ஈஸ்வரன், மாயை, ஜீவன் மற்றும் ஆத்மா எனக்கூறி, இவைகளெல்லாம் ப்ரஹ்மத்திற்கு வேறாக இல்லை என்று மனம் ஏற்றுக்கொண்டாலும், அந்த மனம் அதிலேயே, திடமாக இல்லாதற்குக் காரணம், ஆத்மாவானது மாயையுடன் சேர்ந்துதான் ஈஸ்வரன் ஆகிறது, என்றும், அந்த ஈஸ்வரன் என்பவன் மாயை என்றும் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதே ஆகும்.
அதாவது, ப்ரஹ்மத்தின் பிரதிபிம்பம் சத்வ குணத்திலே பிம்பிக்கும் போது, அது ஈஸ்வரன் என்றும், ரஜோ குணத்திலே பிம்பிக்கும்போது, அது ஜீவன் என்றும், தமோ குணத்திலே பிம்பிக்கும் போது, ஆவரணம் - விக்ஷேபம் என்ற இரண்டு சக்திகள் வெளிப்பட்டு, ஜீவர்களுக்கு தன்னை அறிந்து கொள்ள முடியாதவாறு மறைப்பையும், த்வைதங்களுடன் கூடிய ஜகத்தையும் தோற்றுவித்துக் கொள்கிறது என்றும் சாஸ்திரம் சுட்டிக்காட்டுகிறது.
இதிலே, பரஹ்மம் ஒன்று மட்டுமே உள்ளபோது, அதற்கு வேறாக, அது தன்னை பிரதி பிம்பித்துக்கொள்ள மற்றொன்று எங்கிருந்து வந்தது?...
அதாவது, ப்ரஹ்மம் ஒன்றே! அதற்கு வேறாக எதுவுமே இல்லை.
அப்படியானால், அது எதில் பட்டு பிரதிபிம்பிக்கிறது?
அதாவது, ஒன்றேயாகிய ப்ரஹ்மம் தன்னுடைய சக்தியின் மூலம், (எவ்வாறு ஒரு சிலந்தி பூச்சி தனக்கு வேறாக எதையும் எதிர்பாராமல், தன்னிடம் உள்ள எச்சில் மூலம் வலையை உண்டாக்கி, அந்த வலையிலேயே அங்கும், இங்கும் நகர்ந்து விளையாடுகிறது. அதுப்போல), மனதைப் படைத்து, அதிலே மூன்று குணங்களை உண்டாக்கி, அந்த குண பேதங்களின் வாயிலாக ஈஸ்வரனையும், ஜீவனையும் படைத்துக் கொள்கிறது.
இதிலே, ஈஸ்வரனும், ஜீவனும் ஒரே த்வைதம்.
ஆனால், ஆத்மா (ப்ரஹ்மம்) ஒரே அத்வைதம்.
அதனால், ஜீவத்வத்துக்குக் காரணமான மனதையும், ஜீவபாவம் அற்ற ஆத்மாவையும் சம்பந்தப்படுத்தமுடியாமல் இது எப்படி சாத்தியம்? அதெப்படி சாத்தியம்?’ என்று கேள்விகள் எழுகின்றன.
இங்கேதான் 'ஈஸ்வரன்' வருகிறான்.
ஈஸ்வரன் எப்படியிருக்கிறான்?
த்வைதத்துக்கும், அத்வைதத்துக்கும் ஒரு பாலம் போன்று இருக்கிறான்.
அதாவது, குணாதிசயங்களால் பிரிவினைக்கு உட்பட்டுள்ள மனதை சத்வ குணத்திற்கு உயர்த்தும்போது, ஒன்றையொன்று தொட்டுக்கொள்ள முடியாத த்வைதம் – அத்வைதம் என்ற இருமைகளைக் கடந்து, அத்வைதமான ஆத்ம ஸ்வரூபமாக தன்னை அறிய ஆர்வம் காட்டுகிறது.
அதற்கு ஆதாரமாக ஈஸ்வரன் உள்ளான்.
வெளியிலே, த்வைதமான இத்தனை ப்ரபஞ்ச நாடகக் கூத்தும் நடத்துகின்ற ஈஸ்வரன், நம் மனதை மாயா சக்தியின் மூலம் ரஜோ குண கட்டுக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கிறான்.
ஆனால், சத்வ குணத்திலே உள்ள ஈஸ்வரன் தன் மனதினால் கட்டுப்பட்டவன் அல்ல.
ஆத்மாவானது மாயையோடு சேர்ந்துதான் ஈஸ்வரன், ஜீவன் என்ற இருவருமே உண்டாயிருந்தாலும், ஜீவன்தான் மனதிடம் ரஜோ குணத்திலே மாட்டிக்கொண்டு, ஈஸ்வரனை அறிய முடியாத மறைப்பில் இருக்கிறான்.
ஆனால், ஈஸ்வரன் அப்படி மனதினால் பந்தப்படுத்தப்பட்டவன் அல்ல.
அவனது இயல்பான குணம் சத்துவம் என்பதினால், இந்த உலக விவகாரங்கள் எல்லாம் திட்டம்போட்டுச் செய்யும் பிரபஞ்சமனதாகிய (Cosmic Mind) ஈஸ்வரன் எதனாலும் பந்தப்படுவதில்லை.
ஆனால், அறியாமையிலே ஜீவர்களாகிய நாம், ரஜோ குணத்தினால், நான் செய்கிறேன், இது என்னுடையது என்று அஹங்கார, மமகாரங்களினால் மாயை ஆகிய மனதிடம் மாட்டிக்கொண்டு மயக்கத்தினால் பந்தத்திற்கு உட்பட்டு இருக்கிறோம்.
அதுவே, மாயை ஆகிய ஈஸ்வரனுக்கு, அவனைக் கட்டுப்படுத்தகிற உபாதியாக அவனது பிரபஞ்சமனம் இல்லை.
காரணம், ஈஸ்வர மனம் தன்னை அறிந்து அதிலேயே (ப்ரஹ்மத்திலேயே) இலயித்து இருக்கிறது.
அதனால், ஈஸ்வரனால் எதையும் செய்ய முடியும்.
நம் புத்திக்குப் புரியாததெல்லாம் ஈஸ்வரனுக்கு (பிரபஞ்சமனதிற்கு) சாத்தியம்.
ஜீவ மனதோ, புத்தியோ அந்தக்கரணமோ எப்படி இதைச் செய்ய முடியும்? அல்லது அதைச் செய்ய முடியும்?’ என்று கேள்வி கேட்பது போல, 'ஈஸ்வரன்' எப்படி, எதைச் செய்வான்? என்று கேள்வி கேட்க முடியாது.
ஈஸ்வரன் மனதினால் கட்டுப்படாதவனாதலால், அவனால், எதையும் செய்ய முடியும்.
ஜீவன் தன் அந்தக்கரணத்தைக் கொண்டு என்ன முயற்சி செய்ய முடியுமோ, அந்த அளவுக்குத்தான் செய்ய முடியும்.
அவ்வாறு, அந்த ஜீவன் அறியாமையிலே அனைத்தையும் செய்வதும், அறிவாக தன்னை (ஆத்மாவை) அறிந்துக் கொள்வதும், என எல்லாமே அவன் அருளால் (ஈஸ்வரன்) மட்டுமே சாத்தியம் ஆகிறது.
அதாவது, ரஜோ குணத்தினால், ஜீவபாவத்தின் உச்சிக்குப் போன ஒருவன் அறியாமையினால், ஆத்மாவைத் தொடமுடியவில்லை என்று கண்டுகொண்டு, சத்துவ குணத்திற்கு தன்னை உயர்த்திக் கொள்ள முயற்சித்து, ஆத்மானுபவத்துக்குத் தவிக்கும்போது, ஜீவபாவத்தை அழித்து, இந்த்ரிய – மனோ – புத்திகளை இல்லாமல் செய்து, தன்னுடைய உள் ஸ்வரூபமான ஆத்மாவிலேயே ஈஸ்வரன் அந்த ஜீவனை ஐக்யப்படுத்திக்கொள்கிறான்.
இது, மனம் சத்வ குணத்திலே சதா நிற்கின்ற பொழுது மட்டுமே, மாயை ஆகிய ஈஸ்வரனை கடந்து, மகத்தான அந்த அறிவை (ப்ரஹ்மத்தை) ஐக்கியமாக்கி, அனுபவமாக்கவும் முடிகிறது.
ஓம் தத் ஸத்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக