புதன், 22 மார்ச், 2023

மனிதனும் தெய்வமாகலாம்!

 


இறைவன் என்றால் “சச்சிதானந்தம்” என்று பொருள். அதாவது, சத் – இருப்பு அல்லது உண்மை. சித் – அறிவு, ஆனந்தம் – பேரின்பம் என்லாம்.
அதாவது, அறிவின் இருப்பில் ஆனந்தம் இருக்கின்றது என்பதையே ‘இறைவன்’ என்கிறோம்.
அந்த இறை நிலையையை மனிதனும் அடைய முடியும் என்பதினால்தான் அன்றைய பெரியோர்கள் ‘மனிதனும் தெய்வமாகலாம்!’ என்று கூறி வைத்தனர்.
அந்த தெய்வீக நிலையை ஒருவன் அடைய வேண்டுமானால், அவனது மனம் இருமைகளில் இருக்கக் கூடாது.
அதாவது, உயர்வு – தாழ்வு, நல்லது – கெட்டது, சரி – தவறு, மகிழ்ச்சி – துக்கம் என்பன இருக்கக்கூடாது என்கின்றது ஆன்மவியல் பாடங்கள்.
மனம் இருமைகளை இழந்தால், இறைவ(தன்)னை அறியலாம் என்பதினால், பெரும்பாலானவர்களுக்கு இதில் உடன்பாடு இருப்பதில்லை.
காரணம், மகிழ்ச்சி – துக்கம் என்ற இருமைகளில் இந்த இரண்டையும் இழக்க வேண்டுமானால், ஒருவருக்கும் ஒப்புதல் இருக்காது.
ஆம் அனைவருமே துக்கத்தை வேண்டுமானால் விட்டுவிட தாயராக இருப்பார்கள். ஆனால், மகிழ்ச்சியை விட்டுவிட வேண்டும் என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஆன்மவியல் கல்வியைக் கற்பதினால், கட்டாயம் இருமைகள் இல்லாமல் போகும், ஒருமை நிலை உண்டாகி ஆன்மசொரூபம் விளங்கும் என்றவுடன் எவருக்குமே இதுப்போன்ற பாடங்களைப் படிப்பதில் ஆர்வம் உண்டாவதில்லை.
எனெனில், மகிழ்ச்சி வேண்டித்தானே எல்லோரும் இங்கும், அங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களைப் பார்த்து, இந்தப் பாடங்கள் மூலமாக மகிழ்ச்சியும் போய்விடும் என்றால், எவர்தான் படிக்க வருவார்கள்?
அவர்கள் மகிழ்ச்சி என்பதை இனிப்பு சாப்பிடுவதும், திரைப்படம் பார்ப்பதும், நண்பர்களுடன் ஊர் சுற்றுவதும் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் ஆன்ம ஞானம் அடைந்தவனுக்கு அவைகள் எல்லாம் போய்விடுமே என்றால் எப்படி இந்த ஆன்மவியல் பாடங்களைப் படிக்க விரும்புவார்கள் என்பதே எல்லோருடைய சந்தேகமாக இருக்கின்றது.
ஒருவன் ஆன்ம ஞானம் அடைந்து, இருமைகளிலிருந்து விடுபட்டு, அந்த ஏக அறிவுடன் ஏகாந்தமாக இருக்க முடியும் என்பதை எப்படிப் புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், ஒருவனுக்கு ஒரு வேலையின் மூலம் மாதச் சம்பளம் ஒரு இலட்சம் ரூபாய் வந்துக் கொண்டிருக்கின்றது.
அதிர்ஷ்டவசமாக அவனுக்கு மற்றொரு வேலைக் கிடைத்து, அதிலே மாதம் மூன்று இலட்சம் ரூபாய் சம்பளமாக கிடைக்கின்றது.
அந்த வேலை அவனுக்கு கிடைத்தவுடன் ஐய்யய்யோ! மாதம் ஒரு இலட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்த வேலை போய் விட்டதே என்று புலம்புவானா?
அப்படி அவன் புலம்பினால் அவனை என்னவென்று கூறுவது?
ஒரு இலட்சம் ரூபாய் சம்பளம் வருகின்ற வேலை போனால் என்ன? அந்த ஒரு இலட்சம் ரூபாயும் இந்த மூன்று இலட்சம் ரூபாய் சம்பளத்தில் அடக்கம் அல்லவா?
ஆகவே, முன்பு கிடைத்த மகிழ்ச்சி போய்விட்டது என்று யாராவது புலம்புவார்களா?
ஆகவே, ஒருவன் எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியை வேண்டுகின்றான் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
அதுப்போல, ஆன்ம ஞானம் கிடைத்தவுடன் வருகின்ற மகிழ்ச்சி இருக்கின்றது அல்லவா? அது அவன் இதுவரை அனுபவித்து வந்த அத்தனை மகிழ்ச்சிகளையும் உள்ளடக்கியது என்பதினால், அதில் இருமைகள் இருக்காது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆகவே, ஆன்மவியல் கல்வி என்பது அவனை அவனுக்குக் காட்டிக் கொடுக்கும் கல்விகளுக்கெல்லாம் தலையாய கல்வி என்றால் அது மிகையாகாது.
ஆன்மாவை உணர்ந்தவன் ஆனந்தத்தை உணர்வான் அதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை என்பதினால், இருமைகள் இல்லாத ஏக இறைவ(தன்)னை அறிவதே ‘ஆன்ம ஞானம்’ எனப்படுகின்றது.
அத்தகைய ஆன்ம ஞானத்தை அடைந்தவனின் மனம் ஆனந்தம் நிறைந்த திருப்தியுடன் கூடிய திவ்ய நிலையாகிய தெய்வீக நிலையை அடைகின்றது.
ஓம் தத் ஸத்! 🙏


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்