மூன்று காலங்களையும்
முக்கியமாகக் கருதுகின்ற மனிதன் எப்பொழுது எனக்கு நல்ல காலம் வரும் என்று அடிக்கடி
ஜோதிடர்களை சந்தித்து சந்தேகம் கேட்கின்றான்.
மனித வாழ்க்கையின் தலையெழுத்தே,
அவன் பிறந்த நேரத்தால்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதான ஒரு நம்பிக்கையை வளர்த்துக்
கொண்டு, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கின்ற ஒரு மனிதனின் வாழ்வியல் சம்பவங்களை முன்கூட்டியே
சொல்லிவிட முடியும் என நம்மில் பலர் அசட்டுத்தனமாக நம்பிக்கையும் கொள்கின்றனர்.
அதன் காரணமாக, ஜாதகத்தையும்,
ஜோதிடத்தையும் விடாமல் பிடித்துக் கொண்டு, ஒவ்வொரு ஜோதிடர்களின் இல்லங்களுக்கும், அலுவலகங்களுக்குமாக
இங்கும், அங்கும் அலைந்துக் கொண்டிருக்கின்றார்கள்.
காலம் மனிதனை அலைக்கழிக்கிறதா?
அல்லது காலமெனும் ஒன்றை உண்டாக்கிக் கொண்டு, மனிதன் அலைந்துக் கொண்டிருக்கிறானா?
உண்மையில் காலமென்ற ஒன்று
தனித்து இல்லை. நாமே உருவாக்கிக் கொண்ட மாயக்
கண்ணாடி அது.
தண்ணீரில் தெரியும் தன்
பிம்பத்தைக் கண்டு பயப்படும் நரியைப் போன்று அந்தக்கண்ணாடியில் தெரியும் நம் பிம்பத்தைக்
கண்டு நாமே பயப்படுகின்றோம்.
ஒரு மனிதனின் வாழ்வு
அவன் தலையெழுத்தைக் கொண்டே அமைகின்றது என, இந்த மனிதச்சமூகம் தொடர்ந்து நம்பி வருகின்றது.
தலையெழுத்தை இரண்டு காரணிகள் தீர்மானிப்பதாகவும் அது கருதுகின்றது.
அவைகள், பிறந்த இடம் மற்றும் பிறந்த நேரம். பிறந்த நேரம் காலத்தைக் குறிப்பது. பிறந்த இடம் என்பது வெளியின்
(Space) பகுதியோடு ‘இருப்பு’ கொண்டது.
ஒரு குறிப்பிட்ட மனிதரின்
ஜாதகம் என்பது அவர் பிறந்த இடம் மற்றும் நேரத்தைக் கணக்கில் கொண்டே கணிக்கப்படுகின்றது.
முதலில் காலம்தான் (Time)
மனிதனைப் பயமுறுத்து கின்றது என்றோம். இப்போது அதனுடன் வெளியின் (Space) குறிப்பிட்ட
பகுதியையும் (இடத்தையும்) இணைத்துக் கொண்டு இருக்கின்றோம்.
அதாவது, ஒரு மனிதனால்
காலத்தையும், தேசத்தையும் அளவீடுகளாகக்
கொள்ளாமல், அவன் இருப்பை அடையாளப் படுத்தி
விட முடியாது.
காலமும், தேசமும் நம்
அனுபவத்திற்கு உட்பட்டது. மனதினால் ஒரு எண்ணத்தை எண்ணி, அதனைக் கவனத்தில் கொண்ட அந்த
ஒரு விநாடியை ‘காலம்’ என்றும், அவ்வாறு
தோன்றிய அந்த ஒரு எண்ணம் மறைந்து, அடுத்த எண்ணம் உண்டாவதற்கும் உள்ள இடைவெளியை ‘தேசம்’ என்றும் கொள்ளலாம்.
அந்த ‘இருப்பு’, கால, தேசங்களுக்கு அப்பாற்பட்டது.
அதை காலத்தின் (Time) உதவிக் கொண்டோ, அல்லது தேசத்தின் (Space) உதவிக்கொண்டோ அறிந்திட
முடியாது.
மனிதன் தன்னை அடையாளப்படுத்தும்
விதமாக, தன்னுடைய பிறந்த தினத்தைக் கொண்டாடும் காலம் (Time) மற்றும் இடத்தை
(Place or Space) கணக்கில் கொண்டே நாம் இங்கு விசாரம் செய்வோம்.
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக