பகவான் ஸ்ரீஇரமணர், “அறியும் தன்னை அறியாமல், அயலை அறிவது அஞ்ஞானம்!” என்று கூறினார்.
இதிலே, அறிவது யார்? அறியப்படுவது யாது? என்று சாதகன் ஆழமாக சிந்தித்தால் அந்தச் சிந்தனை அவனை உண்மைக்கு அழைத்துச் செல்லும்.
சாதாரணமாக, உலகத்தில் பெயருடன் கூடிய தனது உடலையே நான்! என்று மனிதர்கள் நினைக்கின்றனர். அதற்குமேல் சிந்திப்பதற்கு நமது குடும்பமோ, கல்வியோ, சமுதாயமோ, மதமோ வழிகாட்டவில்லை.
பலரது மரணத்தைத் தினமும் சந்திக்கின்றான். அதனால், மரணத்தைக் கண்டு பயப்படுகின்றான். ஆனால், தனக்கும் மரணம் உண்டு என்றுமட்டும் அவன் சிந்திப்பதில்லை.
அழியக்கூடியதான இந்த உடலை ‘நான்’ என்று நினைத்துக் கொண்டாடுகிறேனே! என்று எண்ணிப் பார்ப்பதில்லை.
தான் காண்பவை எல்லாமே அழியக் கூடியவைதான்! என்ற சிந்தனை ஒருவனுக்கு சாதாரணமாக எழுவதில்லை.
இந்த உடல் நீ இல்லையப்பா! என்று ஞானியர்கள் எடுத்துரைத்தாலும் பிராணன், மனம், புத்தி, அகங்காரம் போன்ற உள் விவகாரங்கள் அவனைத் தன்னை அறிதல் என்னும் முயற்சிக்குப் போகவிடாமல் தடுக்கின்றன.
கர்மா இருக்கும் வரை இந்த நிலையேதான் தொடரும்.
நான் இந்த உடல் என்றால், இந்த உடலின் தன்மைகளைப் பற்றி ஒருவன் சற்றே சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
எனது உடல்! என்றுதான் சொல்கிறோமே தவிர, நான் இந்த உடல் என்று சொல்வதில்லையே!
தசைப் பிண்டமான அழுக்கு நிறைந்தது இந்த உடல்.
இந்த உடலுக்கு வளர் சிதை மாற்றங்கள் உண்டு. பிறத்தல், வளர்தல், நோய்வாய்ப்படுதல், சுருங்குதல், முதுமை அடைதல், மரணித்தல் போன்ற பல நிலைகளைக் கொண்டதான இந்த உடல், என்னால் பார்க்கக் கூடியதாகவும் இருக்கிறது.
இதை நான் பார்க்க முடிகிறது என்றால், பார்க்கின்றவன் யார்?...
இந்த உடல் எனக்குக் கட்டுப்பட்டது அல்ல.
சின்ன வயதில் இருந்த எனது உடல் இப்போது எங்கே?
இளமையான கட்டழகு உடல் முதுமையில் தளர்வது எதனால்?
ஏனெனில், சடப்பொருளான இந்த உடல் இயற்கையோடு சம்பந்தப்பட்டது. பஞ்சபூதச் சேர்க்கையால் உருவானது.
இப்படி இந்த உடலைப்பற்றிய தொடர்ந்த சிந்தனைகளால்தான் ஒருவனுக்கு நான் இந்த உடல் அல்ல! என்ற உண்மை புலப்படும்.
இந்த உண்மையை அறியாததால் தான் உலகமும், உறவுகளும், பொருள்களும் நம்மைக் கவர்கின்றன.
ஆணவமும், வறட்டு கௌரவமும், எதிர்மறைக் குணங்களும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன.
உடலே நான்! என்று அகங்காரத்தின் அடிப்படையிலேயே இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் பாரத நாட்டின் ரிஷிகள் தான் சூட்சுமமான படைப்பின் ரகசியத்தை தமது தவ வலிமையால் கண்டுணர்ந்தார்கள்.
பிரம்மம் என்னும் பரம்பொருளின் வெளிப்பாடு இந்தப் பேரண்டம்! என்ற உண்மை அவர்களுக்குப் புலப்பட்டது.
அந்த உண்மையை உலக அளவில் அவர்கள் விரித்துரைத்தார்கள்.
இன்று இந்தப் பேருண்மையை அறிய வேண்டும் என்ற ஆவலினால் உலகமே நமது சனாதன தர்மத்தின் பெருமைகளை உணர்ந்து, வேதங்களை ஆராய்ந்து அறிவதில் ஆர்வம் காட்டுகின்றது.
ஆனால் நாமோ நம் பெருமை அறியாமல், பண்ணாட்டு மோகத்தில் வீழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
தன்னை அறிதலாகிய ஆத்ம விசாரணையில் ஈடுபடத் தன்னைத் தனிமைப்படுத்தி ஞானம் பெறும் முயற்சியில் தொடர்ந்து முயல்பவர்களுக்குத்தான், இந்த உடல் நான் அல்ல! என்பது தெரியவரும்.
அதுமட்டுமன்றி, அறியப்படும் எவையுமே நானல்ல, அழியக் கூடியவையான எதுவுமே நான் அல்ல!. இயங்குபவையான எதுவுமே நானல்ல! போன்ற பல விஷயங்கள் நன்குப் புலப்படும்.
“ஆத்மா ஞான ஸ்வரூபம்”. ஆத்மன் தூய வடிவினர். தேகமோ மாமிசத்தால் செய்யப்பட்டது. அசுத்தமானது. அப்படியிருந்தும் அவ்விரண்டையும் ஒன்றாகப் பார்க்கிறார்கள். இதைவிட அஞ்ஞானம் வேறு என்ன இருக்கமுடியும்?” என்கின்றார்கள் ஞானியர்கள்.
ஓம் தத ஸத்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக