நிர்விசார சமாதியின் அனுபவம் நிகழும் போது, அதுவே உண்மையான பிரசாதம்.
எங்கள் வீட்டில் ஒரு புது விதமான இனிப்பு பலகாரம் செய்தோம். இதுவரை யாரும் அந்த மாதிரி செய்தது இல்லை. சும்மா செய்து பார்த்தால் எப்படி இருக்கும் என்று செய்து பார்த்தோம்.
மிக நன்றாக வந்தது. மிக மிக சுவையாக இருந்தது. என்று இப்படி சொல்லிக் கொண்டே போகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?
அது என்ன பலகாரம், எப்படி செய்வது?... ஒன்றும் தெரியாது.
"வாயில போட்டா அப்படியே கரையும்", "என்ன மாதிரி வாசம் தெரியுமா", "பாக்கவே அழகா இருக்கும்" என்று நான் அடுக்கிக் கொண்டே போகிறேன். உங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஆனால், என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் பொய் சொல்ல மாட்டேன் என்று.
நீங்கள் உங்கள் நண்பரிடம் போய் நான் செய்த பலகாரம் பற்றி சொல்கிறீர்கள்.
"அது எப்படி இருக்கும் தெரியுமா?... வாயில போட்டா அப்படியே கரையும், பாக்கவே அவ்வளவு அழகா இருக்கும்..." என்று நான் சொன்னதை அப்படியே திரும்பிச் சொல்கிறீர்கள்.
அவர் அவருடைய நண்பரிடம்... இப்படி போய்க் கொண்டே இருக்கிறது அந்த பலகாரக் கதை.
என்னைத் தவிர யாருக்கும் அது என்ன என்றே தெரியாது. அதை சுவைத்து அனுபவித்தவன் நான் மட்டும் தான்.
இந்த கதை எப்படி ஒரு போலியான ஒன்று என்று, தெரிகிறது அல்லவா?
இதுப்போலத்தான் வாழ்க்கையில் பல விஷயங்கள் இருக்கிறது.
கடவுள், சொர்கம், நரகம், பாவம், புண்ணியம், ஆத்மா, மறுபிறப்பு, வினைப்பலன் என்று நிறைய விஷயங்கள் நமக்கு நேரடியான "அனுபவம்" கிடையாது.
யாரோ சொல்ல, யாரோ கேட்க, அவர் சொல்ல, அவர் இன்னொருவரிடம் சொல்ல...இப்படி வந்த கதைகளை ஏதோ நாமே அறிந்த மாதிரி மற்றவர்களுக்குச் சொல்லிக் கொண்டு திரிகிறோம்.
அதில் என்ன தவறு இருக்கிறது? என்று நீங்கள் கேட்கலாம்? தெரிந்ததைத் தானே சொல்கிறார்கள். அதை கேட்டு மற்றவர்களிடம் சொன்னால் என்ன? என்று கேட்கலாம்.
ஒரு ஐந்து வயது சிறுமி அவளுடைய தாயிடம், "அம்மா, நீயும், அப்பாவும் கணவன் மனைவியாக இருக்கிறீர்கள். ஒரு பெண், அவளுடைய கணவனிடம் பெறும் சுகம் என்பது என்ன? அது எப்படி இருக்கும்? எனக்கு கொஞ்சம் விளக்கிச் சொல்லேன். நானும் நாளை திருமணம் செய்துக் கொண்டால் எனக்கு உன் விளக்கம் உதவியாக இருக்குமே" என்று கேட்கிறாள் என்று வைத்துக்கொள்வோம்...
அந்த தாய் என்ன சொல்லுவாள்?
அவள் கணவனிடம் பெற்ற இன்பத்தை ஐந்து வயது சிறுமிக்கு விளக்கிச் சொல்ல முடியுமா? சொன்னால் தான் புரியுமா?
அனுபவங்களை மடை மாற்ற முடியாது.
ஒவ்வொருவரும் தங்களுக்கு தாங்களே அனுபவித்து அறிந்தால்தான் உண்டு. மற்றவர்களுக்கு அந்த அனுபவத்தை எவ்வளவு விளக்கினாலும் ஏறாது.
முகத்தில் கண்
கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்.
மகட்குத் தாய் தன் மணாளனோடாடிய
சுகத்தை சொல் என்றால் சொல்லுமாறெங்கனே?
என்பார் திருமூலர்.
மகளுக்கு, தாய் தன் மணாளனோடு ஆடிய சுகத்தை சொல் என்றால் சொல்லுவது எப்படி?
அனுபவம் இல்லாத அறிவு, கடன் வாங்கிய ஞானம்.
அதாவது, இரவல் ஞானம்.
அது, நம் சொந்த அறிவு அல்ல!.
பதஞ்சலி சொல்கிறார்...
இதையெல்லாம் படித்து விட்டு, "ஆஹா எனக்கு நிர்விசார சமாதி கிடைத்து விட்டது என்று சொல்லிக் கொண்டு திரியாதே"....
நாளடைவில் உனக்கு அந்த அனுபவம் நிகழும். அது
வரை பொறுத்திருக்க வேண்டும் என்கிறார். அனுபவம் நிகழவில்லை
என்றால் ஏதோ தவறு என்று அறிந்துக் கொள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக