நேற்று இரவு நீங்கள் தூங்கச் சென்றவுடன், தங்களது ஆழந்த உறக்கத்தில், இந்த பிரபஞ்சம் மறைந்து விடுகிறது. அப்பொழுது, நீங்களும் இல்லை, இந்த பிரபஞ்சமும் இல்லை.
அதுவே, உங்கள் உணர்வு விழித்துக் கொண்டவுடன் மீண்டும், இந்த பிரபஞ்சம் உதிக்கின்றது. இவ்வாறு, தினம், தினம் இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்டு, காக்கப்பட்டு, அழிக்கப்படுகிறது.
யாரால்? படைக்கப்பட்டு, காக்கப்பட்டு, அழிக்கப்படுகின்றது…?
அது, நம் மனதால்தான் என்றால், நம்ப முடிகிறதா?
அதனால், மனத்தைப் புரிந்துக்கொண்டு, அதில் ஏற்றி வைக்கப்பட்ட தவறான எண்ணங்களில் இருந்து விடுபட்டு, தெளிவான உள்ளத்தைக் கொண்டு, நம் உள்ளே விரிந்திருக்கும் அகவெளியில் (வெட்டவெளியில்) நிலைக்கொண்டு, நின்றுப் பார்த்தால்தான் நம்மைப் பற்றியும், இந்த உலகத்தைப் பற்றியும், இந்த உலகத்தில் வாழும் மற்றவைகளைப் பற்றியும், அந்த மற்றவைகளுடன் வாழும் மக்கள் பற்றியும், அந்த மக்களைக் கொண்ட பூமியைப் பற்றியும், இந்த பூமியைப் போன்றே உள்ள மற்ற கோள்களைப் பற்றியும், மற்றும் அனைத்து அண்ட சராசரங்கள் அடங்கிய இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றியும் நமக்குத் தெளிவாக விளங்கும்.
ஆம்!, நம் மனமே ஈஸ்வரன். மனமே சக்தி. மனமே குரு.
அப்போது மட்டும்தான், மனப் பேய்களாகிய காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற எண்ணற்ற எண்ணங்களாக, நம் மனதில் ஏற்றி வைத்துக்கொண்டு, மற்றவர்களைப் புண்படுத்தும் புற நடவடிக்கைகளான இதுப்போன்ற இழிகுணங்களிலிருந்து நாம் முழுமையாக விடுபட முடியும்.
அத்துடன், நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் அன்பின் அடிப்படை உருவாக்கம் என்னும் பேருண்மையும் விளங்கும்.
நம் ஒவ்வொருவரின் உள்ளே விரிந்திருக்கும், அந்தப் புனிதமான, எல்லையற்ற அகவெளியில் புகுந்து, காலமும் இடமுமற்ற, தொடக்கமும் முடிவுமற்ற அகண்டத்தை அனுபவமாக்க வேண்டாமா?
மனதின் பார்வையில் இருள் போலத் தோன்றும் வெட்டவெளி, அதே மனதின் எல்லையைக் கடந்த நிலையில், அந்தப் பேருணர்வுப் பெருவெளி நம் உள்ளத்தின் உள்ளே ஒளிமயமாய் பிரகாசித்துக் கொண்டிருப்பதை அனுபவமாக உணர வேண்டாமா?
அந்த பேரண்ட பேருணர்வு வெளி, மனித உடலில், நம் உள்ளத்தில் சிதாகாசமாக நிலைக்கொண்டு, தன் பேருணர்வு, பேருண்மை சக்தியை, தன்னுணர்வு என்று, தனித்து தவறாக நாம் உணரக்கூடிய சாதாரண நிலையிலிருந்து விடுபட்டு, அந்த அகண்டமான சத்சிதானந்த உணர்வாக ஒன்றாக உணரக்கூடிய உன்னத நிலைக்கு நாம் உயர வேண்டாமா?
இன்று நம்முடைய அனைவரின் வாழ்விலும் நிறைந்திருக்கும் துன்பங்கள் முடிவுக்கு வரவேண்டும் என்றால், நமக்குள்ளேயுள்ள அந்த சுத்தப் பிரக்ஞையை விழிக்கச் செய்வதில் மட்டும்தான் இருக்கிறது.
அவ்வாறு, விழித்துகொண்ட ‘சுத்தப் பிரக்ஞை’ தன்னுடைய சுயம்பிரகாசத்தினால், ஆழ்மன இருளை அகற்றி, ஆனந்தத்தில் திளைக்க வைக்கும்.
மேலும் மேலும் பலரின் பிரக்ஞையில் இந்த விழிப்பு ஏற்பட, ஏற்பட இந்த உலகம் விழித்துக் கொள்ளும்.
மனித இனத்தின் அனைத்து விதமான துயரத்துக்கும் இறுதியான முடிவு இது ஒன்று மட்டும்தான்.
ஓம் தத் ஸத்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக