மனம் என்பது ஆத்ம சொரூபத்தின் ஓரு அதிசய சக்தி. அதுவே, அனைத்து நினைவுகளையும் ஏற்படுத்துகின்றது. நினைவுகளை எல்லாம் நீக்கிப் பார்க்கும்போது தனியாக மனமென்று ஒரு பொருளில்லை. ஆகையால், நினைவுகளே மனதின் சொரூபம்.
நினைவுகளைத் தவிர்த்து, தனியாக இந்த பிரபஞ்சம் என்பது இல்லவே இல்லை. எப்படி, தூக்கத்தில் நினைவுகள் இல்லாமல் தூங்கும்போது, இந்த உலகம் இருப்பதில்லையோ, அப்படித்தான் விழிப்பு நிலையிலும் நினைவுகள் இன்றி இருக்க முடிந்தால் இந்த உலகம் இருப்பதில்லை.
அப்படியானால், நினைவுகள் இல்லாமல் ஒருவன் இருப்பது எப்படி?
ஒரு சிலந்திப்பூச்சி எப்படித் தன்னிடமிருந்து, இந்த வெட்ட வெளியில் நூலைநூற்று, வலையை பின்னி, பிறகு அந்த வலையிலேயே இங்குமங்கும் ஓடி விளையாடி, அதில் விழுகின்ற பூச்சிகளை உணவாக உட்கொண்டு, தனது உடலை வளர்த்துக் கொண்டு, பிறகு தனக்கு வலை தேவையில்லையெனில் அந்த வலையை மீண்டும் தன்னுள்ளேயே இழுத்துக் கொள்கின்றது.
அப்படித்தான், இந்த மனமும் ஒன்றுமற்ற வெட்டவெளியில் எண்ணங்களால் ஒரு உலகத்தை உண்டாக்கிக் கொண்டு, பிறகு அந்த எண்ணங்களின் மூலமாகவே, இந்த உலகம் என்ற வலையில் ஒன்றை இங்குமங்கும் ஓடியாடி, அதிலே உண்டாகின்ற சுக, துக்கங்களில் ஓய்ந்துபோய், இரவில் ஓய்வாக தூங்கும்போது, இந்த உலகத்தை தன்னுள்ளேயே இழுத்துக் கொள்கின்றது.
ஆக, இந்த மனம் ஆத்ம சொரூபத்தினின்று வெளிப்படும்போது இந்த உலகம் தோன்றும். ஆகையால், இந்த உலகம் தோன்றும்போது, சொரூபம் (சுயம்) தோன்றாது. சொரூபம்(சுயம்) தோன்றும்போது உலகம் தோன்றாது.
எனவே, இந்த மனதின் சொரூபத்தை (சுயத்தை) விசாரித்துக் கொண்டே போனால், மனம் தானாய் உதித்த இடத்தில் ஒடுங்குமிடம் ‘தான்’ என்ற தன் சுயமாகிய ஆத்ம சொரூபமே ஆகும்.
மனம் எப்போதும் ஒரு ஸ்தூலத்தை அனுசரித்தே நிற்கும் என்பதினால், அது இந்த பரு உடல் இல்லாமல் தனியாக இருக்க முடியாது. அதே சமயம், அந்த பரு உடல் உண்டாவதற்கான சூட்சும சரீரமே இந்த மனம் என்பதினால், இதைத்தான் நாம் ஜீவன் அல்லது ஜீவாத்மா என்று கூறுகின்றோம்.
இந்த பரு உடலில் ‘நான்’ என்றும், என்னுடையது என்றும் அஹங்கார, மமகாரம் கொண்டு உதிப்பது எதுவோ, அதுவே மனமாகும். அந்த ‘நான்’ எனும் நினைவு உண்டாவது இந்த உடலாகிய தன்மை தோன்றிய பிறகே, மற்ற முன்னிலை, படர்க்கைகள் உண்டாகின்றன. அதாவது, அவன், அவள், அது என்பதெல்லாம் ஏற்படுகின்றன.
அதனால், அதில் ‘நான் யார்?’ என்னும் ஒரு விசாரணை இந்த மனதிற்கு உண்டாவதனாலேயே அந்த மனம் தன்னை அறிந்து, தன் மூலத்தில் ஒடுங்கும்.
அதிலே, நான் யாரென்னும் ஒரு கேள்வியாக எழுகின்ற நினைவு, மற்ற எல்லா நினைவுகளையும் அழித்துவிடும்.
எவ்வாறு, கடல் நீரிலே பிறந்த உப்புக்கட்டி மீண்டும், அதே கடலில் கலக்க வேண்டிய நிலையில், அது தன் உருவத்தை இழந்து, கடல்நீரோடு, நீராக ஒன்றாகக் கலந்து அழிந்து விடுவதுப்போன்று, இந்த எண்ணங்களால் எழுந்த மனமும், தன் மூலமாகிய அறிவுடன் ஒன்றாகக்கலந்து அழிந்துவிடுகின்றது.
அதன்பிறகுதான் நம் உண்மை சொரூபம் வெளிப்படுகின்றது.
அதாவது, “நான் யார்?” என்று விசாரித்தால் மனம் தன் பிறப்பிடத்துக்குத் திரும்பி விடும். அத்துடன் அதனிடம் எழுந்த எண்ணங்களும் அடங்கிவிடும். இப்படிப் பழகப் பழக மனதுக்குத் தன் பிறப்பிடமாகிய அறிவில் நிற்கும் அற்புதசக்தி உண்டாகின்றது.
சூட்சுமமான கண்களுக்குப் புலப்படாத மனம், கண்களுக்கு தெரிகின்ற மூளை, இந்திரியங்கள், கொண்ட உடலின் வாயிலாக வெளிப்படும்போது, ஸ்தூலமான இந்த உலகமும், உலகத்தில் உள்ள பெயர்களும் உருவங்களும் உண்டாகின்றன.
அதுவே, அந்த மனம் தன் அஹங்காரத்தை இழந்து, தன்னை அந்த அறிவிடம் ஒப்படைக்கும்போது, இந்த உலகம் மறைந்து அறிவு பிறகாசிக்கின்றது.
அதாவது, இந்த உலகம் இல்லாமல் போவது என்பது, அறிவு இருப்பதினால்தான் இந்த உலகம் உண்டாகின்றது என்ற உண்மை விளங்குவது ஆகும்.
ஆக, மனத்தை வெளிவிடாமல் அறிவில் வைத்துக் கொண்டிருப்பதற்குத்தான் “அகமுகம்” அல்லது ‘அந்தர்முகம்’ என்று பெயர்.
எண்ணங்களால் எழும்போது, அறிவிலிருந்து மனம் வெளிப்படுவதற்குத்தான் ‘பகிர்முகம்’ என்று பெயர்.
இவ்விதமாக மனம் தன் சுயமாகிய அறிவில் நின்றால், அனைத்து நினைவுகளுக்கும் மூலமான ‘நான்’ என்பது நீங்கி, எப்போதும் இருக்கின்ற இருப்பாகிய ‘தான்’ என்ற அறிவு விளங்கும்.
ஒருவன் எதைச் செய்தாலும் ‘நான்’ என்னும் அகங்காரமற்றுச் செய்தால், அது அந்த அறிவின் அதி உன்னத இருப்பில்தான், இந்த உலகம் இருக்கின்றது என்பது உணரப்பட்டு, உள்ளது எல்லாம் அந்த உயரிய அறிவின் சிவ ஸ்வரூபமாய்த் தோன்றும்.
இந்த நிலைக்கு ஒருவன் உயர வேண்டுமானால், அவனுக்கு விசாரணையைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.
ஒருவன் அந்த விசார மார்க்கத்தின் உள்ளே வருவது என்பது, அவனது மனம் “ஆன்மவியல்” பாடங்களைப் படிப்படியாகப்பயின்று, பக்குவமடையும் போதுதான் அது நடக்கும்.
மற்ற மார்க்கங்களில் எல்லாம் மனம் அடங்கியதுப் போன்று இருந்து, மறுபடியும் மனம் வெளிப்பட்டு விடும்.
அது அறிவு நிலைக்கு உயர வாய்ப்புகளே கிடையாது.
அதாவது, ஒரு சிலருக்கு பிராணாயாமத்தாலும் மனம் அடங்கும். ஆனால், பிராணன் அடங்கியிருக்கும் வரையில் மட்டுமே அந்த மனமும் அடங்கியிருந்து, பிராணன் வெளிப்படும்போது தானும் வெளிப்பட்டு வாசனைகள் வசப்பட்டு அலையும்.
மனதுக்கும், பிராணனுக்கும் பிறப்பிடம் ஒன்றே, நினைவே மனதின் சொரூபம் என்பதினால், அதில் ‘நான்’ என்னும் நினைவே முதல் நினைவு.
அதுவே அஹங்காரம். அந்த அஹங்காராம் எங்கிருந்து உற்பத்தியாகிறதோ, அங்கிருந்துதான் மூச்சும் உதிக்கின்றது. ஆகையால், மனம் அடங்கும்போது பிராணனும், பிராணன் அடங்கும்போது மனமும் அடங்கும்.
ஆனால், ஆழ்ந்த உறக்கத்தில் அதே மனம் அடங்கியிருந்த போதிலும், பிராணன் அப்போது அடங்கவில்லை. காரணம், பிராணம் அடங்கினால், உடலில் உயிர் பிரிந்துவிடும். எனவே, உடலின் பாதுகாப்பு கருதி, அதில் உணர்வு இருப்பதற்காகவே பிராணம் அடங்குவதில்லை.
அதுவே, விழிப்பு நிலையாகிய, நிர்விகல்பசமாதி நிலையில் எண்ணங்களற்ற நிலையில் மனம் தன் சொரூபமாகிய அறிவில் அடங்குகிறபோது, அந்த பிராணனும் அடங்குகிறது.
அதாவது, இங்கு பிராணன் அடங்குவது என்பது மூச்சுக்காற்றில் வெளிப்படாமல், உடலிலுள்ள உயிரில் ஒடுங்குகின்றது.
அத்தகைய யோகியின் உடல் அழுகுவதில்லை. அதாவது, அந்த யோகியின் நாசியின் வழியே சுவாசம் இருக்காது. ஆக, பிராணன் என்பது மனதின் ஸ்தூல ரூபம் எனலாம்.
ஒருவனது மரணம்வரையில் மனம் தன்னுடைய ஸ்தூல உடலாகிய பிராணனை பரு உடலில் வைத்துக்கொண்டிருந்து, உடல் இறக்கும் காலத்தில் அதனைக் கவர்ந்துகொண்டு போகிறது. ஆகையால், பிராணாயாமம் மனதை அடக்க சகாயமாகுமேயன்றி மனோநாசம் செய்யாது.
அதுப்போன்றே, பிராணாயாமத்தைப் போலவே மூர்த்தித் தியானம், மந்திர ஜபம், ஆகார நியமம் என்பவையும் மனத்தை அடக்கும் சகாயங்களே ஆகும். அதிலே, மூர்த்தித் தியானத்தாலும், மந்திர ஜபத்தாலும் மனம் ஏகாக்கிரத்தை அடைகிறது.
அதாவது, மனமானது சதா சலித்துக் கொண்டேயிருக்கும். யானையின் துதிக்கையில் ஒரு சங்கிலியைக் கொடுத்தால், அது எப்படி வேறொன்றையும் பற்றாமல் அந்த சங்கிலியைப் பற்றிக்கொண்டு செல்லுமோ, அப்படியே மனதையும் ஏதோ ஒரு நாமம் அல்லது ரூபத்தில் பழக்கினால் அதையே பற்றிக்கொண்டிருக்கும்.
ஆதலால், மந்திர ஜப, தபங்கள் கூட மனதை தற்காலிகமாக மட்டுமே அடங்கச் செய்யும். அதுவே, ஜபம் முடிந்ததும் மீண்டும் தன் இயல்பான கோபம், பொறாமை போன்றவைகளில் ஈடுபாடுடன் இருக்கும்.
மனம் அளவற்ற நினைவுகளாய் விரிகின்றபடியால், ஒவ்வொரு நினைவும், அந்த மனதிற்கு அதிபலவீனமாகப் போகிறது.
அதுவே, அந்த மனதில் நினைவுகள் அடங்க அடங்க, அந்த மனம் ஏகாக்கிரத் தன்மை அடைந்து, அதனால் பலத்தை அடைந்த மனதுக்கு ஆன்மவியல் பாடங்கள் புரிய ஆரம்பித்து, ‘ஆத்ம விசாரம்’ அதி சுலபமாய் சித்திக்கும்.
இதுப்போன்ற பாதையில் பயணிக்க எல்லா நியமங்களினும் சிறந்த நியமம் எது? எனில், உடலுக்கு உண்ணும் உணவு மித சாத்வீக ஆகாரமாக இருக்க வேண்டும். அது ஒன்றே மனத்தின் சத்வ குணம் விருத்தியாகும் வழியைக் காண்பிக்கும். அத்துடன் ஆன்மவியல் பாடங்களைப் படிக்கின்ற ஆர்வமும் எழும்.
ஆகவே, ஆன்மவியல் பாடங்களைப் படிக்க ‘முடியுமா, முடியாதா?’ என்னும் சந்தேக நினைவுக்கு இடம் கொடுக்காமல், மனதை மயக்கும் மாயைகளில் இருந்து விடுபட வேண்டிய விசார மார்க்கத்தை அனுசரித்து, சொரூபத் தியானத்தை விடாப்பிடியாய்ப் பிடிக்க வேண்டும்.
ஒருவன் எவ்வளவு பாவியாய் இருந்தாலும், ‘நான் பாவியாய் இருக்கிறேனே! எப்படிக் கடைத்தேறப் போகிறேன்?’ என்று ஏங்கி அழுது கொண்டிராமல், தான் பாவி என்னும் எண்ணத்தை அறவே ஒழித்து, தன் உண்மை சொரூபத் தியானத்தில் ஊக்கமுள்ளவனாக மாற வேண்டுமானால், அவன் ஆன்மவியல் பாடங்களைப் படிக்கத்தான் வேண்டும்.
பொதுவாக, நல்ல மனம் என்றும் கெட்ட மனம் என்றும் இரண்டு மனங்களில்லை. மனம் ஒன்றே! வாசனைகளே நன்மை என்றும் தீமை என்றும் இரண்டு விதமாக வெளிப்படுகின்றது. மனம் நன்மைகளை நாடும்போது, சுப வாசனை வசப்பட்டு நல்ல மனமென்றும், தீமைகளை நாடும்போது, அசுப வாசனை வசப்பட்டு நிற்கும்போது கெட்ட மனம் என்றும் கூறப்படுகின்றது.
பொதுவாக, இந்த உலக விவகாரங்களில் முடிந்தவரை பிறர் காரியங்களிலும் மனதை நுழைக்கக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவர்களாகயிருந்தாலும், அவர்களிடத்தில் வெறுப்பு வரக்கூடாது.
விருப்பு - வெறுப்பு என்ற இருமைகள் இல்லாத மனம் உண்டானால்தான், பொறாமை விலகி, பிறருக்கு கொடுக்கப்பட்டவைகள் எல்லாம் தனக்கே கொடுக்கப் பட்டவைகள் என்பது புரிய வரும்.
இவ்வுண்மையை அறிந்துக் கொண்டவன் எப்படி கெடுவான்? அல்லது மற்றவர்களைத்தான் கெடுப்பான்?...
ஆகவே, ‘நான், எனது’ என்ற அஹங்கார, மமகாரமற்ற மனம் அடங்கினால், ஆன்மாவாகிய அறிவு தானாகவே எழுகின்றது. அந்த தானெழுந்தால் சகலமும் அடங்கும்.
எனவே, எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு நன்மையுண்டு.
மனதை அறிவுடன் அடக்கியவனுக்கு அனைத்தும் ஒன்றே! அவன் எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் இருப்பான். அவனால், இந்த சமுதாயம் சீர்படுமே தவிர சீரழியாது.
ஓம் தத் ஸத்!