புதன், 27 ஜூலை, 2022

Education (கல்வி)




        அறியாமையிலிருந்து விடுபட்டு, அறிவாய் தன்னை அறிவதே “அறிவு” அல்லது ஞானம் என்று அறியப்படவேண்டும்.
        இதிலே, அறியாமை என்று எதைக் கூறுவது?
        மனதில் ஏற்றிவைத்துக் கொண்ட ஏராளமான எண்ணங்களையே அறியாமை என்று கூறப்படுகிறது.
        இது என்ன முரண்பாடாக இருக்கிறதே!...
        புறத்திலிருந்து ஏற்றிவைத்துக்கொள்கிற எல்லா படிப்பினைகளும் நமக்கு கற்றுக்கொடுப்பதுதானே “அறிவு” என்றல்லவா நினைத்துக்கொண்டு இருக்கிறோம். அதனால்தானே அவைகள் அனைத்தையும் மனதில் ஏற்றி வைத்துக்கொள்கிறோம். அதிலே, அனேக பாடங்களை மனப்பாடப்பகுதிகளாகப் படிக்கவும் செய்கிறோம்.
        அவ்வாறு கற்றவைகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் (இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், வணிகவியல், பொறியியல், சட்டம்) பல பட்டங்களை வேறு பெற்றுக் கொள்கிறோம்.
        அதை வைத்துத்தான், நாம் உயிர்வாழத்தேவையான வயிற்றுப் பிழைப்பும் நடத்தி வருகிறோம்.
        அதிலேயும், ஓய்வு இல்லாமல் கற்றுத்தருகின்ற கல்விக் கூடங்களை மட்டும்தான் சிறந்த பள்ளிக்கூடம் என்று நாடுகிறோம்.
        அத்துடன், ஆங்கிலம் என்பது வெறும் மொழி அறிவுதான் என்பதை அறியாமல், அவசியம் மெட்ரிக் பள்ளிகளிலேயே நம் குழந்தைகளைப் படிக்க வைக்கிறோம்.
        அத்துடன், அவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டால் சரியாகப் படிக்க மாட்டார்கள் எனக்கருதி, அந்த பள்ளியின் விடுதியிலேயே தங்க வைத்து அல்லும், பகலும் அயராது அவர்களைப் படிக்க வைக்கிறோம்.
        அதன்வாயிலாக, அவனோ அல்லது அவளோ ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றுக் கொண்டு வந்துவிட்டால், அவன் - அவள் மெத்தப் படித்தப் பட்டதாரி அல்லது அறிவாளி என்று கருதுகிறோம்.
        இதுதானே இன்றைய உண்மை!...
        இதனையெல்லாம் அறியாமை என்றால், ஆக “அறிவு” என்பது என்ன?
        இதுவரை நாம் எதையெல்லாம் அறிந்து வைத்துக் கொண்டிருக்கிறோமோ? அல்லது எண்ணங்களாக ஏற்றி வைத்துக் கொண்டிருக்கிறோமோ?, அவைகள் அத்தனையையும் அறிவதற்கு, ஆதாரமாக எது? உள்ளதோ, அதை அறிந்துக் கொள்வதே “அறிவு” எனப்படுகிறது.
        அதாவது, “எதை அறிந்துக் கொண்டால், வேறு எதையும் அறியத்தேவை இல்லையோ, அதை அறிவதே அந்த ‘அறிவு’.” என்பதை அறிந்துக் கொள்வதுதான் ‘கல்வி’ எனப்படுகிறது.

                                        🙏                      நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்