கற்பனை என்றால் என்ன?
இந்த கற்பனையான எண்ணத்தால் எவ்வளவு சிக்கல்கள் வருகின்றன பார்ப்போம்.
ஒரு பெண்ணோ, ஆணோ மற்றவர் தங்களை நேசிப்பதாக கற்பனை பண்ணிக் கொண்டு, பின் நிஜத்தில் அப்படி இல்லை என்று அறியும் போது வருந்துகிறார்கள்.
தவறு
காதலிக்காத அந்த பெண்ணின் பேரிலோ, அல்லது ஆணின் பேரிலோ அல்ல. கற்பனையாக காதலித்தவரின்
பேரில்தான் தவறு.
திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை மிக இனிமையாக இருக்கும் என்று கற்பனை செய்து கொள்வது.
அப்புறம், அந்த கற்பனையோடு நிஜம் ஒத்துப் போகவில்லை என்றால், "எப்படியெல்லாம் நினைத்து வைத்து இருந்தேன். வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே" என்று நொந்து கொள்வது.
வயதான காலத்தில் பிள்ளைகள் நம்மை பார்த்துக் கொள்வார்கள் என்று கற்பனை பண்ணிக் கொள்வது. பின் அவர்கள் பார்த்துக் கொள்ளவில்லை என்றால் அவர்கள் மேல் கோபமும், வருத்தமும் கொள்வது.
தவறு பிள்ளைகளிடத்தில் இல்லை. நமது கற்பனையில் இருக்கிறது.
அலுவலகத்தில் பதவி உயர்வு வரும், சம்பள உயர்வு வரும் என்று கற்பனை பண்ணிக்கொண்டு, அது வரவில்லை என்றால் மேலதிகாரி, நிறுவனம், என்று எல்லோர் மேலும் கோபம் கொள்வது. குறைக்கூறுவது.
இப்படி எவ்வளவோ அடுக்கிக் கொண்டே போகலாம்.
கற்பனை என்பது வெறும் வார்த்தைகளால் வரும்
ஞானம். உண்மைக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
ஆத்மா, கடவுள், பரப்பிரம்மம், சொர்கம், நரகம், என்பன எல்லாம் நாம் கேள்விப்பட்டவைகள்.
நிஜத்தில் எங்காவது பார்த்திருக்கிறோமா?
வார்த்தைகளினால் கிடைத்த ஞானம். அவ்வளவுதான்.
அதுப்போல, நமக்கு நாமே பல முத்திரைகள் குத்திக் கொள்கிறோம். மற்றவர்களுக்கும் குத்துகிறோம். தமிழன், இந்தியன், இன்ன ஜாதிக்காரன், இன்ன மதம் என்று சொல்கிறோம். இவைகள் எல்லாம் கற்பனை.
இந்தியா என்பது நிஜமில்லையா? என்றால் - இல்லை.
உலகம் ஒரு பெரிய நிலப்பரப்பு. அவ்வளவு தான்.
நாம் கற்பனையாக கோடுகள் வரைந்து கொண்டு, இது தமிழ் நாடு, இது இந்தியா, இது அரபிக்கடல், இது வங்காள விரிகுடா என்று பெயர் வைத்துக் கொள்கிறோம்.
உண்மையில் அப்படி ஒன்று கிடையாது.
ஒரு நீண்ட நிலப்பரப்பு, ஒரு நீண்ட நீர்பரப்பு. அவ்வளவுதான் உண்டு.
நிர்வாக வசதிக்காக பிரித்து வைத்துக் கொண்டார்கள்.
நாம் ஏன்? நம்மை அதோடு சேர்த்துக்கொள்ள வேண்டும்?
இங்கு சிக்கல் என்ன? என்றால், நாளடைவில், இந்த கற்பனைகளை நாம் நிஜம் என்றே நினைக்கத் தொடங்கி விடுகிறோம்.
நான் இந்து என்று ஒருவன் கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். இந்து மதத்தை யாராவது குறை கூறினால் அவனுக்கு கோபம் வருகிறது.
அப்படிக் குறை கூறுபவர்கள் மேல் சண்டைக்குப் போகிறான்.
அவன் இந்துவா? இந்து என்பது ஒரு மதம். அந்த மத கோட்பாடுகளை அவன் பின் பற்றுகிறான். அவ்வளவுதான்.
சாலை விதிகளை பின் பற்றுவது போல, சில மத விதிகளை பின் பற்றுகிறான்.
நான் இந்த சாலை என்று யாரும் கூறுவது இல்லை.
ஆனால் நான் ஒரு இந்து, முஸ்லிம், கிருஸ்துவன் என்று கூறுகிறார்கள்.
ஏன்?
இதில் இன்னும் ஒரு மோசமான எண்ணம் நாம் தமிழர் என்று மற்றவர்களிடமிருந்து பிரித்துப் பார்ப்பது.
இதனால், தமிழன் மட்டுமே உயர்வானவன், மலையாளி, தெலுங்கன், கன்னடன் என மற்றவர்கள் எல்லாம் மட்டமானவர்கள் என்ற மனப்போக்கு நிலவி வருகின்றது.
கற்பனை நாளடைவில் உண்மையாக மாறிவிடுகிறது.
இது தேவை இல்லாத ஒன்று.
யோசித்துப் பாருங்கள்.
உண்மை இல்லாத எத்தனை விசயங்களை நீங்கள் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று.
சிலவற்றை கற்பனை என்று கூட உங்களுக்கு ஒத்துக் கொள்ள தயக்கமாக இருக்கும்.
ஒரே ஒரு கேள்விதான் கேட்க வேண்டும் - இது உண்மையில் இருக்கிறதா? அல்லது வெறும் கேள்வி ஞானம் தானா?
பதஞ்சலியின்
யோக சூத்திரம் எது கற்பனை?, எது உண்மை? என்று ஆராய வரவில்லை. எது கற்பனை, எது உண்மை
என்று அறிந்து கொள்ளச் சொல்கின்றது.
வெறும் வார்த்தைகளால் மட்டுமே உண்டான ஞானம், உண்மையில் இல்லாத ஒன்று.
பொய் கெட்டு மெய்யானார் என்கின்றார் மணிவாசகர்.
உண்மையை அறிய வேண்டும் என்றால், கற்பனையானவற்றை முதலில் இனம் கண்டு நீக்க வேண்டும்.
சிந்தித்துப் பாருங்கள், எந்தெந்த கற்பனையெல்லாம் உண்மை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று.
இது உங்களுக்குச் சுய பரிசோதனை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக