மாயை என்பது என்ன?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மாயத் தோற்றம் என்பதை எளிமையாக பொருள் கொள்ளலாம். அதாவது, இல்லாததை இருப்பதாக நினைத்து மயங்குவது என்றும் கூறலாம்.
அத்வைத தத்துவம் மாயையைப் பற்றிப் பேசுகிறது.
நாம் காணும் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பிரம்மமே. பிரம்மத்தைத் தவிர இரண்டாவதாக ஒன்றில்லை என்கிறது அத்வைதம்.
மனிதர்கள், மரங்கள், விலங்குகள், புல் பூண்டுகள், அண்ட சராசரங்கள் ஆகிய யாவும் பிரம்மமே என்கிறது அத்வைதம்.
அப்படியானால் நாம் காணும் இந்தப் பொருள்கள் எல்லாம் என்ன? வெவ்வேறு மனிதர்கள், உயிர்கள், சூரியன், சந்திரன், பிற கிரகங்கள் ஆகியவை எல்லாம் என்ன?
எல்லாம் மாயை என்கிறது அத்வைதம்.
சகமனைத்தும் பொய்யெனவே தானுணர்ந்தால் துக்க
சுகமனைத்தும் பொய்யன்றோ சோரா - திகபரத்தும்
விட்டுப் பிரியாத மேலான அத்துவிதக்
கட்டுக்குள் ஆவதென்றோ காண்.
- தாயுமானவர் பாடல்.
‘எல்லாம் மாயை, சத்தியமாக எதுவும் இல்லை’ என்று பௌத்த மதம் கூறுவதுப்போன்று, அத்வைதம் கூறவில்லை.
‘பிரபஞ்சமெல்லாம் மாயைதான். ஆனால், இதற்கு ஆதாரமாக பிரம்மம் என்பது பரம சத்தியமாயிருக்கிறது’ என்கிறது அத்வைதம்.
“உலகத்தை மாயை என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? இந்த உலகத்தில் இத்தனை காரியங்கள் கண்கூடாக நடந்து கொண்டிருக்கும்போது, இதை எப்படி மாயை என்று கூறலாம்?” என்று பலரும் நினைக்கின்றனர்.
மாயை என்றால் அடியோடு இல்லாத ஒன்று என்று நினைத்துக்கொண்டு இப்படிக் கேட்கிறார்கள். ஆனால் மாயை என்பது அடியோடு இல்லாத வஸ்து (அத்யந்த அஸத்) அல்ல.
முயல் கொம்பு அல்லது மலடி மகன் என்று கூறினால், உடனே அது அடியோடு இல்லாத ஒன்று என்பதினால், அவைகளை தள்ளி விடுகிறோம்.
மாயை அப்படி அல்ல...!
அது இருப்பதாக நினைக்கின்றவரை இருப்பதாகவே தோன்றும். அதாவது, அது முயல் கொம்பு போன்றது அல்ல! ஆனால், அது கானல் நீர் போன்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக