வெள்ளி, 24 நவம்பர், 2023

ஸ்ரீ பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் [சமாதி பாதம்] வகுப்பு - 20. Patanja...


ஒரு பூவை ஒரு கவிஞன் பார்க்கிறான். அவன் மனதில் ஆயிரம் கவிதைகள் ஓடுகிறது. அதே பூவை நாமும் பார்க்கிறோம். நன்றாக இருக்கிறது என்று மட்டும் தோன்றுகிறது. கவிதைகள் எல்லாம் வருவது இல்லை. 

ஒரு பெண்ணை அவளின் காதலன் பார்பதற்கும், மற்றவர்கள் பார்பதற்கும் வேறுபாடு இருக்கிறது அல்லவா? 

நமது புலன்கள் மிக நுட்பமானவை அல்ல. 

அவைகளுக்கென்று ஒரு அறிவும் கிடையாது. 

அதாவது, வெளியில் இருந்து செய்திகளை உள்ளே அனுப்ப வேண்டியது. அவ்வளவுதான் அவற்றின் வேலை. 

அதிலும் கூட ஓரளவுக்குத்தான் செய்யும். அதற்கு மேலும், கீழும் உள்ளவைகளை அவற்றால் அறிய முடியாது. 

கொஞ்ச தூரம் வரைதான் கண்கள் பார்க்கும்.

அதற்குமேல் வேண்டும் என்றால் தொலை நோக்கி வேண்டும். ஒரு அளவு பருமன் உள்ளதை மட்டும் தான் கண்கள் பார்க்கும், அதை விட சிறியது என்றால், ஒரு நுண்ணோக்கி வேண்டும். இப்படி எதிலும் ஒரு இடைப்பட்ட ஒன்றை மட்டும் தான் நம் புலன்கள் உணரும். இது ஒரு சிக்கல். 

அடுத்த சிக்கல் என்ன? என்றால், இந்த செய்திகளை அறியும் மூளை அல்லது அறிவு இருக்கிறதே, அதுவும் ஓரளவுதான் செயல்படும். 

ஒரே நேரத்தில் பல விஷயங்கள் வந்து கொண்டே இருக்கும். அது மட்டும் அல்லாமல், மூளை அது பாட்டுக்கு வேறு ஒன்றை நினைத்துக் கொண்டு இருக்கும். 

வீட்டில் மனைவி ஆசை ஆசையாக ஏதாவது இனிப்பு செய்து வைத்திருப்பாள். அலுவலகத்தில் ஏதோ ஒரு சிக்கல். மனம் அதையே நினைத்துக் கொண்டிருக்கும். இனிப்பு மனதிற்குத் தெரியாது. 

மனதில் ஆயிரம், ஆயிரம் எண்ண ஓட்டங்கள் இருந்து கொண்டே இருக்கு. ஒரு நொடி கூட அது சும்மா இருப்பது இல்லை. எனவே, புலன்கள் அனுப்பும் சங்கதிகளை அறிவு முழுவதுமாக உணர்வதே இல்லை. 

அவ்வாறு வருவதே சொற்பம். வந்ததையும், சரியாகப் புரிந்து கொள்வது இல்லை. 

எனவே, நாம் இந்த உலகை அறியப் பயன்படுத்தும் நம் பொறிகளும், அறிவும் நமக்கு அரைகுறையாக உலகை நமக்கு காட்டித் தருகின்றன.

நாம் இந்த உலகை, அதில் உள்ளவற்றை ஒரு போதும் முழுவதும் அறிந்துக் கொள்வதே இல்லை. அரை குறையாக அறிந்து கொண்டு அல்லல்படுகிறோம். 

எனவே, இந்த புலன்களும், அறிவும் சரிப்படாது என்று புரிகிறது அல்லவா? 

புலன்களும், அறிவும் உலகை நமக்கு வடிகட்டித் தருகின்றன. 

ஒரு பெரிய அறிஞர் பேசுகிறார். ஆனால் அவர் பேசும் மொழி நமக்குத் தெரியாது. ஒரு மொழி பெயர்பாளரை வைத்துக் கொள்கிறோம். சிக்கல் எவ்வளவு என்று பாருங்கள். 

முதலில் அந்த அறிஞர் தான் நினைத்ததை தனது மொழியில் சொல்ல வேண்டும். அது ஒரு சிக்கல். நினைப்பதை எல்லாம் சொல்லில் வடித்து விட முடியாது. அவர் சொன்ன பின், மொழி பெயர்ப்பாளர் அதை நமக்குத் தெரிந்த மொழியில் மொழி பெயர்க்கிறார். அறிஞர் சொன்ன சொல்லுக்கும், இவர் நமது மொழியில் கண்ட சொல்லுக்கும் நூறு சதம் ஒற்றுமை இருக்குமா? என்பது சந்தேகம். 

சரி! மொழி பெயர்த்து விடுகிறார் என்றே வைத்துக் கொள்வோம். நாம் அந்த சொல்லை கேட்கிறோம். நமக்கு அந்த சொல்லின் அர்த்தம் தெரியும். ஆனால், அது தான் மொழி பெயர்ப்பாளர் நினைத்த அர்த்தம் என்று சொல்ல முடியாது. 

இப்படி வடி கட்டி, வடி கட்டி வரும்போது உண்மை மறைந்து போய் விடுகிறது. 

உதாரணமாக, இயேசு கிறிஸ்து அராமை என்ற மொழியில் பேசினார். அதில் இருந்து ஹீப்ரு மொழிக்குப் போய், அங்கிருந்து கிரேக்கம், லத்தீன் மொழிகளுக்குப் போய், அங்கிருந்து ஆங்கிலத்துக்குப் போய், அங்கிருந்து தமிழுக்கு வருகிறது அவர் சொன்ன விஷயங்கள். நாம் தமிழில் படிக்கும் பைபிள் இயேசு சொன்னது தான் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா? 

சரி, இந்த அறிவும் புலன்களும் இல்லை என்றால் வேறு எப்படித்தான் அறிந்து கொள்வது? 

நிர்விசார சமாதி அடைந்த யோகி, அறிவும் புலன்கள் இவற்றின் துணை இல்லாமல் நேரடியாக அறிவான். 

அது என்ன நேரடியாக அறிவது? 

மீண்டும் உலக நடைமுறைக்கு வருவோம்.


காதலனும் காதலியும் சந்திக்கிறார்கள்.
  அவர்கள் பேச வேண்டும் என்பது இல்லை. கண்கள் ஒன்றை ஒன்று பார்த்தாலே போதும். ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு பார்வை சொல்லும். 

“கண்ணோடு கண்ணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல”.

 சொல்லால் எந்த பயனும் இல்லை என்கிறார் வள்ளுவர்.  

பேசாமலேயே, ஒருவர் மனதில் இருப்பது இன்னொருவர் மனதுக்கு தெரிந்து விடும். 

உண்டா இல்லையா? 

ஒரு மென்மையான  கை பிடியில் அன்பு கொட்டிக் கிடக்கும். அவளுக்கு மட்டும் தெரியும். 

ஒரு தாய், தன் குழந்தையின் உளறலுக்கு அர்த்தம் கண்டு விடுவாள். அது மொழி வழி வந்த அர்த்தம் அல்ல. மொழி என்றால், காது, கேட்க வேண்டும். வார்த்தையின் ஒலி வடிவத்தை அறிவு அறிந்து சொல்ல வேண்டும். குழந்தை ஒன்றும் பேசவில்லை. ஏதோ உளறுகிறது. தாய் அதை அறிந்து கொள்வாள். 

புலன்கள் மற்றும் அறிவை தாண்டி அது நேரடியாக அறிந்து கொள்ளும் விதம். 

இது எப்படி சாத்தியமாகிறது? 

காதலனும் காதலியும், இருவர் அல்ல, ஒருவராக மாறிவிடுகிறார்கள். அவள் ஏதோ ஒன்றை நினைக்கிறாள். அவள் இதைத்தான் நினைக்கிறாள் என்று அவன் உணர்ந்து கொள்கிறான். இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளி மறைந்து போய் விடுகிறது. 

இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொல்ல முடியும். 

மிகவும் அன்பு கொண்ட கணவன் மனைவி இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கணவன் வெளியூர் போயிருப்பான், எங்கோ தொலை தூரம். 

அவனுக்கு  அங்கே ஒரு துன்பம் என்றால், மனைவிக்கு இங்கே என்னமோ செய்யும். இவள் சங்கடப்படுவாள்.

அவருக்கு என்னவோ துன்பம், ஆபத்து என்று இவளுக்குத் தெரியும். 

எப்படி? 

குழந்தை இன்னொரு அறையில் தூங்கிக் கொண்டிருக்கும். தொட்டிலுக்குள் அது பசித்து விழித்தால், மற்றொரு அறையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் தாய்க்கு அது தெரியும். தானே விழித்துக் கொள்வாள். யாரும் எழுப்ப வேண்டாம். 

யோகிக்கு, இந்த உலகமே அப்படித்தான். அவன் உலகை தன்னுள் அறிகிறான். உலகம்வேறு, தான்வேறு என்று அவன் நினைப்பது இல்லை. இரண்டும் ஒன்றாகக் கலந்து விடுகிறது. 

அப்போது மட்டும்தான், அறிவும் வேண்டாம், புலனும் வேண்டாம். 

இதைப்பற்றி, கண் மூடி மனதுக்குள் சிந்தியுங்கள்!...


திங்கள், 20 நவம்பர், 2023

ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம் [சமாதி பாதம்] வகுப்பு - 19. Patanjali Yoga Su...


நிர்விசார சமாதியின் அனுபவம் நிகழும் போது, அதுவே உண்மையான பிரசாதம்.  

எங்கள் வீட்டில் ஒரு புது விதமான இனிப்பு பலகாரம் செய்தோம்.  இதுவரை யாரும் அந்த மாதிரி செய்தது இல்லை. சும்மா செய்து பார்த்தால் எப்படி இருக்கும் என்று செய்து பார்த்தோம். 

மிக நன்றாக வந்தது. மிக மிக சுவையாக இருந்தது. என்று இப்படி சொல்லிக் கொண்டே போகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? 

அது என்ன பலகாரம், எப்படி செய்வது?... ஒன்றும் தெரியாது. 

"வாயில போட்டா அப்படியே கரையும்", "என்ன மாதிரி வாசம் தெரியுமா", "பாக்கவே அழகா இருக்கும்" என்று நான் அடுக்கிக் கொண்டே   போகிறேன். உங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. 

ஆனால், என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் பொய் சொல்ல மாட்டேன் என்று. 

நீங்கள் உங்கள் நண்பரிடம் போய் நான் செய்த பலகாரம் பற்றி சொல்கிறீர்கள். 

"அது எப்படி இருக்கும் தெரியுமா?... வாயில போட்டா அப்படியே   கரையும், பாக்கவே அவ்வளவு அழகா இருக்கும்..." என்று நான் சொன்னதை  அப்படியே திரும்பிச் சொல்கிறீர்கள். 

அவர் அவருடைய நண்பரிடம்... இப்படி போய்க் கொண்டே இருக்கிறது அந்த பலகாரக் கதை. 

என்னைத் தவிர யாருக்கும் அது என்ன என்றே தெரியாது. அதை சுவைத்து அனுபவித்தவன்  நான் மட்டும் தான். 

இந்த கதை எப்படி ஒரு போலியான ஒன்று என்று, தெரிகிறது அல்லவா? 

இதுப்போலத்தான் வாழ்க்கையில் பல விஷயங்கள் இருக்கிறது. 

 கடவுள், சொர்கம், நரகம், பாவம், புண்ணியம், ஆத்மா, மறுபிறப்பு, வினைப்பலன் என்று  நிறைய விஷயங்கள் நமக்கு நேரடியான "அனுபவம்" கிடையாது. 

யாரோ சொல்ல, யாரோ கேட்க, அவர் சொல்ல, அவர் இன்னொருவரிடம் சொல்ல...இப்படி வந்த கதைகளை ஏதோ நாமே அறிந்த மாதிரி மற்றவர்களுக்குச் சொல்லிக் கொண்டு  திரிகிறோம். 

அதில் என்ன தவறு இருக்கிறது? என்று நீங்கள் கேட்கலாம்? தெரிந்ததைத் தானே சொல்கிறார்கள்.  அதை கேட்டு மற்றவர்களிடம் சொன்னால் என்ன? என்று கேட்கலாம். 

ஒரு ஐந்து வயது சிறுமி அவளுடைய தாயிடம், "அம்மா, நீயும், அப்பாவும் கணவன் மனைவியாக  இருக்கிறீர்கள். ஒரு பெண், அவளுடைய கணவனிடம் பெறும் சுகம் என்பது என்ன? அது எப்படி இருக்கும்? எனக்கு கொஞ்சம் விளக்கிச் சொல்லேன். நானும் நாளை திருமணம் செய்துக் கொண்டால் எனக்கு உன் விளக்கம் உதவியாக இருக்குமே" என்று கேட்கிறாள்  என்று வைத்துக்கொள்வோம்... 

அந்த தாய் என்ன சொல்லுவாள்? 

அவள் கணவனிடம் பெற்ற இன்பத்தை ஐந்து வயது சிறுமிக்கு விளக்கிச் சொல்ல முடியுமா? சொன்னால் தான் புரியுமா? 

அனுபவங்களை மடை மாற்ற முடியாது. 

ஒவ்வொருவரும் தங்களுக்கு தாங்களே அனுபவித்து அறிந்தால்தான் உண்டு. மற்றவர்களுக்கு அந்த அனுபவத்தை எவ்வளவு விளக்கினாலும் ஏறாது. 

முகத்தில் கண் கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்.
மகட்குத் தாய் தன் மணாளனோடாடிய
சுகத்தை சொல் என்றால் சொல்லுமாறெங்கனே?

என்பார் திருமூலர். 

மகளுக்கு, தாய் தன் மணாளனோடு ஆடிய சுகத்தை சொல் என்றால் சொல்லுவது எப்படி? 

அனுபவம் இல்லாத அறிவு, கடன் வாங்கிய ஞானம். 

அதாவது, இரவல் ஞானம். 

அது, நம் சொந்த அறிவு அல்ல!. 

பதஞ்சலி சொல்கிறார்... 

இதையெல்லாம் படித்து விட்டு, "ஆஹா எனக்கு நிர்விசார சமாதி கிடைத்து விட்டது  என்று சொல்லிக் கொண்டு திரியாதே".... 

நாளடைவில் உனக்கு அந்த அனுபவம் நிகழும். அது வரை பொறுத்திருக்க வேண்டும் என்கிறார். அனுபவம் நிகழவில்லை என்றால் ஏதோ தவறு என்று அறிந்துக் கொள்.


ஞாயிறு, 19 நவம்பர், 2023

ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம் [சமாதி பாதம்] வகுப்பு - 18 Patanjali Yoga Sut...



 நிர்விகல்ப சமாதி
----------------------------

நிர்விதர்க்க என்றாலும் நிர்விகல்ப என்றாலும் ஒன்றே. 

சமாதியின் பல படிகளை சொல்லிக்கொண்டு வருகிறார். 

இதுவரை நாம் பார்த்தது, "சவிதர்க" சமாதி எனப்படும், சவிகல்ப சமாதியைப் பற்று அறிந்துக் கொண்டோம். 

அதில், என்ன புரிந்துக் கொண்டோம் என்றால், பொருள், அவற்றின் தன்மை மற்றும் அதன் பெயர் போன்றவைகளை அறிவதின் வாயிலாக, புற அறிவை மேம்படுத்தி உலகை உண்டாக்கி அதில் வருகின்ற இன்பம் - துன்பம் என்ற இருமைகளில் இருக்கிறோம். மேலும் அனுபவிக்கப்படும் பொருள் ஒன்று இருப்பதாகவும், அனுபவிக்க தான் இருப்பதாகவும் பாவித்துக் கொண்டு, அதன் வாயிலாக ஒரு அனுபவம் ஏற்பட விரும்புகின்றோம். 

இதன் அடுத்த கட்டம், எந்த விதமான எண்ணங்களும் உண்டாகாமல், மனதை நிர்மலமாக மாற்றக்கூடிய நிர்விதர்க சமாதி அல்லது நிர்விகல்ப சமாதி பற்றி இந்த சூத்திரத்தில் பேசுகிறார் பதஞ்சலி முனிவர். 

அவர் கூற வருகின்ற மிக முக்கியமான விஷயம் என்னவெனில், நாம் இந்த உலகை, அது இருக்கும் நிலையில் பார்ப்பது இல்லை. 

அப்படி என்றால் என்ன? 

உதாரணமாக, நாம் ஒரு மஞ்சள் நிற கண்ணாடியை அணிந்துக் கொண்டு உலகை பார்த்தால், உலகில் உள்ள எல்லாம் மஞ்சளாகத்தானே தெரியும்...?! 

நாம் அப்படித்தான் பார்க்கிறோம். 

அப்படி அனைத்தையும் மஞ்சளாகப் பார்க்கிறோம் என்பதற்காக, அதுவே உண்மையாக முடியாது அல்லவா? 

அதாவது, அவைகள் எல்லாம் மஞ்சளாக இருப்பது இல்லை. 

அதனால், கண்ணாடியை கழட்டி விட்டு பார்த்தால், எது உண்மையான நிறம் என்று நமக்குத் தெரியும். 

இதை அறியாத நிலைமைதான் இப்போது நம்மிடம் இருக்கின்றது. 

இப்போது, அறிவியல் மேலும் வளர்ந்து விட்டது. 

Virtual Glass என்று சொல்கிறார்கள். அதை அணிந்துக் கொண்டு பார்த்தால், இல்லாத ஒன்று கூட இருப்பதாகத் தெரியும். 

வானில் பறப்பது போலவும், நீருக்குள் மூழ்குவது போலவும், சறுக்கு பலகையில் சறுக்குவது போலவும், கட்டிடத்தின் நுணியில் நிற்பதுப் போலவும் தெரியும். 

அதை அணிந்துக் கொண்டிருப்பவர்கள் தாங்கள் காணப்பது நிஜம் என்று நம்புவார்கள். 

கீழே வீழ்வது போலத் தெரிந்தால், இருக்கையை இறுக்கி பிடித்துக் கொள்வார்கள். அவர்களுக்கு அது தான் நிஜம்.

 இதில் சிக்கல் என்ன? என்றால், நாம் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறோம் என்றே நமக்குத் தெரியாது. தெரிந்தால் அல்லவா? அதை கழட்டி விட்டு பார்த்து, உண்மை எது? என்று அறிந்து கொள்ள முடியும். 

அதுப்போல, ஒரு கண்ணாடியை நாமும் அணிந்துக் கொண்டிருக்கிறோம். 

ஆம்! நமது ஞாபகங்களே அந்தக் கண்ணாடி… 

நாம் இந்த உலகை, நமது பழைய ஞாபகங்கள் என்ற கண்ணாடியின் வழியாகப் பார்க்கிறோம். 

இல்லாததை இருப்பதாய் பார்க்கிறோம். 

இருப்பவற்றை  வேறு விதமாக பார்க்கிறோம்.


வெள்ளி, 17 நவம்பர், 2023

ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம் [சமாதி பாதம்] வகுப்பு - 17. Patanjali Yoga Sutra's [Class - 17]


மனதில் உள்ள சஞ்சலங்கள் எல்லாம் போய் விட்டால், ஸ்படிகக்கல் எப்படி தன் அருகில் உள்ளதை அப்படியே பிரதி பலிக்குமோ?... அதுப்போல, நாமும் இந்த உலகை நம்மில் பிரதிபலிக்க முடியும். 

நமக்கும், இந்த உலகுக்கும் இடையே உள்ள இடைவெளி மறைந்து போகும். நாம் வேறு, இந்த உலகம் வேறு அல்ல! என்ற நிலை வரும். 

அதுவே, சகஜ சமாதி. 

நான் என்ற எண்ணம் மறையும். நான் என்ற அகந்தை உலகில் கரையும். அங்கே அனுபவிப்பவனும் கிடையாது, அனுபவிக்கப்படுவதும் கிடையாது. 

அனுபவம் மட்டுமே இருக்கும். 

ஒவ்வொரு குழந்தையின் மூளையிலும் அது வளரும் சமூக-கலாச்சார ஆற்றல்களின் சூழல்கள் மூலம், சில எண்ணங்கள் என்ற நம்பிக்கைகளை விதைத்து, அந்தக் குழந்தையின் மனத்தைக் கட்டமைக்கின்றன.

இந்தக் காரணத்தால் தனிமனம் என்பது கிடையாது.

எல்லா மனங்களும் பொது நம்பிக்கைகளின் அடிப்படையில்தாம் கட்டப்படுகின்றன.

மனத்தின் வழியாக இயக்கம் கொள்ளும் அனுபவம் என்பது ஒன்றுதான்.

ஆசை, பயம், கோபம், பொறாமை, ஏக்கம், அவநம்பிக்கை, துயரம் போன்ற உணர்ச்சிகள் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவை.

சாதி, மதம், நாடு, மொழி போன்ற பிரிவுகளை கடந்தவைகள் இத்தகைய உணர்ச்சிகள்.

கூட்டுமனம் என்னும் மாபெரும் விருட்சத்தின் சிறுகிளைதான் நம் தனி மனம்.

எல்லா மனங்களும் இந்தக் கூட்டு உணர்வில் பங்குகொள்கின்றன.

அதனால், தனிமனம் என்று ஒன்று தனியாக இல்லை.

உண்மையில், கூட்டுமனத்துக்கு அப்பால் விரியும் எல்லையற்ற பெருவெளியில்தான் நான் இருக்கிறேன்.

நான் அனைத்து உடல்களின் வழியாகவும் அனைத்து மனங்களின் வழியாகவும் இயங்குகிறேன்.

என்னுடைய நான் உணர்வும் உங்களுடைய ‘நான்’ உணர்வும் தனித்தனியானவை அல்ல.

எல்லோருடைய நான் என்னும் உணர்வும் ஒன்றேதான்.  

அதாவது, வேறு விதத்தில் சொல்லப்போனால், அந்த ஆன்மாவாகிய நான்தான் எல்லோருடைய நானாகவும் இருக்கின்றது.

அனைத்து அனுபவங்களுக்குப் பின்னாலும் நான் என்ற அந்த ஆன்மா மறைந்து நிற்கிறது.

மாற்றங்கள் அனைத்தின் பின்னாலும் மாறாத பின்னணியாக நான் என்ற அந்த ஆன்மா நிலைத்து நிற்கிறது.

பொதுவாக, அனுபவங்கள் வெவ்வேறானவை.

இனிப்பானவை; கசப்பானவை.

சந்தோஷமானவை; துக்கமானவை.

இன்பமானவை; துன்பமானவை.

ஆனால், `அனுபவம்` என்பது ஒன்றுதான்.

இத்தகைய அனுபவங்கள் உண்மையில் ஆன்மாவுக்கு இல்லை. அவைகளால் ஆன்மா பாதிப்பது இல்லை.

அந்த ஆன்மாவை நீரால் நனைக்க முடியாது; நெருப்பால் சுட முடியாது.

ஆக, ஆன்மாவாகிய நான்தான் அனைத்து அனுபவத்தின் பின்னால் பொதிந்திருக்கும் ரகசியம்.

அதாவது, உண்மையான நான்(ஆன்மா) அறிந்துக் கொள்ளப்படும் போது, அந்த நான் தான் நான் என்று நமக்குத் தெரியும்.

அந்த நான்தான் அனைத்தையும் அறியும் அறிவாக இருக்கிறது என்னும் காரணத்தால், அந்த நானைப் பற்றி இந்த நானின் அறிவுத்தளத்தில் எதுவும் தெரிந்துகொள்ள முடியாது.

அதாவது, அந்த உண்மையான நான் பற்றி யாரும் தகவலாக எதுவும் தெரிந்துகொள்ள முடியாது. அதை ஒரு அறிவாக அடைய முடியாது.

அந்த உண்மையான நான் (ஆன்மா) என்பதை அறிந்துக் கொள்வதும், என்னைப்பற்றி (மனம்) அறிந்துக் கொள்வதும் ஒன்றல்ல.

அந்த ஆன்மா என்ற நான் அறியப்படும்போது, இந்த நான் (மனம்) அதனுடன் ஒன்றிவிடுகிறது. ஆக, ஆன்மாவாகிய நான்தான் நீயாக (மனமாக) இருக்கிறேன் என்னும் உண்மையை புரிந்துக்கொண்டால், அதன்பிறகு, அங்கு துயரம் அண்டாது.

பிறப்பு - இறப்பு, பகல் - இரவு, இருத்தல் - இன்மை, நான் - நீ போன்ற இருமை நிலைகள் கடந்த நீள்வெளியில் (வெட்டவெளியில்) இந்த நாம் அந்த நானாகக் காலமற்று இருக்கும்.

"என்னை மறந்து இருந்தேன், இறந்தே விட்டது இவ்வுடம்பே" என்பார் அருணகிரிநாதர். 

இதை உணர்ந்துகொள்ளுவதுதான் பிறவியின் பயன்.


வியாழன், 16 நவம்பர், 2023

ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம் [சமாதி பாதம்] வகுப்பு - 16. Patanjali Yoga Su...


மனதுக்கு எது பிடிக்கிறதோ?, அதை தியானம் செய்!.

இது என்ன புதிதாக இருக்கிறது!

மனம் அமைதி பட வேண்டும் என்றால், இறைவனை நோக்கி அல்லவா தியானம் செய்ய வேண்டும்?... அல்லது ஒரு ஒளியை, ஜோதியை நினைத்து தியானம் செய்யலாம். அல்லது ஓம்காரத்தை தியானம் செய்யவேண்டும் என்று அல்லவா? கேட்டு இருக்கிறோம். 

இவர் என்ன புதிதாக சொல்கிறார். 

மனதுக்கு பிடித்ததை தியானம் செய்! என்று. 

ஒன்றும் புரியலையே!... 

ஒருத்தருக்கு ஒரு நடிகையை பிடிக்கும், சிலருக்கு மது அருந்த பிடிக்கும்,  சிலருக்கு  சாப்பிட பிடிக்கும், இப்படி ஆளாளுக்கு ஒண்ணு பிடிக்கும் என்றால்  இதையெல்லாம்  வைத்து எப்படி தியானம் செய்வது? 

சரி!, அப்படியே  அவற்றை தியானம் செய்தால் என்ன கிடைக்கப் போகிறது? 

எவ்வளவு நேரம்தான் ஒரு அழகான பெண்ணைப் பற்றி நினைத்துக் கொண்டே இருக்க  முடியும். 

சலிக்காதா? அப்புறம் என்ன செய்வது?... 

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம். 

சிந்திப்போம்!.... 

முதலில் மனதை அடக்க முயற்சி செய்யக் கூடாது.

எவ்வளவுக்கு எவ்வளவு நாம்  மனதை அடக்க முயற்சி செய்கிறோமோ?... அவ்வளவுக்கு அவ்வளவு அது திமிறிக் கொண்டு ஓடும். 

பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் மனதை அடக்க முயன்று தோல்வி அடைந்து இருக்கிறார்கள். 

அருணகிரிநாதர் அரை நிமிடம் மனதை அடக்க முடியாமல் தவித்து இருக்கிறார். 

சரண கமலா லயத்தை அரை நிமிட நேர மட்டில் தியானம் பண்ண முடியாத  தன்னை  சட கசட மூட மட்டி என்று திட்டிக் கொள்கிறார். 

மனதை அதன் போக்கில் போய் அதை வசப்படுத்த வேண்டும். 

மனதின் இயல்பு எதையாவது பற்றிக் கொள்ளுவது. எதையும் பற்றாமல் மனதால் தனித்து இருக்க முடியாது. ஏதோ ஒரு பிரச்சனை, பேச்சு, டிவி, புத்தகம், சாப்பாடு என்று அதற்கு ஒரு பற்றுக் கோடு வேண்டும். 

ஓடுகின்ற மனதை கட்டி இழுத்தால், அது இழுக்க நாம் இழுக்க  இறுதியில் நாம் தளர்ந்து போவோம். 

எனவே, மனது எதை விரும்புகிறதோ? அதை முதலில் தியானம் பண்ண வேண்டும். 

மனதை பிடிக்காத ஒன்றின் மேல் செலுத்தினால் அது நிற்காது. எதிர்த்து ஓடும்.

எனவே, எது மனதுக்கு ரொம்ப பிடிக்குமோ?, அதன் மேல் மனதை இலயிக்க விட வேண்டும். 

நல்ல இசை, இனிய மணம், அழகிய முகம், சிறந்த சிற்பம், ஓவியம், எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. 

பிடித்ததில் மூழ்கிய மனம் அதில் கரைந்து, நாளடைவில் ஒரு நிலைக்கு வரும். மனம் அதையும் தாண்டி ஒன்றும் இல்லாமல் நிற்கும் சில கணங்கள். 

அந்த சில கணங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நீண்டு வளரும். மேலும், தியானம் என்பது முழு கவனத்தையும் அதன் மேல் செலுத்துவது. 

நமக்கு இனிப்பு பிடிக்கும். அதை உண்ண விரும்புகிறோம். கூடவே, "இது நல்லது இல்லை. சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வரும்." என்ற எதிர்மறை எண்ணம் வருகிறது. 

அப்புறம் "ஒண்ணு சாப்பிட்டால் என்ன?" என்ற எண்ணமும் கூடவே வருகிறது. இப்படி பெண்டுலம் போல இங்கும், அங்கும் மனம் அலைகிறது. 

அப்படி இல்லாமல். முழு கவனமும், சிந்தனையும் மனதுக்கு பிடித்ததன்மேல் செலுத்த வேண்டும். 

லட்டு பிடிக்குமா?... அதை பற்றி சிந்திக்க வேண்டும். 

அதன் வடிவம், சுவை, நிறம், மணம் என்று அனைத்தையும் பற்றி சிந்திக்க வேண்டும். அப்படி செய்யும் போது நாளடைவில் லட்டின் மேல் உள்ள ஆசை அற்றுப் போகும்.

நமக்கு ஆசை விடாமல் இருப்பதற்கு காரணம் நாம் எதையும் முழுமையாக அனுபவிப்பது கிடையாது. 

ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது. 

எதையும் முழுமையாக அனுபவிக்காததால், மீண்டும் மீண்டும் அவற்றை அனுபவிக்கத் தூண்டுகிறது மனம். 

பதஞ்சலியின் யோகம் எந்த மதமும் சார்ந்தது அல்ல. உங்களுக்கு இயேசுவை பிடிக்குமா?... அவரை தியானம் செய்யுங்கள். அல்லாவை பிடிக்குமா?... அவரை தியானம் செய்யுங்கள். அல்லது புத்தரைப் பிடிக்குமா? அவரை தியானியுங்கள்.

 


புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்