அதன் பெயர் பிரணவம்
तस्य वाचकः प्रणवः ॥२७॥
தஸ்ய வாசக ப்ரணவ: ॥27॥
tasya vācakaḥ praṇavaḥ ॥27॥
பிரணவம் என்ற “ஓம்” தான் அந்த ஈஸ்வரனின் வாசகம்.
(அவரது வாசகமே பிரணவம்)
“ஓம்” பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.
இந்து சமயத்தில் வேதத்தில் இருந்து, உபநிஷதங்கள், கீதை, பாஷ்யங்கள் என்று எங்கு பார்த்தாலும் இந்த “ஓம்” சிறப்பித்து கூறப்படுகிறது.
அப்படி என்ன அதில் சிறப்பு இருக்கிறது? அது ஒரு வார்த்தை - அவ்வளவுதானே. மற்ற வார்த்தைகளுக்கும் அதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது? அதை இப்படி கொண்டாடுகிறார்களே!... அப்படி அதில் என்னதான் இருக்கிறது?
அதைப்பற்றி அறிந்துக் கொள்ளும் முன் மொழி, ஒலி, பொருள், சொல் இவற்றைப்பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம். உலகில் எத்தனையோ பொருள்கள் இருக்கின்றன. எவ்வளவோ மனிதர்கள், விலங்குகள் இருக்கின்றன.
ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் இருக்கிறது அல்லவா?
அம்மா, அப்பா, டீவி, காபி, புத்தகம், நாய், கொசு, மேஜை, நாற்காலி என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் இருக்கிறது.
சரியா? ஒரு பெயர் இருக்கிறது என்றால், அதற்கு ஒரு பொருள் இருக்கிறது என்று அர்த்தம்.
பொருள் என்றால் அந்த வார்த்தையின் அர்த்தம் என்று அல்ல.
அந்த பெயர் சுட்டும் ஒரு பொருள், வஸ்து இருக்கும் அல்லவா?
ஒரு பொருளுக்கு பல பெயர்கள் இருக்கலாம்.
ஒவ்வொரு மொழியிலும் அந்த பொருளுக்கு ஒரு பெயர் இருக்கும். நம்மை பெற்ற தாயை தமிழில் ‘அம்மா’ என்கிறோம், ஆங்கிலத்தில் ‘மதர்’ என்கிறோம். ஹிந்தியில் ‘மாதாஜி’ என்கிறோம், மலையாளத்தில் ‘அம்மே’ என்று சொல்கிறோம்.
இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் (இங்கே பொருள் என்பது உயிர் உள்ளது, உயிர் இல்லாதது அனைத்தையும் சேர்த்தது) ஒரு சொல் இருக்கிறது.
அந்த சொல்லின் ஒலி வடிவம் மாறலாம். சரி, இதுவரை பொருளுக்கும், சொல்லுக்கும் உள்ள தொடர்பை சிந்தித்தோம்.
அடுத்தது, சொல்லுக்கும், நினைவுக்கும் உள்ள தொடர்பை சிந்திப்போம்.
ஒரு சொல் வெளியில் வர வேண்டும் என்றால், முதலில் அது மனதில் அல்லது புத்தியில் தோன்ற வேண்டும்.
அம்மாவைப் பார்த்தவுடன் அது அம்மா என்று தோன்றுகிறது.
பின், அம்மா என்ற சொல் மனதில் உதிக்கிறது. பின் அந்த சொல் ஒலி வடிவம் பெறுகிறது.
எண்ணங்களுக்கும், சொல்லுக்கும், பொருளுக்கும் உள்ள தொடர்பு இது.
நம்மிடம் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அந்த ஆயிரம் எண்ணங்களில், ஒரு எண்ணம் சொல்லாக வெளிப்பட்டு ஒரு பொருளை குறிக்கிறது.
அது அப்படியே இருக்கட்டும். பின்னால் வருவோம்.
இந்த உலகில் உள்ள அனைத்து படைப்புகளுக்கும் பின்னால் ஒரு படைப்பாற்றல் இருக்கிறது என்று கண்டோம். அதை ஈஸ்வர சக்தி என்று குறிப்பிட்டோம்.
அந்த சக்திக்கு ஒரு பெயர் வேண்டும். அந்த பெயர், அந்த சக்தியின், அந்த படைப்பாற்றலை குறிக்கும் சொல்லாக இருக்க வேண்டும். இயற்கையான சொல்லாக இருக்க வேண்டும். எனவே, “ஓம்” என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தார்கள்.
ஏன் ஓம்? ஏன் வேறு ஏதாவது ஒரு சொல்லை தேர்வு செய்து இருக்கலாமே?
“ஓம்” என்ற சொல்லின் சப்தம் மூன்று சப்தங்களை உள்ளடக்கியது.
அ, உ, ம் என்ற மூன்று எழுத்தின் தொகுப்பு ஓம்.
இந்த மூன்று எழுத்தையும் வேகமாக கூறினால் ஓம் என்ற வரும்.
எப்படி?
சும்மா வாயை திறவுங்கள்.
அ என்ற சப்தம் இயல்பாக வரும். அப்படி வந்த சப்தத்தை நீண்ட நேரம் நிறுத்த முடியாது.
அ என்று சொல்லும் போது மூச்சு வெளியே போகும்.
சட்டென்று நின்று போகும். அதை இயல்பாக நிறுத்த வேண்டும் என்றால் குவியுங்கள். தானாக அந்த அ என்ற சப்தம் உ என்று ஆகும்.
அதை முடிக்க வேண்டும் என்றால், குவித்த வாயை மூடுங்கள். ம் என்று முடிந்து விடும்.
இதை விட இயல்பான ஒரு சப்தத்தை உங்களால் உருவாக்க முடியுமா?
‘அ’ என்று சொல்லும் போது சொல் பிறக்கிறது.
‘உ’ என்று சொல்லும் போது அது நிலைக்கிறது.
‘அ’ என்ற சப்தத்தை நீண்ட நேரம் சொல்ல முடியாது. மூச்சு காற்று வேகமாக வெளியேறி விடும். ‘உ’ என்று சொல்லும் போது நீட்டி சொல்லலாம். சொல்லிப் பாருங்கள். ‘ம்’ என்று சொல்லும் போது அது அந்த சப்தம் முடிகிறது.
இப்படி, தோற்றம், நிலைப்பு, முடிவு என்ற மூன்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு வார்த்தையில் சொல்வது என்றால், அது “ஓம்” என்ற ஒரு வார்த்தை மட்டும்தான்.
“ஓம்” என்ற பிரணவம் இயல்பான சப்தம்.
“ஓம்” என்ற பிரணவம் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலையும் கூறும் ஒரு சொல்.
மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வருவோம்.
அம்மா என்று சொன்னால், உங்களுக்கு உங்கள் தாயின் நினைப்பு வரும் அல்லவா?...
லட்டு என்று சொன்னால் லட்டின் ஞாபகம் வருகிறது அல்லவா?
சொல், அது குறிக்கும் பொருளை நமக்கு நினைவுக்கு கொண்டு வரும்.
அது மட்டும் அல்ல, அந்த பொருள் சம்பந்தமான உணர்ச்சிகளையும் கொண்டு வரும்.
லட்டு என்றால், நாக்கில் எச்சில் ஊறும். காதலியின் பெயரைச் சொன்னால், காதலன் முகம் மலரும்.
எனவே, ஒரு சொல் அது குறிக்கும் பொருளையும், அது சம்பந்தமான உணர்ச்சிகளையும் கொண்டு வரும்.
“ஓம்” என்ற சொல், நமக்குள் இருக்கும் அந்த மாபெரும் படைப்பாற்றலை குறிக்கிறது.
நாம் அந்த சக்தியை உணர வேண்டும்.
மனிதன் உன்னதமானவன். உயர்ந்தவன். படைப்பின் உச்சக்கட்டம் மனிதன். தன்னைத்தான் அறியாததால் கீழே விழுந்து விட்டவன். தன் திறமை, ஆற்றல் தெரியாமல் தவிப்பவன். அவனை கை தூக்கி விட்டு, அவனுடைய திறமையை, ஆற்றலை அவனுக்கு நினைவு படுத்துவது இந்த ‘ஓம்’ என்ற ஒற்றைச் சொல்.
சரி, அந்த சொல் நமக்குள் மறைந்து கிடக்கும் ஆற்றலை குறிப்பதாக இருக்கட்டும்.
அதை எப்படி வெளியே கொண்டு வருவது ?...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக