிக் கொள்கிறார்.
மனதை அதன் போக்கில் போய் அதை வசப்படுத்த வேண்டும்.
மனதின் இயல்பு எதையாவது பற்றிக் கொள்ளுவது. எதையும் பற்றாமல் மனதால் தனித்து இருக்க முடியாது. ஏதோ ஒரு பிரச்சனை, பேச்சு, டிவி, புத்தகம், சாப்பாடு என்று அதற்கு ஒரு பற்றுக் கோடு வேண்டும்.
ஓடுகின்ற மனதை கட்டி இழுத்தால், அது இழுக்க நாம் இழுக்க இறுதியில் நாம் தளர்ந்து போவோம்.
எனவே, மனது எதை விரும்புகிறதோ? அதை முதலில் தியானம் பண்ண வேண்டும்.
மனதை பிடிக்காத ஒன்றின் மேல் செலுத்தினால் அது நிற்காது. எதிர்த்து ஓடும்.
எனவே, எது மனதுக்கு ரொம்ப பிடிக்குமோ?, அதன் மேல் மனதை இலயிக்க விட வேண்டும்.
நல்ல இசை, இனிய மணம், அழகிய முகம், சிறந்த சிற்பம், ஓவியம், எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.
பிடித்ததில் மூழ்கிய மனம் அதில் கரைந்து, நாளடைவில் ஒரு நிலைக்கு வரும். மனம் அதையும் தாண்டி ஒன்றும் இல்லாமல் நிற்கும் சில கணங்கள்.
அந்த சில கணங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நீண்டு வளரும். மேலும், தியானம் என்பது முழு கவனத்தையும் அதன் மேல் செலுத்துவது.
நமக்கு இனிப்பு பிடிக்கும். அதை உண்ண விரும்புகிறோம். கூடவே, "இது நல்லது இல்லை. சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வரும்." என்ற எதிர்மறை எண்ணம் வருகிறது.
அப்புறம் "ஒண்ணு சாப்பிட்டால் என்ன?" என்ற எண்ணமும் கூடவே வருகிறது. இப்படி பெண்டுலம் போல இங்கும், அங்கும் மனம் அலைகிறது.
அப்படி இல்லாமல். முழு கவனமும், சிந்தனையும் மனதுக்கு பிடித்ததன்மேல் செலுத்த வேண்டும்.
லட்டு பிடிக்குமா?... அதை பற்றி சிந்திக்க வேண்டும்.
அதன் வடிவம், சுவை, நிறம், மணம் என்று அனைத்தையும் பற்றி சிந்திக்க வேண்டும். அப்படி செய்யும் போது நாளடைவில் லட்டின் மேல் உள்ள ஆசை அற்றுப் போகும்.
நமக்கு ஆசை விடாமல் இருப்பதற்கு காரணம் நாம் எதையும் முழுமையாக அனுபவிப்பது கிடையாது.
ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது.
எதையும் முழுமையாக அனுபவிக்காததால், மீண்டும் மீண்டும் அவற்றை அனுபவிக்கத் தூண்டுகிறது மனம்.
பதஞ்சலியின் யோகம் எந்த மதமும் சார்ந்தது
அல்ல. உங்களுக்கு இயேசுவை பிடிக்குமா?... அவரை தியானம் செய்யுங்கள். அல்லாவை
பிடிக்குமா?... அவரை தியானம் செய்யுங்கள். அல்லது புத்தரைப் பிடிக்குமா? அவரை
தியானியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக