திங்கள், 30 அக்டோபர், 2023

ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம் [சமாதி பாதம்] வகுப்பு - 7 Patanjali Yoga Sutra's [Samadhi Pada] Class - 7


கற்பனை என்றால் என்ன?

 வெறும் வார்த்தை ஞானம். நிஜ உலகோடு தொடர்பு இல்லாதது. 

இந்த கற்பனையான எண்ணத்தால் எவ்வளவு சிக்கல்கள் வருகின்றன பார்ப்போம். 

ஒரு பெண்ணோ, ஆணோ மற்றவர் தங்களை நேசிப்பதாக கற்பனை பண்ணிக் கொண்டு, பின் நிஜத்தில் அப்படி இல்லை என்று அறியும் போது வருந்துகிறார்கள். 

தவறு காதலிக்காத  அந்த பெண்ணின் பேரிலோ, அல்லது ஆணின் பேரிலோ அல்ல. கற்பனையாக காதலித்தவரின் பேரில்தான் தவறு.

திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை மிக இனிமையாக இருக்கும் என்று  கற்பனை செய்து கொள்வது. 

அப்புறம், அந்த கற்பனையோடு நிஜம் ஒத்துப் போகவில்லை என்றால், "எப்படியெல்லாம் நினைத்து வைத்து இருந்தேன். வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே" என்று நொந்து கொள்வது. 

வயதான காலத்தில் பிள்ளைகள் நம்மை பார்த்துக் கொள்வார்கள் என்று கற்பனை பண்ணிக் கொள்வது. பின் அவர்கள் பார்த்துக் கொள்ளவில்லை என்றால் அவர்கள் மேல் கோபமும், வருத்தமும் கொள்வது. 

தவறு பிள்ளைகளிடத்தில் இல்லை.  நமது கற்பனையில் இருக்கிறது. 

அலுவலகத்தில் பதவி உயர்வு வரும், சம்பள உயர்வு வரும் என்று கற்பனை பண்ணிக்கொண்டு, அது வரவில்லை என்றால் மேலதிகாரி, நிறுவனம், என்று எல்லோர் மேலும் கோபம் கொள்வது. குறைக்கூறுவது. 

இப்படி எவ்வளவோ அடுக்கிக் கொண்டே போகலாம். 

கற்பனை என்பது வெறும் வார்த்தைகளால் வரும் ஞானம். உண்மைக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. 

ஆத்மா, கடவுள், பரப்பிரம்மம், சொர்கம், நரகம், என்பன எல்லாம் நாம் கேள்விப்பட்டவைகள். 

நிஜத்தில் எங்காவது பார்த்திருக்கிறோமா?

வார்த்தைகளினால் கிடைத்த ஞானம். அவ்வளவுதான்.
 

அதுப்போல, நமக்கு நாமே பல முத்திரைகள் குத்திக் கொள்கிறோம். மற்றவர்களுக்கும் குத்துகிறோம். தமிழன், இந்தியன், இன்ன ஜாதிக்காரன், இன்ன மதம் என்று சொல்கிறோம். இவைகள் எல்லாம் கற்பனை. 

இந்தியா என்பது நிஜமில்லையா? என்றால் - இல்லை. 

உலகம் ஒரு பெரிய நிலப்பரப்பு. அவ்வளவு தான். 

நாம் கற்பனையாக கோடுகள் வரைந்து கொண்டு, இது தமிழ் நாடு, இது இந்தியா, இது அரபிக்கடல், இது வங்காள விரிகுடா என்று பெயர் வைத்துக் கொள்கிறோம். 

உண்மையில் அப்படி ஒன்று கிடையாது. 

ஒரு நீண்ட நிலப்பரப்பு, ஒரு நீண்ட நீர்பரப்பு. அவ்வளவுதான் உண்டு. 

நிர்வாக வசதிக்காக பிரித்து வைத்துக் கொண்டார்கள். 

நாம் ஏன்? நம்மை அதோடு சேர்த்துக்கொள்ள வேண்டும்? 

இங்கு சிக்கல் என்ன? என்றால், நாளடைவில், இந்த கற்பனைகளை நாம் நிஜம் என்றே நினைக்கத் தொடங்கி விடுகிறோம். 

நான் இந்து என்று ஒருவன் கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். இந்து மதத்தை யாராவது குறை கூறினால் அவனுக்கு கோபம் வருகிறது. 

அப்படிக் குறை கூறுபவர்கள் மேல் சண்டைக்குப் போகிறான். 

அவன் இந்துவா? இந்து என்பது ஒரு மதம். அந்த மத கோட்பாடுகளை அவன் பின் பற்றுகிறான். அவ்வளவுதான். 

சாலை விதிகளை பின் பற்றுவது போல, சில மத விதிகளை பின் பற்றுகிறான். 

நான் இந்த சாலை என்று யாரும் கூறுவது இல்லை. 

ஆனால் நான் ஒரு இந்து, முஸ்லிம், கிருஸ்துவன் என்று கூறுகிறார்கள். 

ஏன்? 

இதில் இன்னும் ஒரு மோசமான எண்ணம் நாம் தமிழர் என்று மற்றவர்களிடமிருந்து பிரித்துப் பார்ப்பது. 

இதனால், தமிழன் மட்டுமே உயர்வானவன், மலையாளி, தெலுங்கன், கன்னடன் என மற்றவர்கள் எல்லாம் மட்டமானவர்கள் என்ற மனப்போக்கு நிலவி வருகின்றது. 

கற்பனை நாளடைவில் உண்மையாக மாறிவிடுகிறது. 

இது தேவை இல்லாத ஒன்று. 

யோசித்துப் பாருங்கள். 

உண்மை இல்லாத எத்தனை விசயங்களை நீங்கள் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று. 

சிலவற்றை கற்பனை என்று கூட உங்களுக்கு ஒத்துக் கொள்ள தயக்கமாக இருக்கும். 

ஒரே ஒரு கேள்விதான் கேட்க வேண்டும் - இது உண்மையில் இருக்கிறதா? அல்லது வெறும் கேள்வி ஞானம் தானா? 

பதஞ்சலியின் யோக சூத்திரம் எது கற்பனை?, எது உண்மை? என்று ஆராய வரவில்லை. எது கற்பனை, எது உண்மை என்று அறிந்து கொள்ளச் சொல்கின்றது.

     வெறும் வார்த்தைகளால் மட்டுமே உண்டான ஞானம், உண்மையில் இல்லாத ஒன்று. 

பொய் கெட்டு மெய்யானார் என்கின்றார் மணிவாசகர். 

உண்மையை அறிய வேண்டும் என்றால், கற்பனையானவற்றை முதலில் இனம் கண்டு  நீக்க வேண்டும். 

சிந்தித்துப் பாருங்கள், எந்தெந்த கற்பனையெல்லாம் உண்மை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று. 

இது உங்களுக்குச் சுய பரிசோதனை.

ஞாயிறு, 29 அக்டோபர், 2023

ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம் [சமாதி பாதம்] வகுப்பு - 6 Patanjali Yoga Sutr...


ஐந்து வித எண்ண ஓட்டங்கள் 

प्रमाण विपर्यय विकल्प निद्रा स्मृतयः ॥६॥

ப்ரமாண விபர்யாய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய: 6 

பிரமாணம், விபரீதம், விகல்பம், நித்திரை, ஸ்மிரிதி 

(நுண்ணறிவு, பொய்யறிவு, கற்பனை, உறக்கம், ஞாபகம்) 

நமது எண்ண ஓட்டங்கள் பொதுவாக, ஐந்து  விதமான நிலைகளில் இருக்கிறது. 

அவை, பிரமாணம், விபரீதம், விகல்பம், நித்திரை மற்றும் ஸ்மிரிதி என்று கூறப்படுகிறது. 

இவைகள் என்னென்ன என்று பார்ப்போம். 

பிரமாணம் - நுண்ணறிவு. 

எதையும் ஆராய்ந்து அறியும் எண்ண ஓட்டம். 

கேள்விகள் கேட்டு, பரிசோதனைகள் செய்து அறியும் அறிவு. 

இந்த பிரமாணம் மூன்று வகைப்படும். இதைப் பற்றி ஏற்கனவே பார்த்து இருந்தாலும், இன்னும் விரிவாக பார்க்கப் போகிறோம். இப்போதைக்கு, இதில் மூன்று வகைகள் உண்டு என்று மட்டும் குறித்துக் கொள்வோம். 

அடுத்தது, விபரீதம். 

விபரீதம் என்றால் தவறானது. தவறாக புரிந்து கொள்வது. தவறாக அறிந்து கொள்வது. தவறாக நினைத்துக் கொள்வது. அதாவது, பொய்யாக அறிவது. 

மூன்றாவது, விகல்பம் அல்லது  கற்பனை. 

இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணிக் கொள்வது. இருக்கும் ஒன்றை இல்லாததாகவும் எண்ணிக் கொள்வது. 

நான்காவது தூக்கம். 

நமக்குத் தெரிந்தது தான். இருந்தாலும், தூக்கத்திலும் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும் என்கிறார் பதஞ்சலி. 

ஐந்தாவது, ஞாபகம். 

நடந்தவற்றை எண்ணிப் பார்ப்பது. 

நமது எண்ணங்கள் இந்த ஐந்தில் ஏதாவது ஒன்றில் மாறி, மாறி இருந்துக்கொண்டே இருக்கும். 

இந்த ஐந்தில், முதலாவதாகச் சொன்ன பிரமாணம் என்ற நுண்ணறிவைத்தவிர, மற்றவைகள் அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டியவைகள். 

எப்படித் தவிர்ப்பது? 

அதற்கு என்ன வழி என்று யோக சாஸ்திரம் கூறுகிறது. 

நமது எண்ண ஓட்டங்களை நாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருந்தால் அது எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியும். 

பெரும்பாலான சமயங்களில் நாம் நமது எண்ண ஓட்டங்களை புரிந்து கொள்வது இல்லை. 

கற்பனையை உண்மை என்று நினைக்கிறோம். இருப்பதை, இல்லை என்று எண்ணிக் கொள்கிறோம். இல்லாததை இருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறோம். 

இப்படி தவறான எண்ணங்களால் பல துன்பங்களை சந்திக்கிறோம். 

அது மட்டும் அல்ல, இந்த தவறான எண்ணங்கள், உண்மையில் நாம் யார்? என்பதை நம்மை அறிய விடாமல் தடுக்கின்றன. 

யோகத்தின் முக்கிய நோக்கமே, ‘நாம் யார்?’ என்பதை அறிவதுதான். 

அந்த அறிவிற்கு இந்த தவறான எண்ணங்களே மிகப் பெரிய தடை. இந்த தடைகளை வென்று, நம்மை நாம் அறிய வழி செய்கிறது யோக சூத்திரம்.



வெள்ளி, 27 அக்டோபர், 2023

ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம் [சமாதி பாதம்] வகுப்பு - 5 Patanjali Yoga Sutr...



தன் சுய அறிவே, பார்ப்பவன், பார்வை, பார்க்கப்படும் பொருள் என எல்லாமாக இருக்கின்றது. 

அதாவது, அனைத்து வடிவங்களும், அதற்கான இயக்கங்களும் தன் சுய அறிவினாலேயே அறியப்படுகிறது. 

இவ்வாறு, விழிப்பு நிலை அனுபவங்கள் எல்லாமே, நான் எனும் சுய அறிவில் தன்னிருப்பில் அறியப்படுகிறது. 

அதுவே, அனைத்து வடிவங்களிலும் செயலாற்றி, அனைத்தையும் நிஜம் என நம்ப வைக்கின்றது. அதுவே, கனவு நிலையில் பலவாறான வடிவங்களைப் படைத்துக் கொள்கின்றது. அதுவே, ஆழ்ந்த உறக்கத்தில் தற்காலிகமாக மறைந்துக் கொள்கின்றது. 

அதாவது, அந்த சுய அறிவு ஆழந்த உறக்கத்தில் தற்காலிகமாக மறைந்திருந்தாலும், தன்னைத் தான் அறிந்துக் கொண்டே இருப்பதினால்தான், நாம் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தவுடனே கூட, நான் நன்றாகத் தூங்கினேன் என்று கூற முடிகின்றது. 

ஆக, அந்த அறிவின்றி வடிவமேது. அந்த அறிவின்றி இந்த உலகமேது? ஆக, அத்தனை வடிவங்களும் அந்த தூய அறிவாகிய தன் சுய அறிவு. 

ஆக, இவ்வாறு அனைத்தையும் பார்ப்பவன் எவனோ? படைப்பவன் எவனோ? அனுபவிப்பவன் எவனோ? அழிப்பவன் எவனோ? அவனே நான். 

இவ்வாறு, நானே அந்த தூய அறிவு என்பதை ஒரு ஞானி மட்டுமே தன் சித்தத்தில் சிவமயமாக உணர்கிறான். 

அதனால்தான், அவன் அனைவரையும் பார்த்து, தத்துவமஸி என்று கூறமுடிகின்றது. அதாவது, நீ அதுவாகவே இருக்கிறாய் என்கின்றான்.

அத்தகைய சித் என்னும் தூய அறிவு வெளியில்தான், அதாவது, இந்த வெட்டவெளியில்தான் பிரபஞ்சம் என்னும் அனுபவம் இருப்பு கொள்கிறது.  

நடப்பவையனைத்தும் இந்த வெட்டவெளி யில்தான் நடக்கின்றன. உண்மையில், வெட்டவெளி என்பது நம்முடைய உணர்வுவெளி. 

இங்குதான் ‘அறிதல்’ அல்லது தன்னை உணர்தல் நிகழ்கிறது. 

அதாவது, எல்லாம் அறியும் அறிவுதான் இங்கு பிரஞ்ஞை அல்லது தன்னுணர்வு எனப்படுகின்றது. 

அத்தகைய தன்னுடைய சுய அறிவில்தான் இங்கு எல்லாம் இருப்பு கொண்டுள்ளது. அதன் வாயிலாகத்தான் இங்கு எல்லாம் அறியப்படுகின்றது. 

அதற்கான கருவிகளாகத்தான் நம்மிடம் ஐம்புலன்களும், மனமும் உள்ளது. 

அவைகளைக் கொண்டு அனைத்தையும் அறியும் அறிவாக அந்த சுய அறிவு அல்லது தன்னுணர்வு தன்னைத்தான் அறிந்துக்கொள்ளும் தன்னிலைக்குப் பெயர்தான் இருப்பு என்றும் அழைக்கப்படுகின்றது. 

அதாவது, நான் இருக்கிறேன் என்ற தன்னிருப்பை தான் உணரும் உயர் பரிமாண அனுபவம் அது. 

இதை அறிவது மட்டும்தான் சத் ஆகிய இருப்பின் இறுதி நோக்கம். 

அதாவது, சத் என்ற இருப்பு சிவம்.

சித் என்ற அறிவு சக்தி. 

இந்த சிவமும், சக்தியும் சேரும்போது, அங்கே ஆனந்தம் உண்டாகின்றது. அதுவே, அர்தநாரீஸ்வரர் தத்துவம் ஆகும்.

அதனால்தான் சக்தி இல்லையேல் சிவம் இல்லை!. சிவம் இல்லையேல் சக்தி இல்லை! என்று கூறினர். 

ஆக, இரண்டையும் பிரிக்க முடியாது. இந்த இரண்டும் ஒன்றே என்று கூறுவதுதான் அத்வைதம். அதனால்தான் ப்ரஹ்மம் ஒன்று என்று கூறப்படுகின்றது. 

பொதுவாக, ஒரு ஆணும், பெண்ணும் ஒன்றாகச் சேர்வது சிற்றின்பம். அதுபோல, இந்த சிவமும், சக்தியும் ஒன்றாகச் சேர்வது பேரின்பம். 

அதாவது, அசையாத சிவம் (சத்), அசைகின்ற சக்தியின் (சித்) வாயிலாக தன்னைத் தான் அறிந்துக் கொள்கின்ற அனுபவம் நடைப்பெறும் இடமே அந்த உணர்வு வெளியாகிய வெட்டவெளி என்னும் தூய அறிவு வெளி அல்லது உணர்வு வெளி. 

அப்படிப்பட்ட வெட்டவெளியாகிய சித்தை, சத்துடன் இணைப்பதுதான் சித்தம் சிவமயமாதல் என்று கூறப்படுகின்றது. 

அதாவது, தன் இருப்பை தான் உணர்வது ஆகும். 

அதாவது, அந்த சத்தாகிய சிவம் (அறிவு), சித்தாகிய சித்தத்தின் மூலம் தன்னைத் தான் உணர்வதற்காக புரியும் திரு நடனம் தான் இங்கு இயக்கம். 

அதனால்தான் `சித்ரூபிணி` என்று பிரபஞ்சத்தின் தாயாக இதயவெளி உள்ளது. அந்த இதயவெளியில் சித்தமாகிய பிரபஞ்சத்தின் ஆனந்தக்கூத்து நடக்கும் அரங்கம்தான் சித்தம் என்கின்ற சிதம்பரம். 

சிதம்பரம் என்றால், அதை இரண்டாகப் பிரிக்கும் பொழுது, சித் + அம்பரம் என்று வரும். 

சித் என்றால் அறிவு அல்லது உணர்வு.

அம்பரம் என்றால் வெளி. 

ஆக, உணர்வு வெளி என்ற வெட்டவெளி எது? என்றால், அதுவே நம் சித்தம். உண்மையில் இந்த சித்தம் நம்முடைய தனித்த சித்தம் கிடையாது. 

ஏனென்றால், எல்லாம் நம்மால் படைக்கப்பட்டது என்பதினால், அவன், இவன், அது, இது என்ற இருமைகள் இல்லாத எல்லா சித்தமும் ஒன்று கூடிய ஈஸ்வர சித்தம் என்கின்றது சாஸ்திரம். 

இதைத்தான் சிதம்பரம் என்றும் சிற்றம்பலம் என்றும் கூறுகிறோம். 

உண்மையில் இந்த சிதம்பரம் அல்லது சிற்றம்பலம் என்பது நம்முடைய சித்தத்தின் மேம்பட்ட உயர் பரிமாணம். 

அப்படிப்பட்ட உயர் பரிமாணத்தில் உள்ள சித் என்ற உணர்வு அல்லது பேரறிவு இருப்பு கொண்டுள்ள இடமே சத் என்ற ஆதாரஸ்தலம்.

ஆக, எப்போது சித்த விருத்தி நிரோத: நடைப் பெறுகின்றதோ? அப்போது, அனைத்தையும் அறியும் அறிவாகிய சித் என்னும் சுத்தப்பிரக்ஞை தான் அறிவதற்கு ஏதுமில்லாமல், சத் என்னும் தன்னுடைய ஆதாரஸ்தலத்தில் அப்படியே அடங்கி விடுகிறது. 

அந்த நிலையில்தான் அனுபவித்தல், அனுபவம், அனுபவிப்பவன் என்னும் மூன்று நிலைகளைக் கடந்த அகண்டாகாரம் அனுபவமாகின்றது. 

அது மட்டுமே உள்ளது’.

அதுவே, இருப்பு எனப்படுகின்றது. 

ஆக, எது இருந்தாலும், போனாலும் என்றென்றும், எப்போதும் உள்ளது அது மட்டுமே. 

உண்மையில் அது மட்டுமே உள்ளது. அதுவே சிவம். அதுவே சத், அதுவே சித், அதுவே நான் என்று தன்னைத் தான் அறிவது ஒன்றே ஆனந்தம் ஆகும். 

அதுவே சச்சிதானந்தம்.


வியாழன், 26 அக்டோபர், 2023

ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம் [சமாதி பாதம்] வகுப்பு - 4 Patanjali Yoga Sutr...


சித்தம் என்பது, இந்த உலகை அறிய உதவுகின்றது. 

இந்த சித்தம் என்பது மனம், அறிவு, ஞாபகம், சிந்தனை, எண்ணங்கள் என்ற இவற்றின் ஒரு தொகுப்பு. 

பொதுவாக, நம்முடைய மனம் அல்லது சித்தம் என்பது 5 நிலைகளில் இருக்கின்றது. 

1.   ஷிப்தா

2.   முத்தா

3.   விஷிப்தா

4.   ஏகாக்ர

5.   நிரோத எனப்படும்.

முதலாவது - க்ஷிப்தா. 

அதாவது, சலனம் உள்ள மனம். 

அலை பாய்ந்து கொண்டே இருப்பது. குரங்கு போல அங்கும் இங்கும் தாவிக் கொண்டே இருக்கும். ஒன்றில் இருந்து மற்றதற்கு மாறிக் கொண்டே இருக்கும். மனம் அலைந்து கொண்டே இருக்கும். இது மனதின் ஒரு நிலை. 

 

இன்னொரு நிலை - முத்தா. 

அதாவது, மந்த புத்தி. 

மந்த புத்தி என்பது எதையும் முடிவெடுக்காமல், எதையும் அறிந்து கொள்ளாமல் முழிப்பது. 

என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது. 

எதையும் ஒன்றுக்கு பத்து தடவை சொல்ல வேண்டும். மெதுவாகத்தான் புரியும். 

மூன்றாவதாக நிலை - விக்ஷிப்தா. 

இது தடுமாறும் மனம். 

சரி என்று ஒன்றை நினைக்கும். அந்த பாதையில் போகும். சிறிது காலம் கழித்து, இது சரிதானா என்று தடுமாறும். 

பின் வேறு ஒரு வழியில் செல்லும். உறுதியற்ற தன்மை. 

நாலு நாள் உடற் பயிற்சி செய்வது. உடல் எடை குறையவில்லை என்றால், இது சரியில்லையோ என்று அதை விட்டு விடுவது. வேறு ஒன்றைப் பிடிப்பது, இவ்வாறு தடுமாறுகின்ற மனம். 

நான்காவதாக உள்ள நிலை -  ஏகாக்ர 

இதை ஒரு முகப்பட்ட சிந்தனை என்கின்றோம். 

சிந்தனை அங்கும் இங்கும் ஓடாமல், தடுமாறாமல், மந்தமாக இல்லாமல், ஒரு முகமாக இருப்பது. 

அசையாமல் ஒன்றையே பற்றி நிற்பது.  

ஐந்தாவதாக வருவது - நிரோத: 

நிரோதம் என்பது தடுப்பது அல்லது அதை நம் ‘விருப்பப்படி செலுத்துவது’ எனலாம். 

நிரோதம் என்பதற்கு நேரடி மொழிப் பெயர்ப்பு என்றால் கட்டுப்படுத்தவது, அடக்குதல், ஆளுதல், தடை போடுதல் என்று வரும். 

யோகம் மூலம் சித்தத்தை, நாம் விரும்பும் வழியில் செலுத்த முடியும். சித்தம் நம் கட்டுக்குள் வரும். இதை அடைவதுதான் யோகத்தின் நோக்கம். 

அலைபாயும் மனத்தை, தடுமாறும் மனதை, மந்த மனத்தை நம் கட்டுக்குள் கொண்டு வருவதுதான் யோகத்தின் மிக முக்கியமான நோக்கம். 

சித்தம் வசப்பட்டால் வாழ்க்கை வசப்படும். அது மட்டும் அல்ல, உலகமே வசப்படும். 

யோக சித்த விருத்தி நிரோத:  

விருத்தி என்றால் செயல்பாடு.  

யோகப் பயிற்சின் மூலம், சித்தத்தை நாம் வென்றெடுக்கும் முயற்சி.


ஞாயிறு, 22 அக்டோபர், 2023

ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம் [சமாதி பாதம்] வகுப்பு - 3 Patanjali Yoga Sutr...


अथ योगानुशासनम् ॥१॥


அத யோக அனுசாசனம் 1

(இதோ யோக விளக்கம்)

இப்போது = இந்த நிமிடத்தில், இந்த நொடியில் இருந்து. 

நாம் எப்போதும் ஒன்று கடந்த கால நினைவுகளில் வாழ்கிறோம் அல்லது எதிர் கால கனவுகளில் அல்லது பயங்களில் வாழ்கிறோம். 

இந்த நொடியில் நிகழ்காலத்தில் நாம் வாழ்வதே கிடையாது. 

கண் மூடி ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இன்று எத்தனை தடவை பழைய நினைவுகளை எண்ணிப் பார்த்தீர்கள். எத்தனை முறை எதிர் காலத்தைப் பற்றி யோசித்தீர்கள் என்று. 

வாழ்க்கை என்பது நிகழ்காலத்தில் மட்டும் தான் இருக்க முடியும். கடந்த காலம் போய் விட்டது. இனி வராது. எதிர் காலம் இனிமேல்தான் வரப் போகின்றது. 

இந்த இரண்டு காலமும் நம் கையில் இல்லை. 

நம்மிடம் இருப்பது இந்த நொடி மட்டும்தான். ஏதாவது செய்வது என்றால் இந்த நொடியில் செய்தால்தான் உண்டு. 

ஆனால், நாம் இந்த நொடியில் இருப்பதே இல்லை. 

பதஞ்சலி சொல்கிறார் "இப்போது தொடங்குங்கள் யோகப் பயிற்சி" என்று. 

இந்த நொடியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். 

நாளைக்கு நல்ல நாள், அடுத்த வாரம் வளர்பிறை ஆரம்பிக்கலாம் என்று இருக்கக் கூடாது. 

இப்போதே! இந்த நொடியிலேயே! 

"யோக:" - யோகம் என்றால் இணைப்பது. 

இணைந்து இருப்பதை மீண்டும் இணைக்க முடியாது.

பிரிந்து கிடப்பதை வேண்டுமானாலும் இணைத்து வைக்கலாம். 

எது பிரிந்து கிடக்கிறது? 

மனமும், உடலும். 

உடலும், உணர்வும். 

மனமே, பல்வேறு பகுதிகளாக பிரிந்து கிடக்கின்றது. 

மனச்சிதைவு என்று சொல்வார்களே அதுப்போல, பலவாகப் பிரிந்து கிடக்கின்றது. 

ஆசை ஒரு புறம், தவறு என்ற எண்ணம் ஒரு புறம், பொறாமை ஒரு புறம், புன்னகை மறு புறம், வெறுப்பு ஒரு புறம், சகிப்பு மறு புறம் என்று மனம் பல பகுதிகளாக  பிரிந்து கிடக்கின்றது. 

இவ்வாறு பிரிந்து கிடக்கும் பிரிவுகளில் இருந்து பிரிக்க வேண்டியதை முழுமையாகப் பிரித்து, இணைக்க வேண்டியதை முழுவதுமாக இணைப்பது யோகம்.

அதாவது, நம்மை முழு மனிதனாக்குவது யோகம்.


புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்