செவ்வாய், 5 மே, 2020

"பராவித்யா ஆடியோ டெலிகிராம் ஆப்" (Paravidya Audio Telegram App)

ஸ்ரீ குருப்யோ நம:
ஹரி ஓம்!



கீழ்க்கண்ட இணையதள இணைப்பின் வாயிலாக “பராவித்யா டெலிகிராம்” ஆடியோ குழுவில் இணைந்து, அதில் கொடுக்கப்படுகின்ற ஆன்ம ஞான விசயங்களை கேட்டு பயன் பெறலாம்.


அர்த்த: (பொருள்)
================

சனாதன தர்மம் போதித்த தர்ம:, அர்த்த: காம:, மோக்ஷ: என்பதில், அர்த்த: என்பதை பொருள் என்றும், அவைகள், நம்முடைய அத்தியாவசிய வாழ்வியலுக்குத் தேவையான பொருள்கள் என்று கருதுவதில் எந்த தவறும் இல்லை.
ஆனால், இன்னும் சற்று ஆழமாகத் தேடினால் அது, நம் தர்மம் கூறிய அகண்டமான பொருள் எது என்பது அறிய வேண்டியது வரும்.
பொதுவாக நாம் நம் அன்றாட வாழ்விற்குத் தேவையான பணம், வீடு, கார், டி.வி. ஃபிரிட்ஜ், வாசிங் மெஷின் போன்றவைகளை மட்டுமே பொருள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
அதை சம்பாதிக்கவே அல்லும், பகலும் அரும்பாடு படுகின்றோம்.
ஆனால், நாம் சம்பாதித்து வைத்துள்ள உண்மையான பல பொருள்களை அனுபவிக்கத் தெரியாமல் இருக்கின்றோம்.
உதாரணமாக நம் உடலே, நமக்கு மிக ஒரு விலையுயர்ந்த பொருள். இந்த உடலுடன் ஒட்டிக்கொண்டு வந்துள்ள கைகள், கால்கள், தலை, இருதயம் என ஏகப்பட்ட இலவச இணைப்புகளை இருப்பதை நாம் அறியாமல், வெளியே இலவச பொருள்களுக்கு ஆசைப்படுகின்றோம்.
இதனுடன், இந்த விலைமதிப்பற்ற உடலை நம்பி, நம்மைக் கட்டிக்கொண்டு வந்த மனைவி மிகவும் மதிக்கப்பட வேண்டிய அற்புதமான பொருள் ஆகும். அத்துடன், அவளது அன்பினால், நாம் அடைந்த நம் அருமைக் குழந்தைகளின் அன்பு, எவ்வளவு விலை உயர்ந்த பொருள்களை நாம் வாங்கி வந்தாலும், இவர்கள் முன்பு, அதற்கு ஈடாகாது.
நாம் எதை மற்றவர்களுக்குக் கொடுக்கின்றோமோ, அதை மட்டுமே நாம் திருப்பிக் கேட்கவும் முடியும். மற்றவர்கள் நம்மிடம் கொடுக்காத பொருளை திருப்பிக் கேட்டால், நாம் மட்டும் என்ன கொடுத்து விடவாப் போகின்றோம்.
ஆகவே, நாம் அன்பைக் கொடுத்தால், நமக்கு அன்பு திரும்பக் கிடைக்கும், சிரிப்பைக் கொடுத்தால், சிரிப்பு நமக்குத் திரும்பக் கிடைக்கும். அதுவே, கோபத்தை, துயரத்தை, மற்றவர்களுக்குக் கொடுத்தால், அதுமட்டும்தான் நமக்குத் திரும்பக் கிடைக்கும்.
இதுவே, இயற்கையின் கொடுக்கல், வாங்கல் நியதி எனப்படுகின்றது.

பொருள்:
========
ஆடியோ இணைப்பு 👇

பொருள்  (ஆடியோ கேட்க இங்கே அழுத்தவும்)


****** ஓம் தத் சத் ******

ஞாயிறு, 3 மே, 2020

அறம்




தர்மம் (அறம்) என்பது மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை சிறப்பான முறையில் ஒருங்கிணைந்து வாழ்வதற்காக உருவானது. நம்முடைய சனாதன தர்மத்தில் அறம் என்பதை, தனி மனித தர்மம், சமுதாய தர்மம், தேசத்தின் தர்மம் என ஒன்றைச் சார்ந்து ஒன்று உள்ளது என்றும், அது இறுதியில் ஒரு தனிமனித தர்மத்தினால் மட்டுமே, இந்த ஒட்டுமொத்த தேசத்தின் தர்மம் இருக்கின்றது என்றும், அந்த தர்மத்திற்கு எது ஆதாரமாக உள்ளதோ, அந்த ஆத்மாவை அறிவது மட்டும்தான் ‘உண்மையான தர்மம்’ (சரியான அறம்) என்றும் வலியுறுத்துகின்றது.


சனி, 2 மே, 2020

புருஷார்த்தம்


வேதத்தில் முதன் முதலில் பேசப்படும் கருத்து புருஷார்த்தம் ஆகும். புருஷார்த்தம் என்பது ஜீவர்களின் இச்சைக்கு உரிய விஷயம் எதுவோ, அதுவே புருஷார்த்தம் எனப்படும்.

சமஸ்கிருதத்தில்  தர்மார்த்தகாமமோக்ஷம் (தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம்) எனப்படும். நம்முடைய தமிழ் மொழியில் அறம், பொருள், இன்பம், வீடு எனப்படும்.

புருஷன் என்றால் மனிதன். அர்த்தம் என்றால் இச்சைக்கு உரிய விஷயம் அல்லது இலட்சியம் என்று பொருள். அதாவது, மனிதனுக்கு இருக்க வேண்டிய இலட்சியம் புருஷார்த்தம் ஆகும்.

ஓம் தத் சத்

திங்கள், 27 ஏப்ரல், 2020

சாந்தி மந்திரங்கள்


சாந்தி மந்திரங்கள்





எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுதும் அதற்கான மன நிலையில் இருப்பது மிகவும் அவசியம்.

சாந்தி மந்திரங்கள் நம் பாரத தேசத்தில் வாழ்ந்த பழம்பெரும் ரிஷிகளின் அனுபவத்தில் வெளிப்பட்ட வேதப்பொக்கிசங்கள்.

பொதுவாக, உபநிஷதங்கள், ஸூக்தங்கள், போன்றவைகளைப் படிக்கும் பொழுது, அவைகளின் ஆரம்பத்துலும், இறுதியிலும் இந்த சாந்தி மந்திரங்கள் ஓதப்படுகின்றன.

சாந்தி மந்திரங்கள் அனைத்தும், இறுதியில் 'ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:’ என்று நிறைவு பெறுவதைக் காணலாம்.

'சாந்தி' என்றால் ‘அமைதி’ என்று பொருள்.

     நம் அன்றாட வாழ்வில் நமக்கு உண்டாகின்ற பல்வேறு துன்பங்களுக்கு மூலம், இங்கு கீழே கூறப்படுகின்ற மூன்று விதமான துன்பங்கள் ஆகும்.
அத்தகைய துன்பங்களிலிருந்து விடுபட்டு, நாம் அமைதியை அடையவே ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று மூன்று முறை சொல்லப்படுகிறது.

மூன்று வகை துன்பங்கள் வருமாறு.

1.    ஆத்யாத்மிகம்: நம்மால் நமக்கு வரும் துன்பம்; உடல் நோய், மனப் பிரச்சினைகள் போன்றவை.

2.    ஆதி பௌதிகம்: பிற உயிர்களால் நமக்கு வரும் துன்பங்கள்.

3.    ஆதி தைவிகம்: இயற்கை சக்திகளால் வரும் துன்பம், மழை, இடி, தீ போன்றவற்றால் வருபவை.

மூன்று முறை சாந்தி என்று கூறுவதின் மூலம், இந்த மூவகைத் துன்பங்களிலிருந்தும் முழுமையாக விடுபடுவதற்காகப் பிராத்தனை செய்யப்படுகிறது.


ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:


******

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

அணுவும் ஆன்மாவும்


ஆன்மா எதுவாக இருந்தாலும், எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் சரி, அது உருவமற்றது.

சிஷ்யனுக்கு குரு உபதேசிக்க விரும்புகின்றார். அந்த உபதேச உரையாடல் பின்வருமாறு அமைகின்றது.



குழந்தாய்! ‘ஆலம் பழம் ஒன்றைக் கொண்டு வா’
‘இதோ அய்யனே’
‘அதைப் பிள’
‘பிளக்கப்பட்டது அய்யனே’
‘அங்கு என்ன காண்கிறாய்?’
‘அணு வடிவான விதைகள், அய்யனே’
‘குழந்தாய்! அவற்றுள் ஒன்றைப் பிள’
‘பிளக்கப்பட்டது அய்யனே’
அங்கு என்ன காண்கிறாய்?’
ஒன்றுங்காணவில்லை’

குரு, சிஷ்யனை நோக்கிக் கூறுகின்றார்.

எந்த சூக்சும பொருளை நீ காணவில்லையோ, அந்த சூக்சும பொருளிலிருந்தே இந்த மிகப் பெரிய ஆல மரம் உண்டாகி நிற்கின்றது.

குழந்தாய்! அதில் மட்டும் சிரத்தை வைப்பாய். அணு மாத்திரமான அந்த ஸூக்சுமப் பொருள் எதுவோ…. அதுவாக நீயே உள்ளாய் (தத்-துவம்-அஸி).

எது உருவமற்றதோ, அது எங்கும் நிறைந்ததாகத்தான் இருக்கமுடியும் என்ற கருத்தை எல்லா தத்துவப் பிரிவுகளும் ஒப்புக் கொள்கின்றன.

ஓம் தத் சத்!

சனி, 18 ஏப்ரல், 2020

இருக்கு ஆனா இல்ல!



இருக்கு ஆனா இல்ல!


மண்டையில ’நச்சு’ன்னு ஒரு கொட்டு கொட்டி சொல்ல வேண்டியதை சொன்னாத்தான் சிலருக்கு புரியுதுங்க, அதனால அதுமாதிரி, ஒரு தடவ உங்க மண்டையிலே ‘நச்சு’ன்னு ஒரு கொட்டு, கொட்டிக்கிறேனுங்க.

அப்புறமா, எங்கருத்தெ உங்ககிட்டே சொல்றேனுங்க.

அதுவும் பழசுதாங்க, ஆனா, நானு உங்ககிட்ட புதுசா சொல்றேனுங்க.

அந்த விசயத்த பெரியவங்க ‘இருக்கு’ துன்னு சொல்வாங்க.

பலதடவ உங்ககிட்ட ‘இருக்கறதெல்லாம் சாமிதான்’ ன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன். ஆனா, உங்கள்ள ஒருத்தங்ககூட, அந்தப் பார்வையிலே இந்த உலகத்தப் பாக்கலே, பாக்குறதுமில்ல. அதுக்கு யாருமே தயாராவும் இல்ல.

ஏன்? உங்கள்ள யாருக்குமே இது புரிய மாட்டேங்குது? சொன்ன பெரியவங்க மேலே நம்பிக்க வர்லயா? இல்லே, அவங்க சொல்றது புரியலயா?

எத்தன சித்தன்ங்க வந்து இதைத்தான் சொல்லிட்டுப் போனாங்க. பல மகானுங்க வந்து பக்க பக்கமா புத்தகத்த எழுதி வைச்சாங்க.

ஆனா, அதப்படிச்சி பலன் என்ன வந்துச்சி!

நானும் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன், எத்தனயோ புத்தகத்த படிச்சீங்க, படிச்சதுல என்ன புரிஞ்சுதுங்க?

இப்ப சொன்னத புரிஞ்சுக்கிட்டீங்களா? முதல்ல நல்லா கவனிங்க.

இப்போ, நீங்க இருக்கீங்களா? இல்லியா? அதுல ஒன்னும் சந்தேகமில்லியே!

ஏன் கேட்குறேன்னா? இருந்தாத்தானே சொல்றத உங்களால கேட்க முடியும். அதனாலத்தான்.

நீங்க இங்க இருக்குறதுன்னா, எதோ உடம்போட வந்து இங்க ஒக்காந்துகிட்டு இருக்கனும்னு அவசியம் இல்லிங்க. உங்ககிட்ட இருக்கிற மனச மட்டும் பெரியவங்க சொல்ற விசயத்திலே, நிப்பாட்டி கவனிச்சீங்கன்னா போதும். 

      மனசுல இருக்குறதுக்கு, எங்கெ இருந்தாலும், அங்க வெளிச்சம் இருந்தாலும், இல்லாட்டியும் நீங்க மட்டும் இருந்தா போதும்.

அதாவது, நீங்க எப்படி இருக்கறீங்களோ, அதுமாதிரித்தான் அதுவும் இருக்கு.

நான் இப்ப வக்கீலா இருக்கேன், அப்ப அதுவும் வக்கீலா இருக்கான்னு கேள்வி கேட்டு மடக்கிட்டதா நெனைக்காதீங்க.

இங்க சொல்லவர்ற விசயம் நீங்க நான் நெனைச்சிக்கிட்டிருக்கிற இந்த உடம்ப பத்தியோ, அந்த உடம்பு செய்யற வேலையப் பத்தியோ இல்ல.

உடம்புக்குள்ள இருக்குற உயிரைப்பத்தின விசயம்.

நீங்க உங்கள கண்ணுள பாக்கற மாதிரித்தான், அதயும் கண்ணுல பாக்கலாம்.

ஆமா! நெசம்தான்.

ஒன்னுமே இல்லீங்க, இது ரொம்ப ஈஸிங்க.

அதாவது, நீங்க காலையிலே கண் முழிச்சதும் பார்க்குற அத்தனப் பொருள்ளயும் அது ‘இருக்கு’. அதுமட்டுதான் இருக்குங்க. அது இல்லன்னா, எதுவுமே இருக்காதுங்க.

ஒவ்வொன்னளயும் அது ‘இருக்கு’, அது இருக்குறதுனாலத்தான் இந்த மொத்தப் பேரண்டமும் இருக்குங்க.

எல்லாரும் கல்லு, மண்ணு, கடவுள்னு வாய் கிழிய பேசறாங்களே, அந்த வாய் பேசறதுக்கே அது இருக்கனும்ங்க.

     ஆமா, நீங்க பாக்குற ஒவ்வொரு பொருள்ளயும், அதுமட்டும்தான் இருக்கு. ஆனா, நீங்க அத மட்டும் உட்டுட்டு, மத்த எல்லாத்தையும் பார்க்குறீங்க.

இது எப்படி இருக்குன்னா!

உங்க உடம்ப முழுசா காட்ற கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு, கண்ணாடியில தெரியற உங்க உடம்ப மட்டும் முழுசா பார்த்து ரசிச்சீங்க, ஆனா, உங்க உடம்ப முழுசா காட்ற கண்ணாடிய கண்டுக்காம இருந்தீங்க.

அதுக்குப்பதிலா, இப்ப உங்க கவனத்த, உடம்ப தாண்டி கவனிச்சீங்கன்னா, அந்த கண்ணாடி இப்ப உங்க கண்ணுக்குத் தட்டுப்படும். அது மாதிரிதான், ஒவ்வொரு பொருளையும், ஆழமா அணுகினா, அதுங்க அங்க இருக்குறதுக்கு காரணமான ஒன்னு, அதுங்களுக்குள்ளே இருக்குங்கறத தெரிஞ்சிக்கலாமுங்க.

எதச் சொல்ல வந்தாலும், அதுல எங்க பாசையில இல்ல, இது தமிழு இல்ல, மத்த மொழின்னு எதையாவதெ சொல்லி, அதுல குத்தங்குறையத்தான் கண்டு பிடிக்கிறீங்களே தவிர, சொல்லவர்ற விசயத்த யாருமே கவனிக்கத் தயாரா இல்லீங்க.

ஒன்னுமில்லீங்க, நீங்க இப்ப ஒரு பூவ பாக்குறீங்க, அதுக்கு ரோஜான்னு நீங்கதான் உங்க பாசையிலே பேரு வச்சீங்க.

எப்படி?

இங்கிலீஸ்காரன் அவம் பாசையிலே ரோஸ் - னு சொன்னத, உங்க வாயில நுழையாம ரோஜ் - னு சொல்லி, சொல்லி ‘ரோஜா’ ன்னு ஆயிடுச்சு.

உங்களுக்கு இங்கிலீஸ்ல சொல்ல வர்ல. இதுக்கு நான் என்னத்தங்க செய்றது.

இதுமாதிரித்தான் எல்லாத்தலயும் மத்தவங்க சொல்றத சரியா புரிஞ்சுக்காம, இப்படித் தப்புத் தப்பா புரிஞ்சு வச்சிக்கிறீங்க.

இதுமாதிரித்தான் சாமியையும் தப்பாவே புரிஞ்சிக்கிட்டு, எங்கெல்லாமோ தேடுறீங்க.

அந்த ரோஜா பூவையே, திரும்பவும் உங்க கவனத்துல கொண்டுக்கிட்டு வரேன்.

அதாவது, அந்த ரோஜா - பூவை ஆழமா கவனிச்சீங்கன்னா, அதுக்கு உயிர் இருக்கு, அதுக்கு உணர்வு இருக்கு, அதுக்குன்னு வாசனை இருக்கு. அதுக்குன்னு ஒரு மென்மை இருக்கு, அதுக்குள்ள நீர்த்தன்மை இருக்கு, அதுக்குன்னு ஒரு சூடு இருக்கு, அதுக்குன்னு ஒரு சுவாசம் இருக்கு, அது பெரிசா வளர்றதுக்குன்னு சாப்பாடு வேணுமில்ல, அதுவும் சாப்பிட்டாகனுமில்லே, அதனால அதக்குன்னு வாயும் இருக்கு. அத தொட்டா வாடுதில்ல, அதனால அதுக்குன்னு தொடு உணர்ச்சிக்கூட இருக்கு.

இப்படி நமக்கு இருக்கறதெல்லாமே அதுக்கும் இருக்கு.

நமக்கு தெரியலேங்கறதுக்காக, அதுக்கு இல்லேன்னு ஆயிடாது.

நெசமாவே அது மாத்திரந்தான் இருக்கு. அது இருக்குறதுனாலேத்தான், இத்தனயும் இருக்கு.

அதுமாதிரித்தான் மத்த கல்லு, மண்ணு, கழுதெ, கடவுளு எல்லாமே.

நம்மகிட்ட இருக்குற கண், காது, மூக்கு, நாக்குன்னு எல்லாத்துக்குமே அது இருக்குறதெ தெரிஞ்சிக்கிற அளவு சக்தி இல்லேங்குறதுக்காக அது இல்லேன்னு ஆயிடுமா என்ன?

எல்லாத்துலயும் அது மட்டும்தான் இருக்கு. அதனாலதான் அத ‘இருக்கு’ - ன்னு சொல்றோம்.

ஒன்னுமில்லீங்க, நீங்க அத பாக்கணும், அப்பத்தான் ஒத்துக்குவேன்னு சொல்ல வரீங்களா?

தாராளமா அதப்பாக்கலாம். ஆனா, இந்த ஊணக்கண்ணுனாலெ இல்ல. உங்ககிட்ட இருக்கற மனக்கண்ணாலே பாக்கலாம்.

எப்படி?

உங்க மனசுல ஏகப்பட்டத ஏத்தி வச்சிக்கிட்டு இருக்குறீங்கள்ள அத அத்தனயும் கீழ இறக்கி வைச்சிட்டு, காலியா வைச்சுக்கற மனசுல, இப்ப நான் சொல்றத உள்ள போட்டுக்குங்க.

கண்ணுக்கு முன்னாடி, நீங்க எதப் பாத்தாலும், சாப்பிடற பொருள்ள எதைச் சாப்பிட்டாலும், மூக்குல முகந்துப் பாக்கற வாசன எதுவா இருந்தாலும், அதுல அது இருக்கறத தெரிஞ்சிக்கலாம்.

உங்க கவனத்த கடந்த காலத்துலயும், எதிர்காலத்துலயும் இருந்து விலக்கி, இப்ப, இந்த நொடியிலே, நிகழ் காலத்துல நின்னு, எத பாக்குறீங்களோ அத மட்டும் கவனிங்க. அதுல ஏற்கனவே சொன்னமாதிரி ரோசாப்பூவுல இருக்குற அத்தன அம்சமும் கவனிங்க.

ரொம்ப சிம்பிளுங்க, இந்தமாதிரி அத ஆழமா ஊடுருவி கவனிச்சீங்கன்னா, நீங்களும், அதுவும் ஒன்னாயிடுவீங்க. ஆமா, நெசந்தான் சொல்றேன். உங்களுக்கும் அதுக்கும் இடைவெளியிலே ‘காலம்ங்கறது’ இல்லாமப் போயி, இருக்கறதெல்லாம் ஒன்னா மாறிடும்ங்க.

நிகழ்காலத்துல நில்லுங்கன்னு சொல்றது, உங்களுக்குப் புரியரதுக்காகச் சொன்னேனே தவிர, நீங்க உடன நிகழ்காலத்தை புடிச்சிக்காதீங்க. நெசமாலுமே மூனு காலமும் இல்லீங்க.

அது நம்ம மனசு கத்துவச்சிக்கிட்ட கணக்கு பாடமுங்க அந்த காலங்கறது.

நீங்க வேனா வெட்டவெளியிலே நின்னுக்கிட்டு காலத்தை கணக்கிட்டுச் சொல்லுங்க பாக்கலாம். அங்க காலமும், தேசமும் இல்லீங்க.

சின்னவயசுலே இருந்தே நிறைய கணக்குகளப் பாத்து, பாத்து, மனசு அப்படியே பழகி, இப்ப எல்லாத்துலயும் கணக்கு பாக்குதுங்க.

இந்த கணக்கு பாக்குறத முதல்ல விடுங்க, சும்மா இருந்து, சுகமா அத கவனிச்சீங்கன்னா மட்டும் போதுங்க.

இதுதான் சூக்சுமம்ங்க. இதை புரிஞ்சிக்கிட்டு நடைமுறைல அனுபவத்துக்கு வந்தீங்கன்னா, நீங்களும், அதுவும் ஒன்னாகிடுவீங்க.

அப்புறம் இருக்கறதெல்லாம் அதுதான்ங்க. அதுமட்டும்தான் உங்களுக்குள்ளயும் இருந்துக்கிட்டு எல்லாத்தயும் பாக்குதுங்க, இதுதான் உங்களுக்கு நேரடி அனுபவம்ங்க.

அந்த அனுபவம் ஒரு ரோஜாப்பூவுல மட்டுமில்லீங்க. எல்லாத்துலயும் அத கவனிச்சு, அத உணரலாமுங்க.

அந்த அனுபவந்தான் சாமிங்க. இதுதாங்க சாமிய நேரடியா அனுபவிக்குறதுங்க.

இப்படி உங்களுக்குள்ளே அனுபவமாகமே, வெளியே எதைப் பார்த்தாலும், அது ஒரு உருவமாவும், பெயராவும் மட்டும்தான் இருக்கும்ங்க. அதனால, அதை வெறும் வார்த்தையா மட்டும் மனசுல வச்சிக்கிட்டு பிரயோஜனமில்லீங்க.

ஆனா, எல்லாருமே உருவத்துலயும், பெயர்லயும் சிக்கிக்கிட்டு, ஒவ்வொன்னையும் வார்த்தைகளாவே பாக்குறீங்க. யாருமே அதை அனுபவத்துக்கு கொண்டு வரலே.

அனுபவத்துக்கு கொண்டுவரனும்னா, கண்டிப்பா இந்த முறையை கடைப்பிடிங்க.

இத தெரிஞ்சிக்கிட்டா இருக்குறது சாமி மட்டும்தாங்க, அந்த சாமிதான் எல்லாம்ங்க. எல்லாமே சாமிதான் சொன்னா அப்புறம் நீங்க யாரு?

இப்ப புரிஞ்சுதா? இருக்கறதெல்லாம் சாமின்னு.

அதனால சாமியத்தேடறேன்னு எத எதயோ செய்யாதீங்க.

இருக்கறதத்தனையும் சாமியா பாருங்க. அப்புறம் பாருங்க இருக்கறதெல்லாமே பொதுவா போய்டும்ங்க. அப்படி எல்லாமே பொதுவா போயிட்டா, பதுக்கற வேலை இருக்காதுங்க.

பதுக்கறவங்க இல்லீங்கன்னா, விலைவாசி குறைஞ்சிடும்ங்க. இதனால இந்தியப் பொருளாதாரம்னு சொல்றாங்களே, அது உயரும்ங்க. அது உயர்ந்தா நீங்களும், நானும் உயருவமுங்க. நாம உயரனும்னு நீங்க நினைச்சீங்கன்னா, எல்லாத்தலயும் அது இருக்குறத பாருங்க.

இந்தமாதிரி எல்லாமே ஒன்னுன்னு புரிஞ்சிக்கிட்டவங்க மட்டுந்தான் சாமிய எல்லாத்தலயும் பாக்குறாங்க.

சரிங்க!, அந்த இருக்கு, இருக்குன்னு சொன்னீங்க அது எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லீங்களேன்னு கேட்குறீங்களா.

அது வேற ஒன்னுமில்லீங்க வெட்டவெளி தாங்க அது. அதுமட்டும்தான் எப்பொவுமே இருக்கு. மத்ததெல்லாம் வந்து, போயிட்டு இருக்கு.

அந்த வெட்டவெளிதாங்க சாமி. அந்த சாமிதாங்க உங்க உள்ளயும் இருக்குங்க. வெளியிலேயும் இருக்குங்க. எல்லா இடத்துலயும் இருக்குங்க. அதுமட்டும்தான் இருக்குங்க.

இதத்தான் அன்னிக்கு வாழ்ந்த பெரியவங்க சொன்னாங்க. ஆனா இன்னிக்கு வாழ்ற நமக்குத்தான் புரியல. புரிஞ்சிக்குங்க.

ரொம்ப சந்தோசமுங்க, அப்பால சந்திக்கலாமுங்கோ.

நன்றி! வணக்கமுங்க! 

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

மனம்


மனம்

மனிதன் என்பவன் உடலாலும், உயிராலும் ஆனவன். மனம் என்பது மனிதனுக்கான சிறப்புத் தகுதி. அதுவே அவனின் உடலையும், உயிரையும் அவனுக்குக் காட்டிக் கொடுக்கின்றது

கண்ணுக்குத் தெரிகின்ற புலன்களினால் உண்டாகும் அனுபவங்களைக் கண்ணுக்குத் தெரியாத மனமே உணர்கின்றது. உண்மையில் மனம் உணர்வதையே தான் உணர்வதாய் நாம் நம்புகின்றோம்.

அத்தகைய உணர்வே நம்முடைய வாழ்க்கையை அடையாளப் படுத்துகின்றது. நம் வாழ்வில் நடக்கின்ற அல்லது எதிர்கொள்கின்ற அனைத்து சம்பவங்களைக் குறித்த, பல்வேறு சிந்தனைகளை சிந்திப்பதும் மனமே.

அதன் வழியாகவே நம் ‘இருப்பை’ நாம் உணரவும், நமக்கான உலகை நாம் உண்டாக்கவும் முயல்கின்றோம்.

கண்ணிற்குத் தெரியாத அருவமான மனமே, கண்ணிற்குத் தெரிகின்ற உருவமான உடலுக்கு உறுதுணையாக இருக்கின்றது. பொதுவாகப் பார்த்தால் உடலாகத் தெரியும் நாம், நுட்பமாகப் பார்க்கும் போது மனமாக இருக்கிறோம். இன்னும் கொஞ்சம் நுட்பமாகப் பார்க்கும்போது உயிராக மட்டும் இருக்கின்றோம்.

மனம்தான் எல்லாச் செயல்களுக்கும் அடிப்படை என்பதில், உறுதியுடன் இருக்கும் நமக்கு, மனதின் தெளிவற்ற தொடர் எண்ணங்கள் நம்மை அலைக்கழிப்பதைக் காணும் பொழுது, மனதின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கின்றோமா அல்லது நம் கட்டுப்பாட்டில் மனம் இருக்கின்றதா எனும் சந்தேகம் தானாகவே வந்து விடுகின்றது.

அத்தகைய இந்த மனதை சிக்கல்களில் இருந்து விடுவித்து, சீர்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையில்தான் நம் சமயம் பல்வேறு கடவுள்களையும், வழிபாடுகளையும் புகுத்தியது.

மனதைச் சீர்படுத்திவிட முடியும் என்றால் மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது எனப்பொருள். சிலப் பயிற்சிகள் மூலமாகவும், சில வழிபாடுகள் மூலமாகவும், மனதைச் சீரமைத்து விடலாம் எனச் சிலர் முயற்சிக்கின்றனர்.

உண்மையில், மனம் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஆனால், நம் கட்டுப்பாட்டில் இருப்பது போலக் காட்சியளிக்கும் கானல் நீர் போன்றது. நீர்ப்போலத் தெரிகின்றது என்று அருகில் சென்றால் ஒன்றும் இருக்காது. 

அதற்காக நீர் போல நமக்குத் தெரிந்ததை பொய்யென்று கூறிவிட முடியுமா? முடியாது.

இதுதான் மாயையின் இலக்கணம்.

மனதைப் பற்றிக் கூறும் பொழுது, மனதின் இயல்பைப் பற்றி அறிந்துக் கொள்வது அவசியமாகிறது. நம்மால் மனதின் இயல்பை உள்ளவாறே விளங்கிக் கொள்ள இயலும் என நினைப்பது இயலாததாகவே இருக்கும்.

காரணம், மனதினுள் நுழையும் அனைத்து எண்ணங்களும் அங்கு தங்கி விடுவதில்லை. தொடர்ந்து நினைவு கொள்ளப்படுகின்ற எண்ணங்களே அங்கு நிலைப் பெறுகின்றன.

இதனால், மனதை எண்ணங்களின் தொகுப்பென்று மட்டும் கருதாமல், அதற்குள் இல்லாதப் பல புதிதான எண்ணங்களும் எழுவதைக் காணும் பொழுது, மனம் என்பது எண்ணங்களின் தற்காலிக இருப்பிடம் என்றும் அறியலாம்.

எண்ணங்கள் வந்து போகுமிடமாக மனதைக் கொள்வதே மிகச் சரியானதாக இருக்கும்.

நமக்குள் நுழையும் எண்ணங்களில் எதைத்தக்க வைத்துக் கொள்ளலாம், எதை ஒதுக்கலாம் என்பதை புத்தி முடிவு செய்யும்.

பொதுவாக, எண்ணங்களை நாம் இரண்டு வழிகளில் பார்க்கின்றோம். ஒன்று நல்ல எண்ணம், மற்றொன்று கெட்ட எண்ணம். உண்மையில் அப்படியான இரண்டுவித எண்ணங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை.

இருப்பது ஒரு எண்ணம் மட்டுமே. அதை இரண்டு கோணங்களில் நாம் பார்க்கிறோம். அவ்வளவே.

ஆக, நாம் நல்ல எண்ணம் என நினைப்பது பிறிதொருவருக்கு கெட்ட எண்ணமாகத் தோன்றலாம். அவர் கெட்ட எண்ணம் எனச் சொல்வது நமக்கு நல்ல எண்ணமாகத் தோன்றலாம்.

எண்ணம் எதுவாய் இருந்தாலும் அதைத் தக்க வைப்பதையும், தவிர்ப்பதையும் நாம் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். அதுவே, எண்ணங்களை எதிர்கொள்ளும் ‘சாட்சி பாவனை’ வழிமுறையாகும்.

எண்ணங்கள் வருவதையும், போவதையும், சாட்சியாக நின்று கவனிக்கச் சொல்லும் சிறப்பான சிந்தனையை சீர் நோக்கிப் பாராமல் ‘சாட்சி’ பாவத்தை நம்மால் விளங்கிக் கொள்ளவே இயலாது.

சாட்சி பாவனைக்கு ஒருவன் தயாராக தவம் இருக்க வேண்டாம், கடினமான யோகப்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டாம், தத்துவக்கருத்துகளை ஊன்றிப்படிக்க வேண்டாம், கோயில் கோயிலாகச் செல்ல வேண்டாம், குறிப்பிட்ட குருவிடம் தீட்சை பெறவும் வேண்டாம்.

கொஞ்சம் அவனின் அகத்தில் நுழைந்து ‘நான் யார்?’ எனும் விசாரணையை மேற்கொண்டால் மட்டும் போதும். அந்தக் கேள்வி அவனின் அடையாளங்களில் இருந்து முதலில் அவனை விடுவித்து பிற்பாடு அவனிலிருந்தே அவனை விடுவித்து விடும்.

‘நான் யார்?’ எனும் ஆய்வைத் துவங்கும்போது பிண்டமும், அண்டமுமாக இருமைப்பட்டு இருக்கின்ற இந்த அண்டம், ஒருகட்டத்தில் அகண்ட அண்டமாக மட்டுமே காட்சியளிக்கும் அற்புதத்தை நிகழ்த்தும். அவ்வற்புதம் குறித்தான அனுபவங்கள், ஆளுக்கு ஆள் மாறுபடும் என்றாலும், அவ்வற்புதத்தின் வேராய் இருப்பது  ‘இருமை ஒருமையாக மாறி நிற்கும்’ காட்சியே ஆகும்.

அண்டத்தின் இயல்பான ஒருமையை உணர்ந்தாலும், பிண்டமாகிய தன் இயல்பான இருமை நிலையிலிருந்து, வெளி வந்துவிட முடியுமா? எனக் கேட்கத் தோன்றும்.

நல்ல கேள்விதான்.

நம் இயல்பிலிருந்து வெளிவந்துவிட வேண்டும் என்ற கற்பனையைக் கற்பித்துக் கொள்வதும் மனமே ஆகும்.

நம் இயல்பு என நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் இருமை அல்லது பன்மைகளின் பாதிப்பிலிருந்து விடுபட முயன்றால் போதும். அதற்கான முயற்சியை இயல்பாகத் தூண்டுவதே ‘நான் யார்?’ எனும் கேள்வியின் வழியாக நாம் பெறும் அனுபவம்.

மேலும், இந்த மனதைப் பற்றிய விசாரத்தை MP3 ஆடியோ பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றிய ஆடியோக்களைக் கேட்க விரும்புபவர்கள் கீழே உள்ள இணையதள முகவரி லின்க்கினை அழுத்தி MP3 ஆடியோக்களை பதிவிறக்கம் செய்துக் கொண்டு கேட்டுக் கொள்ளலாம்.


நன்றி!

என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்