அப்பியாசம்,
வைராக்கியம்
========================
அப்யாஸ வைராக்யாப்யாம் தன் நிரோத: ॥12॥
அப்யாஸமும்,
வைராக்கியமும் நிரோதத்திற்கு இரண்டு கூறுகள்.
சித்தத்தில் ஏற்படும் சலனங்களினால் நாம் இந்த
உலகை சரியாக புரிந்துக்கொள்ள முடியாமல் செய்கின்றன என்று பார்த்தோம்.
சரியாக அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால், சித்தத்தில் ஏற்படும் சலனங்களை நிறுத்தி மனம் அமைதி அடையவேண்டும் என்றும் பார்த்தோம்.
எப்படி அலையும் மனதை நம் வழிக்கு கொண்டு வருவது?
மனதை, அதன் சலனங்களில் இருந்து, சமனப்படுத்த இரண்டு விசயங்கள் தேவைப்படுகின்றன. அவைகள்,
1. அப்பியாசம்
2. பற்றற்று இருப்பது
அப்பியாசம் என்றால் பயிற்சி. தொடர்ந்து, விடாமல் பயிற்சி செய்வது.
வைராக்கியம் என்றால் பற்றற்று இருப்பது.
அதாவது, பற்றற்று இருப்பது என்றால், இருமைகள் இல்லாமல் இருப்பது. எண்ணங்களை துறப்பது.
(நல்லது - கெட்டது, வேண்டியது - வேண்டாதது, பெருமை - சிறுமை) அற்று நடு நிலையில் இருந்து செயல்படுவது வைராக்கியம் எனப்படுகின்றது.
ஆனால், நாம் வைராக்கியம் என்பதை எப்படிப் புரிந்து வைத்துக் கொண்டுள்ளோம் என்றால், ஒன்றை விடாமல் சாதித்துக் காட்டுவது வைராக்கியம் என்று நினைக்கிறோம்.
நாம் நிறைய படிக்கிறோம். படித்தவர்கள்
சொல்வதை கேட்கிறோம். நல்லது, கெட்டது எது? என்று தெரிகிறது.
இருந்தும் நல்லதை செய்யாமல் கெட்டதை மட்டுமே செய்கிறோம்.
ஏன்?
அதிகமாக உண்பது, புகை, மது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, இவைகள் எல்லாம் கெட்டது என்று அதை செய்பவர்களுக்கு தெரியும்.
இருந்தும் செய்கிறார்கள். ஏன்?
பொறாமை, கோபம், அதீத காமம், எல்லாம் கெடுதல் என்று தெரிகிறது. இருந்தும், அவற்றை விட முடியாமல் தவிக்கிறார்கள்.
ஏன்?
நாம் எந்த காரியத்தை செய்தாலும், அந்த காரியம் நமக்குள் சில பதிவுகளை ஏற்படுத்துகின்றது.
அதை சமஸ்கிருதத்தில் "சம்ஸ்காரங்கள்"
என்கிறார்கள்.
அதாவது, தமிழில் கூறவேண்டுமானால், ‘வாசணைகள்’ என்று கூறலாம்.
சரி! அது என்ன வாசணை பதிவுகள்?
நாம் செய்த காரியம் நமக்கு பிடிக்கும், பிடிக்காது, சுகமாக இருக்கிறது, கடினமாக இருக்கிறது, மீண்டும் செய்யத் தூண்டுகிறது, வேண்டவே வேண்டாம் என்று தோன்றுகிறது.
அந்த பதிவின் தன்மையைப் பொறுத்து நாம் அந்த காரியங்களை மீண்டும் மீண்டும் செய்கிறோம். அல்லது செய்யாமல் விடுகிறோம்.
பொதுவாகவே, கெட்ட காரியங்களுக்கு பயிற்சி தேவை இல்லை. ஒன்றிரண்டு முறை செய்தாலே தானாகவே நம்மிடம் அவைகள் ஒட்டிக் கொள்கிறது.
அதாவது, மது அருந்தவும், புகை பிடிக்கவும், அதிக நேரம் தூங்கவும் என்ன பயிற்சிகள் தேவை. இவைகளை பயிற்சி இல்லமாலேயே செய்யலாம்.
அதுவே, டிவி சீரியல் பார்ப்பது, செல்போனில் வெட்டி அரட்டை அடிப்பது, மணிக்கணக்கில் Whats app இல் வெட்டியாக செய்திகளை அனுப்புவது, அதுவும் மற்றவர்கள் அனுப்பிய செய்திகளை மீண்டும், மீண்டும் நம் நண்பர்களுக்கு அனுப்பி, அவர்களையும் கடுப்பாக்குவது, ஓயாமல் நொறுக்கு தீனிகள் தின்பது, இதற்கெல்லாம் ஒரு பயிற்சியும் தேவை இல்லை.
ஆனால், அதிகாலையில் எழுந்திருப்பது. அவ்வாறு எழுந்து படிக்கப் போவது, உடற் பயிற்சிகள் செய்வது, உணவுக்கட்டுப்பாடுகள் போன்ற நல்ல செயல்களுக்கு பயிற்சிகள் செய்வது அவசியமாகின்றது.
ஆக, பயிற்சி என்றால் விடாமல், திரும்ப திரும்ப செய்வது.
பயிற்சி ஒரு பழக்கமாக மாற வேண்டும். பழக்கம்,
பின்னால் வழக்கமாக மாறவேண்டும். பின் அதுவே, நமது
இயற்கையாக மாறிவிடும். நமது இயல்பாக மாறிவிடும்.
எனவே, பயிற்சி என்பது சித்த சலனத்தை நிறுத்தவே ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக