புதன், 20 நவம்பர், 2019

ஆன்மா என்ற அம்மா - சிறு கதை புத்தகம்




(சிறு கதை)

இந்த உலக விவகாரத்தில் வெளிப்படையான உண்மை (Apparently Reality) என்னவெனில், ஒருவன் ஆசையின் காரணமாக, அறிவற்ற பல காரியங்களைச் செய்து, பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டு, தனக்கு நன்மையை மட்டுமே விரும்பும் தாய் கூறும் புத்திமதியை உதாசீனப்படுத்தி, அந்த தாயையும் அனாதையாக்கி அன்பு இல்லத்தில் சேர்த்து விட்டு, தன் பணத்திற்காகத் தன் பின்னால் வருகின்ற அற்ப உறவுகளை அவசியம் என்று கருதி, அதன் பின்னே சென்று, அறிய வேண்டியதை முழுமையா(Absolute Reality) அறியாமல் அற்ப ஆசைகளினால், மனதிடம் சிக்கிக் கொண்டு, ஆட்டங்கள் பல ஆடி, முடிவில் தான் வந்த இந்தப் பிறவியின் நோக்கம் புரியாமலேயே, இந்த மனித உடலின் மிகச் சிறப்பான ஆறாவது அறிவான புத்தியைப் பயன் படுத்தாமலேயே, இந்த புனித உடலை விட்டு மரணத்தை தழுவி விடுகின்றான்.

இந்த கதையிலிருந்து ஒன்றேயான பரமா(ஆ)ன்மாவையும், அதன் பிரதிபிம்பமான ஜீவனையும், ஒன்றென அறிய தடையாக இருப்பது ஆசை என்பதை அறிய வேண்டும்.

அப்படிப்பட்ட ஆசைகளை கண்ணிற்குத் தெரியாத சூக்ஷும மனமே தன் சம்ஸ்காரங்களாகச் சேர்த்து வைத்துக் கொண்டு, அவைகளை பரு உடலின் வாயிலாக அனுபவிக்க விரும்பி, அதற்கேற்ற உடலை ஸ்தூலமாக எடுத்து அனுபவித்துக் கொள்கின்றது.

வெள்ளி, 15 நவம்பர், 2019

தியானம்




தியானம் என்பது ஸ்ரீ பதஞ்சலி முனிவரின் அஷ்டாங்க யோகத்தின் ஏழாவது படி நிலை ஆகும்.

இதற்கு முன்பாக ஆறு படி நிலைகளை ஏற வேண்டும்.

ஆனால், எடுத்த உடனேயே தியானம் செய்ய பலர் விரும்புகின்றனர்.

தியானம் செய்வதற்கு முன் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை என்ற இத்தனை படி நிலைகளை கடக்க வேண்டி இருக்கிறது.

இன்று பலர் காலையில் குளித்து விட்டு சாமி படத்தின் முன்பு, சிறிது நேரம் அமர்ந்து "தியானம்" செய்தேன் என்கிறார்கள்.

அது அல்ல தியானம்.

தியானம் என்றால் எதைப் பற்றி தியானம் செய்வது?

கடவுளை என்றால் எந்தக் கடவுளை?

ஜோதி வடிவிலா?

எதை நோக்கி தியானம் செய்வது?

போன்ற கேள்விகள் எழும்.

உண்மை என்ன என்றால், இந்த அனைத்து கேள்விகளும் அர்த்தம் இல்லாதவை.

தியானம் என்பது எதைப் பற்றியும் அல்ல.

ஒன்றையுமே சிந்திக்காமல் இருப்பது தியானம்.

எதுவுமே மனதில் இல்லாமல் இருப்பது தியானம்.

மனம் முழுவதும் காலியாக இருப்பது தியானம்.

எதை பற்றியோ சிந்திப்பது என்றால், சிந்திக்கும் நான், சிந்திக்கப்படும் அது என்ற இரண்டு இருக்கும் அல்லவா?

இங்கே ‘துவைதம்’ உண்டாகிவிடும்.

துவைதம் என்றால் இரண்டு. 

அத்வைதம் என்றால் இரண்டற்றது என்று பொருள்.

தியானத்தில் அந்த இருமைகள் மறையும்.

நான், அது என்று வேறுபாடு மறைந்த பின் எதை சிந்திப்பது? 

எதை தியானம் செய்வது?

சித்தம் முழுமையான வெற்றிடமாக இருக்கும்.

அந்த வெற்றிட அனுபவமே சிவானுபவம்.

புதன், 2 அக்டோபர், 2019

சகஜ சமாதி


சகஜ சமாதி
**************


முகவுரை


சஹஜ் என்றால் இயல்பான என்பது பொருளாகும். சமாதி என்பது நிசப்தமான ஆயினும் உயிரோட்டமுள்ள விழிப்புணர்வு நிலை என்பதாகும்.

அதாவது, விழிப்பும், உறக்கமும், கனவுமற்ற ஓர் அறிவு நிலை.

எனவே, சகஜ சமாதி என்பது விழிப்புணர்வுடன் கூடிய, அறிவாற்றல் பொருந்திய ஆனந்த அமைதி நிலை அனுபவம் ஆகும்.

இந்த நிலையில் அளவற்ற ஆற்றல் பெருகி, அறிவுத் திறன் கூடி, படைப்பாற்றல் எல்லையற்ற அமைதி மற்றும் ஆனந்தம் உண்டாகின்றது.
இதற்கு என்ன செய்ய வேண்டும்.

''சாசுவத முக்தி நிலை ஈதென்று உணர்த்தியே சகச நிலை தந்து வேறொன்றும் எண்ணாமலுள்ளபடி சுகமா யிருக்கவே ஏழையேற் கருள்செய்'' - என்கின்றார் தாயுமான சுவாமிகள்.

அதாவது, நிலையான முக்தி நிலை இதுதான் என்று எனக்கு உணர்த்தி, அதில் எப்பொழுதும் இயல்பாக இருக்கின்ற நிலை தந்து, வேறு ஒன்றையும் எண்ணாமல் இருக்குப்படி ஆனந்தமாக இருக்கவே அருள் செய்வாய் என்று பாடுகின்றார்.

அப்படிப்பட்ட சகஜ சமாதி பயில்வது எவ்வாறு?

''தண்ணீரிலிருந்து துள்ளி நிலத்தில் விழுந்து துடித்துக் கொண்டிருக்கும் மீனை எடுத்து மறுபடியும் தண்ணீரிலேயே விட்டு விட்டால் அது அடையும் அதன் இயல்பு நிலையே சகஜ நிலை'' என்கின்றார் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

நீருக்குள் பிறந்து, நீரிலேயே வாழ்ந்து முடியக் கூடியது மீன். அதன் ஆனந்தம் நீருக்குள்தான் இருக்கிறது. நீருக்குள் இங்குமங்கும் நீந்தி விளையாடி, உணவைத் தேடி உண்டு உயிர் வாழக் கூடியது மீன். மீனுக்கு நீர்தான் உலகம். நீரை விட்டு மீனைப் பிரிப்பது என்பது அதைக் கொல்வதாகும்.

இவ்வாறு, ஒவ்வொரு ஜீவனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கொடுக்கப்பட்ட உடலினைக் கொண்டு முயற்சிக்கும் இயல்புதான் சகஜம் எனப்படும்.

இதில், ஓரறிவு ஜீவர்கள் முதல் ஆறறிவு படைத்த மனிதன் வரை அதனதன் இயல்பு நிலையில் இருக்க விரும்பும்.

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

பிரபஞ்ச உற்பத்தி - சுவாமி பிரபஞ்சநாதன்


ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ





இரண்டு என்பதில்லாமல் ஏகபரிபூரண ஞான சொரூபியாய் விளங்கும் சாட்சாத் பரப்பிரம்மத்தினிடத்தில் (கானலில் நீர்போல்) கற்பிதமாகத் தோன்றிய இந்த உலகமும், உயிர்களும் மூன்று குணங்களுடன் கூடி பிரதிபிம்பமாக வெளிப்பட்டதை, அறியாமையினால் அந்த பிரம்மத்திற்கு வேறானதாகக் கருதி, அந்த தவறான கருத்தின் ஆழத்தில் சிக்கிக்கொண்ட ஜீவர்களின் சந்தேகங்களை நீக்கும் பொருட்டு, வேதாந்த நூல்களில் அத்தியாரோப யுக்தியும், அபவாத யுக்தியும் கூறப்பட்டுள்ளன.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

அபரோக்ஷ அனுபூதி


ஸ்ரீ குருப்யோ நம:

அபரோக்ஷ அனுபூதி
(ஸ்ரீ சங்கராச்சாரியார்)

முகவுரை


வேதாந்த நூல்கள் பல இருந்தாலும், அதில் மிகவும் முக்கியமாக மூன்று நூல்களை எடுத்து, அவைகளைப் பிரஸ்தான திரையம் (प्रस्थानत्रयी) என்று அழைக்கப்படுகின்றன.

அதாவது, பிரஸ்தான திரையம் என்றால் மூன்று முக்கியமான நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

அவைகள், உபநிஷதங்கள், பகவத் கீதை, பிரம்ம சூத்திரம் என்பனவாகும். அந்த வகையிலே இந்நூல்கள் சுருதி பிரஸ்தானம், ஸ்மிருதி பிரஸ்தானம், தர்க்கப் பிரஸ்தான அடிப்படையில் அமைந்துள்ளது.

ஸ்ரீ சங்கராச்சாரியார் இந்த மூன்று நூல்களுக்கும் பாஷ்யம் (விளக்கம்) எழுதியுள்ளார். இதனால் அவருக்கு பாஷ்யக்காரர் என்ற பெயரும் உண்டானது.

          பாஷ்யம் மட்டுமன்றி ஸ்ரீ சங்கரர் எழுதிய பல நூல்களில் தற்பொழுது நாம் அறிந்து கொள்ள இருக்கின்ற அபரோக்ஷ அனுபூதி என்ற நூலும் ஒன்றாகும்.
          பிரஸ்தான திரயத்தின் அடிப்படையில் சுயமாக இயற்றப்படும் நூல்களுக்கு பிரகரண கிரந்தங்கள் என்று பெயர்.

இவை வேதாந்தத்தின் துவக்க நிலையில் இருப்பவர்களுக்காக இயற்றப்படுபவை.

மூன்று வகையான பிரகரண கிரந்தங்கள் உள்ளன. அவை,

1.    முழு வேதாந்தத்தின் சாரத்தையும் தருவது.

உதாரணம்:- தத்துவ போதம்.

2.    ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு விளக்குவது.

உதாரணம்:- பஞ்சதசி.

இந்நூலின் ஒவ்வொரு அத்யாயமும் ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு விளக்கும்.

3.    முதலில் முழு வேதாந்தத்தையும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, பிறகு ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு விரிவாகப் பேசுவது.

நாம் பார்க்கவிருக்கும் அபரோக்ஷ அனுபூதி இந்த வகை நூல்களுக்கு உதாரணம்.

இந்த அபரோக்ஷ அனுபூதியில் விரிவாக விளக்கப்படும் தலைப்பு நிதித்யாசனம் அல்லது தியானம்.

அதாவது ஒரு நிதித்யாசகன் எவ்வாறு இந்த உலகம் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று விளக்கப்படுகிறது.

ஸ்ரீ வித்யாரண்யர் என்ற ஞானி இந்த அபரோக்ஷ அனுபூதிக்கு வித்யாரண்ய தீபிகா என்ற பெயரில் மிகவும் தெளிவாக விளக்கம் எழுதியுள்ளார்.

          அனுபூதி என்ற சொல்லுக்கு ஞானம், உணர்தல் அல்லது அனுபவித்தல் என்று பொருள்.

அனுபூதி என்றால் அனுபவம் என்றும், அபரோக்ஷம் என்றால் நேரடியாக என்றும் பொருள் கொண்டு நேரடி அனுபவம் என்று அழைக்கப்படுகின்றது.

அபரோக்ஷ அனுபூதி என்றால் சுயமாக பிரகாசிக்கின்ற அனுபவம். அல்லது. ஆத்மாவை நேரிடையாக அனுபவித்தல் என்று பெயர்.

நம்முடைய ஒவ்வொரு அனுபவத்திலும் நமக்கு அறிவு ஏற்படுகிறது. அதுப்போல, ஒவ்வொரு அறிவிலும் ஒரு அனுபவமும் ஏற்படுகின்றது. பொதுவில் அடைந்த அறிவில் நிச்சயமாக ஒரு அனுபவ உண்டாகின்றது.

ஆனால் நாம் பெறும் அறிவு உடனே அனுபவத்தை தர வேண்டும் என்ற அவசியமில்லை.

அப்படியானால், அது என்ன நேரடி அனுபவம்?

நாம் இதுவரை பார்த்து அனுபவிக்கின்ற அனுபவங்கள் எல்லாம் நேரடி அனுபவங்கள் இல்லையா?

ஏன்? இதை மட்டும் நேரடி அனுபவம் என்று கூறவேண்டும்?
இங்கு எதை நேரடி அனுபவமாக அடைகின்றோம்?

உலகத்தில் எத்தனையோ பொருட்களை பார்க்கின்றோம், கேட்கின்றோம், அனுபவிக்கிறோம்.

அவைகளும் நேரடி அனுபவங்கள்தானே, அதிலிருந்து இதுமட்டும் தனித்த நேரடி அனுபவமாக எப்படி ஆகும்?

அப்படிப்பட்ட அனுபவம் எது?

என்றால், வேதாந்த சாஸ்திரம் கூறுகின்றது நாம் இந்த உலகத்தில் காணுகின்ற எதுவும் நேரடியாக அனுபவம் ஆகாது என்றும், இதற்கு மனம் என்ற கரணம் அவசியம் ஆகின்றது.

அதாவது, எதை அறிந்து அனுபவம் உண்டாக வேண்டுமானாலும், அதற்கு இடைப்பட்ட கருவியாக மனம் ஒன்று அவசியம் என்று தெளிவுபடுத்துகின்றது.

சிலர் கூறுவார்கள் புலன்களின் வாயிலாக அனுபவப்படுகின்றேனே என்று, அதையும் ஏற்க முடியாது எப்படி எனில், கண்கள் ஒரு பொருளை பார்த்தும் மனம் அதனை கவனிக்காமல் விட்டு விட்டு வேறு சிந்த்னையில் இருப்பின், அந்த பொருளை அனுபவப்பட முடியாது.

இதுபோன்றே மற்ற புலன்களான காது, மூக்கு, நாக்கு என்று அனைத்துமே மனதைக் கொண்டே அனுபவிக்கின்றது.

ஆதலால், மனம் கவனிக்காவிடில், அந்தப் பொருளைப் பற்றிய அறிவு உண்டாக வாய்ப்பு இல்லாமல் போகின்றது.

ஆகவே, பொதுவாக ஒன்றைப்பற்றிய ஞானம் ஒருவனுக்கு உண்டாக வேண்டுமானால், எதையாவது ஒன்றைச் சார்ந்தே அவனுக்கு ஞானம் உண்டாகின்றது.

அது புலன்களினாலோ, மனதினாலோ மட்டுமே உண்டாக முடியும். அதாவது, எதையாவது ஒன்றைச் சார்ந்தே அந்த ஞானம் உண்டாகின்றது.

அதுவே அவனுக்கு அனுபவமாகின்றது.

அப்படியானால், எதையும் சாராமல் ஒன்று அனுபவிக்கக்கூடிய வகையில் இருக்கின்றதா?
என்றால்,

ஆம், அதுமட்டுமே இருக்கின்றது.

அதுவே ஆத்மா என்று அழைக்கப்படுகின்றது.
அது எதையும் சார்ந்து இருப்பதில்லை.

ஆனால், இருக்கக்கூடிய மற்றவைகள் அனைத்தும் அந்த ஆத்மாவைச் சார்ந்தே இருக்கின்றன.

ஆத்மா இருக்கின்றது என்பது அனைவருக்கும் அனுபவ உண்மை!

எப்படி?

ஒருவன் நான் இருக்கின்றேன் என்று கூறுவதில் சந்தேகம் கொள்வானா?

ஒரு இருட்டு அறையில் இருக்கின்ற ஒருவனுக்கு எதையுமே, புலன்களாலும், மனதினாலும் அறிய முடியவில்லை என்றாலும், நான் இருக்கின்றேன் என்ற உணர்வு அவனிடம் நிச்சயமாக காணப்படும்.

அந்த நான் என்பது எது?

வேதாந்த சாஸ்திரங்கள் அனைத்துமே முடிவில் இந்த நான் யார்? என்று அறிந்து கொள்வதற்காகவே இத்தனை உபதேசங்களையும் கூறுகின்றது.

அதாவது, சூரியன் எப்பொழுதுமே இருக்கின்றது, ஆனால், மேகம் மறைத்துக் கொள்ளும் போது அதன் பிரகாசம் இல்லாமல் போவதாகத் தோன்றுகின்றது.

சூரியனை மறைத்துக் கொண்டிருக்கின்ற மேகம் நீங்கினால், சூரியன் பிரகாசமாகத் தெளிவாகத் தெரிவது போன்று, ஆத்மாவை அறிய விடாமல் மறைத்துக் கொண்டிருக்கின்ற அறியாமை என்ற தவறான புரிதல் நீக்குவதன் வாயிலாக ஆத்மாவின் பிரகாசத்தை அறிந்து கொள்ள முடியும்.

சூரியனின் பிரகாசத்தை மறைத்துக் கொண்டுள்ள மேகம் காற்றினால் விலக்கப்படும் பொழுது எவ்வாறு பிரகாசமாக வெளிச்சம் வெளிப்படுகின்றதோ அதுப்போல, ஆத்மாவை மறைத்துக் கொண்டுள்ள அறியாமை நான் யார்? என்ற விசாரணை மூலமாக விலக்கப்படும் பொழுது, அங்கு அறிவு அனுபூதியாக பிரகாசிக்கின்றது.

அதாவது, இவ்வாறு நான் யார்? என்று விசாரித்து அறியும் போது, அறியாமை அகன்று, தன்னுடைய உண்மை சொரூபம் வெளிப்படுகின்றது.

இந்த ஆத்ம அனுபவம் உண்டாவதற்கு எந்தவித புற இந்திரியங்களின் உதவியோ, அல்லது அந்தக்கரணங்களின் உதவியோ இன்றி இயல்பிலேயே அதுவாகவே இருக்கின்றோம் என்பதை இந்த நூலின் வாயிலாக அதை அனுபவமாக அறிவதற்குத் தேவையான சாதனங்களையும், விளக்கங்களையும் அபரோக்ஷ அனுபூதி என்ற ஒரு நேரடி அனுபவமாக ஸ்ரீ சங்கராச்சாரியார் கொடுக்கின்றார்.

இந்த அபரோக்ஷ அனுபூதி என்ற நூலில் 144 ஸ்லோகங்களின் வாயிலாக விளக்கமாக கூறுகின்றார்.

ஆத்மா பற்றிய உபதேசத்தைக் கேட்டு அந்த அறிவு நம் மயமாகும் போது நாம் பெற்ற அறிவு அனுபூதியாக மாறுகிறது.

இந்நூலில் நாம் பெற்ற ஞானத்தை அனுபூதியாக்கும் உபாயம் கூறப்பட்டுள்ளது.

பெற்ற ஞானம் ஞான நிஷ்டையடையும் போதுதான் ஞானத்தின் பலனான மோக்ஷம் கிட்டுகிறது.

ஆத்மா பற்றி நாம் அடையும் ஞானத்துக்குப் பகைவன் நமது சம்ஸ்காரங்களும், வாசனைகளும்தான் என்பதை அறிந்து அந்த தடையை நீக்க நாமே முயற்சிக்க வேண்டும். முயற்சி தீவிரமாகும் போது ஞான நிஷ்டை எளிதில் சித்திக்கும்.

அனுபூதி என்பதற்குத் தடையில்லாத ஞானம் என்று பொருள்.

அபரோக்ஷம் என்ற சொல்லுக்கான விளக்கத்தைப் பார்ப்போம்.

அக்ஷம் என்ற சொல்லுக்குப் புலன்கள் என்று பொருள். பரோக்ஷம் என்பதற்குப் புலன்கள் தாண்டி இருப்பது என்றும், ப்ரத்யக்ஷம் என்பதற்குப் புலன்களின் எல்லைக்குள் இருப்பது என்றும் பொருள்.

ஆனால், அபரோக்ஷம் என்னும் சொல்லுக்கு புலன்களின் தேவை இன்றி சுயமாக விளங்கும் ஒரு பொருளைக் குறிக்கிறது.

பார்க்கப்படுவதும் அல்லாத, பார்க்க இயலாததும் அல்லாத பிரம்மத்தையே அபரோக்ஷம் என்ற சொல் குறிக்கிறது.

அதுவே பிரம்மம் என்றும், இரண்டற்றது என்ற அத்வைதம் என்றும் குறிக்கப்படுகிறது.

பிருஹதாரண்யக உபநிஷத்தில் அபரோக்ஷம் என்ற சொல்லுக்கு ஆத்மா என்று பொருள் சொல்லப்படுகிறது.

அபரோக்ஷ அனுபூதி நூற்றி நாற்பத்து நான்கு ஸ்லோகங்களில், பதினோரு ஸ்லோகங்கள் வேதாந்த அறிமுகத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

பிறகு த்வம் பத விசாரமும், இந்த உலகத்தை மித்யா என்று புரிந்து கொள்வதும், ராஜயோகம் என்ற தலைப்பில் தியானமும் விளக்கப்படுகின்றன.

ஆத்ம ஞானத்தினுடைய தன்மையும், ஞானி இந்த உலகத்தை எவ்வாறும் பார்ப்பான் என்பதும் விளக்கப்படுகின்றன.

நூல் ஒரு பிரார்த்தனை ஸ்லோகத்துடன் துவங்குகிறது.

நூலாசிரியர் தான் துவங்கிய இந்த நூல் நல்லமுறையில் இயற்றி முடிக்கப்பட வேண்டும் என்பதே பிரார்த்தனையினுடைய தலையாய நோக்கம் ஆகும்.
இதற்கு கிரந்த சமாப்தி என்று பெயர்.

பிரார்த்தனை ஒரு கர்மம் ஆதலால் நூல் இயற்றுவதில் ஏதேனும் தடைகள் இருப்பின் அவற்றை அது நீக்கும்.

அதே நேரம் இந்த நூலைப் பயிலும் மாணவர்களுக்கு, அவர்கள் வாழ்வில் எதைச் செய்தாலும் பிரார்த்தனையுடன் ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதற்காகவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

பிரார்த்தனையின் மூன்றாவது பலன் படன சமாப்தி.

அதாவது இதை பயிலும் மாணவர்கள் இந்நூலை நன்முறையில் பயின்று முடிக்க வேண்டும் என்பதாகும்.

பிரார்த்தனை மூன்று விதத்தில் செய்யப்படுகின்றது.

முதலில் சகுனப் பிரம்மமாகவுள்ள தனது இஷ்ட தேவதையை நோக்கியும், இரண்டாவது இந்த உலகின் முழுமையான காரணமாக சமஷ்டி தத்துவமாக உள்ள ஈஸ்வரனை நோக்கியும், இறுதியில் நமக்கு ஆத்ம தத்துவத்தை போதிக்கும் குருவை நோக்கியும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.



பிரார்த்தனை ஸ்லோகம்
=================

ஸ்ரீஹரிம் பரமானந்தம் உபதேஷ்டார மீஸ்வரம்
வ்யாபகம் சர்வ லோகானாம் காரணம் தம் நமாம்யகம்

பொருள்: 
------------

என் இஷ்ட தேவதையாகவும், குருவாகவும், எங்கும் நிறைந்தவராகவும் உள்ளவரை வணங்குகிறேன்.
ஸ்ரீ என்ற சொல்லுக்கு லக்ஷ்மி என்று பொருள்.

ஆனால், லக்ஷ்மி என்றால் செல்வம் என்றே பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.

அஷ்ட லக்ஷ்மிகளில் அவரவருக்குத் தேவையானதை அடைவதே செல்வம் என்று பொருள்படும்.

ஆதலால், இங்கு செல்வம் என்று குறிப்பிடுவது வித்யாலக்ஷ்மியான ஆத்ம வித்தையை மட்டுமே.

மோக்ஷத்தை அடைய விரும்புபவர்களுக்கு இங்கு செல்வம் ஆத்ம வித்யை ஆகும்.

ஹரி என்றால் அறியாமையை நீக்குபவர் என்று பொருள்.

பிரம்ம வித்யயா அஞ்ஞானம் ஹரதி இதி ஸ்ரீ ஹரி

அஞ்ஞானத்தை அழித்து பிரம்மஞானம் என்னும் செல்வத்தை வழங்குபவரே ஸ்ரீஹரி ஆவார்.

பரமானந்தம் என்றால் ஸ்ரீஹரியின் சொரூபமே மேலான ஆனந்தம் என்பது பொருள்.

உபதேஷ்டாரம் என்பது ஈஸ்வரனாகவே இருக்கும் குருவைக் குறிக்கிறது.
குரு உபதேசிக்கும் வார்த்தைகளில் சிரத்தை வருவதற்காகவே குருவிடம் அளவற்ற மதிப்பு காட்டப்படுகிறது.

ஈஸ்வரம் என்ற சொல்லின் மூலம் இந்த உலகின் நிமித்த காரணமாக இருப்பவரும், வ்யாபகம் சர்வலோகானாம் என்ற சொற்றொடரின் மூலம், உலகின் உபாதான காரணமாக இருப்பவரும் ஈஸ்வரன் என்று குறிப்பிடப்படுகிறார்.

இனி இந்த அபரோக்ஷ அனுபூதி என்ற இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ள 144 சமஸ்கிருத மூல ஸ்லோகங்களை ஒவ்வொன்றாகப் படித்து, அதன் விளக்கமான பொருளை எளிய தமிழ் மொழியில் அறிந்து கொள்ளலாம்.



நன்றி!


என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.

புதன், 4 செப்டம்பர், 2019

யோக சூத்திரம் (சாதன பாதம்)


ஸ்ரீ குர்ப்யோ நம:


ஸ்ரீ பதஞ்சலி முனிவரின்

யோக சூத்திரம்

ஆத்தியாயம் இரண்டு




இதற்கு முன்பாக 51 சூத்திரங்களைக் கொண்ட யோக சூத்திரம் (சமாதி பாதம்) என்ற புத்தகம் முதல் அத்தியாயமாக ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, இந்த புத்தகத்தில் 55 சூத்திரங்களைக் கொண்ட யோக சூத்திரம் (சாதனா பாதம்) என்ற இரண்டாவது அத்தியாயம் தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது.

சமாதி பாதம் படித்து முடித்தவிட்டு, அதன் பிறகு இந்த சாதனா பாதத்தின் வாயிலாக சாதனையில் ஈடுபடுங்கள்.


நன்றி!


என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.

சனி, 17 ஆகஸ்ட், 2019

ஸ்ரீ பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம்




இந்த நூல் ஸ்ரீ பதஞ்சலி முனிவர் அருளிய யோக சித்த விருத்தி நிரோத: (योगश्चित्तवृत्तिनिरोधः) என்ற யோக சூத்திரம் நூலினை தொகுத்து எளிய தமிழில் அனைவருக்கும் விளங்கும்படி இங்கு கொடுக்கப்படுகின்றது.

இதனை கற்று சாதகர்கள் சித்த சுத்தி அடைந்து சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் கண்டு சிவமயமாக கடைத்தேற வேண்டும் என்ற உயரிய நோக்கிலேயே ஸ்ரீ பதஞ்சலி முனிவர் யோக சூத்திரம் என்ற யோகக்கலையின் மகத்துவத்தை மக்களுக்காக அருளியுள்ளார்.

பதஞ்சலி முனிவரின் ராஜ யோகத்தையே, அதன் ஆசனம், பிராணாயாமம், தியானம், தாரணம், சமாதி ஆகியவற்றையே மனத்தில் கொண்டிருக்கிறோம்.

இவைகள் ஒரு யோக முறையின் உட்கூறுகள் மட்டுமே. 

கங்கையிலிருந்து வெட்டப்பட்ட கால்வாய்கள் கங்கை ஆகிவிடாதது போல் இம்முறைகளே யோகம் ஆகிவிடாது.
 

சுவாசப் பயிற்சியைப் பற்றியோ, ஆசனங்களைப் பற்றியோ நினைக்காமலே யோகம் செய்யலாம்.
ஒருமுனைப்படுதல் (தாரணை) தேவையில்லாமல், முற்றிலும் விழித்த நிலையில், நடக்கும்போது, கடமையாற்றும்போது, சாப்பிடும்போது, தண்ணீர் குடிக்கும்போது, பிறருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, வேலை செய்து கொண்டிருக்கும்போது, உறங்கும்போது, கனவு காணும்போது, உணர்வற்ற நிலையில், அரை உணர்வு நிலையில், இரட்டை உணர்வுடைய நிலையில் - எப்பொழுதும், எந்நிலையிலும் யோகம் செய்யலாம்.

அது ஒரு மருந்துச் சரக்கோ, ஏதோ ஒரு குறிப்பிட்ட ஒரு முறையோ, பயிற்சியோ அல்ல.

அது நித்தியமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு காரியம்.

பிரபஞ்சத்தின் இயல்பிலேயே அமைந்துள்ளது அது. 

ஆனாலும், நடைமுறையில் யோகம் என்ற சொல்லை, நித்தியமாய் நடந்து கொண்டிருக்கும் இந்தப் பொது நியதியை அறியாமல், சில குறிப்பிட்ட இலட்சியங்களை அடையப் பயன்படுத்தும் விசேஷ முறைகளைக் குறிக்கும் குறுகிய பொருளில் யோகத்தைப் பயன்படுத்துகிறோம். 

இந்த யோகத்தை பெரும்பாலானவர்கள் உடற்பயிற்சிக்கு உரித்தானது என்று மட்டுமே கருதியதால், இன்று மக்களிடையே பல யோகா கற்றுக்கொடுக்கின்ற நிறுவனங்கள் புதிது புதிதாகத் தோன்றி மக்களிடையே புதுமையான முறையில் பல புதிய முறைகளைக் கற்றுக் கொடுத்து பணம் பார்க்கின்றனர்.

யோகம் எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு, சேர்க்கை அல்லது இணைதல் என்றுதான் பொருள்.

யோகம் என்றால் இணைதல் என்பதை யாரும் அறியத் தயாராக இல்லை. அதை அறிந்துக் கொண்டால்தானே எதை எதனுடன் இணைப்பது என்ற அடுத்த சந்தேகம் உண்டாகும்? இன்னும் ஒரு சிலரால், இங்கே யோகம் என்றால் அதிர்ஷ்டம் எனத் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.

பதஞ்சலி முனிவர் இந்த யோக சாஸ்திரத்தை சூத்திர வடிவில் கொடுத்துள்ளார்.

இதில் 197 சூத்திரங்கள் உள்ளன.

இவைகள் நான்கு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

முதல் அத்தியாயம் சமாதி பாதம் என்றும், இரண்டாவது அத்தியாயம் சாதன பாதம், மூன்றாவது அத்தியாயம் விபூதி பாதம்.  நான்காவது அத்தியாயம் கைவல்ய பாதம் என்பனவாகும்.

இங்கு பாதம் என்பது பகுதிகளைக் குறிக்கின்றது. முதல் இரண்டு பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இதில் விபூதி பாதம் பகுதியில் யோகத்தைப் பயன்படுத்தி மனதை கையாளு கின்றவர்களுக்கு சில சித்துக்கள் கிடைக்கின்றன என்பதை அந்தப்பகுதி விளக்கமளிக்கின்றது.

இதில் ஸ்ரீ பதஞ்சலி முனிவர் எச்சரிக்கையையும் கொடுக்கின்றார். இந்த சித்திகள் எல்லாம் மோக்ஷத்திற்கு தடை என்றும் கூறுகின்றார். இறுதியில் உள்ள கைவல்ய பாதம் கிடைக்கும் பலனை கூறுகின்றது.

பதஞ்சலி முனிவர் வாழ்க்கையின் குறிக்கோளாக ‘சித்த விருத்தி நிரோதக யோகக’ என்று குறிப்பிடுகிறார்.

மனதில் உள்ள எண்ணங்களை நெறிப்படுத்துவதுதான் யோகம், இது தான் லட்சியம் என்று குறிப்பிடுகிறார்.

மனம் ஒரு கருவி இது பல காரியங்களைச் செய்கிறது. முதலில் ஐம்புலன்களின் பின் நின்று அவைகளின் மூலமாக அறிவைப் பெற கருவியாக அமைகிறது. பின் தானாகவே சிந்தித்தும் அறிவை வளர்த்துக் கொள்கிறது.

தன்னையே சுத்தப் படுத்திக் கொள்ளவும் ஒரு கருவி யாகவும் பயன்படுகிறது. தானே செயலைச் செய் பவனாகவும் (கர்த்தா), பலனை அனுபவிப் பவனுமாக (போக்தா) அனுமானம் செய்து கொள்கின்றது.

இப்படிப்பட்ட மனதை அஷ்டாங்க யோகத்தினால் நெறிப்படுத்துவதுதான் வாழ்க்கையின் நோக்கம் என்று பதஞ்சலி முனிவர் இன்னூலில் குறிப்பிடுகின்றார்.

பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் 12 - ஆம் நூற்றாண்டிலிருந்து 19 - ஆம் நூற்றாண்டு வரை ஏறக்குறைய 700 ஆண்டுகள் மக்களிடையே வழக்கிலிருந்து மறைந்து போயிருந்தாலும், விவேகானந்தரின் முயற்சியாலும் தீசாபிகல் சங்கத்தின் முயற்சியாலும் 19 - ஆம் நூற்றாண்டு இறுதியில் புத்துயிர் பெற்று, மீண்டும் மக்களிடையே வழக்கத்திற்கு வந்தது என்பதை டேவிட் கோர்டன் என்ற வெளி நாட்டினர் நம் இந்தியாவின் பாரம்பரியத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 

20 - ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இடைக்காலத்தில் பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம்  மட்டும் அல்லாமல் பல்வேறு யோகங்களான, குறிப்பாக பகவத் கீதை, யோக வசந்தம், ஹட யோகம், தஸ்த்ரிக் யோகம் போன்றவை நடைமுறையில் இருந்து வந்தன.

20 - ஆம் நூற்றாண்டில் யோகம் பயில்பவர்கள் ஸ்ரீ பதஞ்சலி முனியின் யோக சூத்திரத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு தலையாய இடத்தை மக்களிடையே பெற்றுத் தந்தனர். 

யோக சூத்திரத்தில் மனதை கையாளும் சூக்ஷுமம் உடைக்கப்படுவதினால், அத்வைத வேதாந்திகளும் இந்த நூலைக் கற்கின்றனர்.

ஆகவே, அனைத்து ஆன்மீக ஆத்ம சாதகர்களும் இந்த கலையைக் கற்று பயனுற வேண்டும் என்ற ஆர்வத்தில் அடியேனும் எளிய தமிழில் இதைத் தொகுத்துள்ளேன்.

சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே
முத்தம் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திரு நடத்தோரே. -
திருமந்திரம்

அலைபாயும் மனத்தை அடக்கிச் சிவன்பால் செல்லவிட்டு, முக்தியாகிய வீடு பேற்றை உணர்ந்தறிந்து, மோனத் தவமிருப்பவர்கள் சிவமுத்தர்கள் ஆவார்கள்.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களின் இச்சையை விட்டொழித்தவர்கள் இந்த ஜீவன் முக்தர்கள்..

ஆகையால் இவர்கள் தூய்மையானவர்கள், புனிதமானவர்கள். இப்படிப் பட்டவர்களின் மனம் பரவெளியில் பரம்பொருளோடு இரண்டறக் கலந்து எப்பொழுதுமே ஆனந்த நடனத்தில் களித்திருக்கும்.

நன்றி!


என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்