ஞாயிறு, 5 நவம்பர், 2023

ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம் [சமாதி பாதம்] வகுப்பு - 10 Patanjali Yoga [Sa...


"பூர்வ சமஸ்கார" - பழைய எண்ண பதிவுகள். 

நமது மனதில் ஏற்கனவே பல படிமானங்கள், சுவடுகள் இருக்கின்றன. 

அறிந்தோ, அறியாமலோ அவற்றை நாம் நம் மனதில் பதிய வைத்து இருக்கிறோம். 

இவை பிறப்பிலேயே வந்தாக இருக்கலாம். அல்லது நாம் மிக மிக சிறிய வயதில் இருக்கும்போது நம் மனதில் மற்றவர்களால் ஏற்றப்பட்டதாக இருக்கலாம். பின், நாமே தேடி கொள்வதும் உண்டு.

உதாரணமாக - புத்தகங்கள், சினிமா, டிவி, செய்தித் தாள்கள், பத்திரிகைகள், ஆசிரியர்கள், நண்பர்கள், அண்டை அயல், உயர்வு என்று ஆயிரம் வழிகளில் நமக்கு எண்ணப் பதிவுகள் உண்டாகின்றன. 

இவை கடவுள், மதம், ஆண் பெண் பற்றிய சிந்தனைகள், நாடு, மொழி, பண்பாடு, கலாச்சாரம், சொர்கம் நரகம், பாவம் புண்ணியம்,  என்று பலவேறு துறை சம்பந்தப் பட்டவைகளாக இருக்கும். 

இவைகள் அனைத்தையும் பட்டியல் போட்டு, ஒவ்வொன்றாக அழிப்பது என்பது நடக்காத காரியம். 

இவைகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக அழிக்க வேண்டும். 

என்ன செய்வது? 

இந்த பழைய எண்ண சுவடுகள், புதிதாக வரும் அனுபவங்களால் மேலும், மேலும்  வலுப்பெறுகின்றன. 

புதிய செய்திகள், அனுபவங்கள் நம்முடைய பழைய பதிவுகளோடு ஒத்துப் போகலாம் அல்லது அதற்கு எதிரான ஒன்றாக இருக்கலாம். இரண்டுமே பழைய எண்ணங்களை வலுப்பெறச் செய்கின்றன. 

எனவே, புதிய சிந்தனைகள் வரும்போது அவற்றை உடனே நிறுத்த வேண்டும். குரங்கு தேங்காயை உருட்டிக் கொண்டு இருப்பதைப் போல, உள்ளே வரும் ஒவ்வொரு சிந்தனையையும் வைத்து உருட்டிக் கொண்டு இருக்கக்கூடாது. 

"இது சரியா, தவறா? நல்லதா, கெட்டதா" என்று ஆராய்ச்சி செய்வதன் மூலம் பழைய சிந்தனைகள் வலுப் பெறுகின்றன. 

எனவே, மனதில் எந்த சிந்தனை எழுந்தாலும் அவற்றை உடனே நிறுத்த வேண்டும். 

சரி, இப்படி செய்துக் கொண்டே இருந்தால், நாம் புதிதாக ஒன்றையும் கற்றுக் கொள்ள முடியாதே. 

அதனால், நாம் முட்டாளாக மாறி விடுவோமே. நல்லதோ, கெட்டதோ, அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டாமா? உலக அறிவு இல்லாமல் எப்படி வாழ்க்கையை நடத்துவது? 

இங்கு நாம் அறிவு என்று நினைத்துக் கொண்டு இருப்பது எல்லாம், தகல்வல்களை சேர்த்து வைப்பது தான். 

அந்த கிரிக்கெட் போட்டியில் அவர் வென்றார், இந்த படத்தில் இவர் நடித்தார், பங்கு சந்தை இத்தனை புள்ளிகள் மேலே போனது, மழை வரும், வராது, இரண்டொரு பாட்டு என்று தகல்வல்களை சேர்த்துக் கொண்டே இருக்கிறோம். 

நிறைய தகவல்களை அறிந்து உள்ளவர் அறிவுள்ளவர் என்று நாம் கூறிக் கொள்கிறோம். 

அறிவென்பது தகவல்கள் அல்ல. 

எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு. 

உண்மையை கண்டு அறிவதே அறிவு. 

இப்படி மனதில் எழும் எண்ணங்களை உடனே நிறுத்துவதன் மூலம், மனம் தெளிந்த நிலையை அடையும். அப்போதுதான், உண்மை அதில் பிரதிபலிக்கும். 

விவேகானந்தர் ஒரு உதாரணம் சொல்லுவார். 

ஒரு திரையில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. நொடிக்கு நொடி அதில் காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கிறது. திரை நினைக்கிறது அந்த காட்சி எல்லாம் உண்மை என்றும், அவைகள் தனக்கு நிகழ்வதாகவும். 

அவ்வாறு திரையில் ஓடும் படப் பெட்டி நிறுத்தப்பட்டால், அந்த காட்சிகள் அனைத்தும் நிற்கும். தற்போது, அந்த திரையில் காட்சிகள் எதுவுமே இல்லாமல், திரை நிர்மலமாக இருக்கும். 

அதுதான் அதன் உண்மை நிலை. 

காட்சிப் பதிவுகள் உண்மை அல்ல. 

அது திரைக்கு புரியாததினால்தான் தன் மேல் ஓடும் காட்சிகள் அனைத்தும் உண்மை என்று, அவற்றை தன்னோடு தொடர்பு படுத்திக் கொண்டு, திரை அழுகிறது, சிரிக்கிறது, ஆனந்தம் அடைகிறது, கோபம் கொள்கிறது. 

அதுப்போல, ஆரம்பத்தில் அந்த வெள்ளைத் திரைப் போன்று இருந்த நம் மனதில், எண்ணங்கள் என்ற ஏராளமான காட்சிகள் கொண்ட படம் ஓடத் தொடங்குகின்றது.

அப்படி நமது மீது ஓடிக்கொண்டிருக்கின்ற படப் பெட்டி (Film Roll) எது தெரியுமா? 

இந்த உலகம். 

பொதுவாக, திரையில் காட்சிகள் ஓடுவதற்குக் காரணம் அந்த படப் பெட்டிதான் என்று நமக்குத் தெரிவதினால், நாம் காட்சிகள் வேண்டாம் என்றால், அந்த படப்பெட்டி ஓடுவதை நிறுத்திவிடுகிறோம்.  

அதுப்போல, நம்மால் இந்த உலகத்தை என்ற படப் பெட்டியை நிறுத்த முடியுமா?... 

யோசித்துப் பாருங்கள்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்