ந கர்மணா ந ப்ரஜயா தனேன த்யாகேநைகே: அம்ருதத்வமானசு: |
பரேண நாகம் நிஹிதம் குஹாயாம் விப்ராஜதே யத்யதயோ விசந்தி ||
மரணமற்ற நிலையை அடைவது என்பது, செல்வத்தினாலோ, கர்ம, காரியங்களான யாக, யஞ்ஞங்களை செய்வதினாலோ, சந்ததிகளாகிய வாரிசுகளினாலோ, அல்லது பொருள்களை மற்றவர்களுக்கு உதவுவதினாலோ இயலாத காரியம்.
ஆனால், மரணமற்ற பெருவாழ்வைப் பெருவது, “தியாகம்” ஒன்றினால் மட்டும்தான் சாத்தியமாகும்.
எது? சொர்க்கத்தைக் காட்டிலும் மேலானதோ, மனதில் வெளிப்படுகிறதோ, தன்னில் தானாய் பிரகாசிக்கிறதோ, அதையே சாதகர்கள் அடைகிறார்கள் என்கிறது இந்த மந்திரம்.
இதிலே, “தியாகம்” என்றால் என்ன?
தியாகம் என்பது வெளிப்பொருள்களைத் துறப்பது என்பதாகப் பலரும் கருதுகின்றனர்.
ஆனால், அப்படியல்ல! உண்மையில் ஏற்றி வைக்கப்பட்ட ஏராளமான எண்ணங்களின் தொகுப்பாகிய மனதைத் துறப்பது மட்டுமே “தியாகம்” எனப்படுகிறது.
அதாவது, மனதின் ஆசாபாசாங்களை தியாகம் செய்யவேண்டும்.
எப்படி? அதை ஒவ்வொரு எண்ணமாகச் செய்ய இயலுமா?
எண்ணங்களற்ற மனம் நிர்மலம் அல்லது நிர்குணம் ஆகும்போதுதான், அந்த அறிவு (ஆன்மா) பிரகாசிக்கும்.
எண்ணங்களற்ற மனம் நடைமுறையில் சாத்தியமாகுமா?...
பிறகு, அது எப்படி சாத்தியம் ஆகும்?
அதாவது, ஒருவன் ஒரு செயலை செய்ய முற்படும்போது, மனம் அந்த குறிப்பிட்ட ஒரே செயலில் மட்டுமே, முழுமையாகப் பொருந்தி இருக்குமாறு, அச்செயலைச் செய்ய வேண்டும்.
அப்போது, மனம் அந்த ஒரே செயலில் முழுமையாக ஒன்றி இருக்கும். மற்றவற்றில் கவனச் சிதறல் ஏற்படாது இருந்தால், அந்த நிலைக்குப்பெயர் ‘இருப்பு’ அல்லது “நிகழ்வு” எனலாம்.
அத்தகைய மனதின் ஒருமித்த நிலையில், மற்ற தேவையற்ற எண்ணங்கள் எழாதவாறு தவிற்பதையே “தியாகம்” என்கிறோம்.
இதைத்தவிர்த்து, மனம் கடந்த காலத்திலோ, அல்லது எதிர்காலத்திலோ இருந்தால், அதற்குப்பெயர் ‘ஆசாபாசங்கள்’ அல்லது ‘வாசணைகள்’ அல்லது ‘சங்கல்பங்கள்’ எனலாம்.
அதாவது, எந்த நிலையில் சங்கல்பங்கள் மற்றும் வினைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடுகின்றனவோ, அந்த நிலையில் உள்ள முழுமையான சந்நியாஸமே இங்கு “தியாகம்” எனப்படுகிறது.
த+இய+அகம் = தியாகம்.
'த' என்பது 'அந்த' எனப்பொருள்படும்.
'இய' என்பது 'இயல்பாக' உள்ளது என்பதையும்,
'அகம்' என்பது 'உளப் பூர்வமாக' என்பதையும் குறிக்கும்.
ஆக “தியாகம்” என்றால், ‘இயல்பாக, உளப்பூர்வமாகச் செய்வது’ என்பது பொருள்.
எதனை? இயல்பாக உளப்பூர்வமாகச் செய்வது?
அலைப்பாய்ந்துக் கொண்டிருக்கும் மனதை, நிகழ்காலத்தில் நிற்கச் செய்து, செய்கின்ற செயலை அக்கணத்தில் சிறப்பாகச் செய்தால், அதன் காரணமாக, மனதில் உதிக்கும் மற்ற எண்ணங்கள் தவிற்கப்படும்.
அவ்வாறு, நிகழ்காலத்தில் நினைவைத் துறத்தலே “தியாகம்” என்று அறியப்படவேண்டும்.
ஆக, இந்த மனம் என்கிற மாயையைத் துறக்கின்ற தியாகத்தினால் மட்டுமே, மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறமுடியும் என்கிறது சாஸ்திரம்.
நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக