புதன், 31 ஜூலை, 2019

பிரபஞ்ச மனம்




இந்த உலகில் தோன்றிய ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியை மட்டுமே விரும்புகின்றான். அந்த மகிழ்ச்சி என்பது அவனுடைய இயல்பு. ஆனால், அந்த மகிழ்ச்சி நிலையாக இல்லாமல் இருப்பதற்கு, மனம் அமைதியில்லாமல் அலைபாய்வதே காரணமாகும்.

மனதிற்கும், அமைதிக்கும், நெருங்கிய நட்பு உண்டு. அதனால்தான் மனம் சலனமடையும் போது அமைதி பறிபோகின்றது. அமைதி போனவுடன் மகிழ்ச்சி சென்று விடுகின்றது.

மகிழ்ச்சி என்பது மனதின் அடிப்படையில் உருவாகும் விஷயம். மனதில் தோன்றும் எண்ணங்களை வைத்து மகிழ்ச்சி முடிவு செய்யப்படுகின்றது.

மகிழ்ச்சி என்றுமே நிலைத்திருக்க விரும்பினால், நம்முடைய செயல்கள் நல்லதாக இருக்க வேண்டும். செயல்கள் நல்லதாக இருக்க வேண்டுமெனில், நம் மனம் தூய்மையாக இருக்க வேண்டும். மனம் தூய்மையாக இருக்க எண்ணங்கள் நல்லவைகளாக தோன்ற வேண்டும்.

எண்ணங்கள் நல்லனவாக தோன்ற அவனது குணம் சத்துவ குணமாக வேண்டும். குணம் சத்துவமாக வேண்டுமானால், அவனது சித் என்ற அறிவு தெளிய வேண்டும், அறிவு தெளிந்தவனுக்கு ஆனந்தம் உண்டாகும். அப்படி என்றும் மகிழ்ச்சி உடையவன் செய்யும் செயலும் சிறப்பானதாக அமையும்.

ஒருவன் செய்யும் செயல்களினால் வருகின்ற நன்மை, தீமைகளை அந்த செயல் செய்தவன் அடைந்தாக வேண்டும் என்பது பிரபஞ்சநியதி.

ஒருவன் எண்ணும் ஒவ்வொரு எண்ணங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான், அதில் நல்லது, கெட்டதை பிரித்து அறிய முடியும். நல்லது எது?, கெட்டது எது என்பதை அறிந்து செயல் செய்பவன், தன்னுடைய செயலில் முடிந்தவரை கெட்டதை தவிர்க்க நினைப்பான். நல்லதை நடைமுறைப்படுத்துவான். அந்த நல்ல செயலின் விளைவாக கிடைக்கும் பலன்களும் நல்லதாக இருக்கும்.

பலன்கள் நமக்கு நல்லதாக இருந்தால்தான், நாம்  நிலையான மகிழ்ச்சியையும் அடைய முடியும்.
இந்த புத்தகத்தின் வாயிலாக நிலையான அந்த மகிழ்ச்சியை நிலைத்திருக்கச் செய்யும் வழிமுறைகளை கூறி, மனம் மனிதனை எப்படியெல்லாம் மாற்றுகின்றது என்பதை, ஒரு பாமரனும் படித்து பயன் அடையும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்