புதன், 22 மார்ச், 2023

என்னை ‘நான்’ அறிவது எவ்வாறு?

 



ஒருவன் “நான் இருக்கிறேன்” என்று தன்னைத்தானே அறிந்துக்கொள்ளும் இயல்பு அவனது மனத்திற்கு உண்டு. அது ஒரு போதும், எந்த சூழ் நிலையிலும் மறைவதில்லை.
உதாரணமாக, ஒரு அறையில் இரண்டு நண்பர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இருள் சூழ்ந்த வேலையில் இவர்கள் ஒருவருக்கொருவர் இருப்பதை அவர்களால் அறிய முடியாவிட்டாலும், அவர்களுக்குள் ‘நான் இருக்கிறேன்’ என்ற ‘தன்னிருப்பு’ அவர்களால் அவசியம் அறிந்துக் கொள்ள முடியும்.
அதில், எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
ஒரு களங்கமற்ற (முகம் பார்க்கும்) கண்ணாடி, தன்னைத்தானே தான் பார்த்துக் கொள்ளும்போது, அதில் பிரதிபலித்துக் கொள்ளும் பிரதிபிம்பத்தில் எந்த பிம்பமும் இருக்காது.
அங்கு களங்கமற்ற, தூய்மையான கண்ணாடி மட்டுமே தனித்து காணப்படும். அதற்கு வேறாக அங்கு ஒன்றுமே இருப்பதில்லை.
அதுப்போல, நம்மிடம் காணப்படும் மனம் தன்னைதானே தான் பார்த்துக்கொள்ளும் போது, அதில் பிரதிபிம்பிக்கும் நிலையில் எந்த பிம்பமும் இருப்பதில்லை.
அந்த களங்கமற்ற தூய்மையான மனம் மட்டுமே தனித்து தன்னில் தானாய் காணப்படும்.
அதுவே, ஒரு கண்ணாடியின் முன்பாக எதைக் கொண்டு சென்றாலும், அது அவைகளை தன்மீது ஏற்றி வைத்துக் கொண்டு, தனக்கு வேறாக அவைகள் இருப்பதுப் போன்று தன்னைக் காட்டிக் கொள்ளும்.
அதுப்போல, மனதின்மீது ஏற்றி வைக்கப்பட்ட ஏராளமான எண்ணங்களால் மனமும் தனக்கு வேறாக அவைகள் இருப்பதாகப் பாவித்துக் கொள்ளும்.
ஆனால், அந்த களங்கமற்ற மனம் கண்ணாடி போன்றது.
பொதுவாக, நம்மிடம் ஏற்றி வைக்கப்பட்ட எண்ணங்களை எல்லாம் நீக்கிப் பார்க்கும்போது, மனம் என்ற ஒன்று அங்கு இருப்பதில்லை.
அதற்குப் பதிலாகத் தன்னைத்தானே அறிகின்ற ‘அறிவு’ ஒன்று மட்டுமே அங்கே இருக்கின்றது.
மனம் என்பது உண்மையில், ஒரு உயர் அறிவுப் பரிணாமம் கொண்ட, அசையாத அகண்ட வெட்டவெளியின் (அறிவின்) அற்புத வெளிப்பாடு.
அதாவது களங்கமற்ற கண்ணாடி போன்ற வெட்டவெளியாகிய அறிவின்மீது, இந்த மொத்த பிரபஞ்சமும் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவின் மீது ஏற்றி வைத்துக் கொண்ட எண்ணங்களின் தொகுப்பை “மனம்” என்று நம்மால் கூறப்படுகின்றது.
அவ்வாறு ஏற்றி வைத்துக்கொண்ட எண்ணங்களாகிய மனதில் உள்ளதையெல்லாம் எதுப் பார்க்கின்றட்தோ, அதுவே “அறிவு” என்று அழைக்கப்படுகின்றது.
அதனைத்தான் நாம் "ஆறாம் அறிவு" என்கின்றோம்.
அதாவது, ஒரு கண்ணாடி தன்னையே பார்த்துக்கொள்வது போல, மனமே மனதைக் கவனிக்கிறது.
நீங்கள் தன்னைப் பற்றிய அறிவை (மெய்ஞானம்) பெற்றிருந்தாலும், மனதின் நடவடிக்கைகளை எல்லாம் ஒரு ஞானம் பெறாத சாதாரணமான மனிதர் பார்ப்பதைப் போலத்தான் பார்த்துக் கொண்டிருக்க முடியும்.
அதிலே, ஞானம் பெற்றவருக்கும், பெறாதவருக்கும் உள்ள வித்தியாசம் என்னெவெனில், ஞானம் பெறாத ஒரு சாதாரண மனிதர் மனதில் உள்ளதை அரை குறையாகவும், அலைப்பாயும் நிலையிலும் அறிகிறார்.
அத்துடன், தன் மனதைத் தானே பார்க்கத் தெரியாததினால், அவர் மனம் போன போக்கிலே போகின்றார்.
அதாவது, ஞானம் பெற்றவரை விடக் குறைவாகவே எல்லாவற்றையும் அறிகிறார். அத்துடன் அந்த மனதை அப்படியே நம்பி விடுகின்றார். அதனால், அந்த மனதை தொடர்ந்து செல்கிறார்.
அந்த மனதிற்கு வேறாக ஒதுங்கி இருந்து, அந்த மனதில் ஏற்றி வைக்கப்பட்ட எண்ணங்களை எல்லாம் பார்க்கக்கூடிய ஒரு ‘அறிவு’தான், தான் என்பதை அவர் அறிய மறுக்கிறார்.
அதனால்தான், ‘நான்’பார்க்கிறேன், ‘நான்’நினைக்கிறேன், ‘நான்’சிந்திக்கிறேன், ‘நான்’கவனிக்கிறேன், ‘நான்’செய்கிறேன் என்பதில் உள்ள ‘நான்’ என்ற வார்த்தையைச் சேர்த்துக்கொண்டு, அறியாமையினால், அஹங்காரத்தில் தன் உண்மை இயல்பை மறந்து விடுகிறார்.
உண்மையில், அவர் தன்னை மனமாக நினைத்துக் கொள்வதினால், ‘நினைத்தல்’ அல்லது ‘சிந்தித்தல்’ என்பதில், ‘நான் நினைக்கிறேன்’ என்ற எல்லா எண்ணங்களையும் கவனிக்கும்போது, எண்ணங்களை மாத்திரமே கவனிக்கின்றார்.
அந்த எண்ணங்களை கவனிக்கும் ‘தன்னை’ அவர் கவனிப்பதில்லை.
அதாவது, அவர் பார்ப்பதெல்லாம் எண்ணங்களை மட்டுமே. அந்த எண்ணங்களைப் பார்க்கின்ற பார்ப்பானைப் பார்ப்பதில்லை.
ஆக, நாம் நம்முடைய எண்ணங்களை மட்டுமே பார்க்கிறோம். எண்ணங்களுக்குப் பின்னால் ‘மனம்’ என்ற ஒன்று இருந்தாலும், அந்த மனதிற்கு முன்னாலும், அடியிலும், மேலேயும் கூட யாரும் இல்லை என்று இருக்கின்ற எண்ணங்களை மட்டுமே! நாம் கவனிக்கிறோம்.
ஆனால், அந்த எண்ணங்களை கவனிப்பவனை கவனிக்கத் தவறுகிறோம்.
உதாரணமாக, மழை பெய்யும் போது, 'மழை பெய்கிறது' என்கிறோம். மேகங்களில் மழையைப் பெய்ய வைக்கும் ஏதோ ஒன்று இருப்பதாக நாம் நினைப்பதில்லை. மழை பெய்கிறது அவ்வளவு தான்.
மழையைப் பெய்ய வைக்கும் மேகங்களைப் பற்றி நாம் அப்போது நினைப்பதில்லை.
அதுப்போல, எண்ணங்களும், அதை எண்ணும் மனமும், அந்த அறிவின் மீது ஏற்றி வைக்கப்பட்டுள்ளதை ஏற்க மறுக்கின்றோம்.
உள்ளதை உள்ளபடி அறியும் “ஒரு அறிவு” மனம் என்பதாக மலர்ந்துக் கொண்டிருப்பதை நாம் அறிவதில்லை.
அறிவு (ஆத்மா) இல்லையென்றால் மனம் இருப்பது எப்படி?
நாம் இதை வேறு மாதிரியாகச் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
எனக்குள் அறிவு (ஆத்மா) என்ற ஒரு கண்களுக்குப் புலப்படாத சூக்குமமான பொருள் இருப்பதாகவும், அதுவே மாற்றமடையாத, மாற்ற இயலாத, நிலையான “நான்” என்பதாக இருக்கின்றது.
பின் இந்த அழியக்கூடிய உடல் சிதையும்போது, அந்த ‘நான்’ என்ற அறிவு (ஆத்மா), மற்றோர் உடலுக்குத் தாவி விடுவதாகக் கருதிக் கொள்கின்றனர்.
அதாவது, நிலையான, மாற்றமடையாத, உண்மையான உயர் அறிவாகிய ஆத்மா இந்த உடலிலிருந்து தாவி, வேறு ஒரு உடலுக்குச் செல்கிறது, என்று தவறாகவே நம்மிடம் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், உண்மை அப்படி இல்லை!.
அதாவது, மாற்றமில்லாத, என்றென்றும் நிலைத்திருக்கும், நிலையான தன்மை கொண்ட, என்றுமே அழியாத அறிவு (ஆத்மா) ஆகிய வெட்டவெளி வருவதும் இல்லை!, போவதும் இல்லை!.
அது எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் எல்லையில்லா உணர்வுப் பெருவெளி என்பதினால், அது போக்கு வரவு இல்லாத நிலையில் நிலையாக இருக்கின்றது.
அதன்மீது ஏற்றி வைக்கப்பட்ட இந்த பிரபஞ்சமும், பிரபஞ்சத்தில் உள்ள இந்த உலகமும், இந்த உலகத்தில் உள்ள உயிர்களும் களங்கமற்ற கண்ணாடி போன்ற சுத்தவெளியின் மீது, எண்ணங்களாக ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்றி வைக்கப்பட்ட எண்ணங்களை எல்லாம் நீக்கிப் பார்க்கும்போது, அங்கே இருப்பது இருப்பாகிய ‘நான்’ என்ற தன்னிருப்பு கொண்ட “அறிவு” ஒன்றுமட்டுமே உண்மையில் உள்ளது.
ஆக, அந்த ‘அறிவு’ வருவதும் இல்லை, போவதும் இல்லை!, அது என்றும் இருக்கின்ற இருப்பு.
அது எவ்வாறெனில், இருக்கின்ற ஒன்றேயாகிய உன்னத உணர்வாகிய அறிவு, ஒரு (முகம் பார்க்கும்) கண்ணாடியைப் போன்று, தன்னைத்தானே பிரதிபலித்துக் கொள்கிறது.
அவ்வாறு, பிரதிபிம்பித்துக் கொண்ட கண்ணாடியில், அந்த கண்ணாடிக்கு வேறாக வேறு என்ன தெரிந்துவிட முடியும்?....
பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போலவே இருக்கும்.
அதை பிரித்துப் பார்த்து வித்தியாசம் கண்டறிவது கடினம். ஆனால், அந்த கண்ணாடி தன்னில் தன்னை பிரதிபலித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை.
அதுப்போல, அகண்ட அறிவு (ஆத்மா), ஒரு முகம்பார்க்கும் கண்ணாடியைப் போன்று தன்மீது, தனது பிம்பத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பலவாறான ஒட்டம் கொண்ட “மனம்” என்று கூறப்படுகின்றது.
அதாவது, இருப்பது நிலையான ஒரு அறிவு மட்டுமே, அதில் பிரதிபிம்பித்த பிம்பம் அதனுடையது என்பதினால், அதில் ஒரு ஓட்டம் இருப்பதுப்போன்று பலவாறாகக் காணப்படுகின்றது.
அதாவது, அனைத்தையும் அறியும் அறிவாக அதுவே உள்ளது. அதை நாம் ‘மனம்’ என்று அழைக்கிகறோம்.
அதில், ஒரு கணத்தில் எழுந்த எண்ணம், அடுத்த எண்ணத்தை இயக்குகிறது.
அது எவ்வாறு என்பதை, ஒரு சிறிய உவமானம் மூலம் அறியலாம்.
அதாவது, கொஞ்சம் இடைவெளிவிட்டு, ஒன்றின் மீது ஒன்று சாய்த்து, அடுத்தடுத்து நேராக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் செங்கற்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் உள்ள ஒரு செங்கல்லைத் தட்டி விட்டால், அது அருகில் உள்ள அடுத்த செங்கல்மீது மோதி அதனைச் சாய்க்கிறது. பின், மூன்றாவது செங்கல் சாய்கிறது.
இதுப்போலவே, ஒரு எண்ணம் அடுத்த எண்ணம் உருவாவதற்குக் காரணமாக இருக்கிறது.
ஆயிரம் செங்கற்களைத் தொடர்ந்து அடுக்கி வைத்திருந்தால், முதல் செங்கல் அதன் அருகில் இருக்கும் செங்கல்லைப் பாதிக்கிறது. அது, அதற்கடுத்துள்ள செங்கல்லைப் பாதிக்கிறது. இந்தத் தொடர் நிகழ்ச்சி கடைசியில், ஆயிரமாவது செங்கல்லையும் பாதிக்கச் செய்கிறது.
முதல் செங்கல் ஆயிரமாவது செங்கல்லுக்கு அருகிலேயே இல்லை. இரண்டுக்கும் தொடற்பே இல்லை. அது கடைசிச் செங்கல்லாக மாறவும் இல்லை.
ஆனால், ஒரு செங்கல் சாயும்போது அந்த ஓட்டம், சக்தி, சாய்வதற்கான காரணிகள் அதற்கு முன் உள்ள செங்கல்லிலிருந்து வந்தது. அதேசமயம், அடுத்த செங்கற்கள் சாய்வதற்கான காரணிகளும் தோன்றி விட்டன.
ஆக, இது ஒரு வரைமுறையின்றி நடைப் பெறுவதில்லை. இது ஒரு முறையான தொடர் நிகழ்ச்சி.

அதாவது, ஓர் ஓடை நீர் ஓடுவதுப்போல.
அதில் ஏற்படும் நீர்ச்சுழிகள் காரணத்தோடு தான் உண்டாகின்றன. ஓடை ஓடும் வழியில் ஒரு பாறை இருந்தால், அந்தப் பாறையைச் சுற்றிவரும் நீர் ஒரு நீர்ச்சுழியை ஏற்படுத்துகிறது. நீர்ச்சுழிகளும் ஒரு ஓட்டம் தான். அவை ஒரு நிலையான பொருள் இல்லை.
ஆனால், அந்த நீரோட்டம் ஓட வேண்டுமானால், அங்கு நீர் என்ற ஒன்று இருந்தாக வேண்டும். அந்த ஓடுகின்ற நீரோடையில் அப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் நீர் அப்படியே அங்கு இருப்பதுப் போல காணப்பட்டாலும், அது ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது.
மனமும் அதுப்போலத்தான்.
மனம் காரண காரியத் தொடர்பினால் செயல்படுகின்றது.
ஒரு உடலிருந்து மற்றொன்றுக்குக் காரண காரியத் தொடர்பினால் தான் மனம் செல்கின்றது. இந்த மனமும் ஒரு ஓட்டம் தான். ஆதலால், அதுவும் நீரைப்போன்று தொடர்ந்து மாற்றம் கொள்ளும் தன்மை கொண்டுள்ளது.
இவ்வாறு, இந்த கண்களுக்குப் புலப்படாத சூக்கும மனம், கண்களுக்குப் புலப்படக்கூடிய ஸ்தூல உடல் எடுத்து, எழுந்த எண்ணங்களின் மூலம், செயல்களாக மாற்றமடைகின்றது.
அந்த மாற்றத்தின் விளைவாக விளைந்த செயல்கள், அந்த மனதிற்கு அனுபவத்தைக் கொடுக்கின்றது.
அதன்காரணமாக, அந்த மனம் அந்த அனுபவங்களை மேலும், மேலும் பெறுவதற்காக, அழிந்துப் போகின்ற இந்த உடலைவிட்டு, அடுத்த உடலுக்குள் நுழைகின்றது.
அதாவது, இந்த உடலின் கடைசிக் கணம், அடுத்த உடலின் முதல் கணம் உண்டாவதற்கான காரணியாக உள்ளது.
காரண காரியத் தொடர்புகள் கொண்டது இது.
உண்மையில், இங்கிருந்து ஏதும் அங்கு செல்வதில்லை. ஆனால், அது உருவாக இதுவே காரணமாக உள்ளது.
ஆக மாற்றமில்லாத, ஒன்றேயாகிய அந்த அறிவு (ஆத்மா) இங்கிருந்து அங்கு செல்வதில்லை. ஆனால், அதன் பிரதிபிம்பமாகிய மனம் உண்டாக்கிய காரண, காரிய மாற்றத்தையே 'நான்' என்று நாம் கருதிக் கொள்கிறோம்.
நம்முடைய இந்த உடலிலும் நாம் இதைக் கவனிக்கலாம்.
இந்த உடலும் காரண காரியத் தொடர் மாற்றம் கொண்ட ஓட்டம் தான்.
அதற்கான நிலையான அடையாளம் ஒன்று பிறப்பிலிருந்து இறக்கும் வரை இருப்பதில்லை. அந்த உடலும் மாறிக்கொண்டேதான் இருக்கின்றது.
அந்த மாற்றத்தின் இறுதியில் உடலானது, வேறு ஒரு பரிமாணத்திற்கு சென்று விடுகின்றது.
இதெல்லாம் சித்தம் சம்பந்தமான பேச்சுத் தான்.
இதை உள்ளப் பூர்வமாக அறிய வேண்டுமானால் உங்களுக்குக் கோபம் தோன்றும்போது, பேராசை தோன்றும்போது, குழப்பம் தோன்றும்போது உங்களை நீங்களே உற்றுப்பாருங்கள்.
ஆம்!, உங்கள் மனதை நீங்களே விசாசித்துப் பாருங்கள்.
விவேகத்தினால் விடைக்காண முடியும்.
இவையெல்லாம் தோன்றுவது என்பது, நம்முடைய தவறான கருத்தில், நிலையான 'நான்' என்ற ஒன்றை விட்டுவிட்டு, நிலைமாறிக்கொண்டிருக்கும் மனதையும், உடலையும் ‘நான்’ என்று நினைப்பதால்தான் தோன்றுகின்றது.
அதனால், என்றும் மாறாத ‘நிலையான நான்’ இருப்பது நமக்குத் தெரிவதில்லை.
இந்தத் தவறான கருத்தை மாற்ற அதைப் பற்றிச் சிந்தித்தால் மட்டும் போதாது. உங்கள் மனதைத் தொடர்ந்து நீங்கள் கவனிக்க வேண்டும்.
எப்போதெல்லாம் அது சொந்தம் கொண்டாடப் பார்க்கிறதோ, எப்போதெல்லாம் அது தங்களைக் கட்டுப்படுத்தப் பார்க்கிறதோ? அப்போதெல்லாம் அந்த மனதைக் கவனித்து, அதை கவனிக்கின்றவன் யார்? என்று கண்டுபிடிக்க வேண்டும்.
இவ்வாறு, திரும்பத் திரும்ப உங்களுக்கே நீங்கள் உங்களை நினைவூட்டும்போது ஒரு மாற்றம் உண்டாகும்.
பின்பு, அந்த மாற்றம் என்பது, நாம் முன்பிருந்த மனிதராக இப்போது இருப்பதில்லை. அதாவது, 'நான் முன்னால் இருந்ததைப் போல இல்லை’. உண்மையில் நிலையான ‘நான்’ ஆகிய என்மீது நிலையற்ற ‘நான்’ ஏற்றி வைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடிகின்றது.
இதுவே உண்மை.
உண்மையில் நிலையான, மாற்றமடையமுடியாத ‘நான்’ என்பது, “நான் மட்டுமே” என்ற தன்னம்பிக்கை தன்னிடம் பிறக்கிறது!.
அத்துடன், தன்மீது ‘தான் கொண்ட நம்பிக்கை’, தன்னைத்தான் உணர்ந்துக் கொள்ளக்கூடிய “தன்னுணர்வு” என்ற பேரறிவு என்பதும் தெரிய வருகின்றது.
ஓம் தத் ஸத்! 🙏


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்