வெள்ளி, 17 நவம்பர், 2023

ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம் [சமாதி பாதம்] வகுப்பு - 17. Patanjali Yoga Sutra's [Class - 17]


மனதில் உள்ள சஞ்சலங்கள் எல்லாம் போய் விட்டால், ஸ்படிகக்கல் எப்படி தன் அருகில் உள்ளதை அப்படியே பிரதி பலிக்குமோ?... அதுப்போல, நாமும் இந்த உலகை நம்மில் பிரதிபலிக்க முடியும். 

நமக்கும், இந்த உலகுக்கும் இடையே உள்ள இடைவெளி மறைந்து போகும். நாம் வேறு, இந்த உலகம் வேறு அல்ல! என்ற நிலை வரும். 

அதுவே, சகஜ சமாதி. 

நான் என்ற எண்ணம் மறையும். நான் என்ற அகந்தை உலகில் கரையும். அங்கே அனுபவிப்பவனும் கிடையாது, அனுபவிக்கப்படுவதும் கிடையாது. 

அனுபவம் மட்டுமே இருக்கும். 

ஒவ்வொரு குழந்தையின் மூளையிலும் அது வளரும் சமூக-கலாச்சார ஆற்றல்களின் சூழல்கள் மூலம், சில எண்ணங்கள் என்ற நம்பிக்கைகளை விதைத்து, அந்தக் குழந்தையின் மனத்தைக் கட்டமைக்கின்றன.

இந்தக் காரணத்தால் தனிமனம் என்பது கிடையாது.

எல்லா மனங்களும் பொது நம்பிக்கைகளின் அடிப்படையில்தாம் கட்டப்படுகின்றன.

மனத்தின் வழியாக இயக்கம் கொள்ளும் அனுபவம் என்பது ஒன்றுதான்.

ஆசை, பயம், கோபம், பொறாமை, ஏக்கம், அவநம்பிக்கை, துயரம் போன்ற உணர்ச்சிகள் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவை.

சாதி, மதம், நாடு, மொழி போன்ற பிரிவுகளை கடந்தவைகள் இத்தகைய உணர்ச்சிகள்.

கூட்டுமனம் என்னும் மாபெரும் விருட்சத்தின் சிறுகிளைதான் நம் தனி மனம்.

எல்லா மனங்களும் இந்தக் கூட்டு உணர்வில் பங்குகொள்கின்றன.

அதனால், தனிமனம் என்று ஒன்று தனியாக இல்லை.

உண்மையில், கூட்டுமனத்துக்கு அப்பால் விரியும் எல்லையற்ற பெருவெளியில்தான் நான் இருக்கிறேன்.

நான் அனைத்து உடல்களின் வழியாகவும் அனைத்து மனங்களின் வழியாகவும் இயங்குகிறேன்.

என்னுடைய நான் உணர்வும் உங்களுடைய ‘நான்’ உணர்வும் தனித்தனியானவை அல்ல.

எல்லோருடைய நான் என்னும் உணர்வும் ஒன்றேதான்.  

அதாவது, வேறு விதத்தில் சொல்லப்போனால், அந்த ஆன்மாவாகிய நான்தான் எல்லோருடைய நானாகவும் இருக்கின்றது.

அனைத்து அனுபவங்களுக்குப் பின்னாலும் நான் என்ற அந்த ஆன்மா மறைந்து நிற்கிறது.

மாற்றங்கள் அனைத்தின் பின்னாலும் மாறாத பின்னணியாக நான் என்ற அந்த ஆன்மா நிலைத்து நிற்கிறது.

பொதுவாக, அனுபவங்கள் வெவ்வேறானவை.

இனிப்பானவை; கசப்பானவை.

சந்தோஷமானவை; துக்கமானவை.

இன்பமானவை; துன்பமானவை.

ஆனால், `அனுபவம்` என்பது ஒன்றுதான்.

இத்தகைய அனுபவங்கள் உண்மையில் ஆன்மாவுக்கு இல்லை. அவைகளால் ஆன்மா பாதிப்பது இல்லை.

அந்த ஆன்மாவை நீரால் நனைக்க முடியாது; நெருப்பால் சுட முடியாது.

ஆக, ஆன்மாவாகிய நான்தான் அனைத்து அனுபவத்தின் பின்னால் பொதிந்திருக்கும் ரகசியம்.

அதாவது, உண்மையான நான்(ஆன்மா) அறிந்துக் கொள்ளப்படும் போது, அந்த நான் தான் நான் என்று நமக்குத் தெரியும்.

அந்த நான்தான் அனைத்தையும் அறியும் அறிவாக இருக்கிறது என்னும் காரணத்தால், அந்த நானைப் பற்றி இந்த நானின் அறிவுத்தளத்தில் எதுவும் தெரிந்துகொள்ள முடியாது.

அதாவது, அந்த உண்மையான நான் பற்றி யாரும் தகவலாக எதுவும் தெரிந்துகொள்ள முடியாது. அதை ஒரு அறிவாக அடைய முடியாது.

அந்த உண்மையான நான் (ஆன்மா) என்பதை அறிந்துக் கொள்வதும், என்னைப்பற்றி (மனம்) அறிந்துக் கொள்வதும் ஒன்றல்ல.

அந்த ஆன்மா என்ற நான் அறியப்படும்போது, இந்த நான் (மனம்) அதனுடன் ஒன்றிவிடுகிறது. ஆக, ஆன்மாவாகிய நான்தான் நீயாக (மனமாக) இருக்கிறேன் என்னும் உண்மையை புரிந்துக்கொண்டால், அதன்பிறகு, அங்கு துயரம் அண்டாது.

பிறப்பு - இறப்பு, பகல் - இரவு, இருத்தல் - இன்மை, நான் - நீ போன்ற இருமை நிலைகள் கடந்த நீள்வெளியில் (வெட்டவெளியில்) இந்த நாம் அந்த நானாகக் காலமற்று இருக்கும்.

"என்னை மறந்து இருந்தேன், இறந்தே விட்டது இவ்வுடம்பே" என்பார் அருணகிரிநாதர். 

இதை உணர்ந்துகொள்ளுவதுதான் பிறவியின் பயன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்