(இதோ யோக விளக்கம்)
இப்போது = இந்த நிமிடத்தில், இந்த நொடியில் இருந்து.
நாம் எப்போதும் ஒன்று கடந்த கால நினைவுகளில் வாழ்கிறோம் அல்லது எதிர் கால கனவுகளில் அல்லது பயங்களில் வாழ்கிறோம்.
இந்த நொடியில் நிகழ்காலத்தில் நாம் வாழ்வதே கிடையாது.
கண் மூடி ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இன்று எத்தனை தடவை பழைய நினைவுகளை எண்ணிப் பார்த்தீர்கள். எத்தனை முறை எதிர் காலத்தைப் பற்றி யோசித்தீர்கள் என்று.
வாழ்க்கை என்பது நிகழ்காலத்தில் மட்டும் தான் இருக்க முடியும். கடந்த காலம் போய் விட்டது. இனி வராது. எதிர் காலம் இனிமேல்தான் வரப் போகின்றது.
இந்த இரண்டு காலமும் நம் கையில் இல்லை.
நம்மிடம் இருப்பது இந்த நொடி மட்டும்தான். ஏதாவது செய்வது என்றால் இந்த நொடியில் செய்தால்தான் உண்டு.
ஆனால், நாம் இந்த நொடியில் இருப்பதே இல்லை.
பதஞ்சலி சொல்கிறார் "இப்போது தொடங்குங்கள் யோகப் பயிற்சி" என்று.
இந்த நொடியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
நாளைக்கு நல்ல நாள், அடுத்த வாரம் வளர்பிறை ஆரம்பிக்கலாம் என்று இருக்கக் கூடாது.
இப்போதே! இந்த நொடியிலேயே!
"யோக:" - யோகம் என்றால் இணைப்பது.
இணைந்து
இருப்பதை மீண்டும் இணைக்க முடியாது.
பிரிந்து கிடப்பதை வேண்டுமானாலும் இணைத்து வைக்கலாம்.
எது பிரிந்து கிடக்கிறது?
மனமும், உடலும்.
உடலும், உணர்வும்.
மனமே, பல்வேறு பகுதிகளாக பிரிந்து கிடக்கின்றது.
மனச்சிதைவு என்று சொல்வார்களே அதுப்போல, பலவாகப் பிரிந்து கிடக்கின்றது.
ஆசை ஒரு புறம், தவறு என்ற எண்ணம் ஒரு புறம், பொறாமை ஒரு புறம், புன்னகை மறு புறம், வெறுப்பு ஒரு புறம், சகிப்பு மறு புறம் என்று மனம் பல பகுதிகளாக பிரிந்து கிடக்கின்றது.
இவ்வாறு
பிரிந்து கிடக்கும் பிரிவுகளில் இருந்து பிரிக்க வேண்டியதை முழுமையாகப் பிரித்து, இணைக்க
வேண்டியதை முழுவதுமாக இணைப்பது யோகம்.
அதாவது, நம்மை முழு மனிதனாக்குவது
யோகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக