சனி, 17 ஆகஸ்ட், 2019

ஸ்ரீ பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம்




இந்த நூல் ஸ்ரீ பதஞ்சலி முனிவர் அருளிய யோக சித்த விருத்தி நிரோத: (योगश्चित्तवृत्तिनिरोधः) என்ற யோக சூத்திரம் நூலினை தொகுத்து எளிய தமிழில் அனைவருக்கும் விளங்கும்படி இங்கு கொடுக்கப்படுகின்றது.

இதனை கற்று சாதகர்கள் சித்த சுத்தி அடைந்து சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் கண்டு சிவமயமாக கடைத்தேற வேண்டும் என்ற உயரிய நோக்கிலேயே ஸ்ரீ பதஞ்சலி முனிவர் யோக சூத்திரம் என்ற யோகக்கலையின் மகத்துவத்தை மக்களுக்காக அருளியுள்ளார்.

பதஞ்சலி முனிவரின் ராஜ யோகத்தையே, அதன் ஆசனம், பிராணாயாமம், தியானம், தாரணம், சமாதி ஆகியவற்றையே மனத்தில் கொண்டிருக்கிறோம்.

இவைகள் ஒரு யோக முறையின் உட்கூறுகள் மட்டுமே. 

கங்கையிலிருந்து வெட்டப்பட்ட கால்வாய்கள் கங்கை ஆகிவிடாதது போல் இம்முறைகளே யோகம் ஆகிவிடாது.
 

சுவாசப் பயிற்சியைப் பற்றியோ, ஆசனங்களைப் பற்றியோ நினைக்காமலே யோகம் செய்யலாம்.
ஒருமுனைப்படுதல் (தாரணை) தேவையில்லாமல், முற்றிலும் விழித்த நிலையில், நடக்கும்போது, கடமையாற்றும்போது, சாப்பிடும்போது, தண்ணீர் குடிக்கும்போது, பிறருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, வேலை செய்து கொண்டிருக்கும்போது, உறங்கும்போது, கனவு காணும்போது, உணர்வற்ற நிலையில், அரை உணர்வு நிலையில், இரட்டை உணர்வுடைய நிலையில் - எப்பொழுதும், எந்நிலையிலும் யோகம் செய்யலாம்.

அது ஒரு மருந்துச் சரக்கோ, ஏதோ ஒரு குறிப்பிட்ட ஒரு முறையோ, பயிற்சியோ அல்ல.

அது நித்தியமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு காரியம்.

பிரபஞ்சத்தின் இயல்பிலேயே அமைந்துள்ளது அது. 

ஆனாலும், நடைமுறையில் யோகம் என்ற சொல்லை, நித்தியமாய் நடந்து கொண்டிருக்கும் இந்தப் பொது நியதியை அறியாமல், சில குறிப்பிட்ட இலட்சியங்களை அடையப் பயன்படுத்தும் விசேஷ முறைகளைக் குறிக்கும் குறுகிய பொருளில் யோகத்தைப் பயன்படுத்துகிறோம். 

இந்த யோகத்தை பெரும்பாலானவர்கள் உடற்பயிற்சிக்கு உரித்தானது என்று மட்டுமே கருதியதால், இன்று மக்களிடையே பல யோகா கற்றுக்கொடுக்கின்ற நிறுவனங்கள் புதிது புதிதாகத் தோன்றி மக்களிடையே புதுமையான முறையில் பல புதிய முறைகளைக் கற்றுக் கொடுத்து பணம் பார்க்கின்றனர்.

யோகம் எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு, சேர்க்கை அல்லது இணைதல் என்றுதான் பொருள்.

யோகம் என்றால் இணைதல் என்பதை யாரும் அறியத் தயாராக இல்லை. அதை அறிந்துக் கொண்டால்தானே எதை எதனுடன் இணைப்பது என்ற அடுத்த சந்தேகம் உண்டாகும்? இன்னும் ஒரு சிலரால், இங்கே யோகம் என்றால் அதிர்ஷ்டம் எனத் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.

பதஞ்சலி முனிவர் இந்த யோக சாஸ்திரத்தை சூத்திர வடிவில் கொடுத்துள்ளார்.

இதில் 197 சூத்திரங்கள் உள்ளன.

இவைகள் நான்கு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

முதல் அத்தியாயம் சமாதி பாதம் என்றும், இரண்டாவது அத்தியாயம் சாதன பாதம், மூன்றாவது அத்தியாயம் விபூதி பாதம்.  நான்காவது அத்தியாயம் கைவல்ய பாதம் என்பனவாகும்.

இங்கு பாதம் என்பது பகுதிகளைக் குறிக்கின்றது. முதல் இரண்டு பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இதில் விபூதி பாதம் பகுதியில் யோகத்தைப் பயன்படுத்தி மனதை கையாளு கின்றவர்களுக்கு சில சித்துக்கள் கிடைக்கின்றன என்பதை அந்தப்பகுதி விளக்கமளிக்கின்றது.

இதில் ஸ்ரீ பதஞ்சலி முனிவர் எச்சரிக்கையையும் கொடுக்கின்றார். இந்த சித்திகள் எல்லாம் மோக்ஷத்திற்கு தடை என்றும் கூறுகின்றார். இறுதியில் உள்ள கைவல்ய பாதம் கிடைக்கும் பலனை கூறுகின்றது.

பதஞ்சலி முனிவர் வாழ்க்கையின் குறிக்கோளாக ‘சித்த விருத்தி நிரோதக யோகக’ என்று குறிப்பிடுகிறார்.

மனதில் உள்ள எண்ணங்களை நெறிப்படுத்துவதுதான் யோகம், இது தான் லட்சியம் என்று குறிப்பிடுகிறார்.

மனம் ஒரு கருவி இது பல காரியங்களைச் செய்கிறது. முதலில் ஐம்புலன்களின் பின் நின்று அவைகளின் மூலமாக அறிவைப் பெற கருவியாக அமைகிறது. பின் தானாகவே சிந்தித்தும் அறிவை வளர்த்துக் கொள்கிறது.

தன்னையே சுத்தப் படுத்திக் கொள்ளவும் ஒரு கருவி யாகவும் பயன்படுகிறது. தானே செயலைச் செய் பவனாகவும் (கர்த்தா), பலனை அனுபவிப் பவனுமாக (போக்தா) அனுமானம் செய்து கொள்கின்றது.

இப்படிப்பட்ட மனதை அஷ்டாங்க யோகத்தினால் நெறிப்படுத்துவதுதான் வாழ்க்கையின் நோக்கம் என்று பதஞ்சலி முனிவர் இன்னூலில் குறிப்பிடுகின்றார்.

பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் 12 - ஆம் நூற்றாண்டிலிருந்து 19 - ஆம் நூற்றாண்டு வரை ஏறக்குறைய 700 ஆண்டுகள் மக்களிடையே வழக்கிலிருந்து மறைந்து போயிருந்தாலும், விவேகானந்தரின் முயற்சியாலும் தீசாபிகல் சங்கத்தின் முயற்சியாலும் 19 - ஆம் நூற்றாண்டு இறுதியில் புத்துயிர் பெற்று, மீண்டும் மக்களிடையே வழக்கத்திற்கு வந்தது என்பதை டேவிட் கோர்டன் என்ற வெளி நாட்டினர் நம் இந்தியாவின் பாரம்பரியத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 

20 - ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இடைக்காலத்தில் பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம்  மட்டும் அல்லாமல் பல்வேறு யோகங்களான, குறிப்பாக பகவத் கீதை, யோக வசந்தம், ஹட யோகம், தஸ்த்ரிக் யோகம் போன்றவை நடைமுறையில் இருந்து வந்தன.

20 - ஆம் நூற்றாண்டில் யோகம் பயில்பவர்கள் ஸ்ரீ பதஞ்சலி முனியின் யோக சூத்திரத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு தலையாய இடத்தை மக்களிடையே பெற்றுத் தந்தனர். 

யோக சூத்திரத்தில் மனதை கையாளும் சூக்ஷுமம் உடைக்கப்படுவதினால், அத்வைத வேதாந்திகளும் இந்த நூலைக் கற்கின்றனர்.

ஆகவே, அனைத்து ஆன்மீக ஆத்ம சாதகர்களும் இந்த கலையைக் கற்று பயனுற வேண்டும் என்ற ஆர்வத்தில் அடியேனும் எளிய தமிழில் இதைத் தொகுத்துள்ளேன்.

சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே
முத்தம் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திரு நடத்தோரே. -
திருமந்திரம்

அலைபாயும் மனத்தை அடக்கிச் சிவன்பால் செல்லவிட்டு, முக்தியாகிய வீடு பேற்றை உணர்ந்தறிந்து, மோனத் தவமிருப்பவர்கள் சிவமுத்தர்கள் ஆவார்கள்.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களின் இச்சையை விட்டொழித்தவர்கள் இந்த ஜீவன் முக்தர்கள்..

ஆகையால் இவர்கள் தூய்மையானவர்கள், புனிதமானவர்கள். இப்படிப் பட்டவர்களின் மனம் பரவெளியில் பரம்பொருளோடு இரண்டறக் கலந்து எப்பொழுதுமே ஆனந்த நடனத்தில் களித்திருக்கும்.

நன்றி!


என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்