வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

ஸ்ரீ திரிபுர ரகசியம் (பாகம் - 2)



      
      இந்த நூலிலே மனிதனாக பிறந்தவன் அடையத்தக்க பரம புருஷார்த்தத்திற்கு சாதனமாக விளங்கும் முதற்சாதனமான பரா பக்தியை செய்வது பற்றியும், அவ்வாறு, உண்மையான பக்தியை செய்பவனும், அவன் பக்தி செய்யப்படுகின்ற வஸ்துவும் என இரண்டையும் ஒன்றாக்கும் சங்கமமே சரணாகதி, அனுக்கிரஹம் என்று எடுத்துக்கூற, சாதுக்களின் சங்கமத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும், அப்படிப்பட்ட சத்துக்களின் சங்கமமே சத்சங்கம் என்பதை அறிந்து, அவர்களின் திருவாய் வழியாக விசாரம் மேற்கொண்டு, அவர்கள் கூறுவதை (சிரவணம்) கேட்டு, சிந்தனை (மனனம்) செய்து,   பக்குவிகளாக மாறிய ஜிஞ்ஞாஸுகளை அந்த அறிவில் நிலைப்பெற்று நிற்கின்ற (நிதித்யாசனம்) அனுபவத்திற்கு அழைத்துச் செல்வதே, ஸ்ரீ திரிபுர ரகசியம் என்ற மிக உயர்ந்த, உன்னதமான வழி என்று அந்த ஞானத்தைப் பற்றி இங்கு போதிக்கப்படுகின்றது.

இந்த நூலில் பத்து அத்தியாயங்களில் சத்சங்க மகாத்மியத்தை விளக்கும் பொருட்டு, ஹேமசூடோ பாக்கியானமும், ஜகத்தின் உண்மையை விளக்கச் சைலலோகாக்கியான மென்று மூன்று அத்தியாயங்களும், ரிஷிகளுக்கு சாக்ஷாத் வித்யாதேவியே பிரத்யக்ஷமாகி அருளிய வித்யாகீதை என்ற ஓர் அத்தியாயமும், ஞானிகளது பெருமைகளை விவரிக்கும் ராக்ஷஸோ பாக்கியானம் என்ற ஒரு அத்தியாயமும், இது போன்று மற்ற நான்கு அத்தியாயங்களும் சேர்ந்து மொத்தம் இருபத்தி இரண்டு அத்தியாயங்கள் அடங்கியுள்ளன. இந்த ஸ்ரீ திரிபுர ரகசியம் 12000 சுலோகங்களை கொண்டதாக இருக்கின்றது.



பிரம்மம்தான் மாயா சக்தியால் இத்தனை படைப்புக்களை படைத்தது போன்று வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறது. பரமாத்மா ஜகத்தாகப் பரிணமித்தது. 

அதாவது, பிரம்மம் இந்த உலகமாக மாறியது என்பதை - பால் தயிராக மாறியது போன்று, என்று கூறினால் அது தவறு. காரணம், அப்படிக்கூறினால், பால் தயிராக மாறிய பின்பு, தயிர் மட்டும்தான் இருக்குமே தவிர பால் அங்கு இருக்காது.

இதுபோன்று, பரமாத்மா உலகமாக பரிணமித்த பின்பு, அவர் அங்கு இல்லாமல் போய் விட்டார் என்றால் அதுவும் மிகப்பெரிய தவறாகப் போய்விடும். 

அதனால், பரிணாமம் என்பது ஏற்பதற்கு இல்லை. பரமாத்மா தான் தானாக சுத்த ஞான ஸ்வரூபமாக ஒரு பக்கம் இருந்துகொண்டே, மற்றொரு பக்கம் மாயையால் ஜீவ - ஜகத்துக்களாகத் தோன்றுகிறார்.

"இதெல்லாம் ஒரே சத்வஸ்துவின் தோற்றம் மட்டுமே ஆகும்". 

அதாவது, அந்த வஸ்து போடும் வேஷம்தான்! உதாரணமாக, ஒருவன் ஒரு வேஷத்தை போட்டுக் கொள்கின்றான் என்றால், அவன் அவனாக இல்லாமல் போய் விடுகின்றானா என்ன? அதுபோன்றுதான், இந்த பிரபஞ்சத்தோற்றமே பிரம்மத்தின் வேஷம், கண்கட்டு வித்தை! அது எத்தனை விதமான வேஷங்களைப் போட்டாலும், பாதிக்கப்படாமல் அது அதுவாகவே (சத்வஸ்து ஏகமாகவே) அப்படியே இருந்துக்கொண்டேயிருக்கிறது. 

இதற்கு விவர்த்த வாதம் என்று பெயர்.

ஜீவத்துவம் பூரணத்தன்மை இல்லாமல் இருப்பதால், மோக்‌ஷம் என்ற பூரணத் தன்மையை அடையவேண்டும் என்பதுவும், வேறுபாட்டுடன் கூடிய ஞானமே அஞ்ஞானம் என்றும், அது மாயையின் காரியம் என்றும், மாயை பிரம்மத்தினுடைய பூரணமான சுதந்திர மென்றும் கூறப்பட்டிருக்கின்றது. 

மேலும், இதனில், கண்ணாடியில் தெரிகின்ற உருவமும், அதன் பிரதி பிம்பமும் பார்பதற்கு இருவர் போன்று தோன்றினாலும், உண்மையில் ஒருவனே அங்கு பிம்பமாக காணப்படுகின்றான் என்ற பிரதிபிம்ப திருஷ்டாந்தத்தை அங்கீகரித்து ஜீவ, ஈஸ்வர ஒற்றுமை விளக்கப்பட்டுள்ளது.

இந்த நூலை கற்கின்றவன் ஒரு காலத்திலும் துக்கத்தில் வீழமாட்டான். பிறப்பு, இறப்பு என்ற நோயிலிருந்து விடுபடுவான். தக்க குருவானவர் சிஷ்யனுக்கு உபதேசம் செய்ததும், யுக்தி அனுபவங்கள் பொருந்தியதும், மிகவும் அரிதான உயர் ஞானத்திற்கு ஈடாக வேறு எதுவும் இல்லை என்பதுவும், இந்த நூலைக் கற்று எவனுக்கு ஞானம் உண்டாகவில்லையோ, அவனை பாக்கியம் இல்லாதவன் என்றும் கருத வேண்டும்.

மேலும், அப்படிப்பட்டவனுக்கு சாக்‌ஷாத் பரமசிவனே பிரத்யக்ஷமாக தோன்றி உபதேசம் செய்தாலும் அவனுக்கு ஞானம் உண்டாகாது. 

காரணம் அவ்வளவு மகிமை பொருந்திய ஞான காண்டத்தை ஹரிதாயனர் என்ற மகரிஷி அதி அற்புதமாக நாரதருக்கு உபதேசம் செய்கின்றார். 

இந்த திரிபுரா ரகசியம் என்ற நூலை ஹரிதாயன ஸம்ஹிதா என்றும் கூறப்படுவதுண்டு.

இந்த நூலின் முதல் பதினொன்று அத்தியாங்களை எடுத்து ஸ்ரீ திரிபுர ரகசியம் (ஞானகாண்டம்) {பாகம் - 1} என்று முதல் பாகமாக ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. 

இது இரண்டாம் பாகமாக இப்பொழுது வெளியிடப்படுகின்றது. அனைத்து ஆத்ம சாதகர்களும் படித்து ஞானத்தை அடைந்து பிறவாமை என்ற பெருநிலையைப் பெற வேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம் ஆகும்.




என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.

ஓம் தத் சத்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்