அகத்தில் அறிவதே அறிவு!
உடம்பாகிய காட்டில் இந்திரியங்களாகிய ஐந்து சிங்கங்கள் வாழ்கின்றன என்று திருமூலர் கூறுகின்றார்.
அவை சதா புறத்தே சென்று புறப்பொருள்களைப் பற்றிய விஷய ஞானத்தைச் சேகரித்து உடலிடம் வைப்பதாகக் கூறுகின்றார்.
"அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும் போய் மேய்ந்தும் அஞ்சுக மேபுகும்".
உடலைச் சார்ந்த கருவிகளை மதம் பிடித்த யானைகளுக்குத் திருமூலர் பெருமான் ஒப்பிடுகின்றார்.
யானைகளுக்கு மதம் பிடிக்கும்பொழுது, அவைகளை ஊருக்கு வெளியே உள்ள, மக்கள் நடமாட்டம் இல்லாத, கோட்டைப் பகுதியிலே விட்டுவிடுவார்கள்.
அதேபோன்று, மனிதனின் புற இந்திரியங்கள் புறப்பொருள்கள் மீது நாட்டம் கொண்டு செல்ல முயலும்போது, அவற்றை அவனது அறிவால் அடக்கி வைக்க முயற்சிக்கிறான்.
ஆனால், அவைகள் அவனிடமிருந்து தப்பி ஓடி வெளியே வந்து விடுகின்றன.
அவைகள் உடம்பையே அழித்துத் திமிர் கொண்டு அலைகின்றன என்றும் திருமூலர் பெருமான் கூறுகிறார்.
மேற்கூறிய அறிவைத் தவிர வேறு எத்தகைய அறிவும் இல்லை என்று மனிதனின் உள்ளத்திலே ஓர் எண்ணம் எழுவதும், அந்த அறிவின் விளைவே என்பதை அவன் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
உண்மையில் வேறு ஒரு அறிவு உள்ளது.
நாம் இப்பொழுது புறத்திலிருந்து பெற்றுள்ள அறிவைச் சிற்றறிவு என்றும், அகத்திலுள்ள அறிவைப் பேரறிவு என்றும் குறிப்பிடுவது வழக்கம்.
அத்தகைய புறத்திலிருந்து பெற முடியாத, அகத்திலுள்ள பரம்பொருளைப் பற்றிய அறிவு முழுமையான அறிவு எனப்படும்.
நாம் கருவி கரணங்களைப் பயன்படுத்திப் பெறும் அறிவு பகுதி அறிவாகும்.
விஞ்ஞான அறிவு மனிதனுக்குக் கொடுக்கும் அறிவு பகுதி அறிவுதான்.
ஒரு பொருளைப் பற்றி ஒருவன் தொடர்ந்து விசாரித்துக் கொண்டே போனால், அந்த விசாரணையின் வழியாக அவனுக்குப் பற்பல அறிவு கிட்டலாம்.
ஆனால், இத்தகைய அறிவு உடலுடன் இயங்கும் கருவி கரணங்களின் வழியாகப் பெறப்படும் அறிவாகையால் இது இடம், காலம் முதலியவற்றால் கட்டுப்படுத்தப்பட்டது.
நான் என்கிற தன்முனைப்பின் அழுத்தத்தால் வெளிப்படும் அறிவின் திறம் மனிதனிடம் குறைந்த ஆற்றலையே பிரதிபலிக்கும் தன்மையுடையது.
முழு அறிவு என்பது ஒரு மிகப்பெரிய வட்டமாகும். பகுதி அறிவு இந்த வட்டத்தில் எங்கோ ஒரு சிறிய பகுதியை இடம் கொண்டதாகும்.
சிற்றறிவு என்றுமே முழுமையான அறிவாகாது. அதே நேரத்தில் முழு அறிவாகிய பெரிய வட்டம் சிற்றறிவுப் பகுதிகளைத் தன்னுள் அடக்கி நிற்கும்.
முழு அறிவாகிய பெரிய வட்டத்தின் தன்மையை மாற்ற முடியாது. அது நிலையான தன்மை பெற்றது. சிற்றறிவுப் பகுதிகளின் தன்மை மாறிக் கொண்டே இருக்கும்.
அதையே விஞ்ஞான வளர்ச்சி என்கிறோம்.
விஞ்ஞான அறிவு வளர வளர மனிதன் முன்பு பெற்றிருந்த அறிவை ஆழப்படுத்தியும், அகலப்படுத்தியும் புதிய உண்மைகளைச் சேகரித்துக் கொள்கிறான்.
ஆனாலும் இவ்வாறு மனிதன் பெறும் அறிவு முழுயைமான அறிவாறகாது.
அந்த மனிதனை ஒரு மயக்கத்திலே ஆழ்த்தும்.
அத்தகைய அறிவின் வளர்ச்சி ஆற்று வெள்ளத்தோடு போகும் பொருட்களைப்போன்று, அவனைக் கட்டுக்கடங்காத நிலைக்கு அழைத்துச் செல்லும்.
இந்த அறிவைப் பெறுவதும், இந்த அறிவினால் இன்பத் துன்பங்களை அநாதி காலம் முதல் தாங்கி அனுபவிப்பதும் உயிராகும்.
உயிர் அறிவுடைய பொருள்தான்.
ஆனால், அதனுடைய அறிவாற்றல் சிறியது. ஐந்து இந்திரியங்கள், ஐம்புலன்கள் உட்கருவிகள் போன்றவை இல்லாத இடத்தில் உயிரின் அறிவாற்றல் இயங்குவதற்கு வழியே இல்லை.
உயிரினுடைய அறிவாற்றல் வட்டம் மிகவும் சிறியது. ஆனால், பேரறிவாகிய இறைவனின் வட்டம் மனிதனின் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மிகவும் பெரியது.
இதை உணரும்பொழுது மட்டுமே, மனிதன் எல்லாமே என்னுடைய அறிவு, எனது அறிவின் சாதனையே சாதனை என்றெல்லாம் இறுமாப்படைவது அவனது சிறுமையை எடுத்துக்காட்டுகிறது.
மனிதனே எல்லா அறிவுக்கும் சொந்தக்காரர்கள் என்பது ஒரு பெரிய வேடிக்கை அல்லவா என்கிறது திருவருட்பயன்.
"பொறிஇன்றி ஒன்றும் புணராத புந்திக் (கு)
அறி (வு) என்ற பேர்நன் (று) அற".
பேரறிவினைப் பற்றித் தம்முள் உணர்ந்துக்கொண்ட அருளாளர்கள் இத்துடன் நிற்பதில்லை.
முழுமையான அறிவே உண்மையான அறிவென்றும் மற்றதெல்லாம் அறியாமை என்றும் கூறுகிறார்கள்.
ஏனெனில், உடலின் கருவி கரணங்களைப் பற்றி மனிதன் பெறும் அறிவு உடலையே சார்ந்திருக்கும்.
ஆகையால் உடலைப் பற்றிய அறிவு பரம்பொருளைப் பற்றிய அறியாமை நிலைக்கு மனிதனைத் தள்ளி விடுகிறது.
அதாவது, தனக்கு வேண்டிய ஒன்றைப் பார்க்கும்பொழுது மற்றதைப் பார்க்க, உள்ளத்திலே ஆவல் எழும்பாது.
அந்த அறிவு பாசத்தோடு சம்பந்தப்பட்ட அறிவாகும்.
அதாவது, உயிரைச் சார்ந்த ஆணவம், கன்மம், மாயை போன்ற மலங்கள் அந்த அறிவுக்கு ஒரு உருவத்தைக் கொடுக்கின்றன.
மனித மனம் அந்த உருவத்திலே ஈடுபட்டு விடுகின்றது.
உருவம் எத்தகைய மூலப்பொருளினால் செய்யப்பட்டிருக்கின்றது என்று அறிந்துகொள்ள அங்கு ஆவல் எழுவதில்லை.
ஆகவே, உருவத்தைப் பற்றிய அறிவு ஒரு அறியாமையாகும்.
யானைப் பொம்மையைப் பார்க்கும் ஒரு குழந்தைக்கு அது மரத்தால் செய்யப்பட்டுள்ளது என்கிற உணர்வு தோன்றுவதில்லை.
அவ்வாறே, பல தங்க ஆபரணங்களைப் பார்த்து அதிசயப்பட்டு நிற்கும் பெண்மணிக்கு அவற்றின் மூலப்பொருள் தங்கமே என்கிற உண்மை தோன்றுவதில்லை. அந்த அளவுக்கு அவள் அந்த ஆபரணங்களின் அழகில், வேலைப்பாட்டில் தனது மனத்தைப் பறிகொடுத்து விடுகிறாள்.
உண்மை அறிவின் முன் நாம் பெற்றுள்ள அறிவெல்லாம் அறியாமைதான் என்கிறார் திருமூலர்.
இந்த அறிவு, அறியாமை ஆகிய நிலைகளுக்கு அப்பால் ஒரு நிலை உள்ளது. அதுவே ஒரு பேரறிவு நிலை. அதுவே, பேரனுபவ நிலையுமாகும்.
அந்தப் பேரறிவு நிலை சூரியனின் ஒளிப்போல மற்ற எல்லா அறிவு நிலைகளையும், இருளிலிருந்து மீட்டு பிரகாசப்படுத்துகிறது.
அந்த அறிவு நிலைக்குச் சமமாக வேறொன்றுமில்லை. அது பேரானந்தத்தைக் கொடுக்கும்.
நன்றி!