மனம்
மனிதன் என்பவன் உடலாலும்,
உயிராலும் ஆனவன். மனம் என்பது மனிதனுக்கான சிறப்புத் தகுதி. அதுவே அவனின் உடலையும்,
உயிரையும் அவனுக்குக் காட்டிக் கொடுக்கின்றது
கண்ணுக்குத் தெரிகின்ற
புலன்களினால் உண்டாகும் அனுபவங்களைக் கண்ணுக்குத் தெரியாத மனமே உணர்கின்றது. உண்மையில்
மனம் உணர்வதையே தான் உணர்வதாய் நாம் நம்புகின்றோம்.
அத்தகைய உணர்வே நம்முடைய
வாழ்க்கையை அடையாளப் படுத்துகின்றது. நம் வாழ்வில் நடக்கின்ற அல்லது எதிர்கொள்கின்ற
அனைத்து சம்பவங்களைக் குறித்த, பல்வேறு சிந்தனைகளை சிந்திப்பதும் மனமே.
அதன் வழியாகவே நம் ‘இருப்பை’ நாம் உணரவும், நமக்கான உலகை நாம்
உண்டாக்கவும் முயல்கின்றோம்.
கண்ணிற்குத் தெரியாத
அருவமான மனமே, கண்ணிற்குத் தெரிகின்ற உருவமான உடலுக்கு உறுதுணையாக இருக்கின்றது. பொதுவாகப்
பார்த்தால் உடலாகத் தெரியும் நாம், நுட்பமாகப் பார்க்கும் போது மனமாக இருக்கிறோம்.
இன்னும் கொஞ்சம் நுட்பமாகப் பார்க்கும்போது உயிராக மட்டும் இருக்கின்றோம்.
மனம்தான் எல்லாச் செயல்களுக்கும்
அடிப்படை என்பதில், உறுதியுடன் இருக்கும் நமக்கு, மனதின் தெளிவற்ற தொடர் எண்ணங்கள்
நம்மை அலைக்கழிப்பதைக் காணும் பொழுது, மனதின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கின்றோமா அல்லது
நம் கட்டுப்பாட்டில் மனம் இருக்கின்றதா எனும் சந்தேகம் தானாகவே வந்து விடுகின்றது.
அத்தகைய இந்த மனதை சிக்கல்களில்
இருந்து விடுவித்து, சீர்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையில்தான் நம் சமயம் பல்வேறு
கடவுள்களையும், வழிபாடுகளையும் புகுத்தியது.
மனதைச் சீர்படுத்திவிட
முடியும் என்றால் மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது எனப்பொருள். சிலப் பயிற்சிகள்
மூலமாகவும், சில வழிபாடுகள் மூலமாகவும், மனதைச் சீரமைத்து விடலாம் எனச் சிலர் முயற்சிக்கின்றனர்.
உண்மையில், மனம் என்பது
நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஆனால், நம் கட்டுப்பாட்டில் இருப்பது போலக் காட்சியளிக்கும்
கானல் நீர் போன்றது. நீர்ப்போலத் தெரிகின்றது என்று அருகில் சென்றால் ஒன்றும் இருக்காது.
அதற்காக நீர் போல நமக்குத் தெரிந்ததை பொய்யென்று கூறிவிட முடியுமா? முடியாது.
இதுதான் மாயையின் இலக்கணம்.
மனதைப் பற்றிக் கூறும்
பொழுது, மனதின் இயல்பைப் பற்றி அறிந்துக் கொள்வது அவசியமாகிறது. நம்மால் மனதின் இயல்பை
உள்ளவாறே விளங்கிக் கொள்ள இயலும் என நினைப்பது இயலாததாகவே இருக்கும்.
காரணம், மனதினுள் நுழையும்
அனைத்து எண்ணங்களும் அங்கு தங்கி விடுவதில்லை. தொடர்ந்து நினைவு கொள்ளப்படுகின்ற எண்ணங்களே
அங்கு நிலைப் பெறுகின்றன.
இதனால், மனதை எண்ணங்களின்
தொகுப்பென்று மட்டும் கருதாமல், அதற்குள் இல்லாதப் பல புதிதான எண்ணங்களும் எழுவதைக்
காணும் பொழுது, மனம் என்பது எண்ணங்களின் தற்காலிக இருப்பிடம் என்றும் அறியலாம்.
எண்ணங்கள் வந்து
போகுமிடமாக மனதைக் கொள்வதே மிகச் சரியானதாக இருக்கும்.
நமக்குள் நுழையும் எண்ணங்களில்
எதைத்தக்க வைத்துக் கொள்ளலாம், எதை ஒதுக்கலாம் என்பதை புத்தி முடிவு செய்யும்.
பொதுவாக, எண்ணங்களை நாம்
இரண்டு வழிகளில் பார்க்கின்றோம். ஒன்று நல்ல எண்ணம், மற்றொன்று கெட்ட எண்ணம். உண்மையில்
அப்படியான இரண்டுவித எண்ணங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை.
இருப்பது ஒரு எண்ணம்
மட்டுமே. அதை இரண்டு கோணங்களில் நாம் பார்க்கிறோம். அவ்வளவே.
ஆக, நாம் நல்ல எண்ணம்
என நினைப்பது பிறிதொருவருக்கு கெட்ட எண்ணமாகத் தோன்றலாம். அவர் கெட்ட எண்ணம் எனச் சொல்வது
நமக்கு நல்ல எண்ணமாகத் தோன்றலாம்.
எண்ணம் எதுவாய் இருந்தாலும் அதைத் தக்க வைப்பதையும், தவிர்ப்பதையும் நாம் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். அதுவே,
எண்ணங்களை எதிர்கொள்ளும் ‘சாட்சி பாவனை’
வழிமுறையாகும்.
எண்ணங்கள் வருவதையும்,
போவதையும், சாட்சியாக நின்று கவனிக்கச் சொல்லும் சிறப்பான சிந்தனையை சீர் நோக்கிப்
பாராமல் ‘சாட்சி’ பாவத்தை நம்மால் விளங்கிக்
கொள்ளவே இயலாது.
சாட்சி பாவனைக்கு ஒருவன்
தயாராக தவம் இருக்க வேண்டாம், கடினமான யோகப்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டாம், தத்துவக்கருத்துகளை
ஊன்றிப்படிக்க வேண்டாம், கோயில் கோயிலாகச் செல்ல வேண்டாம், குறிப்பிட்ட குருவிடம் தீட்சை
பெறவும் வேண்டாம்.
கொஞ்சம் அவனின் அகத்தில்
நுழைந்து ‘நான் யார்?’ எனும் விசாரணையை
மேற்கொண்டால் மட்டும் போதும். அந்தக் கேள்வி அவனின் அடையாளங்களில் இருந்து முதலில்
அவனை விடுவித்து பிற்பாடு அவனிலிருந்தே அவனை விடுவித்து விடும்.
‘நான் யார்?’ எனும் ஆய்வைத் துவங்கும்போது பிண்டமும், அண்டமுமாக
இருமைப்பட்டு இருக்கின்ற இந்த அண்டம், ஒருகட்டத்தில் அகண்ட அண்டமாக மட்டுமே காட்சியளிக்கும்
அற்புதத்தை நிகழ்த்தும். அவ்வற்புதம் குறித்தான அனுபவங்கள், ஆளுக்கு ஆள் மாறுபடும்
என்றாலும், அவ்வற்புதத்தின் வேராய் இருப்பது
‘இருமை ஒருமையாக மாறி நிற்கும்’
காட்சியே ஆகும்.
அண்டத்தின் இயல்பான ஒருமையை
உணர்ந்தாலும், பிண்டமாகிய தன் இயல்பான இருமை நிலையிலிருந்து, வெளி வந்துவிட முடியுமா?
எனக் கேட்கத் தோன்றும்.
நல்ல கேள்விதான்.
நம் இயல்பிலிருந்து வெளிவந்துவிட
வேண்டும் என்ற கற்பனையைக் கற்பித்துக் கொள்வதும் மனமே ஆகும்.
நம் இயல்பு என நாம் கற்பனை
செய்து வைத்திருக்கும் இருமை அல்லது பன்மைகளின் பாதிப்பிலிருந்து விடுபட முயன்றால்
போதும். அதற்கான முயற்சியை இயல்பாகத் தூண்டுவதே ‘நான் யார்?’ எனும் கேள்வியின் வழியாக நாம் பெறும் அனுபவம்.
மேலும், இந்த மனதைப் பற்றிய விசாரத்தை MP3 ஆடியோ பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றிய ஆடியோக்களைக் கேட்க விரும்புபவர்கள் கீழே உள்ள இணையதள முகவரி லின்க்கினை அழுத்தி MP3 ஆடியோக்களை பதிவிறக்கம் செய்துக் கொண்டு கேட்டுக் கொள்ளலாம்.
MP3 ஆடியோக்களை பதிவிறக்கம் செய்ய 👈 இங்கே அழுத்தவும்.
நன்றி!
என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக