செவ்வாய், 28 நவம்பர், 2023

ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம் - சமாதி பாதம் [வகுப்பு 21] பகுதி 1.


சவிகல்ப சமாதி, நிர்விகல்ப சமாதி மற்றும் சகஜ சமாதி என எல்லா யோக அனுபவங்களும் நீங்கிய நிலையே நிர்பீஜ சமாதி. 

பீஜம் என்றால் விதை அல்லது வித்து. 

இப்போ, ஒரு விதையில் இருந்து, செடி முளைக்கிறது. செடியில் இருந்து மரம், பின் காய், கனி, அதில் இருந்து இன்னொரு விதை இப்படி போய் கொண்டே இருக்கிறது. 

ஒரு விதையில் இருந்து பல்லாயிரக்கணக்கான விதைகள் தோன்றுகின்றது. 

இது ஒரு சுழற்சி. 

இதுப்போல, மனதின் சுழற்சிதான் நமக்கு பிறப்பு - இறப்பு என்ற சுழற்சியை உண்டாக்குகின்றது. 

இந்த பிறப்பு, இறப்பிலிருந்து எப்படி தப்பிப்பது? 

அப்படி மீண்டும், மீண்டும் பிறக்க வைக்கக் கூடிய விதை எது? 

அதுதான் நம் தனித்த மனதின் ஆசை அல்லது சங்கல்பம். 

இங்கு பதன்சலி கூறும், நிர் பீஜம் என்பது, விதை இல்லாமல் செய்வது. 

நிர் பீஜ சமாதி என்றால் = விதை இல்லாத சமாதி. அது தான் சமாதியின் இறுதி நிலை. உச்ச நிலை ஆகும்.

அது என்ன விதை இல்லாத சமாதி? 

சமாதியின் தொடக்கத்தில், அதாவது சவிகல்ப சமாதியில் யோகி இந்த உலகில் உள்ளவற்றை அவற்றின் பெயர்கள் மற்றும் குணங்கள் கொண்டு அறிகின்றான். 

இது மரம், இது செடி, தாய், தந்தை, கணவன், மனைவி என்று அனைத்துக்கும் ஒரு பெயர். அத்துடன் அவைகள் செய்யும் செயல்களுக்கு ஒரு பெயர். இவைகள்தான் அவைகள் என்று பெயரையும், அதன் குணங்களையும் பற்றி அறிகிறான். 

அடுத்தது, பெயர் இல்லாமல் அவன் அவற்றை அறிய முற்படுகிறான். அதன் வார்த்தை அவனது  சிந்தனைக்கு இடையில் வருவது இல்லை. 

உதாரணமாக, விடியற்காலையில் சூரிய உதயத்தைப் பார்க்கிறான் என்றால், அது சூரியன், கடல், காலை நேரம், அது, சிவப்பாக அழகாக இருக்கிறது என்று அவன் நினைப்பது இல்லை. அதைப் பற்றிய எந்த விதமான சிந்தனைகளும் இல்லாமல், அந்த அழகை  வார்த்தை ஏதும் இல்லாமல், உணர தலைப்படுகிறான். 

அதாவது, அவனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக, வெளியே செல்லும் சிந்தனைகளை அவனுக்கு உள் நோக்கி திருப்புகிறான். 

அதாவது, தன்னைத் தானே அறிய முற்படுகிறான். 

அதன் அடுத்த கட்டத்தில், இந்த உலகில் உள்ளவற்றை புலன்கள் மற்றும் அறிவின் துணையின்றி நேரடியாக அறிய தலைப்படுகிறான். 

இதுவரை, ஏதோ ஒரு புலன் மூலம், புற அறிவாக அறிந்து கொண்டிருந்தான். 

அதன் வாயிலாக, அறிதல் என்ற ஒன்று இருந்தால், அறிபவன், அறியப்படுவது என்ற மற்ற இரண்டும் இருக்கும். 

அதாவது, நாம் அறிகிறோம் என்ற எண்ணம் இருக்கும் வரை, நான் என்ற அந்த உணர்வு இருக்கும்வரை, இந்த உலகம் முழுவதும் புரிபடுவது இல்லை. 

நான் அறிகிறேன் என்றால், அங்கு அறிதல் நிகழும், அறியாமை புலப்படும். ஏற்றி வைத்துக் கொண்ட புற அறிவின் எல்லை தெரியும். அவ்வாறு, புற அறிவின் கண் கொண்டு காண்பதால், அதன் உண்மை என்ன? என்று தெரியாது. 

அதுப்போன்ற சமயத்தில் என்ன நிகழும்? என்றால், ஒரு அறிதல், பல அறியாமைகளை சுட்டிக் காட்டும். அதில் இருந்து மேலும் சில அறிதல்கள் நிகழும். அதிலிருந்து மேலும் பல அறியாமைகள் வெளிப்படும். 

இவ்வாறு, ஒரு  விதையில் இருந்து மரம், மரத்தில் இருந்து பல விதைகள் என்று போய்க் கொண்டே இருக்கும். இதற்கு ஒரு முடிவு இருக்காது. 

இதை ஒரு உதாரணத்தின் மூலம் பார்ப்போம். 

நான் உங்களிடம் ஒரு பேனாவை காட்டி, இது இந்த கம்பெனி தயாரித்த பேனா என சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். 

இது உங்களுக்கு ஒரு புதிய செய்தி. புது அறிவு. 

இப்போது, இந்த அறிவு என்ன செய்கிறது தெரியுமா? 

அந்த பேனாவின் விலை என்ன இருக்கும்? அதை எங்கே தயாரிக்கிறார்கள்? அதற்கு எந்த மாதிரி மை (இங்க்) போட வேண்டும்? அப்படி, ஒரு முறை போட்டால், அந்த மை எவ்வளவு நாளைக்கு வரும்? வேறு யார்? யார் எல்லாம் இதுப்போன்ற பேனாவை தயார் செய்கிறார்கள்? அது எத்தனை விதமான நிறங்களில் வருகிறது?  அதன் எடை என்ன இருக்கும்? அது கீழே விழுந்தால் உடையுமா? என்று ஆயிரம், ஆயிரம் விடை தெரியாத கேள்விகளை மனம் எழுப்பும்.

 அதன் காரணமாக, ஏராளமான அறியாமைகள் நமக்கு வெளிப்படும். அதற்கான விடைகளைத் தேடி மனம் அலைப் பாயும். அதிலே, ஒரு சில கேள்விகளுக்கு விடை தெரியலாம். அந்த தெரிந்த விடையில் இருந்து, இன்னும் சில புதிய கேள்விகள் புறப்படும். 

இதுதான் விதை. 

இதைத்தான் பீஜம் என்கிறார் பதஞ்சலி. 

இங்கு அவர் கூற வருகின்ற நிர் பீஜம் என்பது, இந்த தொடர்பை அறுப்பது. 

அதாவது, புற அறிவு வேலை செய்வது நின்று போவது. 

ஆக, நாம் ஏற்றி வைத்துக்கொண்ட புற அறிவு என்பது பழையனவற்றின் தொகுப்பு. 

அதாவது, புற அறிவு என்பது இறந்த காலம். 

அப்படி புற அறிவு வேலை செய்வது நின்றுவிட்டால், அங்கு அறிகிறோம், அறிதல் என்ற நிகழ்வே இருக்காது. அத்தகைய நிர் பீஜ சமாதியில், அறிபவன் என்று யாரும் கிடையாது. 

அந்த நிலை வரும்போது, அங்கு அனுபவம் நிகழாது. அங்கு அனுபவிப்பவன் இல்லாததால். அனுபவத் தொகுப்பு இருக்காது.  அறிதலும், அறியாமையும் ஆகிய இருமைகள் இருக்காது. அங்கு அமைதி மட்டுமே இருக்கும். 

அறிதல் என்பது ஒரு செயல். அது ஒரு நிகழ்வு. 

அது நிகழும்போது, நம் மனதில், நம் சித்தத்தில் ஒரு  சலனம் உண்டாகத்தான் செய்யும். நிர் பீஜ சமாதி நிலையில், அறிதல் என்பது இல்லை என்பதால், அங்கு சலனம் என்பதே இல்லை. மனம் சலனமற்று இருக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்