செவ்வாய், 21 மார்ச், 2023

காரண சரீரம்



எவ்வாறு, நம் உடம்பை மறைப்பதற்குப் பனியன், அதற்குமேல் சட்டை, அதற்கு மேல் கோட்டு ஆகியவைகளை அணிந்திருப்பது போன்று, ஆத்மாவை மூடிக்கொண்டு காரண சரீரம், சூக்கும சரீரம், தூல சரீரம் ஆகிய சரீரங்கள் இருக்கின்றன. சரீரத்தின் மீது அணிந்திருக்கின்ற கோட்டை அகற்றினால் சட்டையும், பனியனும் அதை மூடிக்கொண்டிருக்கும். சட்டையையும் அகற்றிவிட்டால், அடுத்து பனியன் சரீரத்தை மூடிக்கொண்டிருக்கும். அந்த பனியனையும் அகற்றினால்தான் நம்முடைய சரீரம் நமக்குத் தெரியும். அவ்வாறு, தூல சரீரம் போய்விட்டால் சூக்கும, மற்றும் காரண சரீரங்கள் ஆத்மாவை மறைத்துக் கொண்டிருக்கும். அந்த சூக்கும சரீரமும் நீங்கினால், காரண சரீரம் மட்டும் ஆத்மாவை மறைத்துக் கொண்டிருக்கும். அந்த காரண சரீரம் அகலும்பொழுதுதான் ஆத்மா பிரகாசிக்கும். தூல சரீரம் என்பது நம் கண்ணுக்குத் தென்படும் பூதவுடலாகும். இது, தோல், இரத்தம், மாமிசம், நரம்பு, எலும்பு, கொழுப்பு ஆகியவை சேர்ந்து தூல சரீரமாகிறது. அத்துடன், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவை சூக்கும சரீரமாகும். ஞானேந்திரியங்கள் ஐந்தும், வாயுக்கள் ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும், சூக்ஷ்ம சரீரத்தில் அடங்கும். பஞ்ச கர்மேந்திரியங்கள், பஞ்ச வாயுக்கள், பஞ்ச ஞானேந்திரியங்கள், மற்றும் இந்த தூல சரீரம் ஆகியவற்றின் துணை கொண்டு சூக்கும சரீரம் புறவுலகத் தொடர்பை புத்திக்கு ஏற்படுத்துகிறது. மனிதனுக்குக் கீழ் நிலையில் உள்ள உயிரினங்களுக்கு தூல சரீரம் இருந்தும் அவைகளுக்கு அதைப் பற்றிய அறிவு இருக்காது. ஆனால், மனிதன் தன்னிடம் ஏற்றி வைத்துக் கொண்ட ஏராளமான எண்ணங்களால், தன்னை இந்த உடலாக பாவித்துக் கொள்கிறான். அவ்வாறு அவன் தன்னை சரீரமயமாக எண்ணிக்கொண்டிருப்பது, அவனது அறியாமையே ஆகும். இதை நீக்கத்தான் சாஸ்திரமும், சத்குருவும் தேவைப்படுகிறது. நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்