சித்தாந்தங்கள் பலவாக இருப்பினும் இரண்டற்ற ஒன்றே என்கின்ற அத்வைதம் என்ன கூறுகின்றதென்றால், சம்ஸாரம் என்ற பிறப்பு - இறப்பு என்பதற்கு உட்படுகின்ற சீவன் என்பவன் இந்த உலகத்தில் இருந்து நீங்கி, வேறு உலகங்களான பிரம்ம லோகம், சொர்க்க லோகம், பித்ரு லோகம் போன்ற லோகங்களை சென்றடைவதுதான் ‘மோக்ஷம்’ என்பதை முற்றிலுமாக மறுக்கின்றது.
அதற்குக்காரணம், இங்கு சீவாத்மா - பரமாத்மா என்ற இருமைகளால் ஆன உறவு உண்மையல்ல!
அப்படி இருக்கும்போது, சீவ - பிரம்ம ஐக்கியம் யாருக்கு நடைப்பெறுகின்றது?
இந்த இருமைகள் எப்படி ஏற்பட்டது? என்று விசாரித்துப் பார்த்தால், விசாரணையில் ஈடுபடும் மனம் தன் அறியாமையை அறிந்து, அறிவான ஆத்மாவின்மீது ஏற்றிவைக்கப்பட்ட எண்ணங்களால் எழுந்ததுதான் “மனம்” என்ற மாயையை (மாயா உலகத்தை) உணரும்போது, அது இருமைகளைக் கடந்து ஒருமை நிலைக்கு வருகின்றது.
அப்போது மட்டுமே உள்ளது உணர்வாகிய ஆத்மா மட்டுமே, என்றும், அதன்மீது ஏற்றி வைக்கப்பட்ட ஏராளமான உலகங்களாகிய கைலாசம், வைகுந்தம், சொர்கம், நரகம் என்பதெல்லாம் மனதின் வெறும் மாயா ஆசைகள் என்றுதான் எடுத்துக்கூறுகின்றது.
அது எப்படி? அவ்வளவு உறுதியாகக் கூறமுடிகின்றது என்றுப் பார்த்தால், ஒவ்வொரு மனிதனும் இரவில் ஆழ்ந்து உறங்கும்போது, அவர்களது மனம் தற்காலிகமாக இல்லாமல் போகின்றது.
அதாவது, ஏற்றி வைக்கப்பட்ட எந்த எண்ணங்களும் இன்றி, ஒருவன் உறங்குகின்றான். அப்போது, அவனுக்கு எந்த உலகத்தில் இருக்கிறோம் என்பதும், என்ன மொழி பேசுகிறோம் என்பதும், தன்னுடன் எத்தனை உறவுகள் உறங்கிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதும்கூட, தெரியாமல் அவனால் உறங்க முடிகிறது என்றால், அவனுக்கு அப்போது “மனம்” என்பது இருக்கவில்லை.
அதாவது, மனம் என்பதிலிருந்து ஆத்மா விடுபட்ட நிலைதான் மோக்ஷம்.
அது இங்கேயே, இப்போதே அவனுக்கு சித்தியாகும்போது, அது இந்த உடல் இறந்த பிறகுதான் சித்திக்கும் என்ற அறியாமையை என்னவென்று கூறுவது?.
ஆகவே, இறந்த பிறகு வேறு உலகங்களுக்கு செல்வது மோக்ஷம் அல்ல!, இந்த உலகில் உடலோடு இருக்கும்போதே, தன்னை அறிந்து, தன்மயமாகி, தன் சொரூபத்தை உணர்ந்து, அதனால் அடைகின்ற ஆனந்தம் இருக்கின்றது அல்லவா? அதுவே, உண்மையில் “மோக்ஷம்” என்றும் அழைக்கப்படுகின்றது.
ஆக, இந்த ஆத்ம ஞானத்தை அடைந்த ஞானி என்பவன் பார்க்கின்ற சாதாரண மனிதர்களுக்கு அவன் மற்றவர்களைப் போன்று இந்த உலகத்தில் உள்ளான் என்பதுப்போல தோன்றினாலும், உண்மையில், அந்த ஞானி ‘மோக்ஷத்தில்தான் இருக்கிறான்’ என்கிறது அத்வைதம்.
அதாவது, இரண்டு பேர்கள் இருந்தால்தானே ஒருத்தர் மற்றவரோடு சேர்ந்து, ஏதோ ஒரு உறவு ஏற்படுத்திக்கொள்ள முடியும்?
ஆனால், உண்மையாகவே, சீவாத்மாவும் பரமாத்மாவும் என்ற இரண்டு வெவ்வேறு நிலைகளில் இருப்பதில்லை. இருப்பது ஒரே ஆத்மாதான். அதுவே, ப்ரஹ்மம் என்றும், அறிவு என்றும், உணர்வு என்றும் பலவாறாக அழைக்கப்படுகின்றது.
அதாவது, ஆத்மா, தன்னில் தானாய், தனக்கு வேறாக எதுவுமில்லாத ஒன்றாக, இருக்கின்ற அநுபவத்தைத்தவிர, மற்ற எந்தவொரு எண்ணங்களும் இல்லாமலிருப்பது “நிர்குண ப்ரஹ்மம்” என்று கூறப்படுகின்றது.
அதனால்தான், அந்த ப்ரஹ்மத்தின் ஆதாரத்தைக் கொண்டே, அந்த ப்ரஹ்மத்தையும் மறைப்பதாக உள்ள அதன் மாயா சக்திதான் “மனம்” என்பதினால், அந்த மனம் உண்டாக்குகின்ற இந்த உலகம் என்கிற ஜாலக் காட்சியில், ஏராளமான விசய, சுகங்களை எண்ணங்களாக ஏற்படுத்திக்கொள்கின்றது.
அதாவது, வெள்ளைத்திரையின் ஆதாரத்தில்தானே திரைப்படம் ஓடுகிறது?
அந்த திரை இல்லாவிட்டால், அந்தக் காட்சிகள் அங்கு கிடையாதல்லவா?
ஆனாலும், அந்தக் காட்சிகளே தெரியாதபடி திரை மறைந்து விடுகிறது!
அந்த திரை மறைந்தாலும், தன்மீது ஏற்றி வைத்துக் கொண்ட ஏராளமான காட்சிகளினால், அந்த திரை பாதிக்கப்படுவதில்லை.
அதாவது, அந்த திரை எந்த அசைவுமற்று, அது தன்னில் தானாய் அப்படியேதான் இருக்கின்றது. ஆனால், அதன்மீது அனேக காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றது.
அப்படித்தான் ப்ரஹ்மமாகிய அறிவின் ஆதாரத்தில், இந்த ‘மனம்’ என்ற மாயத்திரை உண்டாகி, அதன்மீது அத்தனைக் காட்சிகளும் காணப்படுகின்றது.
இதிலே கூடுதலான ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், ப்ரஹ்மம் ப்ரஹ்மமாகவே ஒருபுறம் இருந்து கொண்டிருந்தாலும், மற்றொருபுறம் அதுவே மனம் என்ற மாயா சக்தியினால் தனித்தனி அந்தஃகரணங்களைப் பெற்று, தனித்தனி சீவர்களாகவும் ஆகியிருக்கிறது.
அதிலே, படைக்கப்பட்ட அந்தக்கரணங்களில் முதலிடம் கொண்ட மனிதன் மட்டுமே தன்னிடம் உள்ள மனோசக்தியைக் கொண்டு, அந்தக்கரணங்களை நீக்கிக்கொண்டால், சீவனே பிரஹ்மமாகிவிடுவான் என்கின்றது அத்வைதம்.
அதாவது, சீவாத்மா பரமாத்மா என்ற இரண்டு பேர் சேர்வது என்பதே கிடையாது.
பரமனேதான் தன்னைத் தெரிந்துக் கொள்கிறான்.
தன்மீது ஏற்றி வைக்கப்பட்ட ஏராளமான விசய, சுகங்களை எல்லாம் நீக்கிப்பார்க்கும்போது, அதே பரமனுக்கும் அதுவரை தெரியாமல் இருந்த தன் நிஜமான ஸ்வரூபம் தற்போது தெரிய வருகின்றது.
ஏராளமான எண்ணங்களால் எழுந்த மனம், அதன் அறியாமையினால், அனேக பிம்பங்கள் என்ற மாயா காட்சியில் கட்டப்பட்டு, மயங்கிக் கொண்டிருந்ததால், சீவன் என்ற பெயரிலேயே, அப்படியே இருக்க வேண்டியதுதான்.
அந்தக் கட்டை உதறிவிட்டுத் தான் தானாக இருப்பதில் யாரும் யாரோடும் சேரவில்லை, அங்கே எந்தவிதமான உறவுமில்லை. நமக்கே நாம் என்ன உறவு? என கட்டவிழ்ந்து விடுதலை கிடைப்பதுதான் மனம் அடைகின்ற மோக்ஷம் ஆகும்.
ஆனால், அறியாமையினால் மனம் மோக்ஷலோகம் , பிரம்மலோகம், பித்ருலோகம் மாயாலோகம், சொர்க்கலோகம் என ஏராளமான லோகங்களை படைத்துக் கொள்கிறது.
ஆனால், உண்மையில் அப்படிப்பட்ட உலகங்கள் எல்லாம் கிடையவே கிடையாது என்கின்றது அத்வைதம்.
‘மனதைக்கழற்றிப் போட்டுவிட்டால் நாமே ப்ரம்மம்.
இங்கேயே, இப்போதே மோக்ஷம்’ என்றால், நமக்கு “இத்தனை எளிதான சித்தியா?” என்று ஆச்சரியம் உண்டகின்றது.
நமக்கு மேலே பரமாத்மா என்று ஒருத்தர், ‘அவருக்குக் கீழேதான் நாம்’ என்று இருக்கின்ற இருமை நிலையை இல்லாமல் செய்வதே பேரானந்தமான முடிவு நிலை.
அதை அடைவதற்கு, எங்கேயோ, ஏழு கடல்கள் தாண்டி, ஏழு மலைகள் தாண்டி மோக்ஷ லோகத்திற்குப் போக வேண்டுமென்று மற்ற சித்தாந்தங்கள் கூறுகின்றன.
ஆனால், நமக்கு மேலே ஒரு பரமாத்மா, அவருக்குக் கீழே பல சீவாத்மாக்கள் என்றில்லாமல், நாமே பரமாத்மாவாகத்தான் உள்ளோம் என்பதை உணரும்போது மட்டுமே பேரானந்தத்தை, பேரறிவை நம்மிடம் நாம் காணமுடியும். என்கின்றது அத்வைதம்.
ஓம் தத் ஸத்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக