ஒரு பூவை ஒரு கவிஞன் பார்க்கிறான். அவன் மனதில் ஆயிரம் கவிதைகள் ஓடுகிறது. அதே பூவை நாமும் பார்க்கிறோம். நன்றாக இருக்கிறது என்று மட்டும் தோன்றுகிறது. கவிதைகள் எல்லாம் வருவது இல்லை.
ஒரு பெண்ணை அவளின் காதலன் பார்பதற்கும், மற்றவர்கள் பார்பதற்கும் வேறுபாடு இருக்கிறது அல்லவா?
நமது புலன்கள் மிக நுட்பமானவை அல்ல.
அவைகளுக்கென்று ஒரு அறிவும் கிடையாது.
அதாவது, வெளியில் இருந்து செய்திகளை உள்ளே அனுப்ப வேண்டியது. அவ்வளவுதான் அவற்றின் வேலை.
அதிலும் கூட ஓரளவுக்குத்தான் செய்யும். அதற்கு மேலும், கீழும் உள்ளவைகளை அவற்றால் அறிய முடியாது.
கொஞ்ச தூரம் வரைதான் கண்கள் பார்க்கும்.
அதற்குமேல் வேண்டும் என்றால் தொலை நோக்கி வேண்டும். ஒரு அளவு பருமன் உள்ளதை மட்டும் தான் கண்கள் பார்க்கும், அதை விட சிறியது என்றால், ஒரு நுண்ணோக்கி வேண்டும். இப்படி எதிலும் ஒரு இடைப்பட்ட ஒன்றை மட்டும் தான் நம் புலன்கள் உணரும். இது ஒரு சிக்கல்.
அடுத்த சிக்கல் என்ன? என்றால், இந்த செய்திகளை அறியும் மூளை அல்லது அறிவு இருக்கிறதே, அதுவும் ஓரளவுதான் செயல்படும்.
ஒரே நேரத்தில் பல விஷயங்கள் வந்து கொண்டே இருக்கும். அது மட்டும் அல்லாமல், மூளை அது பாட்டுக்கு வேறு ஒன்றை நினைத்துக் கொண்டு இருக்கும்.
வீட்டில் மனைவி ஆசை ஆசையாக ஏதாவது இனிப்பு செய்து வைத்திருப்பாள். அலுவலகத்தில் ஏதோ ஒரு சிக்கல். மனம் அதையே நினைத்துக் கொண்டிருக்கும். இனிப்பு மனதிற்குத் தெரியாது.
மனதில் ஆயிரம், ஆயிரம் எண்ண ஓட்டங்கள் இருந்து கொண்டே இருக்கு. ஒரு நொடி கூட அது சும்மா இருப்பது இல்லை. எனவே, புலன்கள் அனுப்பும் சங்கதிகளை அறிவு முழுவதுமாக உணர்வதே இல்லை.
அவ்வாறு வருவதே சொற்பம். வந்ததையும், சரியாகப் புரிந்து கொள்வது இல்லை.
எனவே, நாம் இந்த உலகை அறியப் பயன்படுத்தும்
நம் பொறிகளும், அறிவும் நமக்கு அரைகுறையாக உலகை நமக்கு காட்டித் தருகின்றன.
நாம் இந்த உலகை, அதில் உள்ளவற்றை ஒரு போதும் முழுவதும் அறிந்துக் கொள்வதே இல்லை. அரை குறையாக அறிந்து கொண்டு அல்லல்படுகிறோம்.
எனவே, இந்த புலன்களும், அறிவும் சரிப்படாது என்று புரிகிறது அல்லவா?
புலன்களும், அறிவும் உலகை நமக்கு வடிகட்டித் தருகின்றன.
ஒரு பெரிய அறிஞர் பேசுகிறார். ஆனால் அவர் பேசும் மொழி நமக்குத் தெரியாது. ஒரு மொழி பெயர்பாளரை வைத்துக் கொள்கிறோம். சிக்கல் எவ்வளவு என்று பாருங்கள்.
முதலில் அந்த அறிஞர் தான் நினைத்ததை தனது மொழியில் சொல்ல வேண்டும். அது ஒரு சிக்கல். நினைப்பதை எல்லாம் சொல்லில் வடித்து விட முடியாது. அவர் சொன்ன பின், மொழி பெயர்ப்பாளர் அதை நமக்குத் தெரிந்த மொழியில் மொழி பெயர்க்கிறார். அறிஞர் சொன்ன சொல்லுக்கும், இவர் நமது மொழியில் கண்ட சொல்லுக்கும் நூறு சதம் ஒற்றுமை இருக்குமா? என்பது சந்தேகம்.
சரி! மொழி பெயர்த்து விடுகிறார் என்றே வைத்துக் கொள்வோம். நாம் அந்த சொல்லை கேட்கிறோம். நமக்கு அந்த சொல்லின் அர்த்தம் தெரியும். ஆனால், அது தான் மொழி பெயர்ப்பாளர் நினைத்த அர்த்தம் என்று சொல்ல முடியாது.
இப்படி வடி கட்டி, வடி கட்டி வரும்போது உண்மை மறைந்து போய் விடுகிறது.
உதாரணமாக, இயேசு கிறிஸ்து அராமை என்ற மொழியில் பேசினார். அதில் இருந்து ஹீப்ரு மொழிக்குப் போய், அங்கிருந்து கிரேக்கம், லத்தீன் மொழிகளுக்குப் போய், அங்கிருந்து ஆங்கிலத்துக்குப் போய், அங்கிருந்து தமிழுக்கு வருகிறது அவர் சொன்ன விஷயங்கள். நாம் தமிழில் படிக்கும் பைபிள் இயேசு சொன்னது தான் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?
சரி, இந்த அறிவும் புலன்களும் இல்லை என்றால் வேறு எப்படித்தான் அறிந்து கொள்வது?
நிர்விசார சமாதி அடைந்த யோகி, அறிவும் புலன்கள் இவற்றின் துணை இல்லாமல் நேரடியாக அறிவான்.
அது என்ன நேரடியாக அறிவது?
மீண்டும் உலக நடைமுறைக்கு வருவோம்.
காதலனும் காதலியும் சந்திக்கிறார்கள். அவர்கள் பேச வேண்டும் என்பது இல்லை. கண்கள் ஒன்றை ஒன்று
பார்த்தாலே போதும். ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு பார்வை சொல்லும்.
“கண்ணோடு கண்ணை
நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல”.
பேசாமலேயே, ஒருவர் மனதில் இருப்பது இன்னொருவர் மனதுக்கு தெரிந்து விடும்.
உண்டா இல்லையா?
ஒரு மென்மையான கை பிடியில் அன்பு கொட்டிக் கிடக்கும். அவளுக்கு மட்டும் தெரியும்.
ஒரு தாய், தன் குழந்தையின் உளறலுக்கு அர்த்தம் கண்டு விடுவாள். அது மொழி வழி வந்த அர்த்தம் அல்ல. மொழி என்றால், காது, கேட்க வேண்டும். வார்த்தையின் ஒலி வடிவத்தை அறிவு அறிந்து சொல்ல வேண்டும். குழந்தை ஒன்றும் பேசவில்லை. ஏதோ உளறுகிறது. தாய் அதை அறிந்து கொள்வாள்.
புலன்கள் மற்றும் அறிவை தாண்டி அது நேரடியாக அறிந்து கொள்ளும் விதம்.
இது எப்படி சாத்தியமாகிறது?
காதலனும் காதலியும், இருவர் அல்ல, ஒருவராக மாறிவிடுகிறார்கள். அவள் ஏதோ ஒன்றை நினைக்கிறாள். அவள் இதைத்தான் நினைக்கிறாள் என்று அவன் உணர்ந்து கொள்கிறான். இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளி மறைந்து போய் விடுகிறது.
இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொல்ல முடியும்.
மிகவும் அன்பு கொண்ட கணவன் மனைவி இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கணவன் வெளியூர் போயிருப்பான், எங்கோ தொலை தூரம்.
அவனுக்கு அங்கே ஒரு துன்பம்
என்றால், மனைவிக்கு இங்கே என்னமோ செய்யும். இவள் சங்கடப்படுவாள்.
அவருக்கு என்னவோ துன்பம், ஆபத்து என்று இவளுக்குத் தெரியும்.
எப்படி?
குழந்தை இன்னொரு அறையில் தூங்கிக் கொண்டிருக்கும். தொட்டிலுக்குள் அது பசித்து விழித்தால், மற்றொரு அறையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் தாய்க்கு அது தெரியும். தானே விழித்துக் கொள்வாள். யாரும் எழுப்ப வேண்டாம்.
யோகிக்கு, இந்த உலகமே அப்படித்தான். அவன் உலகை தன்னுள் அறிகிறான். உலகம்வேறு, தான்வேறு என்று அவன் நினைப்பது இல்லை. இரண்டும் ஒன்றாகக் கலந்து விடுகிறது.
அப்போது மட்டும்தான், அறிவும் வேண்டாம், புலனும் வேண்டாம்.
இதைப்பற்றி, கண் மூடி மனதுக்குள்
சிந்தியுங்கள்!...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக