ஞாயிறு, 19 நவம்பர், 2023

ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம் [சமாதி பாதம்] வகுப்பு - 18 Patanjali Yoga Sut...



 நிர்விகல்ப சமாதி
----------------------------

நிர்விதர்க்க என்றாலும் நிர்விகல்ப என்றாலும் ஒன்றே. 

சமாதியின் பல படிகளை சொல்லிக்கொண்டு வருகிறார். 

இதுவரை நாம் பார்த்தது, "சவிதர்க" சமாதி எனப்படும், சவிகல்ப சமாதியைப் பற்று அறிந்துக் கொண்டோம். 

அதில், என்ன புரிந்துக் கொண்டோம் என்றால், பொருள், அவற்றின் தன்மை மற்றும் அதன் பெயர் போன்றவைகளை அறிவதின் வாயிலாக, புற அறிவை மேம்படுத்தி உலகை உண்டாக்கி அதில் வருகின்ற இன்பம் - துன்பம் என்ற இருமைகளில் இருக்கிறோம். மேலும் அனுபவிக்கப்படும் பொருள் ஒன்று இருப்பதாகவும், அனுபவிக்க தான் இருப்பதாகவும் பாவித்துக் கொண்டு, அதன் வாயிலாக ஒரு அனுபவம் ஏற்பட விரும்புகின்றோம். 

இதன் அடுத்த கட்டம், எந்த விதமான எண்ணங்களும் உண்டாகாமல், மனதை நிர்மலமாக மாற்றக்கூடிய நிர்விதர்க சமாதி அல்லது நிர்விகல்ப சமாதி பற்றி இந்த சூத்திரத்தில் பேசுகிறார் பதஞ்சலி முனிவர். 

அவர் கூற வருகின்ற மிக முக்கியமான விஷயம் என்னவெனில், நாம் இந்த உலகை, அது இருக்கும் நிலையில் பார்ப்பது இல்லை. 

அப்படி என்றால் என்ன? 

உதாரணமாக, நாம் ஒரு மஞ்சள் நிற கண்ணாடியை அணிந்துக் கொண்டு உலகை பார்த்தால், உலகில் உள்ள எல்லாம் மஞ்சளாகத்தானே தெரியும்...?! 

நாம் அப்படித்தான் பார்க்கிறோம். 

அப்படி அனைத்தையும் மஞ்சளாகப் பார்க்கிறோம் என்பதற்காக, அதுவே உண்மையாக முடியாது அல்லவா? 

அதாவது, அவைகள் எல்லாம் மஞ்சளாக இருப்பது இல்லை. 

அதனால், கண்ணாடியை கழட்டி விட்டு பார்த்தால், எது உண்மையான நிறம் என்று நமக்குத் தெரியும். 

இதை அறியாத நிலைமைதான் இப்போது நம்மிடம் இருக்கின்றது. 

இப்போது, அறிவியல் மேலும் வளர்ந்து விட்டது. 

Virtual Glass என்று சொல்கிறார்கள். அதை அணிந்துக் கொண்டு பார்த்தால், இல்லாத ஒன்று கூட இருப்பதாகத் தெரியும். 

வானில் பறப்பது போலவும், நீருக்குள் மூழ்குவது போலவும், சறுக்கு பலகையில் சறுக்குவது போலவும், கட்டிடத்தின் நுணியில் நிற்பதுப் போலவும் தெரியும். 

அதை அணிந்துக் கொண்டிருப்பவர்கள் தாங்கள் காணப்பது நிஜம் என்று நம்புவார்கள். 

கீழே வீழ்வது போலத் தெரிந்தால், இருக்கையை இறுக்கி பிடித்துக் கொள்வார்கள். அவர்களுக்கு அது தான் நிஜம்.

 இதில் சிக்கல் என்ன? என்றால், நாம் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறோம் என்றே நமக்குத் தெரியாது. தெரிந்தால் அல்லவா? அதை கழட்டி விட்டு பார்த்து, உண்மை எது? என்று அறிந்து கொள்ள முடியும். 

அதுப்போல, ஒரு கண்ணாடியை நாமும் அணிந்துக் கொண்டிருக்கிறோம். 

ஆம்! நமது ஞாபகங்களே அந்தக் கண்ணாடி… 

நாம் இந்த உலகை, நமது பழைய ஞாபகங்கள் என்ற கண்ணாடியின் வழியாகப் பார்க்கிறோம். 

இல்லாததை இருப்பதாய் பார்க்கிறோம். 

இருப்பவற்றை  வேறு விதமாக பார்க்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்