இதுவரை, சித்த வ்ருத்தி நிரோதம் பற்றி பல வழிகளை சொல்லி வந்தார் பதஞ்சலி முனிவர்.
அதெல்லாம் ரொம்ப கஷ்டமான வழிபோல தோன்றும். அதுமட்டுமல்ல, நீண்ட நாள் பயிற்சி செய்ய வேண்டும் போல இருக்கும். அப்படியே செய்தாலும், சரியாக செய்கிறோமா? என்று தெரியாது.
கடைசிவரை நம்பிக்கை இழக்காமல் செய்ய வேண்டும். நடக்குமா? என்ற சந்தேகமெல்லாம் வரும் அல்லவா?.
எனவே, "அப்படியில்லேனா ஒண்ணு பண்ணுங்க" என்று இந்த ஸ்லோகத்தில் ஒரு மிக மிக எளிமையான வழியை சொல்கிறார்.
அது என்ன வழி ?
ஈஸ்வர ப்ரநிதானாத் என்ற வழி. அப்படியென்றால்!
ப்ரநிதானாத் என்றால் அர்பணிக்கும் பக்தி என்றும் பொருள் கொள்ளலாம். ஈஸ்வர என்றால் உருவாக்கும் சக்தி.
ஈஸ்வரன் என்றால், ஏதோ பனிமலையில் அல்லது பாற்கடலில் இருக்கும் ஒரு கடவுள் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.
வீட்டில், பொதுவாக, பெண்கள் சமையல் செய்வார்கள். செய்து முடித்த பின் நாம் அந்த உணவை பார்க்கிறோம். அந்த உணவு தயாராவது முன்னால் எப்படி இருந்தது? வாணலியில் வரு பட்டு, வேக வைக்கப்பட்டு, தாளிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது.
அதற்கு முன்னால்?
கழுவப்பட்டு, நறுக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுக் கொண்டு இருந்தது.
அதற்கு முன்னால்?
இன்னைக்கு என்ன சமைக்கலாம்?, எப்படி சமைக்கலாம்? என்று அந்த பெண் மனதில் சிந்தித்துப் பார்த்து எண்ணமாக ஒரு சிந்தனையாக இருந்தது அல்லவா?
அந்த சிந்தனை, அந்த படைக்கும் ஆற்றல், அது தான் ஈஸ்வரன்.
அது புத்தகம் எழுதும் ஆசிரியராகட்டும், இசை அமைக்கும் இசையமைப்பாளராகட்டும், புது சித்தாந்தங்களை படைக்கும் அறிவியல் அறிஞர் ஆகட்டும், சமைக்கும் ஒரு சமையல்காரராக இருக்கட்டும் யாராக இருந்தாலும், ஒன்றை செய்வதற்கு முன்னால் அதை செய்யும் சிந்தனை, ஆற்றல் இருக்கிறது அல்லவா?
அந்த ஆற்றல் மற்றும் படைப்புத் திறன்தான் ஈஸ்வரன் என்று அழைக்கப்படுகிறது. அந்த ஈஸ்வரனுக்கு, அந்த திறனுக்கு, அர்ப்பணம் செய்! என்கிறார் ஸ்ரீ பதஞ்சலி முனிவர்.
இது என்ன புது கதையாக இருக்கிறது.
எனக்கு நானே அர்ப்பணம் செய்து கொண்டால், அது எப்படி என் சித்த சலனங்களை போக்கும்?
புரியலையே!...
எதற்காக அர்பணம் செய்ய வேண்டும்?
நாம் கஷ்டப்பட்டு எல்லாவற்றையும் செய்கிறோம், பின் அதை ஏன் அர்ப்பணம் செய்ய வேண்டும்?
மிக உன்னிப்பாக கவனித்தால் ஒன்று புரியும்.
நாம் காரியம் செய்யும் போது, "நான்" இதைச் செய்கிறேன், இதன் பலன் "எனக்கு" கிடைக்க வேண்டும் என்று நினைத்து செய்யும் போது, அந்த "நான்" என்ற அகந்தையே மேலோங்கி நிற்கும்.
"நான்" என்ற அந்த உணர்வு கெடுதலா? ஈகோ என்று சொல்வார்களே அது கெடுதலா? அது எப்படி கெட்ட ஒன்றாக இருக்க முடியும்? நான் நல்லவன் தானே. பின் எப்படி நான் என்ற அந்த உணர்வு, அந்த படிவம் தவறென்று சொல்ல முடியும்?
அது தவறல்ல. ஆனால் தடை.
எதற்குத் தடை?
உண்மையை கண்டறிய, நான் என்ற அந்த ஒன்று தடையாக நிற்கும்.
எப்படி?
நான் என்பது என்ன?
எனக்கு சொல்லப்பட்ட அறிவுரைகள், நான் படித்த புத்தகங்கள், நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் என்று எல்லோரும் எனக்குள் திணித்த செய்திகளின் தொகுப்பே நான்.
இவைகளெல்லாம் சரி என்று சொல்ல முடியாது.
நான் வேறு ஒரு நாட்டில், வேறு ஒரு மதத்தில், வேறு குடும்பத்தில் பிறந்திருந்தால் நான் வேறொன்றாக இருப்பேன்.
அப்படியென்றால், இந்த கும்பல்கள் எனக்குள் இருந்து கொண்டு, என்னை ஆட்டுவிக்கின்றன.
நான் உலகை அறிவது, அதனோடு தொடர்புகொள்வது, அதிலிருந்து வரும் உணர்வுகள் மற்றும் செய்திகளுக்கு உள்ளாகி, பாதிக்கப்பட்டு செயல்படுவது என்பது அந்த கும்பல்களின் தொகுப்பால், உண்மையான நான் யார்? என்று அறிய இவைகளே தடை.
இது ஒரு கண் கண்ணாடி மாதிரி. சிலருக்கு சிவப்பு கண்ணாடி, சிலருக்கு பச்சை கண்ணாடி. இந்த கண்ணாடியின் வாயிலாப்க பார்ப்பதன் மூலம் நாம் உலகை சிவப்பாகவோ, அல்லது பச்சையாகவோ காண்கிறோம்.
உண்மையான உலகைக் காண வேண்டும் என்றால், கண்ணாடியை தூரம் தூக்கிப்போட்டு விட வேண்டும். எனவே, நான் என்பது உண்மையின் தன்னை அறிய ஒரு பெரிய தடை.
எனவே, இந்த நான் என்ற உணர்வை விட வேண்டும் என்று எல்லா மகான்களும் சொல்கிறார்கள்.
பதஞ்சலி சொன்ன மாதிரி அப்பியாசம், விதர்க்கம், விசாரம் என்று செய்யும் போது என்ன ஆகிறது?
நான் செய்கிறேன், நான் மிதமாக/மத்யமாக/கடினமாக பயிற்சி செய்கிறேன். நான் குறிக்கோளை அடைவேன்.
இப்படி, எவ்வளவுக்கெவ்வளவு முயற்சி செய்கிறோமோ, அவ்வளவுக்களவு "நான்" என்ற இந்த உணர்வு வலுப் பெறுகிறது.
நான் பத்து வருடம் விடாமல் யோகா செய்கிறேன் என்று கூறும்போது நான் என்ற அந்த உணர்வு மிக வலுப்பெற்று விளங்குகிறது.
இந்த நான்
என்பது உண்மையை அடைய தடை.
பயிற்சி செய்தால் நான் என்பது வலுப்பெறுகிறது.
அப்ப என்ன தான் செய்வது?
எனவே, பதஞ்சலி சொல்கிறார், "நான் செய்கிறேன், என் முயற்சி, என் வலிமை என்று நினைக்காதே!" செய்வன எல்லாம் அந்த ஈஸ்வர சக்தியின் வெளிப்பாடு என்று நினைத்து, நல்லதோ? கெட்டதோ? அவைகள் எல்லாம் அந்த ஈஸ்வர சக்தியையே சாரும் என்று விட்டு விடு.
அதற்கே அர்ப்பணித்து விடு!.
யோசித்துப் பாருங்கள்.
நீங்கள் எதைச் செய்தாலும், அந்த செயல் தெரியும். அந்த செயலுக்கு முந்தைய சிந்தனை தெரியும்.
அந்த சிந்தனையை தூண்டியது யார்?
அந்த சிந்தனையை வழி நடத்தியது யார்?
அவைகள் எல்லாமே, அந்த படைக்கும் சக்தியின் வெளிப்பாடுதான்.
ஆம்! அவைகள் அத்தனையும் அந்த ஈஸ்வரனாகிய பிரபஞ்ச மனதின் வெளிப்பாடு என்பது அப்போது புரியும்.
ஆக, அந்த சக்தியின் வெளிப்பாடுதான் அனைத்தும்.
நாம் ஒரு கருவி. அவ்வளவுதான். நம் மூலம் அது வெளிப்படுகிறது.
அதாவது, இசை வீணையில் இருந்து வரவில்லை. வீணையின் மூலம் வருகிறது. இசை வீணையை மீட்டும் விரலில் இருந்து வரவில்லை. அந்த விரலின் மூலம் வருகிறது.
இசை வீணை வாசிக்கும் கலைஞனிடம் இருந்து வரவில்லை. அவன் மூலம் வெளிப்படுகிறது.
அந்த கலைஞனுக்கு இசை ஞானம் அவன் அறிவில் இருந்து வரவில்லை, அது அவன் உள்ளே உள்ள சக்தியில் (மெய்ப்பொருளில்) இருந்து வருகின்றது.
அது புரியும்போது, அனைத்து முயற்சிகளும், வினைகளும் அந்த சக்தியின் வெளிப்பாடு என்று நாம் உணர முடியும்.
உணர்ந்தால், செயலின் விளைவு நமக்கு அல்ல, அந்த சக்திக்குத்தான் என்று அர்ப்பணிப்பு தானாக வரும்.
சிந்தித்துப் பாருங்கள்!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக