இருக்கு
ஆனா இல்ல!
மண்டையில ’நச்சு’ன்னு ஒரு கொட்டு கொட்டி சொல்ல வேண்டியதை
சொன்னாத்தான் சிலருக்கு புரியுதுங்க, அதனால அதுமாதிரி, ஒரு தடவ உங்க மண்டையிலே ‘நச்சு’ன்னு ஒரு கொட்டு, கொட்டிக்கிறேனுங்க.
அப்புறமா, எங்கருத்தெ
உங்ககிட்டே சொல்றேனுங்க.
அதுவும் பழசுதாங்க, ஆனா,
நானு உங்ககிட்ட புதுசா சொல்றேனுங்க.
அந்த விசயத்த பெரியவங்க
‘இருக்கு’ துன்னு சொல்வாங்க.
பலதடவ உங்ககிட்ட ‘இருக்கறதெல்லாம் சாமிதான்’ ன்னு சொல்லிக்கிட்டே
இருக்கேன். ஆனா, உங்கள்ள ஒருத்தங்ககூட, அந்தப் பார்வையிலே இந்த உலகத்தப் பாக்கலே, பாக்குறதுமில்ல.
அதுக்கு யாருமே தயாராவும் இல்ல.
ஏன்? உங்கள்ள யாருக்குமே
இது புரிய மாட்டேங்குது? சொன்ன பெரியவங்க மேலே நம்பிக்க வர்லயா? இல்லே, அவங்க சொல்றது
புரியலயா?
எத்தன சித்தன்ங்க வந்து
இதைத்தான் சொல்லிட்டுப் போனாங்க. பல மகானுங்க வந்து பக்க பக்கமா புத்தகத்த எழுதி வைச்சாங்க.
ஆனா, அதப்படிச்சி பலன்
என்ன வந்துச்சி!
நானும் பாத்துக்கிட்டுத்தான்
இருக்கேன், எத்தனயோ புத்தகத்த படிச்சீங்க, படிச்சதுல என்ன புரிஞ்சுதுங்க?
இப்ப சொன்னத புரிஞ்சுக்கிட்டீங்களா?
முதல்ல நல்லா கவனிங்க.
இப்போ, நீங்க இருக்கீங்களா?
இல்லியா? அதுல ஒன்னும் சந்தேகமில்லியே!
ஏன் கேட்குறேன்னா? இருந்தாத்தானே
சொல்றத உங்களால கேட்க முடியும். அதனாலத்தான்.
நீங்க இங்க இருக்குறதுன்னா,
எதோ உடம்போட வந்து இங்க ஒக்காந்துகிட்டு இருக்கனும்னு அவசியம் இல்லிங்க. உங்ககிட்ட
இருக்கிற மனச மட்டும் பெரியவங்க சொல்ற விசயத்திலே, நிப்பாட்டி கவனிச்சீங்கன்னா போதும்.
மனசுல இருக்குறதுக்கு, எங்கெ இருந்தாலும், அங்க வெளிச்சம் இருந்தாலும், இல்லாட்டியும் நீங்க மட்டும் இருந்தா போதும்.
அதாவது, நீங்க எப்படி இருக்கறீங்களோ, அதுமாதிரித்தான் அதுவும் இருக்கு.
மனசுல இருக்குறதுக்கு, எங்கெ இருந்தாலும், அங்க வெளிச்சம் இருந்தாலும், இல்லாட்டியும் நீங்க மட்டும் இருந்தா போதும்.
அதாவது, நீங்க எப்படி இருக்கறீங்களோ, அதுமாதிரித்தான் அதுவும் இருக்கு.
நான் இப்ப வக்கீலா இருக்கேன்,
அப்ப அதுவும் வக்கீலா இருக்கான்னு கேள்வி கேட்டு மடக்கிட்டதா நெனைக்காதீங்க.
இங்க சொல்லவர்ற விசயம்
நீங்க நான் நெனைச்சிக்கிட்டிருக்கிற இந்த உடம்ப பத்தியோ, அந்த உடம்பு செய்யற வேலையப்
பத்தியோ இல்ல.
உடம்புக்குள்ள இருக்குற
உயிரைப்பத்தின விசயம்.
நீங்க உங்கள கண்ணுள பாக்கற
மாதிரித்தான், அதயும் கண்ணுல பாக்கலாம்.
ஆமா! நெசம்தான்.
ஒன்னுமே இல்லீங்க, இது
ரொம்ப ஈஸிங்க.
அதாவது, நீங்க காலையிலே
கண் முழிச்சதும் பார்க்குற அத்தனப் பொருள்ளயும் அது ‘இருக்கு’. அதுமட்டுதான் இருக்குங்க. அது இல்லன்னா, எதுவுமே இருக்காதுங்க.
ஒவ்வொன்னளயும் அது ‘இருக்கு’, அது இருக்குறதுனாலத்தான் இந்த
மொத்தப் பேரண்டமும் இருக்குங்க.
எல்லாரும் கல்லு, மண்ணு,
கடவுள்னு வாய் கிழிய பேசறாங்களே, அந்த வாய் பேசறதுக்கே அது இருக்கனும்ங்க.
ஆமா, நீங்க பாக்குற ஒவ்வொரு பொருள்ளயும், அதுமட்டும்தான்
இருக்கு. ஆனா, நீங்க அத மட்டும் உட்டுட்டு, மத்த எல்லாத்தையும் பார்க்குறீங்க.
இது எப்படி இருக்குன்னா!
உங்க உடம்ப முழுசா காட்ற
கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு, கண்ணாடியில தெரியற உங்க உடம்ப மட்டும் முழுசா பார்த்து ரசிச்சீங்க,
ஆனா, உங்க உடம்ப முழுசா காட்ற கண்ணாடிய கண்டுக்காம இருந்தீங்க.
அதுக்குப்பதிலா, இப்ப
உங்க கவனத்த, உடம்ப தாண்டி கவனிச்சீங்கன்னா, அந்த கண்ணாடி இப்ப உங்க கண்ணுக்குத் தட்டுப்படும்.
அது மாதிரிதான், ஒவ்வொரு பொருளையும், ஆழமா அணுகினா, அதுங்க அங்க இருக்குறதுக்கு காரணமான
ஒன்னு, அதுங்களுக்குள்ளே இருக்குங்கறத தெரிஞ்சிக்கலாமுங்க.
எதச் சொல்ல வந்தாலும்,
அதுல எங்க பாசையில இல்ல, இது தமிழு இல்ல, மத்த மொழின்னு எதையாவதெ சொல்லி, அதுல குத்தங்குறையத்தான்
கண்டு பிடிக்கிறீங்களே தவிர, சொல்லவர்ற விசயத்த யாருமே கவனிக்கத் தயாரா இல்லீங்க.
ஒன்னுமில்லீங்க, நீங்க
இப்ப ஒரு பூவ பாக்குறீங்க, அதுக்கு ரோஜான்னு நீங்கதான் உங்க பாசையிலே பேரு வச்சீங்க.
எப்படி?
இங்கிலீஸ்காரன் அவம்
பாசையிலே ரோஸ் - னு சொன்னத, உங்க வாயில நுழையாம ரோஜ் - னு சொல்லி, சொல்லி ‘ரோஜா’ ன்னு ஆயிடுச்சு.
உங்களுக்கு இங்கிலீஸ்ல
சொல்ல வர்ல. இதுக்கு நான் என்னத்தங்க செய்றது.
இதுமாதிரித்தான் எல்லாத்தலயும்
மத்தவங்க சொல்றத சரியா புரிஞ்சுக்காம, இப்படித் தப்புத் தப்பா புரிஞ்சு வச்சிக்கிறீங்க.
இதுமாதிரித்தான் சாமியையும்
தப்பாவே புரிஞ்சிக்கிட்டு, எங்கெல்லாமோ தேடுறீங்க.
அந்த ரோஜா பூவையே, திரும்பவும்
உங்க கவனத்துல கொண்டுக்கிட்டு வரேன்.
அதாவது, அந்த ரோஜா -
பூவை ஆழமா கவனிச்சீங்கன்னா, அதுக்கு உயிர் இருக்கு, அதுக்கு உணர்வு இருக்கு, அதுக்குன்னு
வாசனை இருக்கு. அதுக்குன்னு ஒரு மென்மை இருக்கு, அதுக்குள்ள நீர்த்தன்மை இருக்கு, அதுக்குன்னு
ஒரு சூடு இருக்கு, அதுக்குன்னு ஒரு சுவாசம் இருக்கு, அது பெரிசா வளர்றதுக்குன்னு சாப்பாடு
வேணுமில்ல, அதுவும் சாப்பிட்டாகனுமில்லே, அதனால அதக்குன்னு வாயும் இருக்கு. அத தொட்டா
வாடுதில்ல, அதனால அதுக்குன்னு தொடு உணர்ச்சிக்கூட இருக்கு.
இப்படி நமக்கு இருக்கறதெல்லாமே
அதுக்கும் இருக்கு.
நமக்கு தெரியலேங்கறதுக்காக,
அதுக்கு இல்லேன்னு ஆயிடாது.
நெசமாவே அது மாத்திரந்தான்
இருக்கு. அது இருக்குறதுனாலேத்தான், இத்தனயும் இருக்கு.
அதுமாதிரித்தான் மத்த
கல்லு, மண்ணு, கழுதெ, கடவுளு எல்லாமே.
நம்மகிட்ட இருக்குற கண்,
காது, மூக்கு, நாக்குன்னு எல்லாத்துக்குமே அது இருக்குறதெ தெரிஞ்சிக்கிற அளவு சக்தி
இல்லேங்குறதுக்காக அது இல்லேன்னு ஆயிடுமா என்ன?
எல்லாத்துலயும் அது மட்டும்தான்
இருக்கு. அதனாலதான் அத ‘இருக்கு’ - ன்னு சொல்றோம்.
ஒன்னுமில்லீங்க, நீங்க
அத பாக்கணும், அப்பத்தான் ஒத்துக்குவேன்னு சொல்ல வரீங்களா?
தாராளமா அதப்பாக்கலாம்.
ஆனா, இந்த ஊணக்கண்ணுனாலெ இல்ல. உங்ககிட்ட இருக்கற மனக்கண்ணாலே பாக்கலாம்.
எப்படி?
உங்க மனசுல ஏகப்பட்டத
ஏத்தி வச்சிக்கிட்டு இருக்குறீங்கள்ள அத அத்தனயும் கீழ இறக்கி வைச்சிட்டு, காலியா வைச்சுக்கற
மனசுல, இப்ப நான் சொல்றத உள்ள போட்டுக்குங்க.
கண்ணுக்கு முன்னாடி,
நீங்க எதப் பாத்தாலும், சாப்பிடற பொருள்ள எதைச் சாப்பிட்டாலும், மூக்குல முகந்துப்
பாக்கற வாசன எதுவா இருந்தாலும், அதுல அது இருக்கறத தெரிஞ்சிக்கலாம்.
உங்க கவனத்த கடந்த காலத்துலயும்,
எதிர்காலத்துலயும் இருந்து விலக்கி, இப்ப, இந்த நொடியிலே, நிகழ் காலத்துல நின்னு, எத
பாக்குறீங்களோ அத மட்டும் கவனிங்க. அதுல ஏற்கனவே சொன்னமாதிரி ரோசாப்பூவுல இருக்குற
அத்தன அம்சமும் கவனிங்க.
ரொம்ப சிம்பிளுங்க, இந்தமாதிரி
அத ஆழமா ஊடுருவி கவனிச்சீங்கன்னா, நீங்களும், அதுவும் ஒன்னாயிடுவீங்க. ஆமா, நெசந்தான்
சொல்றேன். உங்களுக்கும் அதுக்கும் இடைவெளியிலே ‘காலம்ங்கறது’ இல்லாமப் போயி, இருக்கறதெல்லாம்
ஒன்னா மாறிடும்ங்க.
நிகழ்காலத்துல நில்லுங்கன்னு
சொல்றது, உங்களுக்குப் புரியரதுக்காகச் சொன்னேனே தவிர, நீங்க உடன நிகழ்காலத்தை புடிச்சிக்காதீங்க.
நெசமாலுமே மூனு காலமும் இல்லீங்க.
அது நம்ம மனசு கத்துவச்சிக்கிட்ட
கணக்கு பாடமுங்க அந்த காலங்கறது.
நீங்க வேனா வெட்டவெளியிலே
நின்னுக்கிட்டு காலத்தை கணக்கிட்டுச் சொல்லுங்க பாக்கலாம். அங்க காலமும், தேசமும் இல்லீங்க.
சின்னவயசுலே இருந்தே
நிறைய கணக்குகளப் பாத்து, பாத்து, மனசு அப்படியே பழகி, இப்ப எல்லாத்துலயும் கணக்கு
பாக்குதுங்க.
இந்த கணக்கு பாக்குறத
முதல்ல விடுங்க, சும்மா இருந்து, சுகமா அத கவனிச்சீங்கன்னா மட்டும் போதுங்க.
இதுதான் சூக்சுமம்ங்க.
இதை புரிஞ்சிக்கிட்டு நடைமுறைல அனுபவத்துக்கு வந்தீங்கன்னா, நீங்களும், அதுவும் ஒன்னாகிடுவீங்க.
அப்புறம் இருக்கறதெல்லாம்
அதுதான்ங்க. அதுமட்டும்தான் உங்களுக்குள்ளயும் இருந்துக்கிட்டு எல்லாத்தயும் பாக்குதுங்க,
இதுதான் உங்களுக்கு நேரடி அனுபவம்ங்க.
அந்த அனுபவம் ஒரு ரோஜாப்பூவுல
மட்டுமில்லீங்க. எல்லாத்துலயும் அத கவனிச்சு, அத உணரலாமுங்க.
அந்த அனுபவந்தான் சாமிங்க.
இதுதாங்க சாமிய நேரடியா அனுபவிக்குறதுங்க.
இப்படி உங்களுக்குள்ளே
அனுபவமாகமே, வெளியே எதைப் பார்த்தாலும், அது ஒரு உருவமாவும், பெயராவும் மட்டும்தான்
இருக்கும்ங்க. அதனால, அதை வெறும் வார்த்தையா மட்டும் மனசுல வச்சிக்கிட்டு பிரயோஜனமில்லீங்க.
ஆனா, எல்லாருமே உருவத்துலயும்,
பெயர்லயும் சிக்கிக்கிட்டு, ஒவ்வொன்னையும் வார்த்தைகளாவே பாக்குறீங்க. யாருமே அதை அனுபவத்துக்கு
கொண்டு வரலே.
அனுபவத்துக்கு கொண்டுவரனும்னா,
கண்டிப்பா இந்த முறையை கடைப்பிடிங்க.
இத தெரிஞ்சிக்கிட்டா
இருக்குறது சாமி மட்டும்தாங்க, அந்த சாமிதான் எல்லாம்ங்க. எல்லாமே சாமிதான் சொன்னா
அப்புறம் நீங்க யாரு?
இப்ப புரிஞ்சுதா? இருக்கறதெல்லாம்
சாமின்னு.
அதனால சாமியத்தேடறேன்னு
எத எதயோ செய்யாதீங்க.
இருக்கறதத்தனையும் சாமியா
பாருங்க. அப்புறம் பாருங்க இருக்கறதெல்லாமே பொதுவா போய்டும்ங்க. அப்படி எல்லாமே பொதுவா
போயிட்டா, பதுக்கற வேலை இருக்காதுங்க.
பதுக்கறவங்க இல்லீங்கன்னா,
விலைவாசி குறைஞ்சிடும்ங்க. இதனால இந்தியப் பொருளாதாரம்னு சொல்றாங்களே, அது உயரும்ங்க.
அது உயர்ந்தா நீங்களும், நானும் உயருவமுங்க. நாம உயரனும்னு நீங்க நினைச்சீங்கன்னா,
எல்லாத்தலயும் அது இருக்குறத பாருங்க.
இந்தமாதிரி எல்லாமே ஒன்னுன்னு
புரிஞ்சிக்கிட்டவங்க மட்டுந்தான் சாமிய எல்லாத்தலயும் பாக்குறாங்க.
சரிங்க!, அந்த இருக்கு,
இருக்குன்னு சொன்னீங்க அது எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லீங்களேன்னு கேட்குறீங்களா.
அது வேற ஒன்னுமில்லீங்க
“வெட்டவெளி” தாங்க அது. அதுமட்டும்தான் எப்பொவுமே இருக்கு. மத்ததெல்லாம்
வந்து, போயிட்டு இருக்கு.
அந்த வெட்டவெளிதாங்க
சாமி. அந்த சாமிதாங்க உங்க உள்ளயும் இருக்குங்க. வெளியிலேயும் இருக்குங்க. எல்லா இடத்துலயும்
இருக்குங்க. அதுமட்டும்தான் இருக்குங்க.
இதத்தான் அன்னிக்கு வாழ்ந்த
பெரியவங்க சொன்னாங்க. ஆனா இன்னிக்கு வாழ்ற நமக்குத்தான் புரியல. புரிஞ்சிக்குங்க.
ரொம்ப சந்தோசமுங்க, அப்பால
சந்திக்கலாமுங்கோ.
நன்றி! வணக்கமுங்க!
நன்றி
பதிலளிநீக்கு