தன் சுய அறிவே, பார்ப்பவன், பார்வை, பார்க்கப்படும் பொருள் என எல்லாமாக இருக்கின்றது.
அதாவது, அனைத்து வடிவங்களும், அதற்கான இயக்கங்களும் தன் சுய அறிவினாலேயே அறியப்படுகிறது.
இவ்வாறு, விழிப்பு நிலை அனுபவங்கள் எல்லாமே, “நான்” எனும் சுய அறிவில் தன்னிருப்பில் அறியப்படுகிறது.
அதுவே, அனைத்து வடிவங்களிலும் செயலாற்றி, அனைத்தையும் நிஜம் என நம்ப வைக்கின்றது. அதுவே, கனவு நிலையில் பலவாறான வடிவங்களைப் படைத்துக் கொள்கின்றது. அதுவே, ஆழ்ந்த உறக்கத்தில் தற்காலிகமாக மறைந்துக் கொள்கின்றது.
அதாவது, அந்த சுய அறிவு ஆழந்த உறக்கத்தில் தற்காலிகமாக மறைந்திருந்தாலும், தன்னைத் தான் அறிந்துக் கொண்டே இருப்பதினால்தான், நாம் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தவுடனே கூட, “நான் நன்றாகத் தூங்கினேன்” என்று கூற முடிகின்றது.
ஆக, அந்த அறிவின்றி வடிவமேது. அந்த அறிவின்றி இந்த உலகமேது? ஆக, அத்தனை வடிவங்களும் அந்த தூய அறிவாகிய தன் சுய அறிவு.
ஆக, இவ்வாறு அனைத்தையும் பார்ப்பவன் எவனோ? படைப்பவன் எவனோ? அனுபவிப்பவன் எவனோ? அழிப்பவன் எவனோ? அவனே “நான்”.
இவ்வாறு, நானே அந்த தூய அறிவு என்பதை ஒரு ஞானி மட்டுமே தன் சித்தத்தில் சிவமயமாக உணர்கிறான்.
அதனால்தான், அவன் அனைவரையும் பார்த்து, “தத்துவமஸி” என்று கூறமுடிகின்றது. அதாவது, “நீ அதுவாகவே இருக்கிறாய்” என்கின்றான்.
அத்தகைய ‘சித்’ என்னும் தூய அறிவு வெளியில்தான், அதாவது, இந்த வெட்டவெளியில்தான் பிரபஞ்சம் என்னும் அனுபவம் இருப்பு கொள்கிறது.
நடப்பவையனைத்தும் இந்த ‘வெட்டவெளி’ யில்தான் நடக்கின்றன. உண்மையில், வெட்டவெளி என்பது நம்முடைய உணர்வுவெளி.
இங்குதான் ‘அறிதல்’ அல்லது “தன்னை உணர்தல்” நிகழ்கிறது.
அதாவது, எல்லாம் அறியும் அறிவுதான் இங்கு பிரஞ்ஞை அல்லது தன்னுணர்வு எனப்படுகின்றது.
அத்தகைய தன்னுடைய சுய அறிவில்தான் இங்கு எல்லாம் இருப்பு கொண்டுள்ளது. அதன் வாயிலாகத்தான் இங்கு எல்லாம் அறியப்படுகின்றது.
அதற்கான கருவிகளாகத்தான் நம்மிடம் ஐம்புலன்களும், மனமும் உள்ளது.
அவைகளைக் கொண்டு அனைத்தையும் அறியும் அறிவாக அந்த சுய அறிவு அல்லது தன்னுணர்வு தன்னைத்தான் அறிந்துக்கொள்ளும் தன்னிலைக்குப் பெயர்தான் “இருப்பு” என்றும் அழைக்கப்படுகின்றது.
அதாவது, “நான் இருக்கிறேன்” என்ற தன்னிருப்பை தான் உணரும் உயர் பரிமாண அனுபவம் அது.
இதை அறிவது மட்டும்தான் சத் ஆகிய இருப்பின் இறுதி நோக்கம்.
அதாவது, சத் என்ற இருப்பு
சிவம்.
சித் என்ற அறிவு சக்தி.
இந்த சிவமும், சக்தியும்
சேரும்போது, அங்கே ஆனந்தம் உண்டாகின்றது. அதுவே, அர்தநாரீஸ்வரர் தத்துவம் ஆகும்.
அதனால்தான் சக்தி இல்லையேல் சிவம் இல்லை!. சிவம் இல்லையேல் சக்தி இல்லை! என்று கூறினர்.
ஆக, இரண்டையும் பிரிக்க முடியாது. இந்த இரண்டும் ஒன்றே என்று கூறுவதுதான் அத்வைதம். அதனால்தான் ப்ரஹ்மம் ஒன்று என்று கூறப்படுகின்றது.
பொதுவாக, ஒரு ஆணும், பெண்ணும் ஒன்றாகச் சேர்வது சிற்றின்பம். அதுபோல, இந்த சிவமும், சக்தியும் ஒன்றாகச் சேர்வது பேரின்பம்.
அதாவது, அசையாத சிவம் (சத்), அசைகின்ற சக்தியின் (சித்) வாயிலாக தன்னைத் தான் அறிந்துக் கொள்கின்ற அனுபவம் நடைப்பெறும் இடமே அந்த உணர்வு வெளியாகிய வெட்டவெளி என்னும் தூய அறிவு வெளி அல்லது உணர்வு வெளி.
அப்படிப்பட்ட வெட்டவெளியாகிய சித்தை, சத்துடன் இணைப்பதுதான் “சித்தம் சிவமயமாதல்” என்று கூறப்படுகின்றது.
அதாவது, தன் இருப்பை தான் உணர்வது ஆகும்.
அதாவது, அந்த சத்தாகிய சிவம் (அறிவு), சித்தாகிய சித்தத்தின் மூலம் தன்னைத் தான் உணர்வதற்காக புரியும் திரு நடனம் தான் இங்கு இயக்கம்.
அதனால்தான் `சித்ரூபிணி` என்று பிரபஞ்சத்தின் தாயாக ‘இதயவெளி’ உள்ளது. அந்த இதயவெளியில் சித்தமாகிய பிரபஞ்சத்தின் ஆனந்தக்கூத்து நடக்கும் அரங்கம்தான் சித்தம் என்கின்ற சிதம்பரம்.
சிதம்பரம் என்றால், அதை இரண்டாகப் பிரிக்கும் பொழுது, சித் + அம்பரம் என்று வரும்.
சித் என்றால் அறிவு அல்லது உணர்வு.
அம்பரம் என்றால் வெளி.
ஆக, உணர்வு வெளி என்ற வெட்டவெளி எது? என்றால், அதுவே நம் சித்தம். உண்மையில் இந்த சித்தம் நம்முடைய தனித்த சித்தம் கிடையாது.
ஏனென்றால், எல்லாம் நம்மால் படைக்கப்பட்டது என்பதினால், அவன், இவன், அது, இது என்ற இருமைகள் இல்லாத எல்லா சித்தமும் ஒன்று கூடிய ஈஸ்வர சித்தம் என்கின்றது சாஸ்திரம்.
இதைத்தான் சிதம்பரம் என்றும் ‘சிற்றம்பலம்’ என்றும் கூறுகிறோம்.
உண்மையில் இந்த சிதம்பரம் அல்லது சிற்றம்பலம் என்பது நம்முடைய சித்தத்தின் மேம்பட்ட உயர் பரிமாணம்.
அப்படிப்பட்ட உயர் பரிமாணத்தில்
உள்ள சித் என்ற உணர்வு அல்லது பேரறிவு இருப்பு கொண்டுள்ள இடமே
சத் என்ற ஆதாரஸ்தலம்.
ஆக, எப்போது சித்த விருத்தி நிரோத: நடைப் பெறுகின்றதோ? அப்போது, அனைத்தையும் அறியும் அறிவாகிய ‘சித்’ என்னும் சுத்தப்பிரக்ஞை தான் அறிவதற்கு ஏதுமில்லாமல், ‘சத்’ என்னும் தன்னுடைய ஆதாரஸ்தலத்தில் அப்படியே அடங்கி விடுகிறது.
அந்த நிலையில்தான் அனுபவித்தல், அனுபவம், அனுபவிப்பவன் என்னும் மூன்று நிலைகளைக் கடந்த அகண்டாகாரம் அனுபவமாகின்றது.
அது மட்டுமே ‘உள்ளது’.
அதுவே, “இருப்பு” எனப்படுகின்றது.
ஆக, எது இருந்தாலும், போனாலும் என்றென்றும், எப்போதும் உள்ளது அது மட்டுமே.
உண்மையில் அது மட்டுமே உள்ளது. அதுவே சிவம். அதுவே சத், அதுவே சித், அதுவே நான் என்று தன்னைத் தான் அறிவது ஒன்றே ஆனந்தம் ஆகும்.
அதுவே சச்சிதானந்தம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக