ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

இறைவன் மஹத்தானவன்!

 மஹத்

=======



[இறைவன் மஹத்தானவன்]

இன்றைய நவீன விஞ்ஞானம் இதுபோன்ற சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு, அதன் பாணியில், இதை மேட்டர் மற்றும் எனெர்ஜி” (Matter and Energy) என்று கூறுகின்றது.


அதாவது, மேட்டர் என்ற பொருள் நம்முடைய சனாதன தர்மத்தில் கூறப்பட்ட பரம்பொருள் (சிவம்) என்பதாகவும், எனெர்ஜி என்பது, ஆற்றல் அல்லது சக்தி என்பதாகவும் உள்ளது.

 

E = MC2

E = Energy (ஆற்றல் அல்லது சக்தி)

M = Mass (or) Matter (பொருள் அல்லது சிவம்)

C2 = Speed of Light (அறிவொளியின் விரிவு     அல்லது வேகம்)

 

ஆக, நவீன விஞ்ஞானம் கூறுவதுப் போன்று ஒரு ஆற்றலை (சக்தியை) ஆக்கவோ, அழிக்கவோ, முடியாது, ஆனால், ஒரு ஆற்றலை வேறொரு ஆற்றலாக மாற்ற முடியும் என்பதே.

 

இதன் அடிப்படையில் பார்த்தாலும், இந்த புத்தி சக்தி என்பது, ஒரு அறிவு தாவரத்தில் தொடங்கி, ஆறு அறிவு படைத்த மனிதன் வரை பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட மாறுதலுக்கு உட்பட்டே இருக்கின்றது.

 

எனவே, இந்த சக்தி மாற்றம் என்பது, ஒரு அறிவிலிருந்து, ஆறு அறிவு வரை விரிந்துக் கொண்டே உள்ளதினால், இந்த பிரபஞ்சம் என்பதின் புத்தி சக்தி (மஹத்) விரிந்துக்கொண்டே போகின்றது என்கின்றது நவீன விஞ்ஞானம்.

 

ஆக, பிரக்ருதியானது இன்னமும் விரிந்த நிலையில் மஹத் என்னும் அறிவு நிலையை மேம்படுத்திக்கொண்டே உள்ளது.

 

அந்த அறிவின் விரிவு நிலையே, அதில் படைக்கப்பட்ட உயிரினங்களில் ஒரு அறிவு முதல், ஆறு அறிவு வரை பிரகாசிக்கின்றது.

 

அந்த அறிவு பிரகாசிக்கின்ற உடல்கள் என்பதில், அந்தந்த உயிரினங்களிடையே உள்ள புலன்கள் மற்றும் மனதின் சக்தியைப் பொருத்து மாறுபடுகின்றது.

 

ஆக, இந்த சக்தியை ஆக்கவோ, அழிக்கவோ, முடியாது, ஆனால், மாற்றத்திற்கு உட்படுத்த முடியும் என்பதற்கு ஏற்ப, பல்வேறு உபாதிகளாகிய உடல்கள் மூலம் அறிவு விரிந்துக் கொண்டே போகின்றது.

 

அதே சமயம், அதன் அறியும் திறனில் ஏற்படும் வித்தியாசம் என்பது, படைக்கப்பட்ட உடல்களைப் பொருத்துத்தான் உள்ளதே தவிர, அந்த அறிவில் எந்த மாற்றமும் இல்லை.

 

அதாவது, ஒரு கணித சூத்திரத்தில், எந்த, எந்த எண்களை மாற்றி, மாற்றி கொடுக்கிறோமோ, அந்தந்த எண்ணிற்கு ஏற்றவாறு விடைகள் சரியாக கிடைக்கும்.

 

அதாவது, சூத்திரத்தில் கொடுக்கப்படுகின்ற எண்களுக்கு ஏற்றவாறு, அதன் விடைகள் மாறி, மாறி வந்தாலும், அது சரியாக இருக்க, அந்த சூத்திரம் மட்டும் மாறாமல் இருக்க வேண்டும்.

 

அதுப்போன்று, படைக்கப்பட்ட உடல்களின் வித்தியாசங்களைப் பொருத்து, அதில் பிரகாசிக்கும் புத்திசக்தி, மாறி, மாறி இருந்தாலும், அதற்கு ஆதாரமான அந்த அறிவு மட்டும் மாறாமல் அப்படியே இருக்கின்றது.

 

இப்படித்தான் இந்த பிரபஞ்சம் எதைப் படைத்து, எதைக்காத்து, எதை அழித்தாலும், அத்தனைக்கும் ஆதாரமான அந்த அறிவு மட்டும் மாறாமல் இருப்பதினால்தான், இந்த பிரபஞ்சம் நியதி மாறாமல் உள்ளது. இதைத்தான் ரிதம் என்று அழைக்கிறோம்.


ஆக, இந்த பிரக்ருதி உள்படப் பிரபஞ்சம் என்பது 24 தத்துவங்களில் அடங்கியிருக்கிறது.

 

இதிலே, பிரகிருதி என்பது முதல் தத்துவம்.

அதற்கு ப்ரதானம் என்றும் ஒரு பெயர் உள்ளது. அதிலிருந்து மஹத் என்ற இரண்டாவது தத்துவம் வருகிறது.

இது மனிதனிடம் காணப்படும் புத்தி சக்தி போன்றது. அதுபோல, இந்த பிரிகிருதியின் புத்தி சக்திதான் மஹத் எனப்படுகின்றது. இதை தமிழில் பேருணர்வு என்றும் கூறலாம்.

பிரக்ருதியோடு புருஷனை தொடர்பு படுத்துவது இதுவே. அதாவது, மாயையுடன் ப்ரஹ்மத்தை தொடர்பு படுத்துவது இந்த மஹத் என்ற அறிவுதான்.

இந்த அறிவிலிருந்தே, இந்திரியங்கள். மனம் உள்ளிட்ட மற்ற அனைத்தும் பிறக்கின்றன. அவைகள் மூலம் அனைத்தும் அறியப்படுகின்றன.

இந்த மஹத் என்னும் அறிவு நிலை உயிரினங்களுக்கு முக்குண அடிப்படையில், மூன்று விஷயங்களை உருவாக்குகிறது.

 

அது, தன்னுணர்வு நிலை (EGO), பிரித்து உணரும் நிலை (DISCRIMINATION) மேலும், இந்த இரண்டு நிலைகளையும் கொண்ட மனம் (MIND) என்னும் சிந்தனா சக்தி நிலை ஆகும்.

அஜாதவாதம்

 அஜாதவாதம் என்றால் என்ன?

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^



பக்திப் பாதையில் பயணிக்கின்ற பாமரனுக்கு “அநநன்ய பக்தி” என்பது என்ன? என்று தெரியாததால், துவைத பக்தியிலேயே இறுதிவரை இருந்து, இறந்தும் போகின்றான். 

இதன்காரணமாக, இவர்கள் மீண்டும் பிறப்பு - இறப்பு என்ற சம்ஸார சக்கரத்தில் சுற்றிக்கொண்டே இருக்கின்றனர். பிறவாப் பெருநிலையாகிய முக்தி என்ற பதத்தை இவர்கள்  இறுதிவரை அடைய முடியாமல் போகின்றது.

எனவே, எவன் ஒருவன் இறைவனை இருமைகள் கடந்து, ஒன்றேயாகிய ஏக இறைவனாக காண ஆசைப்படுகின்றானோ, அவனே, இறைவனும், நானும் பிரிக்க முடியாத பூரணம் என்றும், அந்த பூரணத்தில் இருந்து எதைப் பிரித்தாலும், அங்கு எஞ்சியிருப்பதும் பூரணமே என்று புரிந்துக் கொள்வான்.
 
பூரணம் என்றால், முழுமையானது. அந்த முழுமையில் இருந்து எதைப் பிரித்து எடுத்தாலும், அங்கு எஞ்சி இருப்பது முழுமையாகிய ‘இறைவன்’ மட்டுமே என்பதை ஏற்கின்ற பக்குவமுள்ள பக்தனுக்கு மட்டுமே ‘அத்வைதம்’ என்பதும், என்னவென்று புரிய வரும். காரணம் குறையுள்ள ஒன்றை யாரும் பூரணம் அல்லது முழுமை என்று கூறுவதில்லை. ஆகவே, இறைவன் முழுமையானவன் எனும்போது, அவனிடமிருந்து எதையுமே பிரிக்க முடியாது. 
      இவ்வாறு ஜீவன்கள் நாம் நினைத்துக் கொண்டிருப்பதுப் போன்று, பலவல்ல என்றும், ஒரே சைதன்யம்தான் எல்லாரிலும், எல்லா இடத்தும் பிரகாசிக்கின்றது என்றும், உன்னைத் தவிர வேறொரு ஜடப் பொருளும் கிடையாது என்று, அஜாதவாதம் அருமையான முறையில், அனைவருக்கும் தெள்ளத்தெளிவாக பல இடங்களில் எடுத்துரைக்கின்றது.

பொதுவாக, இந்த பௌதிக உலகில் வெளிப்படையாகத் தெரிகின்ற ஜீவன்களுக்குள் நிலவும் வித்தியாசங்களையும், ஞானம் - அஞ்ஞானம் என்ற இருமைகளின் அடிப்படையில் உண்டான வாதங்களுக்கு, நேரடியாக எந்த பிரதிவாதமும் காணப்படவில்லை என்றாலும், இந்த சம்வாதத்தின் அடிப்படையாக உள்ள ‘திருஷ்டி - சிருஷ்டி தத்துவம்’ இதுப்போன்ற சந்தேகங்களை இல்லாமல் செய்து விடுகின்றன.
 
ஆகவே, ‘அஜாதவாதம்’ என்ற, திருஷ்டி - சிருஷ்டி தத்துவத்தைக் குறித்து நல்லதோர் ஞானம் நமக்கு வேண்டும்.

1. அஜாத வாதம்

பிரபஞ்சம் என்று ஒன்று படைக்கப்படவேயில்லை. பிரபஞ்சம் என்பது மனித மனதின் சிருஷ்டியே. தேச, கால வேற்றுமைகள் என்பது நமது சங்கல்பங்களே. தேசம், காரண காரியங்கள், எல்லாம் நம் மனதில் தோன்றுபவைகள்தான். ஆத்மா ஒன்று தான் உண்மையாக உள்ளது. அதை நாம் புரிந்து கொள்ளும் பொழுது மட்டும்தான், நமது அஞ்ஞானம் விலகி, வெளிச்சம் ஏற்படுகிறது. அந்த ஒளியில் பிரகாசத்தினால், இந்த பிரபஞ்சம் மறைந்துவிடும்.

ஆன்மாவின் உண்மை சொரூபத்தை அறியாத நிலையில் நமது மனம் அவித்யையில் (அறியாமையில்) மூழ்கி நீ, நான், இது, அது என்ற வேறுபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டு, ஒரு மாயா உலகத்தை சிருஷ்டிக்கின்றது.

இது நாம் கனவுகளில் காணுகின்ற உலகத்திலிருந்து மாறுபட்டதல்ல.

விழித்தெழுந்திருக்கும் பொழுது அந்த உலகம் காணாமல் போய் விடும்.

நமது வாழ்விற்கும் நாம் காணுகின்ற கனவுகளுக்குமுள்ள வித்தியாசம் அவைகளுக்காக மனம் எடுத்துக் கொள்ளும் காலத்தைச் சார்ந்தது. அதனால், கனவு உலகம் என்பது, மனம் படைத்தவற்றில் காலம் சிறியதாகவும், நனவு உலகம் என்பதில், மனம் படைத்தவற்றில் சிறிது நீண்ட கால அளவுடையதாகவும் உள்ளது என்பது தான் அறியபப்ட வேண்டிய உண்மையாகும்.


2. திருஷ்டி - சிருஷ்டி வாதம்

முன்னர் கூறிய “அஜாத வாதம்” அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாமல், அதை ஜீரணிப்பது கடினமாக இருக்கும். இதையே, மற்றொரு விதத்தில் கூறுவதுதான் இரண்டாவது தத்துவம். அதை “திருஷ்டி சிருஷ்டி வாதம்” என்று எளிமையாக கூறப்படுகிறது.

இங்கே, எப்பொழுது “நான்” என்ற எண்ணம் உதிக்கின்றதோ, அப்பொழுது இந்த உலகம் உருவாகிறது. ஆக, நான் காண்கிறேன், நான் செய்கிறேன், நான் இங்கிருக்கிறேன், நான் சுகமாக இருக்கிறேன், நான் துக்கமாக இருக்கிறேன், என எல்லாம் “நான்” எனும் சிந்தையுடன் தொடர்பு உடையது.

‘தேஹமே நான்’ என்ற நினைப்புடைய நான், ‘நான் இங்கிருக்கிறேன்’ என்றால், இந்த தேகம் இங்கிருக்கிறது என்று பொருள். ‘எனக்கு வலிக்கிறது’ என்றால் இந்த தேகத்திற்கு வலிக்கிறது என்றர்த்தம்.

தேக அபிமானமான நான் மறைந்து உண்மையான நான் உதயமாகும்பொழுது மட்டுமே, இந்த தேச கால வித்தியாசங்கள் மறைகின்றன.
 
அப்போது மட்டுமே, இந்த உண்மையான ‘நானுக்கு’ வலியும் தெரிவதில்லை. ருசியும் தெரிவதில்லை. இதைத்தான், திருஷ்டி-சிருஷ்டி வாதம் என்று கூறுப்படுகின்றது. அஜாதவாதமேதான் இதுவும். ஆனால், வேறு விதமாக விளக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்!...
          இந்த உலகம் நம் திருஷ்டியில் தான் நிலை கொள்கிறது. நான் முதலில் தோன்றுகிறது; பிறகு உலகம் தோன்றுகிறது. உலகத்தை நம் மனது சிருஷ்டிக்கின்றது. நான் மறைந்தால் உலகமும் மறைகின்றது.
 
பெரும்பாலானவர்கள் இந்த உலகம் மறைகின்றது என்றவுடன் நம் கண்களில் இருந்து மறைந்து விடுவதாக கற்பனை செய்துக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம், அவர்களிடம் காணப்படுகின்ற உடற்பற்று என்ற அபிமானம் எனலாம். 

உண்மையில் இந்த உலகம் இல்லாமல் போகின்றது என்பது என்னவெனில், ஒருவன் இறந்தபின்பு அவனுக்கு மட்டுமே இந்த உலகம் இல்லாமல் போகின்றது அல்லவா?, நம் எல்லோருக்கும் எப்பொழுதும் போல இந்த உலகம் இருந்துக் கொண்டுதான் இருக்கின்றது அல்லவா?

இங்கு என்ன புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால், இந்த ‘அஜாத வாதம்’ என்ற தத்துவம் மூலம், அதை அறிந்துக் கொண்ட என்னுடைய மனதிற்கு மட்டுமே, இந்த உலகம் என்மீது (அறிவு மீது) ஏற்றி வைக்கப்பட்டுள்ளது என்பது புரியவரும். 

ஆனால், மற்றவர்களுக்கு இந்த ஞானம் இல்லாததினால், இந்த உலகம் உள்ளது போன்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.

உண்மையான முக்தி மார்க்கத்தை விளக்கும் வழிமுறைகள் கீழ்க்கண்ட கட்டமைப்புடன் காணப்படும் அதுவே, அஜாதவாதம் என்று அழைக்கப்படும்.

• உண்மை நிலை - என்றுமெவர்கும் இயல்பாக உள்ள நிலை. அதை வெளியேயிருந்து கொண்டு வர வேண்டியதில்லை. தனியாக எந்த முயற்சியும் தேவையில்லை. எதையும் தியானம் செய்ய வேண்டியதில்லை. ஒன்றையும் தியானம் செய்யாமல், எதையும் நினையாமல் சும்மா இருத்தலே அதற்கான மார்க்கம்.

• நீ பற்றற்ற மாசற்ற, சுயம் பிரகாசன். நீ சமாதி மற்றும் ஏனையே மார்க்கங்களை தேடி ஓடுகிறாயே அதுவே உன் பந்தம்.

• சித்த விருத்தியை அடியோடு ஒழி. சித்த விருத்தியால் எந்த பயனும் இல்லை. நீ பந்தமற்று, முக்தனாகவே உண்மையான ஆத்மாவாகவே இருக்கிறாய்.

• பிரபஞ்சமனைத்தும் உன் மனதின் கற்பனையே. உன் மனமும் கற்பனையே. ஆத்மா ஒன்று தான் நிஜம்.

• கரும நினைவு எவ்வாறு அறியாமையினால் எழுகிறதோ அவ்வாறே கருமத்தை துறத்தலும் ஆகும்.

• ஆகவே நிவிருத்தியை விரும்புவதும், பிரவிருத்தியை வெறுத்தலும் பாழ்.

ஓம் தத் ஸத்!

மாயை


மாயை என்பது என்ன?

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மாயத் தோற்றம் என்பதை எளிமையாக பொருள் கொள்ளலாம். அதாவது, இல்லாததை இருப்பதாக நினைத்து மயங்குவது என்றும் கூறலாம்.

அத்வைத தத்துவம் மாயையைப் பற்றிப் பேசுகிறது.
நாம் காணும் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பிரம்மமே. பிரம்மத்தைத் தவிர இரண்டாவதாக ஒன்றில்லை என்கிறது அத்வைதம்.
மனிதர்கள், மரங்கள், விலங்குகள், புல் பூண்டுகள், அண்ட சராசரங்கள் ஆகிய யாவும் பிரம்மமே என்கிறது அத்வைதம்.
அப்படியானால் நாம் காணும் இந்தப் பொருள்கள் எல்லாம் என்ன? வெவ்வேறு மனிதர்கள், உயிர்கள், சூரியன், சந்திரன், பிற கிரகங்கள் ஆகியவை எல்லாம் என்ன?
எல்லாம் மாயை என்கிறது அத்வைதம்.
சகமனைத்தும் பொய்யெனவே தானுணர்ந்தால் துக்க
சுகமனைத்தும் பொய்யன்றோ சோரா - திகபரத்தும்
விட்டுப் பிரியாத மேலான அத்துவிதக்
கட்டுக்குள் ஆவதென்றோ காண்.
- தாயுமானவர் பாடல்.
‘எல்லாம் மாயை, சத்தியமாக எதுவும் இல்லை’ என்று பௌத்த மதம் கூறுவதுப்போன்று, அத்வைதம் கூறவில்லை.
‘பிரபஞ்சமெல்லாம் மாயைதான். ஆனால், இதற்கு ஆதாரமாக பிரம்மம் என்பது பரம சத்தியமாயிருக்கிறது’ என்கிறது அத்வைதம்.
“உலகத்தை மாயை என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? இந்த உலகத்தில் இத்தனை காரியங்கள் கண்கூடாக நடந்து கொண்டிருக்கும்போது, இதை எப்படி மாயை என்று கூறலாம்?” என்று பலரும் நினைக்கின்றனர்.
மாயை என்றால் அடியோடு இல்லாத ஒன்று என்று நினைத்துக்கொண்டு இப்படிக் கேட்கிறார்கள். ஆனால் மாயை என்பது அடியோடு இல்லாத வஸ்து (அத்யந்த அஸத்) அல்ல.
முயல் கொம்பு அல்லது மலடி மகன் என்று கூறினால், உடனே அது அடியோடு இல்லாத ஒன்று என்பதினால், அவைகளை தள்ளி விடுகிறோம்.
மாயை அப்படி அல்ல...!
அது இருப்பதாக நினைக்கின்றவரை இருப்பதாகவே தோன்றும். அதாவது, அது முயல் கொம்பு போன்றது அல்ல! ஆனால், அது கானல் நீர் போன்றது.

திங்கள், 24 அக்டோபர், 2022

அன்பு உணர்வே ஆன்ம உணர்வு!

 


புத்தகம் இங்கே உள்ளது 👈

அன்பு இல்லாவிட்டால், இந்த பிரபஞ்சம் இல்லை. இந்த அன்புணர்வு அனைத்திலும் வெளிப் படுவதை உணர்ந்துக் கொள்ளக்கூடிய மேம்பட்ட மனம் படைத்த மனிதன் மட்டுமே, அந்த பேருணர்வை (ஆன்மாவை) தன்னுள்ளே அனுபவமாக உணர முடியும்.

அதாவது, பேருணர்வாகிய உணர்வுவெளி என்ற வெட்டவெளி மட்டுமே எங்கும், எதிலும் எல்லை இல்லாமல் நீக்கமற நிறைந்துள்ளது என்ற உண்மையை மனித மனம் மட்டுமே உணர முடியும்.

அதற்கான அடிப்படை தகுதிகளை அந்த மனித மனம் அடைந்தாக வேண்டும். அப்பொழுது மட்டும்தான் இறையனுபூதி என்பது என்ன? என்பதும் விளங்கும்.

அதற்கான வழிமுறைகள் மூன்று படிநிலைகளாக மூன்று வழிகளில் கூறப்படுகின்றன. அவைகளை, ச்ரவண, மனன, நிதித்யாஸனம் எனப்படுகின்றது. அதிலே, முதலில் வருவது ச்ரவணம். இரண்டாவது மனனம். மூன்றாவது நிதித்யாஸனம்.

இந்த மூன்று படி நிலைகளை, ஒவ்வொன்றாக மனிதன் தன் நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வந்தால் மட்டுமே, அவன் ஆன்மாவை (பேருணர்வை அல்லது இறைவனை) அனுபவமாக உணர முடியும். 

அதுவே நான்! [I am That!]


       நம் முகத்தையே நாம் கண்ணாடிக்குள்ளே மற்றொரு பிரதிபிம்ப முகமாகக் காண்பதுப்போன்று, பரமான்மாவின் (அறிவின்) நிழல் பிரதிபிம்பித்து, சீவனுக்கு (மனதிற்கு) சுயபுத்தி (மனம்) போன்று தோன்றுகிறது. 

கலங்கமில்லாத ஈஸ்வரவிருத்தி (பிரபஞ்ச மனம்) பிரதிபிம்பித்து, சீவனில் சிதாபாசன் என்றவாறு நம்முடைய தனித்த மனம் உண்டாகின்றது. 

 இவ்வாறு, பிரதிபிம்பித்த அந்த அகண்ட பேரறிவாகிய பிரம்மத்தின் அறிவுதான் தன்னுடைய சிற்றறிவு என்பதை அறிந்துக் கொள்வதைத்தான் இங்கு ஞானம் எனப்படுகின்றது. 

அதாவது, அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் என்ற மூன்றில் (திரிபுடி), அறிபவனாகிய மனம், அறிவு என்ற ஆன்மாவின் மூலமாக, அறியப்படுகின்ற பொருள்களான இந்திரியங்களைக் கொண்டு அனைத்தையும் அறிகின்றது என்று அறிவதே ஆத்ம ஞானம் என்று கூறப்படுகின்றது.

செவ்வாய், 4 அக்டோபர், 2022

இருமைகள்

 இருமைகள்

 ==========================



புத்தகம் இங்கு உள்ளது


பிறப்பு - இறப்பு

நன்மை - தீமை

புண்ணியம் - பாவம்

பகல் - இரவு

ஒளி - இருள்

நேர்மறை (+ve) - எதிர்மறை (-ve)

யின் - யாங்

வெப்பம் - குளிர்ச்சி

விருப்பு - வெறுப்பு

உண்டு - இல்லை

அறிவு - அறியாமை

பணிவு - திமிர்

உண்மை - பொய்

சரி - தவறு

நினைவு - மறதி

பழமை - புதுமை

மகிழ்ச்சி - துக்கம்

இலாபம் - நஷ்டம்

வேண்டும் - வேண்டாம்

ஆக்கம் - அழிவு

 

இவ்வாறு, ஏராளமான இருமைகளான எதிர் வினைகளை எடுத்துக் கூறிக்கொண்டே போகலாம்.

 இதிலே, ஒன்று இருக்க, அதற்கு வேறாக மற்றொன்று எங்கிருந்து அதற்கு எதிராக வந்தது...? 

இந்த முரண்பாடுகள் ஏன்...? என்றாவது இதைப்பற்றி யோசித்துப் பார்த்திருக்கின்றோமா...? 

இப்பொழுது யோசியுங்கள்...! 

ஆம்! இந்த இருமைகளை அறிந்தால்தான் இறைவ(தன்)னை அறிய முடியும்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

பரமனும் பாமரனும்!

 



நேற்று இரவு நீங்கள் தூங்கச் சென்றவுடன், தங்களது ஆழந்த உறக்கத்தில், இந்த பிரபஞ்சம் மறைந்து விடுகிறது. அப்பொழுது, நீங்களும் இல்லை, இந்த பிரபஞ்சமும் இல்லை.
அதுவே, உங்கள் உணர்வு விழித்துக் கொண்டவுடன் மீண்டும், இந்த பிரபஞ்சம் உதிக்கின்றது. இவ்வாறு, தினம், தினம் இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்டு, காக்கப்பட்டு, அழிக்கப்படுகிறது.
யாரால்? படைக்கப்பட்டு, காக்கப்பட்டு, அழிக்கப்படுகின்றது…?
அது, நம் மனதால்தான் என்றால், நம்ப முடிகிறதா?
அதனால், மனத்தைப் புரிந்துக்கொண்டு, அதில் ஏற்றி வைக்கப்பட்ட தவறான எண்ணங்களில் இருந்து விடுபட்டு, தெளிவான உள்ளத்தைக் கொண்டு, நம் உள்ளே விரிந்திருக்கும் அகவெளியில் (வெட்டவெளியில்) நிலைக்கொண்டு, நின்றுப் பார்த்தால்தான் நம்மைப் பற்றியும், இந்த உலகத்தைப் பற்றியும், இந்த உலகத்தில் வாழும் மற்றவைகளைப் பற்றியும், அந்த மற்றவைகளுடன் வாழும் மக்கள் பற்றியும், அந்த மக்களைக் கொண்ட பூமியைப் பற்றியும், இந்த பூமியைப் போன்றே உள்ள மற்ற கோள்களைப் பற்றியும், மற்றும் அனைத்து அண்ட சராசரங்கள் அடங்கிய இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றியும் நமக்குத் தெளிவாக விளங்கும்.
ஆம்!, நம் மனமே ஈஸ்வரன். மனமே சக்தி. மனமே குரு.
அப்போது மட்டும்தான், மனப் பேய்களாகிய காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற எண்ணற்ற எண்ணங்களாக, நம் மனதில் ஏற்றி வைத்துக்கொண்டு, மற்றவர்களைப் புண்படுத்தும் புற நடவடிக்கைகளான இதுப்போன்ற இழிகுணங்களிலிருந்து நாம் முழுமையாக விடுபட முடியும்.
அத்துடன், நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் அன்பின் அடிப்படை உருவாக்கம் என்னும் பேருண்மையும் விளங்கும்.
நம் ஒவ்வொருவரின் உள்ளே விரிந்திருக்கும், அந்தப் புனிதமான, எல்லையற்ற அகவெளியில் புகுந்து, காலமும் இடமுமற்ற, தொடக்கமும் முடிவுமற்ற அகண்டத்தை அனுபவமாக்க வேண்டாமா?
மனதின் பார்வையில் இருள் போலத் தோன்றும் வெட்டவெளி, அதே மனதின் எல்லையைக் கடந்த நிலையில், அந்தப் பேருணர்வுப் பெருவெளி நம் உள்ளத்தின் உள்ளே ஒளிமயமாய் பிரகாசித்துக் கொண்டிருப்பதை அனுபவமாக உணர வேண்டாமா?
அந்த பேரண்ட பேருணர்வு வெளி, மனித உடலில், நம் உள்ளத்தில் சிதாகாசமாக நிலைக்கொண்டு, தன் பேருணர்வு, பேருண்மை சக்தியை, தன்னுணர்வு என்று, தனித்து தவறாக நாம் உணரக்கூடிய சாதாரண நிலையிலிருந்து விடுபட்டு, அந்த அகண்டமான சத்சிதானந்த உணர்வாக ஒன்றாக உணரக்கூடிய உன்னத நிலைக்கு நாம் உயர வேண்டாமா?
இன்று நம்முடைய அனைவரின் வாழ்விலும் நிறைந்திருக்கும் துன்பங்கள் முடிவுக்கு வரவேண்டும் என்றால், நமக்குள்ளேயுள்ள அந்த சுத்தப் பிரக்ஞையை விழிக்கச் செய்வதில் மட்டும்தான் இருக்கிறது.
அவ்வாறு, விழித்துகொண்ட ‘சுத்தப் பிரக்ஞை’ தன்னுடைய சுயம்பிரகாசத்தினால், ஆழ்மன இருளை அகற்றி, ஆனந்தத்தில் திளைக்க வைக்கும்.
மேலும் மேலும் பலரின் பிரக்ஞையில் இந்த விழிப்பு ஏற்பட, ஏற்பட இந்த உலகம் விழித்துக் கொள்ளும்.
மனித இனத்தின் அனைத்து விதமான துயரத்துக்கும் இறுதியான முடிவு இது ஒன்று மட்டும்தான்.
ஓம் தத் ஸத்!

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்