புதன், 15 நவம்பர், 2023

ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம் [சமாதி பாதம்] வகுப்பு - 15. Patanjali Yoga Sutra's [Class -15]


நமக்கு சில விஷயங்கள் பிடிக்கிறது. சில விசயங்கள் பிடிப்பதில்லை. 

சில பேரைக் கண்டால் சந்தோஷமாக இருக்கிறது. சிலரை நினைத்தாலே கோபமும், எரிச்சலும் வருகிறது. 

சில அனுபவங்கள் சுகமாக இருக்கிறது. சில வருத்தத்தை  கொண்டு வருகின்றன. 

நல்லதோ, கெட்டதோ, சுகமோ, துக்கமோ எதுவாக இருந்தாலும், அவைகள் மனதில்  அலைகளை கிளப்பி விடுகின்றன. 

நல்லவை, சுகமானவை என்றால், அவைகள் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று ஆசை பிறக்கிறது. இன்னும் அதிகம் வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. 

ஒரு வேளை மீண்டும் கிடைக்காதோ? என்று கவலையும், பயமும் பிறக்கிறது. 

கெட்டவை, தீயவை என்றால், அவைகள் மீண்டும் வராமல் இருக்க மனம் ஆசைப்படுகிறது. வந்தால் என்ன செய்வது? என்று யோசனை செய்கிறது. வராமல் எப்படி காத்துக் கொள்வது? என்று சிந்திக்கிறது. 

எப்படி இருந்தாலும், அனைத்து விஷயங்களும், அனுபவங்களும் மனதில் எண்ண அலைகளை  தூண்டி விட்டுக் கொண்டே இருக்கின்றன. 

சித்தம் கலங்கிக் கொண்டே இருக்கிறது. கலங்கிய சித்தத்தில் ஒரு தெளிவும் பிறக்காது. 

சரி! 

விஷயங்களையும், அனுபவங்களையும் விட்டு விட முடியுமா? என்றால், அதுவும் முடியாது. 

பின் என்னதான் வழி? 

அனுபவிக்கவும் வேண்டும். ஆனால், அதனால் பாதிப்பும் இருக்கக் கூடாது என்றால், எப்படி முடியும்? 

முடியும். 

அதற்கு, பதஞ்சலி முனிவர் வழி சொல்கிறார். 

"அனுபவங்களை அறிவதன் மூலம்" என்கிறார். 

அது என்ன அனுபவங்களை அறிவதன் மூலம்? 

உதாரணமாக, உங்களுக்கு தலை வலிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். 

உடனே என்ன செய்வீர்கள்? 

ஏதேனும் ஒரு தலைவலி தைலம் இருந்தால், அதை எடுத்து போடுவீர்கள். சில பேர் கை பக்குவமாக ஏதையாவது அரைத்து பத்து போடுவார்கள். இன்னும் சிலர் சூடாக ஒரு கப் காபி குடித்தால் சரியாகி விடும் என்று காபி குடிப்பார்கள். சிலர், தலையை இறுக்க துண்டால் கட்டுவார்கள். சிலர் உடனடியாக மாத்திரையை விழுங்குவார்கள். 

ஆக, வழி எதுவாக இருந்தாலும், அந்த வலியில் இருந்து உடனடியாக விடுதலை பெற வேண்டும் என்பதே நோக்கம்.

பொதுவாக, வலியோடு போராடுவீர்கள். எப்படியாவது அதை விரட்டி விட வேண்டும். அதிலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்று நினைப்பீர்கள். 

சரி தானே!... 

மாறாக, இப்படி செய்துப் பாருங்கள் ஒரு முறை. 

வலி எங்கே இருக்கிறது?. எந்த இடத்தில் இருக்கிறது. எவ்வளவு அழுத்தமாக வலிக்கிறது, வலி விட்டு, விட்டு வருகிறதா?... அல்லது தொடர்ந்து இருக்கிறதா?...  வலிக்கும் போது வேறு என்ன செய்கிறது?... என்று வலியோடு ஒன்றி இருந்து பாருங்கள். அதனுடன் ஒன்றி இருங்கள். 

அதைவிடுத்து, அதை விட்டு விலக வேண்டும், அதை விரட்டி அடிக்க வேண்டும் என்று நினைக்காமல். உங்கள் கவனம் முழுவதையும் அந்த வலியின் மேல் வையுங்கள். 

நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!... 

அந்த வலி போகிறதோ இல்லையோ?... ஆனால், அது உங்களை  சிரமப்படுத்தாது. வலி இருக்கும். ஆனால், அது உங்களை பாதிக்காது. 

அதுவே, நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு வலியோடு போராடுகிறீர்களோ?... அவ்வளவுக்கவ்வளவு அது வலிமை பெறும். 

ஆகவே, வலியோடு ஒன்றி இருங்கள். வலி போய் விடும். 

வலி மட்டும் அல்ல, மகிழ்ச்சியாக இருக்கும் போது, எது மகிழ்ச்சி தருகிறது?... மகிழும்போது என்ன நிகழ்கிறது?... எது சந்தோஷத்தை தூண்டுகிறது? என்று மகிழ்ச்சியைப் பற்றி  ஆராயுங்கள். 

நாளடைவில் துன்பமும், இன்பமும் வரும். ஆனால், அவைகள் உங்களை பாதிக்காது. 

வந்தாயா, வா!... என்றும், போகிறாயா போ!... என்றும் சொல்லும் பக்குவம் வரும். 

நாம் வேறு, நம் அனுபவம் வேறு என்று நாம் பிரித்து விடுகிறோம். 

நாமே அனுபவம் என்று ஆகும்போது, அனுபவிப்பன் என்று யாரும் கிடையாது. எனவே அனுபவமும் கிடையாது. 

அனுபவம் இல்லாத இடத்தில் மன சஞ்சலங்கள் வராது. 

லட்டை வாயில் போட்டவுடன் கரைகிறதா? 

சந்தோஷமாக இருக்கிறதா?... 

ஒரு நிமிடம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, யோசித்துப் பாருங்கள்!.... 

எது சந்தோஷம்? லட்டா? அல்லது வாயில் உள்ள சுவையா? 

சுவை என்றால், அது எங்கே இருக்கிறது? லட்டிலா? நாக்கிலா? மூளையிலா? மனத்திலா?

சிந்தித்துப் பாருங்கள்!.... 

எங்கிருந்து அந்த இன்பம் வருகிறது? 

வெளியில் இருந்தா? உள்ளிருந்தா? அல்லது இரண்டும் சேரும் ஒரு புள்ளியிலா? 

இரண்டும் கலக்கும் ஒரு புள்ளி என்றால், அது எது? 

அது என்ன? 

அனுபவிக்கப்படும் பொருள், அனுபவிப்பவன், அனுபவம் இந்த மூன்றும் ஒன்றாகக் கலந்து ஒரு புள்ளியில் நிற்கும். 

அதை அறிந்துக் கொண்டால், அங்கே இன்பமும், துன்பமும் இல்லை. 

"இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே" என்பார் மணிவாசகர். 

"ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்" என்பார் அதிவீரராம பாண்டியர் வெற்றி வேற்கையில். 

"அல்லும் பகலுமில்லாச்  சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்" என்பார் அருணகிரிநாதர். 

அல்லும், பகலும் என்றால் இரவும், பகலும் என்று அர்த்தம். 

இதைத்தான் பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி பாடும்போது, இராப்பகல் இல்லா வெட்டவெளி தன்னில் விளையாடலாம் வா! அருணாசலா என்று பாடுகின்றார். 

அதன் உள்ளார்ந்த அர்த்தம் துன்பமும் (இரவு) இன்பமும் (பகல்) என்று பொருள். 

இரண்டும் அற்று சும்மா இருக்க வேண்டும் என்கிறார். 

சும்மா இருத்தல் என்பது, அன்றாட கடமைகளை செய்துகொண்டே எண்ணங்கள் அற்ற சகஜ நிலை என்பதாகும். 

ஆகவே, அனுபவங்களோடு ஒன்றுங்கள்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்